2005-08-06

காதல் விரோதி

வழக்கம் போல நரேந்திரமோடி அரசு சத்தம் போடாமல் ஒரு சமூகப் புரட்சிக்கு மூடுவிழா நடத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்தில் சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தும் முக்கியமான ஒரு காரணிக்கு குஜராத்தில் சாவுமணி அடிக்கப் பட்டிருக்கிறது.

திருமணங்கள் பெற்றோர் சம்மதமின்றி பதிவு செய்யப்படக்கூடாது என்றொரு உத்தரவை திருமணப் பதிவாளர்களுக்கும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களாக பெற்றோர் சம்மதத்துடன் கூடிய திருமணங்களையே சட்டப்பூர்வமானதாக ஏற்க வேண்டும் என நீதிமன்றங்களுக்கும் குஜராத் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்திய சமூகத்தில் இன்றும் காதல் திருமணங்களை பெற்றோர் அங்கீகரிப்பதில் மிகப்பெரிய தயக்கம் இருக்கிறது. அதற்கான மிக முக்கியமான காரணி சாதி. காதல் சாதிமதம் பார்ப்பதில்லை. காதலர்களும் அவ்வாறே. ஆனால் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டிய பெற்றோர்கள் சாதி வேறுபாடு இருந்தால் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவும் சட்டப்பூர்வமான பாதுகாப்பைப் பெறவும் பதிவுத் திருமணங்களையே நம்பியிருந்தார்கள். இந்நிலையில் குஜராத் அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய உத்தரவு காதல் திருமணங்களை தடை செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியல் சட்டப்படி திருமண வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் எந்தத் தடையுமின்றி திருமணம் செய்து கொள்வதற்கு இருந்த அடிப்படை உரிமையையே கேள்விக் குறியாக்குகிறது இந்த உத்தரவு. வயதுவந்த ஆணும் பெண்ணும் திருமண விஷயத்தில் என்றும் பெற்றோரை சார்ந்திருக்க வேண்டிய பழமைவாத கோட்பாடுகளுக்கு மீண்டும் இந்திய சமூகத்தை இட்டுச் செல்வதன் மூலம் கலப்புத் திருமணங்களை ஒழிப்பதும் அதன்மூலம் ஏற்படும் சாதிக்கலப்பு, சாதிமறுப்பு போன்றவற்றை தடுப்பதுமாகிய பிற்போக்குத் தனங்களை தொடர்ந்தும் நரேந்திர மோடியின் பிஜேபி அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசாணைக்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் கிளம்பாததற்கும் மோடி அரசின் தந்திரமான அணுகுமுறையே காரணம்.

பணத்துக்காக பெண்களை தந்திரமாக ஏமாற்றி திருமணம் செய்து கைவிடுவது, முன்னரே திருமணமான விஷயத்தை மறைத்து பெண்களை ஏமாற்றி பல திருமணங்கள் செய்வது போன்ற சமூக மோசடிகளிலிருந்து அப்பாவிப் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கை களாலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப் பட்டதாக அரசு செய்த தந்திரப் பிரச்சாரம் பெண்ணிய அமைப்புகளின் வாயை அடைத்து விட்டது. அரசு இதற்கு ஆதாரமாக காட்டியது இந்த அரசாணைக்கு வந்த பாராட்டுரைகள். அவை பெற்றோர்களிடமிருந்து வந்தவை என்பதை சொல்லவும் வேண்டுமா?

உண்மையில் ஏமாற்றித் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் சட்டப்பூர்வமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு திருமணம் செய்யமாட்டார்கள் என்பதும், உண்மையான காதலர்களே பதிவுத்திருமணங்களை அதிகம் நாடுபவர்கள் என்பதும் மறக்கப் பட்டு விட்டது. ஏமாற்றும் நோக்கமுடையவர்களில் மிகச்சிறு சதவீதத்தினரே பதிவுத்திருமணம் செய்பவர்கள். அவர்களை தண்டிப்பற்காக அல்லது கண்டறிவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக சொல்லப் பட்டாலும் உண்மையில் இதனால் பாதிக்கப் படுவது முழுக்க முழுக்க கலப்புத்திருமணம் செய்யும் காதலர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பெற்றோர்களால் செய்யப்பட்டு வந்த பால்ய விவாகங்களை நிறுத்த சமூகப்புரட்சிகள் பல தேவைப்பட்டன. குறிப்பிட்ட வயதுவந்தோர் திருமண உரிமை சட்டமாக்கப் பட்ட ஒன்று. இன்று இத்தகைய பிற்போக்குத்தனங்களால் நமது முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை மனித உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

5 comments:

-L-L-D-a-s-u said...

ஜாதீய கட்டுமானம் இருக்குமளவும்தான் தங்கள் பிழைப்பு என்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் .. இந்த சட்டமே சட்டவிரோதம் ..

Srikanth Meenakshi said...

மதக்கலப்புத் திருமணங்களுக்கு எதிரான வி.எச்.பியின் போராட்டத்திற்கு துணை போகும் விதமாக உருவாக்கப்பட்ட அராஜகச் சட்டம் இது. பலத்த எதிர்ப்புகளினால், இது திரும்பப் பெறப் பட்டது என்று ஊடகங்களில் படித்தேன். உங்களிடம் புதிய தகவல் ஏதேனும் உள்ளதா?

குழலி / Kuzhali said...

//திருமணங்கள் பெற்றோர் சம்மதமின்றி பதிவு செய்யப்படக்கூடாது என்றொரு உத்தரவை திருமணப் பதிவாளர்களுக்கும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களாக பெற்றோர் சம்மதத்துடன் கூடிய திருமணங்களையே சட்டப்பூர்வமானதாக ஏற்க வேண்டும் என நீதிமன்றங்களுக்கும் குஜராத் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
//

எந்த கட்டுமானத்தையோ தாங்கிப்பிடிக்க கொண்டுவரப்பட்ட சட்டமாகத்தான் தெரிகின்றது, ஏமாற்ற திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் பதிவு திருமணம் செய்ய மாட்டார்கள் என்பதும் உண்மையே.

மோடி அரசாங்கம் இன்னும் ஒன்றுதான் செய்யவில்லை, எல்லோரும் காவித்துணிதான் கட்ட வேண்டுமென்று சொல்லவில்லை

Anonymous said...

ஆமாம் குழலி. சினிமாவில் எல்லாரும் மஞ்சள் துணி தான் அணிந்து வர வேண்டும் என்று எப்படி அன்புமணி கட்டளையிடவில்லையோ அப்படியே மோடி அரசும் இதுவ்ரை காவித்துணி கட்டளை இட வில்லை. ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லை.

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.