எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சவுதி அரேபியாவில் டாங்கர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் டாங்கர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆகஸ்டில் அவரது டாங்கர் லாரியின் பின்புறமாக இரு இளைஞர்கள் வந்த சிறிய கார் வேகமாக வந்து மோதியதில் கார் சிதைந்து இளைஞர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். அவர்களுக்கு 17, 18 வயதுதான் இருக்கும். நண்பர் தவறு செய்யவில்லை என்றாலும் இரு உயிர்கள் போய்விட்டதால் ஓடிப்போய்விடும்படி கூறியவர்களுக்கு செவிகொடாமல் தானே முன்னிருந்து எல்லாம் செய்தார். போலீசில் தானாகவே சரணடைந்தார்.
இறந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர் தவறு செய்யவில்லை என்பது தெரிந்திருந்ததால் அவர்கள் நண்பர்மீது கடுமையான நடவடிக்கை ஏதும் கோரவில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால் சம்பவத்துக்குப் பின் அவரது ஸ்பான்சர் எனப்படுகிற நபர் (அரபி) நண்பரைப் பார்க்க வரவேயில்லை. நஷ்ட ஈடு வழங்க வேண்டியிருக்கும் என்று பயந்த அரபி இறந்த இளைஞர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவோ நண்பரின் வழக்குத் தொடர்பாக உதவி செய்யவோ முன்வரவில்லை. இதனால் நண்பரின் மீதான வழக்கை ரத்து செய்ய ஒப்புக்கொண்டிருந்த இளைஞர்களின் குடும்பத்தினர் பின்னர் அதற்கு மறுத்து விட்டனர்.
வழக்கு விசாரணையின்றி நண்பர் கடந்த எட்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார். அங்குள்ள அவரது சகதோழர்கள் இளைஞர்களின் குடும்பத்தினரிடம் பேசிப்பார்த்தும் ஸ்பான்சர் வராமல் சமரசம் இயலாதென்று கூறிவிட்டனர். ஸ்பான்சர் தன் பொறுப்பிலிருந்து நழுவ விரும்புவதால் எதற்கும் மசியாமல் கமுக்கமாக இருந்துவிட்டார். வேறுவழியின்றி நண்பர்கள் இந்திய தூதரகத்தில் உதவிக்காக விண்ணப்பித்தனர். அங்கும் எந்த அசைவும் இல்லை.
பின்னர் ஊரிலிருந்து நண்பரின் மனைவியால் விளக்கமாக விபரங்கள் இந்திய தூதரகத்திற்கு FAX செய்யப்பட்டது. பலமுறை மின்னஞ்சல் மூலமும் நினைவூட்டப் பட்டது. விளக்கமாக எல்லாம் தெரிவித்தும் ஸ்பான்சருக்கு சாவதானமாக கடிதம் எழுதி இந்த விஷயத்தை கவனிக்கும்படி கூறிவிட்டு இந்திய தூதரகமும் மௌனியாகி விட்டது.
இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் பொதுவாக ஸ்பான்சர் எனப்படுபவர் வெளிநாட்டவரை வேலைக்கு வைத்திருப்பவராகத்தான் இருப்பார். ஆனால் குறிப்பிட்ட ஸ்பான்சரிடம் வேலை பார்த்து வந்த நண்பர் பின்னர் அவருடைய வாகனத்தை தாமே வாடகைக்கு (லீசுக்கு) எடுத்து குடிநீர் சப்ளை செய்து வந்தார். ஆகவே நண்பர்தான் அவருக்கு வாடகை தருவாரே தவிர ஸ்பான்சர் சம்பளம் ஏதும் தருவதில்லை. அவ்வாறு தண்ணீர் சப்ளை செய்யும்போதுதான் நணபரின் வாகனம் விபத்தில் சிக்கியது.
ஆகவே தமக்கு எந்தவித பொறுப்பும் இல்லை எனக்கூறி இதில் மேற்படி ஸ்பான்சர் எந்த உதவியும் செய்ய விரும்பவில்லை. சட்டப்படி (சான்றிதழ்களின்படி) அவரே ஸ்பான்சர் என்பதால் அவரது தலையீடு இல்லாமல் நண்பர் விடுதலை பெறுவது இயலாமல் இருக்கிறது.
(எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி குறிப்பிட்ட வாகனமும் பின்னர் களவு போய்விட்டதாகவும் கம்பெனி நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி நேரடியாகவும் லீசுக்கும் ஓடிக் கொண்டிருந்த பல வாகனங்களை விற்று விட்டு நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் தெரிகிறது. நஷட ஈடு வழங்காதிருக்க ஸ்பான்சர் செய்த தந்திரம் என்று நண்பரின் சகாக்கள் தெரிவித்துள்ளனர்)
இந்திய தூதரகமோ வழக்கமான காகித நடைமுறைகளின்படி மெத்தனமாக இருக்கிறது. சரியாகப் புரிந்துகொள்ளாமல் வழக்கமான நடவடிக்கைகளில் காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கடிதம் அனுப்பியது தவிர (அதுவும் ஸ்பான்சருக்கே?) எந்த உருப்படியான காரியத்தையும் அவர்கள் செய்யவில்லை.
குறிப்பிட்ட நண்பரின் தாயாரும் மனைவியும் ஒரே மகளும் என மூன்று பெண்கள் மட்டும் ஆதரவின்றி இங்கே ஊரில் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.
எனக்குத் தகவல் தெரிந்தது முதல் என்னால் முடிந்த உதவியாக அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பி தூதரகத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன். இந்தியத் தலைகளுக்கும் மனுக்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
இது தொடர்பாக வலைநண்பர்களின் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். சவுதியில் பணிபுரியும் நண்பர்கள், ரியாத் இந்திய தூதரகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் இதில் ஏதாவது உதவ முடியுமா? நிலைமையை அவர்கள் (தூதரகம்) புரிந்து வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதுதான் இப்போது முக்கியம்.
சவுதி விதிகளின்படி இது போன்ற வழக்குகளில் ஸ்பான்சர் தான் பொறுப்பேற்று வழக்கை நடத்த வேண்டுமா?
இறந்து போன இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களா? என்று தெரியவில்லை. குறைந்த வயதில் அங்கே உரிமம் வழங்கப் படுமா?(அவர்களின் வயது குறித்து கேட்டறிந்த செய்தி சரியா என்றும் தெரியவில்லை.)
எந்தவித விசாரணையுமின்றி சிறையில் வைக்கப் பட்டிருப்பது இங்கு போல் அங்கும் உண்டுபோல. தண்டனைக்காலம் இவ்வளவு என்று கூடத்தெரியாமல் அன்னியச் சிறையில்?
2005-03-11
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அன்புள்ள அனுராக்,
உங்கள் பதிவைப் படித்ததும் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சுங்க.
உங்க நண்பருக்கு உதவியும் நியாயமும் கிடைக்கணுமுன்னு கடவுளை வேண்டிக்கறேன்.
தவிக்கிற மூன்று பெண்களுக்கு என்னன்னு ஆறுதல் சொல்ல முடியும்?
என்றும் அன்புடன்,
துளசி.
சவூதி பகுதியில் இருக்கும் நண்பர்கள் தகுந்த ஆலோசனை தந்து உதவுவார்கள் என்று நம்புகிறேன். கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அனுராக், இது குறித்து முழு விபரங்களை என் தனிமடலுக்கு அனுப்புங்கள், இங்குள்ள சிலர் மூலமாக இந்திய தூதரகத்திற்கும், இந்திய தூதுவருக்கும் விபரம் அனுப்பி ஏதேனும் செய்ய இயலுமா என்று பார்க்கலாம்.
- sakaran (at) gmail.com
விபத்து இந்தியரின் தவறால் நடக்கவில்லை. இறந்தவர்கள் டாங்கருக்குப் பின்னால் தங்கள் காரை கட்டுப்பாடு இழந்து மோதியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே இந்தியர் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சவுதியில் இந்தியர்களை அதுவும் இஸ்லாமியர் அல்லாதவர்களை மிக மட்டமாக நடத்துகின்றனர். இன்னொரு கேஸில் இந்து இந்தியர் ஒருவர் மேல் கார் ஏற்றிக் கொன்று விட்டனர். அவருக்கான நஷ்ட ஈட்டை குற்றவாளியிடமிருந்து வசூல் செய்த சவுதி அரசு இறந்தவர் குடும்பத்துக்கு கால் பங்கை வழங்கி மிகுதியை ஸ்வாஹா செய்தது. ஏனெனில் இறந்தவர் முஸ்லிம் அல்லவாம். இம்மாதிரி இறந்தவர் பணத்தைக் கபளீகரம் செய்யும் சவுதி அரசு பேசாமல் பிச்சை எடுக்கலாம். சரியான அல்பங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தவறு யார் பக்கம் என்பதெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. உயிருக்கு உயிர் என்பதைப்போல வாழ்நாழ்சிறை அல்லது blood money என்பது தான் அவர்களின் சட்டம் போல.
Post a Comment