இந்த வாரம் முழுவதும் வலைப்பதிவுகளில் முக்கிய இடம்பிடித்தது சந்திரமுகி. இணையத்தில் பதிவிறக்க வாய்ப்பில்லாததாலும் திருட்டு விசிடியில் பார்க்கும் வழக்கமில்லாததாலும் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜெயா டிவியில் (தான்) போடும்போது பார்த்துக் கொள்ளலாம். அல்லது அதற்கு முன்னதாக உள்ளூர் கேபிளில் (அதுவும் திருட்டு விசிடி தான்) போட்டால் பார்க்கலாம்.
ஏப்ரல் 14 அன்று ஜெயாவில் சந்திரமுகி கண்ணோட்டம் முடியும் நேரம் தான் பார்க்கமுடிந்தது. சன்னில் திரைவிமர்சனம் பார்த்ததில் சந்திரமுகி பாடல்கள் மணிச்சித்திரத்தாழ் பாடல்களோடு ஒப்பிட, போதாது என்று தான் தோன்றுகிறது.
ரஜினி படத்துக்கு இவை நல்ல பாடல்கள் தான். இன்றைய ஹிட் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும். ரஜினி ரசிகர்கள் மனதில் அடுத்த ரஜினி படம் வரும் வரை நிற்கும். தொழில்நுட்ப ரீதியில் கூட மேம்பட்டு இருக்கலாம். ஆனால் பத்தாண்டுகளுக்கும் மேலாக நினைவில் நிற்கும், மனதை ஏதோ செய்யும் இளையராஜாவின் மணிச்சித்திரத்தாழுக்கு முன் சந்திரமுகி திரையரங்குகளில் இருக்கும் வரையேயான ஆயுள் கொண்ட வித்யாசாகரின் இசை ஒரு படி கீழேதான்.
மலையாளப் படத்தில் சுரேஷ்கோபி (தமிழில் பிரபு செய்துள்ள வேடம்) முறைப்பெண்ணாக வரும் வினயாபிரசாத்துக்குத் தான் மனநோய் என்று முடிவுகட்டி அவரைக் குணப்படுத்த குடும்ப நண்பரான மனநல நிபுணர் மோகன்லாலை அழைக்கிறார். மனநோய் அவருக்கல்ல சுரேஷ்கோபியின் மனைவியாக வரும் ஷோபனாவுக்குத்தான் என்று கண்டறிந்து......படத்தின் முடிவில் வினயாவைத்தான் மோகன்லாலின் ஜோடியாக காட்டுகிறார்கள்.
தமிழில் பிரபுவுக்கு முறைப்பெண்ணாக மாளவிகா வருவதாக விமர்சனங்களில் பார்த்தேன். இங்கே ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா. அவரும் டாக்டர்தான் என்று ஏதோ ஒரு விமர்சனத்தில் காட்டினார்கள்?
சன்டிவி திரை விமர்சனத்தில் பார்த்தால் நயன்தாரா பாட்டு டீச்சர் மாதிரி
தெரிகிறது. உண்மையில் துர்கா யார்? வலைப்பதிவுகளில் விமர்சனம் எழுதிய
ஏராளமானவர்களில் யாரும் இதைப் பற்றிக் குறிப்பிடக் காணோம்!
மணிச்சித்திரத்தாழுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து பாசில் எடுத்த விஸ்மயகும்பத்து என்ற படத்தில் 'கோமா நிலையில் பூட்டிய வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணின் ஆன்மா தனக்கு உதவக்கூடிய ஒருவரைத்தேடி அலைகிறது. இறுதியில் ஏழாவது அறிவுகொண்ட மோகன்லால் கதாபாத்திரத்தின் உதவியால் அவள் தன் பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறாள். இந்த அனுமாஷ்யமான பெண்ணின் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நயன்தாரா'. இதனாலேயே அவர் துர்கா கதாபாத்திரத்திற்காகத் தேர்வு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
படம் வந்த பிறகான விமர்சனங்கள் வாயிலாக ரஜினிக்கேற்றபடி ஒருசில
காட்சிகளையும் சில கதாபாத்திரங்களையும் மட்டும் மாற்றிவிட்டு
மணிச்சித்திரத்தாழை அப்பட்டமாகக் காப்பியடித்த படம் என்று தெரிகிறது.
