2004-10-07

தமிழ் சிற்றிதழ்-1-சௌந்தரசுகன்

தஞ்சையைச் சேர்ந்த சுகன் சிறுவனில் இருந்து இளைஞனாய் ஆன வயதுகளில் துவக்கி பதினெட்டு ஆண்டுகளாய் இடைவிடாமல் வெளியிடும் தரமான இலக்கிய மாத இதழ். ஆரம்பத்தில் சுந்தரசுகனாய் இருந்தது சமீபத்தில் சௌந்தரசுகனாக மாறியிருக்கிறது. சுகனின் துணைவியார் சு.சௌந்தரவதனா தற்போது வெளியீட்டாளர். (மனைவிக்கு மரியாதை!)
அரை சதம் பக்கங்களுடன் மாதந்தோறும் வெளியாகும் இந்த இதழ் சாதாரண அச்சில் இருந்து கணியச்சுக்கு மாறிவிட்டாலும் தன் வடிவ தனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தரமான இலக்கியப் படைப்புகள், தனித்துவமிக்க கவிதைகள், கனமான கட்டுரைகளுடன் வெளியாகிறது. மாதந்தோறும் சுமார் மூவாயிரம் ரூபாய் இழப்பிலும் விளம்பரங்களே வெளியிடாமல் வருகிறது.
ஜூன் மாத இதழ் மூன்று மடங்கு அதிகப் பக்கங்களுடன் ஆண்டுமலராகவும் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் மரணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் இதழ்கள் பிரகாஷ் நினைவு மலராகவும் வெளியிடப்படுகிறது. கூர் என்ற தலைப்புடன் வரும் விரிவான வாசகர்கடிதங்களும் இலக்கிய மதிப்புடையவை. கடித இலக்கியம் என்னும் பகுதியில் பல எழுத்தாளர்களும் இதழாளர்களும் தங்களுக்குள் எழுதிக்கொண்ட சுவாரசியமான கடிதங்கள் வெளியிடப்படுகிறது.
சுகன் ஓவியங்களையும் வெளியிடுகிறது. இளம் ஓவியப் படைப்பாளிகளின் படைப்புகள் சுகனின் அட்டையையும் படைப்புகளையும் அலங்கரிக்கின்றன. தமிழ்ப் படைப்பாளிகள், இதழாளர்கள் மட்டுமல்லாமல் பிறமொழிப் படைப்பாளிகளின் விரிவான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இலக்கியம் அல்லாத பிறதுறைப் படைப்பாளிகளையும் விரிவாக அறிமுகம் செய்துள்ளது. புகழ் பெற்ற பல கவிஞர்களின் ஆரம்பக் களமாகவும் இருந்துள்ளது. சுகனில் வெளிவரும் சிறுகதைகளும் ஆழமானவை.
எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம் என்பது சுகனின் குறியீட்டு முழக்கம். சுகன் தலையங்கங்கள் கூர்மையானவை.209 வது இதழான அக்டோபர் 2004 இதழின் தலையங்கத்திலிருந்து...

"உலகமயமாக்கலின் மாயக்கரங்களில் சிக்கிக் கொண்டு...இந்தியா அவதிக்கு தலையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் காலமிது. நமது அரசியல்வாதிகள் கீதை குறித்த சர்ச்சையில் இருக்கிறார்கள். கீதை உலகபொதுமறையா? அது இந்தியாவுக்கு முதலில் பொதுமறையா? நமக்கான விடியலை ஒரு போதும் கீதையிலிருந்து நாம் பெற முடியாது. இரண்டு முதலாளிகளின் பங்காளி சண்டையில்,தனது தங்கையை கட்டிக் கொடுத்தபக்கம் நின்று பல சதிகள் செய்து தேர்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டு, பல அப்பாவிகளை கொன்ற பிணபூமியில் நின்று வெற்றியை தக்க வைத்துக் கொண்ட கண்ணனின் மொழிகள் ஒருபோதும் பாட்டாளிகளுக்கு வழிகாட்டாது.
இன்றைய போராட்டம்....கொழுத்த முதலாளித்துவ திமிரில் பிற நாடுகளை அடிமைப் படுத்தி, சுரண்டும் அமெரிக்கத்தனத்திற்கும், தன்னை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பற்றிய சுரணையே இல்லாத, தங்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறியாத அப்பாவியான பல்லாயிரம் கோடி ஏழைமக்களுக்கும் இடையில் நடக்கிற தந்திர யுத்தம். இங்கே கீதையின் வழிகாட்டல் என்னவாய் இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பதாகவா....?
உலகமயமாக்கல் அணுக்கதிர் வீச்சில் திருக்குறள் எல்லாம் கூட காணாமல் போய்விடும் போலிருக்கிறது. தாய்மொழியை அறியாதவன் கையில் திருக்குறள் இருந்து பயன் என்ன? அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அவனுக்கு உணர்வுபூர்வமான ஊக்கத்தை ஒரு நாளும் கொடுக்காது.உலகமயமாக்கலின் முக்கிய இலக்கு மொழிகளை அழிப்பதும் , கலாச்சாரங்களை அழித்து, ஒற்றைக் கலாச்சாரத்தை எப்படியும் கொண்டுவந்து விட வேண்டும் என்பதுதான். அப்போதுதான் வியாபார வழி சுரண்டலாம். இடுப்பை அப்பட்டமாய் காட்டுகிறது என்றுதான் தான் தாவணி தவிர்க்கப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டது. இன்றைக்கு அதற்கு பதிலாக வந்த ஆடைகள்.....எதை எதை எந்த எந்த அளவில் ஆபாசமாய் காட்ட வேண்டுமோ அப்படி காட்டிக் கொண்டிருக்கின்றன. இது தான் உலகமயமாதலின் கில்லாடித்தனமான அணுகுமுறை...."

