ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் என்ற செய்தி அகிலனுக்குப் பின் ஏற்பட்ட மிக நீண்ட இடை வெளியை இட்டு நிரப்புமளவுக்கு நேர்மையானது. இந்திய இலக்கிய வீதியில் தமிழுக்கு இதுவரை ஏற்பட்டிருந்த சூன்யம் சற்றே தணிந்திருப்பதில் ஆறுதல் அடையலாம்.
ஜனரஞ்சக பத்திரிகை உலகில் தீவிர இலக்கியத்தை அது தீவிர இலக்கியம் என்ற வேறுபாடின்றியே படைத்துக்காட்டியவர் அவர். இன்று பெரும்பத்திரிகைகள் எல்லாமே தீவிர இலக்கியத்தை ஒருபகுதியாகவேனும் வெளியிடத் தலைப்பட்டுள்ளன. குமுதம் முதலான இதழ்கள் தீராநதி போன்ற தனி இதழ்களே வெளியிடுமளவுக்கு நிலைமை முன்னேறியிருக்கிறது.
ஆனால் அன்று ஜெயகாந்தன் என்ற தனி ஆளுமைக்காக மட்டுமே அவை அப்பத்திரிகைகளில் வெளிவந்தன. அதுவரை படைக்கப் பட்டு வந்த பாத்திரப் படைப்புகளை மீறி சாதாரண ஜனங்களின் கதையை தனக்கேயுரிய மொழிநடையில் உருவாக்கியவர் அவர். அவை பெரிய பத்திரிகைகளின் வழக்கமான வாசகர்களையும் சென்றடைந்தது என்பதே ஜெயகாந்தனின் மிகப்பெரிய வெற்றியாகும். அதே சமயம் இலக்கிய வாசகர்களிடையே ஜெயகாந்தன் என்ற பெயர் மந்திரம் போலப் பரவியது. ஜெயகாந்தனைப் படிப்பவர்கள் அறிவுஜீவிகளாகவும் சிந்திக்கத் தெரிந்தவர்களாகவும் கருதப்பட்டார்கள்.
அந்த மிகப்பெரும் இலக்கிய ஆளுமை ஒருகட்டத்தில் தன்படைப்புகளை நிறுத்திக்கொண்டது. மீண்டும் எழுதத் துவங்கியபோது அவரது எழுத்து தன் ஆளுமையை இழந்துவிட்டதான விமர்சனங்கள் இருந்த போதிலும் சரித்திரங்கள் சாகா. தமிழ் இலக்கிய உலகில் அவரது வீச்சு நிச்சயம் நினைவு கூரத்தக்கது.
கடந்த ஆண்டிலேயே அவருக்கு ஞானபீடம் கிடைக்கக்கூடுமென்ற யூகங்கள் வெளிவந்தன. அப்போது தவறினாலும் இப்போதாவது கிடைத்ததே என மகிழ்வோம். தமிழ் தன் ஞானச் செருக்கை தொடரட்டும்.
சாகித்ய அகாடமி விருது வழங்கும் முறைகளும் விருதுக்குரிய நபர்களும் தமிழில் தமிழர்களாலேயே பலவேளைகளில் விமர்சிக்கப் படுவதுண்டு. அது போலவே அன்று அகிலனுக்கு ஞானபீடம் வழங்கப் பட்டதை தமிழர்களே எதிர்த்ததன் விளைவே இதுவரை தமிழுக்கு ஞானபீடம் வழங்கப்படாதிருந்ததென்றும் கூறப்படுவதால் அத்தகையதோர் ஈனச்செயலில் மீண்டும் யாரும் ஈடுபட வேண்டாம். ஜெயகாந்தனை தகுதிக்குறைவாக தமிழர் எவரும் நினைக்க மாட்டாரென்றே கருதுவோம்.
No comments:
Post a Comment