2005-06-01

விஷியின் 'அழகி'

தேடுபொறிகளில் தமிழ் மென்பொருள்களைத் தேடும்போது அழகி என்ற மென்பொருளைப்பற்றிய குறிப்புகள் நிச்சயமாகத் தென்படும்.
அது என்ன அழகி?

அது ஒரு தமிழ் transliteration மென்பொருள் என்பதும்; அதன்வகையில் முதலாவதான மென்பொருள் என்பதுமே ஆரம்ப குறிப்புகள் தரும் அறிமுகம். உண்மையில் அழகி வெறும் transliteration மென்பொருள் அல்ல. அது ஒரு முழுமையான தமிழ்ச் செயலி.

அழகியின் பயன்பாடுகள் பின்வருமாறு:

1. அழகி ஒரு தனித்த முழுமையான செயலி

2. அழகி மூலம் ஒலியியல், தமிழ்99, தட்டச்சு ஆகிய 3 முறைகளில் தமிழை தட்டச்சு செய்யலாம்.

3. அழகியில் நேரடியாக தமிழை தட்டச்சு செய்யலாம்.

4. அழகி மூலம் அனைத்து, விண்டோஸ் மற்றும் அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்களில் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

5. ஆங்கில transliteration முறையில் இருதிரை தட்டச்சு அல்லது ஒரு திரை தட்டச்சு செய்யலாம்.

6. தமிழை ஆங்கில எழுத்துக்கு reverse transliteration செய்யலாம்.

7. தமிழில் மின்னஞ்சல் அனுப்பலாம்.

8. தமிழில் chat செய்யலாம்.

9. தமிழில் வலைப்பக்கங்களை வடிவமைக்கலாம்.

10. யூனிகோடு எழுத்துருவிலும் செயல்படும்.

11. இணையப் பக்கங்களுக்கான டைனாமிக் ஃபான்ட் எனப்படும் இயங்கு எழுத்துரு இணைந்து வருகிறது.

12. அழகியின் விரிவான உதவிப் பக்கங்கள் தமிழில் விரிவான ஒரு ஆய்வையே மேற்கொள்ளுமளவுக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

13. தமிழ் அறியாதவர்கள் கூட தமிழில் எழுத முடியும்.

14. தமிழ் கற்க உதவும் கருவியாகவும் அழகி பயன்படும் என்பது பலரும் அறியாத செய்தி.

சாதாரணமான எல்லா கணிப்பொறியாளர்களையும் போலவே தன் வாழ்வைத் துவங்கிய விஷி என்னும் விஸ்வநாதன் அபூர்வமான ஒரு கொடிய நோயால் தாக்குண்ட போது தன் மென்பொருள் நிறுவனப் பணியைத் துறக்க வேண்டி வந்தது.

கடுமையான நோயின் வேதனைகளிலிருந்து ஓரளவுக்கு மீண்டு, சோதனைகள் தந்த சாதனையாக அவர் தமிழ் மென்பொருள் ஒன்றை உருவாக்கினார். அதுவே தமிழின் முழுமையான செயலியாக விளங்கும் அழகி என்ற தமிழ்ச் செயலி மென்பொருள்.

விஷியின் வாழ்க்கைச் சாதனைகளும் அவர் சந்தித்த சோதனைகளும் அழகி.காம் என்ற அவரது வலைதளத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன. அழகியின் சோதனைப் பதிப்பை இந்த இணைப்பில் பதிவிறக்கலாம்.

6 comments:

Vijayakumar said...

அனுராக்,

விஷி அவர்கள் எனக்கு இணையம் வழியே அறிமுகம் ஆகி என் ஆரூயிர் நண்பர் ஆனவர். என்னை இன்னும் பிரம்மிப்பில் இருந்து மீளச் செய்யாதவர். கடுமையான நோயின் வேதனையிலும் தனி ஒரு ஆளாக இன்னொரு உயிராக 'அழகி நம்பர் 1'-ஐ வளர்த்தவர். இன்னும் தனியொரு ஆளாக நின்று அழகியை உயிர் கொடுக்கும் வகையில் இன்னும் பிரம்மிக்க வைப்பவர்.

அவர் நோயின் வேதனையை விட அழகிக்கு நிகழ்ந்த புறக்கணிப்புகளால் அடைந்த வேதனை அதிகம். [இந்த புறக்கணிப்புகளை அறிய நானும் ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் மென்பொருள் என்று பீற்றுபவர்களையும், மற்றவர்களை வளர விடாமல் ஒடுக்குபவர்களையும் இனம் கண்டு அவர்களை கிழிக்க வேண்டும் என்ற ஆசையில்... ஏனென்றால் விஷியின் வேதனைகளை அவருடன் நான் நட்புக் கொண்டாடும் போது பக்கத்திலிருந்து உணர்ந்தவன் என்ற முறையில்]. எல்லாம் வல்ல இயற்கையின் ஆசிர்வாதத்தாலும், நல்லோர்களின் ஆசிர்வாதத்தாலும் அவர் குணமடைந்துக் கொண்டிருக்கிறார்.