பிரதான கதாபாத்திரமான கங்கா பெயர் கூட மாறவில்லை.
அப்புறம் ஜோதிகாவின் நடிப்பை எல்லோரும் ஒருமனதாகப் பாராட்டியுள்ளனர். ஷோபனாவுக்கு தேசிய விருது வாங்கித்தந்த வேடமாச்சே. படத்தின் மற்ற விடயங்களை படம் பார்க்காததால் ஒப்பிட முடியவில்லை.
இயக்குநர் பாசில் இந்தப் படத்திற்காக என்னென்ன ஆராய்ச்சிகள் செய்தார்; எத்தனை ஆண்டுகள் உழைத்தார், என்று அப்போது வெளிவந்த (மலையாளப்) பேட்டிகளைப் பார்த்தால் தெரியும். அவரிடம் முன்பு உதவி இயக்குநர்களாக இருந்த சித்திக், லால், மது உட்பட பல பிரபல இயக்குநர்கள் இதில் பாசிலுக்கு உதவியிருக்கிறார்கள். அத்தனை பேரின் உழைப்பையும் சுரண்டிவிட்டு இது என்னுடைய சொந்தக் கதை என்று கூசாமல் சொல்கிறார் பி.வாசு. இதனால்தான் பாசில் வழக்குத் தொடரப் போவதாக நோட்டீஸ் அனுப்பினார். பெரிய இயக்குநரான பாசில் இப்படிச் செய்யலாமா? என்று வாசு அங்கலாய்க்கிறார். 12 வருடங்களுக்கு முன்வந்த படத்தைச் சொல்லி காசு கேட்கிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார். இவரைப்போல அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் உருவி படம் பண்ணுகிறவர்களுக்கு கதைகளுக்காக ஆராய்ச்சி செய்வதும் சிற்பியின் லாவகத்துடன் செதுக்கிச் செதுக்கி உருவாக்கும் திரைக்கதைகளும் புதிதாகத்தானிருக்கும்.
சந்திரமுகி மட்டும் பார்த்தவர்கள் இந்தப் பாடல்களை (இதுவரை கேட்காவர்கள்) ஒவ்வொன்றும் குறைந்தது மூன்றுமுறை கேட்டுவிட்டு கீழே பின்னூட்டமிடவும்...
ஒருமுறை வந்து பார்த்தாயா
பழந்தமிழ்ப் பாட்டிழையும்
வருவாயென் றானதும்
2005-04-24
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்தப் பாடல்களை
(மணிச்சித்திரத்தாழ்) நான் முன்பே பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன்.
சந்திரமுகியில் மற்ற பாடல்களை விட அந்த தெலுங்குப் பாடல் அருமை.
மணிச்சித்ரதாழில் ஒரு முறை வந்து பார்த்தாயா அசத்தல் என்றால்..
சந்திரமுகியில் ரா ரா அசத்துகிறது.
இந்தப் பாடலை(ராரா) மூன்று முறை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை
சொல்லுங்கள் அனுராக்.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜெயா டிவியில் (தான்) போடும்போது பார்த்துக் கொள்ளலாம்.
niingkaL san tiviyul thaan paarkka mudiyum.
//உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜெயா டிவியில் (தான்) போடும்போது பார்த்துக் கொள்ளலாம். //
நீங்கள் சன் டிவியுல் தான் பார்க்க முடியும்.
சந்திரமுகி பாடல்களும் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் காலத்தை வெல்லும் புதுமை, அல்லது உருக்கம் இதில் மிஸ்ஸிங்.
ராஜா, ஜெயா டிவி படம் வெளியாவதற்கு முன்பே சந்திரமுகியை வாங்கி விட்டதாக பத்திரிகையில் வாசித்தேன். நீங்கள் எழுதியிருப்பது.....
I don't think Ilayaraja is the Music director of manichithrathazh ... May be Ausappachchan ?
NagaS
Post a Comment