2005-05-17

தட்டச்சும் தமிழும்

காசியின் பதிவில் விசைப்பலகைகள் குறித்த வாக்கெடுப்பில் குறைவானவர்களே பங்கேற்ற போதிலும் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் ரோமன் முறையை அதிகம் பேர் பயன்படுத்தி வருவது தெரிகிறது.

அஞ்சால், பொனட்டிக், ஒலியியல் என்று பல்வேறு செயலிகளில் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் பட்டாலும் அடிப்படையில் இது ஆங்கில எழுத்துருவின் உச்சரிப்பு அடிப்படையில் தட்டி தமிழில் பெறும் முறைதான்.

எந்தச் செயலியிலும் நேரடியாக தமிழில் எழுத பயன்படும் எ-கலப்பை அதிகமானவர்களால் பயன்படுத்தப் படுகிறது. அதன் முதன்மைப் பதிப்பில் இந்த அஞ்சால் முறைதான் பயன்படுத்தப் பட்டுள்ளது. (பாமினி மற்றும் தமிழ்99 முறைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.)

எளிமையான தமிழ் கருவிகள் உருவாக்கும் சுரதாயாழ்வாணனின் தமிழ் எழுதியிலும் ரோமன் தட்டச்சு முறைதான் இருந்தது. (பின்னர் அவர் பாமினி இணைத்து வெளியிட்டார்) இது போன்ற காரணங்களால் ரோமன் முறையை அதிகம்பேர் பயன்படுத்த வாய்ப்பாக இருந்தது.

இணையத் தமிழுக்கு ஈழத்தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இலங்கையிலும் பிற தென்கிழக்காசிய நாடுகளிலும் புழக்கத்தில் இருந்த தமிழ் தட்டெழுத்து முறையான பாமினியும் பலரால் பயன்படுத்தப் பட்டது.

தமிழக தட்டச்சுப் பயிற்சிநிலையங்களில் கற்பிக்கப் பட்ட தட்டெழுத்து முறையையும் பலர் பயன்படுத்த விரும்பினர். ஆனால் அதற்கான செயலிகள் இல்லாததால் அதன் சதவீதம் குறைவாகவே உள்ளது. குறள் செயலியில் இம்முறை இருந்த போதிலும் அதை அறிந்து பயன்படுத்துவோர் குறைவுதான். பலரின் வேண்டுகோளை அடுத்து எ-கலப்பை தட்டச்சு முறையில் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்99 என்பது உலகக் கணித்தமிழ் மாநாட்டில் கணித்தமிழ் அறிஞர்களால் தமிழில் அதுகாறும் புழங்கி வந்த எல்லா விசைப் பலகை முறைகளையும் ஒப்பு நோக்கி விவாதித்து இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட எளிமையான முறை. அதையே தமிழக அரசு அங்கீகரித்து வெளியிட்டது. இம்முறையும் ஓரளவு பயன்படுத்தப் படுகிறது.

மயிலை. நளினம், தமிழம் போன்ற சில புதிய, பழைய முறைகளும் குறைந்த அளவில் புழக்கத்தில் உள்ளன.

இன்று நிறையப்பேர் ரோமன் முறையைப் பயன்படுத்தினாலும் அவசரத்துக்கு உதவுமேயல்லாமல் அதை தமிழ் தட்டச்சு முறையாக நிரந்தரமாக ஏற்பதில் எல்லோருக்குமே தயக்கமிருக்கிறது.. பாமினியையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பயன்படுத்தினாலும் அது தட்டச்சு முறை என்பதால் அதை முறையாகக் கற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

காலப்போக்கில் தட்டச்சுப் பயிற்சி நிலையங்கள் இல்லாது போகும் நிலையில் பாமினி உட்பட எல்லா தட்டச்சு(ப்பொறி) சார்ந்த முறைகளும் பயனற்றுப் போகும்.

அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம். நமக்காக இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு கணித்தமிழ் எழுதுமுறையாக அனைவரும் ஏற்கக் கூடிய எளிய ஒருஎழுதுமுறை கண்டிப்பாக அங்கீகரிக்கப் படவேண்டும். அது தமிழ்99 ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் நான் கூறிவரும் காரணங்களால் பிற முறைகள் பயனற்றுப்போகும் நிலைகுறித்து யாரேனும் சிந்தித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

வெறுமனே நாம் விரும்பும் முறைக்கு எதிரானவர்.இவர் என்று முத்திரை குத்தி ஒதுக்கி/ஒதுங்கி விடாமல் விவாதத்தில் பங்கெடுங்கள். ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர் இது.