ஆயிரம் பேர்கள் 'அரட்டை அரங்கம்' விசுவை தூற்றினாலும், விஷியின் மீது ஒளியை வீசி அவர் வாழ்விலும் ஒளி ஏற்றியவர். இன்னும் நிறைய எழுதலாம் அவரைப் பற்றி.

சிறிதுகாலத்தில் அவரைப் பற்றி ஒரு விரிவான பதிவு போடலாமென இருந்தேன். அவரின் மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி.

Badri Seshadri said...

அல்.விஜய்: யார் மீது இவ்வளவு கோபம்? ஒரு மென்பொருளைப் பற்றிப்பேசும்போது அதன் உபயோகம் மட்டும்தான் முக்கியமே தவிர அதை உருவாக்கியவர் பட்ட கஷ்டங்கள் அவ்வளவு முக்கியமல்ல. தனிப்பட்ட முறையில் அந்த மனிதரைப் பற்றியும் அவர் பட்ட கஷ்டங்களையும், அதிலிருந்து மீண்டு வருவதைப் பற்றியும் பேசி அவரைப் பாராட்டலாம். ஆனால் அவர் பட்ட கஷ்டங்களினால் மட்டுமே அவரது மென்பொருளைத் தூக்கிக் கொண்டாடவேண்டும் என்று நினைப்பது தவறான கருத்து.

அழகி மென்பொருள் பற்றி அதிகம் யாரும் பேசாமல் இருப்பதன் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒருமுறை விஷியை தமிழ் இணையம் 2003 மாநாட்டின்போது பார்த்துப் பேசியுள்ளேன். அவ்வளவே. ஓரிரு முறை மின்னஞ்சல் செய்திருப்போம். அந்த சமயத்தில் அவரது மென்பொருளில் யூனிகோட் வசதியில்லை. அதைப்பற்றி அவரிடம் பேசினேன். அவர் அந்த வசதியும் விரைவில் சேர்க்கப்படும் என்றார்.

இன்றைய தேதியில், என் கணிப்பில், அழகி மென்பொருளில் இருக்கும் பலவும் பொதுமக்களுக்குத் தேவையில்லை.

இலவசமான பல செயலிகளும் மக்களுக்குக் கிடைக்கின்றன.

Vijayakumar said...
This comment has been removed by a blog administrator.
வலைஞன் said...

பத்ரி
இலவசமாகப் பல செயலிகளும் கிடைக்கின்றன என்பது உண்மை தான். ஆனால்

//இன்றைய தேதியில், என் கணிப்பில், அழகி மென்பொருளில் இருக்கும் பலவும் பொதுமக்களுக்குத் தேவையில்லை//

இது சரியானதாகத் தோன்றவில்லை.
தேவையற்றது என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்.?

Balu said...

அழகி மென்பொருள் ஒரு சாமானிய தமிழ் கணிப்பொறி உபயோகிப்பாளரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. எனவே அதில் உள்ள நிறைய வசதிகள் பல தரப்பட்ட பயன்களைத் தரும்படி செய்யப்பட்டுள்ளது. அதன் விலையும் சில நூறு ரூபாய்கள் மட்டுமே. நாம் பல ஆயிரம் கொடுத்து வாங்கும் MS-Office திரளிலேயே நிறைய வசதிகளை பெரும்பாலோர் உபயோகிப்பதில்லையே? இணையத்தின் வழி பல தளங்கள், கலந்துரையாடல் மையங்கள் அறிமுகமுள்ள கணிப்பொறி அறிவு அதிகமுள்ளோர் பார்வையிலிருந்து பாராமல் சாதாரண மனிதர் கோணத்திலிருந்து பார்த்தால் அழகி அழகானதே. ஒரு முறை கணினியில் பதிந்து விட்டால் கோப்பாக்கம், மின் அஞ்சல், அரட்டை முதல் இணைய தள உருவாக்கம் வரை செய்ய இயல்வது நல்லது தானே, அதுவும் எல்லோருக்கும் கட்டுபடியாகும் விலையில்.

Vijayakumar said...

//அழகி மென்பொருள் பற்றி அதிகம் யாரும் பேசாமல் இருப்பதன் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.//

இது முற்றிலும் தவறு. பாலு சொல்வது போல் கணிப்பொறி அறிமுகம் குறைவாக உள்ளோர் மத்தியில் அழகிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.