2005-04-27

புகைக்காத ரஜினி

பத்திரிகைகளின் விமர்சனத்தை அல்ல பிரபாகரனின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் என்று ரஜினிராம்கி எழுதப்போக அவரது வலைப்பதிவின் பின்னூட்டங்கள் எகிறிவிட்டன. கடைசியில் பாபாவை புலிகள் தடை செய்யவில்லை; பாய்ஸ் மட்டுமே தடை செய்யப்பட்டது என்று சாரம். ஆனால் புலிகள் சந்திரமுகியைத் தடை செய்தால் இணையத்திலிருந்து சந்திரமுகிக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற ராம்கியின் கனவும் பலிக்கவில்லை.(முதலிலேயே உள்நாட்டு உரிமையையும் வழங்காமல் வெளிநாட்டு உரிமையை மட்டும் வழங்கிவிட்டு குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்?)

விமர்சனங்கள், தணிக்கைகள், எதிர்ப்புகள் குறித்து சிந்திக்கும்போது பாபாவுக்கு எதிராக பாமக போராட்டங்கள் செய்திராவிட்டாலும் கூட பாபா ஓடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. பொதுவாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான திரைப்பட ரசிகர்களுக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும். இந்தப் பிடிக்கும் என்பதில் நல்ல படத்துக்கான ரசனை என்பதல்ல.

ஒவ்வொரு மனிதருள்ளும் குழந்தைத்தனம் ஒன்று ஒளிந்திருக்கும். பொதுவாக அது தனிமையில் (வேறு பெரியவர்கள் இல்லாமல்) சிறு குழந்தைகளோடு விளையாடும் தருணங்களில் வெளிப்படும். அடுத்தபடியாக ரஜினி படங்களைப் பார்க்கும் போது.

பெரியவர்களே இப்படியென்றால் சிறியவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும். ரஜினியின் மேனரிசங்கள் அவர்களை குஷிப்படுத்துவதில் அதிசயமில்லை. கூடவே சமீப காலமாக ரஜினியே நகைச்சுவை நடிகராகவும் அவதாரமெடுக்கும் போது பொழுதுபோக்கிற்கும் (சிந்தனையைக் கழற்றி வைத்து விட்டு ரிலாக்சாகப் பார்க்கும்) ரசனைக்கும் வேறென்ன வேண்டும்.

இந்தநிலையில் வந்த பாபா அதன் தெய்வீக? அம்சங்களால் வழக்கமான ரஜினியிசத்தை இழந்தது. ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்காத இந்த மாற்றம் பாபாவின் தோல்வியை உறுதி செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் பாமகவின் போராட்டம் வேறு சேர்ந்து கொள்ள, ரஜினி ரசிகர்களுக்கு தர்மசங்கடம் தவிர்க்கப்பட்டது.

நடிகர்களின் மேனரிசங்களை ரசிக்கும் இளைய தலைமுறை குறிப்பாக 10 வயதிற்குக் கீழுள்ள பையன்ஸ் மத்தியில் பீடி, சிகரெட், சுருட்டு ஊதி வளையம் வளையமாகப் புகைவிடும் ஹீரோக்கள் மாஜீசியன்களாகக் காட்சியளிப்பதில் வியப்பில்லை. அதை அவர்களும் செய்து பார்க்க விரும்புவார்கள் என்பதிலும் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதை யாராவது கடிதமாக எழுதியிருந்தாலோ, பத்திரிகையில் கட்டுரையாகவே எழுதியிருந்தாலும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போயிருப்பார்கள். அரசியல் வாதிகளால் எழுப்ப்பட்டதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. சந்திரமுகியில் ரஜினி இவற்றை முற்றிலும் தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது. நடிகர் விஜய்யும் இனி தன் படங்களில் மது, புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என்று தெரிவித்திருக்கிறார். (இவரும் பையன்ஸ்களின் பெட்.)

அதிகமான தமிங்கிலீஷுக்கு ஸாரி....

2 comments:

Anonymous said...

--பத்திரிகைகளின் விமர்சனத்தை அல்ல பிரபாகரனின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் என்று ரஜினிராம்கி எழுதப்போக அவரது வலைப்பதிவின் பின்னூட்டங்கள் எகிறிவிட்டன. கடைசியில் பாபாவை புலிகள் தடை செய்யவில்லை; பாய்ஸ் மட்டுமே தடை செய்யப்பட்டது என்று சாரம். ஆனால் புலிகள் சந்திரமுகியைத் தடை செய்தால் இணையத்திலிருந்து சந்திரமுகிக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற ராம்கியின் கனவும் பலிக்கவில்லை.(முதலிலேயே உள்நாட்டு உரிமையையும் வழங்காமல் வெளிநாட்டு உரிமையை மட்டும் வழங்கிவிட்டு குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்?)--

i could not find rajani ramki's post. did he write in his blog?

ஜெ. ராம்கி said...

சம்பந்தப்பட்ட பதிவு எழுதியதற்கான காரணங்கள் நிறைய. ஈழத்து நண்பர்களையும் இனப்போராட்டத்தையும் இழிவுபடுத்துவது என் நோக்கமல்ல. நாலாபக்கமும் வந்த எதிர்வினைகளால் என் தூக்கம் போனது உண்மை. எதிர்வினைகளுக்கு பதிலளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய எழுத்து யாரையாவது நோகடித்தால் ரஜினி ரசிகன் என்கிற நல்ல பெயரை இழக்கவேண்டிவரும் என்பதால் பதிவை நீக்கிவிட்டேன். அக்கறையோடு அறிவுரை சொன்ன அனைத்து இணைய நண்பர்களுக்கும் நிச்சயம் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.