தனிநபர்களை முன்வைத்தல்ல. சமூகத்தை முன்வைத்து, எதிர்கால தமிழ் தலைமுறையை முன்வைத்து கணித்தமிழுக்கு அவசியமான விவாதம் இது.

12 comments:

dondu(#11168674346665545885) said...

தமிழை நேரடியாக தட்டச்சு செய்வது என்பது யளனகபக என்பதையே குறிக்கிறது என்று நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை ரோமன் தட்டச்சே சிறந்தது. நான் உபயோகிப்பது ஜெர்மன் விசைப்பலகை. ய மற்றும் ழ இடம் மாறி வரும். வேறு சில எழுத்துக்களும் இடம் மாறும் இதில் தமிழ் தட்டச்சு செய்ய யளனகபக நிச்சயம் ஒத்து வராது. வேறு இடங்களில் ஆங்கில விசைப்பலகை. அதற்கு வேறு தனியாக யளனகபக பழக வேண்டும். ரோமன் தட்டச்சு முறையில் இந்தத் தொல்லையில்லை. மேலும் நான் இப்போது மிக வேகமாக தட்டச்சு செய்கிறேன். வேறு என்ன வேண்டும்? பிரெஞ்சு விசைப்பலகைக்கும் நான் கூறுவது பொருந்தும்.

எதற்கு சக்கரத்தை திரும்பத் திரும்ப கண்டுபிடிக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பார்க்க: http://www.infitt.org/minmanjari/issue2_1/mm-srivas.html
Tamil99 is the computer keyboard layout defined as the primary standard layout for inputting Tamil in computers. Tamil99 keyboard layout is the computer-input method for Tamil, recommended by Tamilnadu Government and by IT institutions in Sri lanka. Malaysia and Singapore tend to promote a choice between Tamil99 Keyboards and Romanised-Phonetic keyboard layouts. Most of the Tamil diaspora, living around the world is expected to gradually adopt the Romanised-Phonetic keyboard layout.
மணியன்

வலைஞன் said...

Dondu அவர்களுக்கு!

நீங்கள் பல நாடுகளிலும் பணிபுரிந்தவர். அந்தந்த நாட்டு உணவு தவிர அரிசிச்சோறும், இட்லி சாம்பாரும் கூட அங்கேயே கிடைத்திருக்கும். அதற்காக வாழ்நாள் முழுவதும் அங்கே தங்கியிருக்க விரும்புவீர்களா? வீட்டுச் சாப்பாட்டை நம்வீட்டில் சமைத்துத் தரும்போது கிடைக்கும் ருசியும் ஒருவித திருப்தியும் உங்களுக்கு அங்கே கிடைத்திருக்குமா?

அதைத்தான் நான் கூறுகிறேன். ஆங்கில எழுத்திலேயே தமிழைத் தட்டச்ச முடிகிறது என்பது ஒரு வசதிதான். அதைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தமிழை தமிழுக்கான ஒருமுறையில் தட்டச்சிப் பெறுவது என்பது பெருமைக்குரிய விஷயம். (அதற்காக திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர்வைக்கப் போராடும் தமிழ்க்குடிதாங்கிகள் அளவுக்கு வெறியெல்லாம் அவசியமில்லை.)

மணியன் அவர்கள் சொல்லியிருப்பது போல
//Tamil99 is the computer keyboard layout defined as the primary standard layout for inputting Tamil in computers.//
ஆனால் இது என்ன முறை என்று பலருக்கும் தெரியாது.

அல்வாசிட்டி.சம்மி அவர்களே.

நீங்கள் வழக்கம் போல கலப்பையின் ரோமன்/அஞ்சால் முறையிலேயே தட்டச்சிக்கொண்டிருங்கள். கூடவே கலப்பையின் தமிழ்99 பதிப்பையும் பதிவிறக்கிக் கொண்டு (http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5...) நேரம் கிடைக்கும்போது அந்த முறையில் தட்டச்சிப் பழக முயலுங்கள். அதில் க+இ என்று தட்டச்சினாலே கி என்று வரும். த+உ=து, ழ+ஓ=ழோ, ஞ+ஐ=ஞை என எளிய நடைமுறைதான். SHIFT அல்லது CAPS அழுத்தாமலே தமிழில் தட்டச்ச முடியும். பழகிய பிறகு இரண்டிலும் மாறிமாறி விருப்ப்படி தட்டச்சலாம்.