சுகன் இதழ் தொடர்புக்கு

சுகன்
அம்மாவீடு,
சி-46-2-ஆம் தெரு
நகராட்சிக் குடியிருப்பு,
தஞ்சாவூர்- 613007

ஆண்டுச் சந்நா ரூ: 120, தனி இதழ் ரூ.10.

2004-10-05

தமிழ் சிறுபத்திரிகைகள்

தமிழ் இதழியலில், வெளிவரும் கால இடைவெளி சார்ந்த வகைப்படுத்தலில் நாளிதழ்,வாரமிருமுறை,வார,மாத இதழ்கள் என்போம். தரம் சார்ந்த மதிப்பீடாக ஜனரஞ்சக இதழ்கள், இலக்கிய இதழ்கள் என்று வகைப்படுத்துவோம். இதுபோன்ற இன்னொரு வகைப்படுத்தலே சிற்றிதழ், பேரிதழ் என்பது. பொதுவாக வணிகரீதியான இதழ்களே ஜனரஞ்சக இதழ்களாகவும் பேரிதழ்கள் எனவும் குறிக்கப்பட, கொள்கை சார்ந்த இதழ்கள் இலக்கிய இதழ்களென்றும் சிற்றிதழ் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சிற்றிதழ்களில் ஜனரஞ்சக இதழ்களும், இலக்கிய இதழ்களும் உள்ளது போலவே பேரிதழ்களிலும் இவ்வகைகள் உண்டு.

கணையாழி, காலச்சுவடு,உயிர்மை முதலான இலக்கிய இதழ்கள் சில விமர்சகர்களால் சிற்றிதழ் வரிசையில் மதிப்பிடப் பட்டாலும் அவற்றுக்குச் சிற்றிதழ்த் தன்மை மிகக் குறைவே. அவை பேரிதழ்களைப் போலவே கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நிறுவன ஆதரவுகளைப் பெற்றுள்ளன. விளம்பர வருவாய்களைப் பெறுகின்றன. விற்பனை எண்ணிக்கையில் ஜனரஞ்சக இதழ்களைவிடக் குறைவாக இருந்தாலும் சிற்றிதழ்களை விட மிக அதிகப்பிரதிகள் வெளியிடப்படுபவை இவை. சிற்றிதழ்களின் சிரமங்களை இவ்விதழ்களும் ஆரம்பத்தில் சந்தித்திருந்தாலும் இன்றைய நிலையில் இவை சிற்றிதழ்களாகக் கருதப்பட முடியாது. தரமதிப்பீட்டில் இலக்கிய இதழ்களாக வகைப்படுத்தப் படுவதால் இவற்றை நடுத்தர இதழ்களாகக் கொள்ளலாம்.

அந்தவகையில் சிற்றிதழ்களாக தரமான இலக்கிய இதழ்கள் நிறைய உண்டு. அவற்றிலும் சில இதழ்கள் நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் புத்தகக் கட்டமைப்புடன் ரூபாய் 25 க்குமேல் விலையிட்டு வருவதால் அவற்றையும் சரியான அர்த்தத்தில் சிற்றிதழாகக் கருத முடியாது. மதவெளியீடுகளை, நிறுவன வெளியீடுகளை, அரசியல் கட்சிகளின், சினிமா நடிக நடிகைகளின் புகழ்பாடும், விளம்பரங்களுக்காகவே வெளியாகும் சிறு இதழ்களையும் இந்தப் பட்டியலில் இருந்து விலக்கிவிடுவோம்.

வணிக நோக்கம் எதுவுமின்றி நிரந்தரமாய் விளம்பர ஆதரவுகளும் இல்லாமல் பண இழப்புகளை ஏற்றுக்கொண்டு பெரும்பாலும் தனியொருவர் அல்லது குடும்பமாக அல்லது நண்பர்கள் இணைந்து இலக்கிய வெளிப்பாட்டை இலட்சிய வெறியாகக் கொண்டு வெளியிடும் சிறு இதழ்கள் தான் சிற்றிதழ்களாகக் கருதப்பட வேண்டும்.

சிற்றிதழாளர்கள் பற்றி தினமலர் போன்ற ஜனரஞ்சக இதழ்கள் வெளியிடும் பிம்பங்கள் இன்று நிஜத்தில் இல்லை. சிற்றிதழ் நடத்துபவர்களும் அவற்றில் எழுதுபவர்களும் தங்களின் சமூகப் பொறுப்புணர்வை ஜனரஞ்சக இதழாளர்களை விட அதிகமாக எப்போதுமே உணர்ந்திருப்பவர்களே. குழு மனப்பான்மை சில இதழ்களுக்கிடையில் இருந்தாலும்கூட ஜனரஞ்சக இதழ்களுக்கிடையிலான முதுகில் குத்தும் மனப்பாங்கு அவற்றில் இல்லை. முகம் நோக்கி எதையும் கூறும் துணிச்சல் சிற்றிதழாளர்களுக்கு உண்டு. படைப்புகளில் பாசாங்குகள் இருப்பதில்லை. கருத்துக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதில்லை. அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிவதுமில்லை. எதைப்பற்றியும் பேச சிற்றிதழ்ப் படைப்பாளிக்கு உரிமையுண்டு. படைப்பாளியின் சுய கட்டுப்பாட்டின் மீதான நம்பிக்கையில் அவை சிதைக்கப்படாமல் வெளியிடப் படுகின்றன. இவையே சமூகத்தின் வெளிப்பூச்சற்ற நிஜமுகங்களாக வெளிப்படுகின்றன.

இன்றைய நேற்றைய கவிஞர்களில், படைப்பாளிகளில் பலரும் சிற்றிதழ் அரங்கில் அறிமுகமாகி வளர்ந்தவர்களே. இன்றும் தமிழில் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு மாதமும் புதிய சிற்றிதழ்கள் துவங்கப்படுகின்றன. அச்சிடப்படும் பிரதிகள் குறைவாயினும் நிறைவான வாசிப்பு அனுபவங்களைத் தருகிற இவ்விதழ்களில் தொடர்ச்சியாக வெளிவரும் இதழ்கள் குறைவே.

இவற்றில் தரமான, தொடர்ச்சியுடைய தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களை இணைய வாசகர்களுக்காக அறிமுகம் செய்யவிருக்கிறேன். முதலில் தஞ்சையில் இருந்து பதினெட்டாண்டுகளாக வெளிவரும் சௌந்தரசுகன்...(உங்களில் சுகனைப் படித்திருப்பவர்கள் கையைத் தூக்குங்கள்... ஸாரி...மௌசை!)

2004-10-02

'அழகியும்' 'அழகனும்'

விஷ்வ துளசி என்ற படம் வெளியாவதற்கு முன்னாலேயே பத்திரிகைகளில் எல்லாம் நல்ல படம் என்பதான கருத்து பரப்பப் பட்டுவிட்டது. சினிமா வாசனையே இல்லாத ஒரு பெண்மணி இயக்கியிருக்கிறார் என்பதும் 'அழகியும்' 'அழகனும்' நடிக்கும் படமென்பதாலும் விளம்பரத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் அதற்காக தமிழ் சினிமாவே பார்த்ததில்லை என்று பேட்டி கொடுப்பது கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவே பார்க்காதவர் தமிழ் சினிமா எதற்காக எடுக்க வேண்டும்? மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா? இது போன்ற மேல்தட்டு சினிமாக்காரர்களுக்கு அந்தக்கவலையும் இல்லை. ஏதாவது விருது வாங்குவது மட்டுமே கூட அவர்களுக்குப் போதும். எதற்கெல்லாமோ போராடும் சினிமாக்காரர்களும் இதைக்குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. இணைய நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? (இந்தக் கேள்விக்குக் காரணமுண்டு. தமிழ்ப் புத்தகங்களே படிக்காதவர்கள் தானே தமிழின் சிறந்த எழுத்தாளர்கள்!)

2004-10-01

செய்தியிலிருந்து

இன்றைய தினமணியில் வைரமுத்து கவிதைகளின் இந்தி மொழியாக்க நூல்வெளியீடு பற்றிய செய்தியிலிருந்து-

.....இந்த விழாவில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் "காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் வழிகாட்டுதலின் பேரில், திமுக தலைவர் கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களின் ஆதரவுடன், மன்மோகன்சிங் தலைமையிலான அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ளது."....

.....மத்தியகப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி ஆர் பாலு பேசுகையில் "வைரமுத்துக்குக் கிடைத்த இந்த வெற்றி கருணாநிதிக்குக் கிடைத்த வெற்றி" என்றார்.....

தமிழறிஞர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, தமிழகக் கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தலை அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள உண்மை அரசியல்வாதியின் வாய்மொழியில்
எப்படி வருகிறது பாருங்கள்!

அதுசரி.... வைரமுத்து இந்தியில் கவிதைத்தொகுப்பு வெளியிட்டது எப்படி கருணாநிதியின் வெற்றியாகும்? விளக்குவாரா பாலு? (நாக்கு வழிப்பதுண்டா மகாமந்திரி)