ஆனால் ஒன்று.
எந்த முறையும் தெரியாதவர்களுக்கு ஒரு புதிய முறையை மனதில் பதியவைப்பது எளிது. ஏற்கனவே ஒரு முறையில் தட்டச்ச தெரிந்தவர்களுக்கு ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் எழும். பழகி விட்டால் பழமொழிகளைக் கற்பது போல பயனுள்ளது.

வலைஞன் said...

//பழமொழிகளைக் கற்பது போல// என்று பிழையாக வந்து விட்டது.

அது "பல மொழிகளைக் கற்பது போல" என்றிருக்க வேண்டும்.

வலைஞன் said...

//எதற்கு சக்கரத்தை திரும்பத் திரும்ப கண்டுபிடிக்க வேண்டும்?//

சக்கரத்தை திரும்பத் திரும்பக் கண்டு பிடிக்க வேண்டாம். ஆனால் ஓடும் சாலைக்கேற்ப அது தயாரிக்கப்பட/மேம்படுத்தப் படவேண்டும்

Kannan said...

//ஆனால் தமிழை தமிழுக்கான ஒருமுறையில் தட்டச்சிப் பெறுவது என்பது பெருமைக்குரிய விஷயம்.//

இதில் 'பெருமை', 'திருப்தி' என்பதையும் நுழைத்தால் இலக்கை(இப்பதிவின் நோக்கம்) இழந்து விடுவோம்.

phonetic முறையில் தட்டச்சுவதன் எளிமையிலும், intuitiveness (மன்னிக்கவும் - சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை) இனாலும் ஈர்க்கப்பெற்றே நிறையப் பேர் கணினியில் தமிழ் தட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் பணிபுரியும் சீன நிறுவனத்திலும் ஆங்கில விசைப்பலகையில் phonetic முறையிலேயே சீன மொழியை உள்ளிடுகிறார்கள். தமிழ்99 என்ன மாதிரியான அமைப்பைக் கொண்டதென்று எனக்குத் தெரியாது.

ஆனாலும், கற்றல் மற்றும் பயன்பாட்டு எளிமை கொண்டதான எந்தவொரு முறையும் சாதாரணர் முதல் விற்பன்னர் வரை ஒரு அணுக்க உணர்வைத் தரும் என்று எண்ணுகிறேன் (இந்த உணர்வே இதன் வளர்ச்சிக்குத் தேவை என்பதும் என் தாழ்மையான கருத்து)

phonetic முறையில் நான் காணும் ஒரே குறை இரண்டு மூன்று தட்டுக்களுக்குப் பிறகே ஒரு உயிமெய் எழுத்து தோன்றுவது தான். அயற்சி ஏற்படுத்தாத ஒரு நல்ல முறை தேவை

Voice on Wings said...

//அயற்சி ஏற்படுத்தாத ஒரு நல்ல முறை தேவை//
நல்லா சொன்னீங்க கண்ணன் சார்.

தமிழை உள்ளிட இலகுவான முறை எதுவோ அதுவே சிறந்தது. Romanized ஒன்றையே அறிந்திருப்பதால் எனக்கு வேறு முறைகளோடு ஒப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை. Romanizedஐ விட வேகமாக, எளிதாக தமிழை உள்ளிடும் நுட்பமொன்று இருக்குமென்றால் அதனை கற்றுப் பின்பற்றுவதில் எந்தவொரு தயக்கமும் எனக்கில்லை. மற்றவர்களுக்கும் அவ்வாறே என நினைக்கிறேன்.

வலைஞன் said...

ஐயா அதைத்தானே நான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன்.

//phonetic முறையில் நான் காணும் ஒரே குறை இரண்டு மூன்று தட்டுக்களுக்குப் பிறகே ஒரு உயிமெய் எழுத்து தோன்றுவது தான். அயற்சி ஏற்படுத்தாத ஒரு நல்ல முறை தேவை//

தமிழ்99 முறையில் எந்த எழுத்துக்கும் இரண்டு தட்டுக்கு மேல் இல்லை.
31 எழுத்துக்களை ஓரே தட்டில் பெற முடியும். தமிழ் எழுத்துக்கள் 247 க்கும் shift/caps கூட தட்ட தேவையில்லை என்றும் பலமுறை கூறிவிட்டேன். முயன்று பாருங்கள் உங்களுக்கே புரியும்.

Anonymous said...

மிகவும் பயனுள்ள செய்தி

Anonymous said...

நன்றி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

யாமறிந்த விசைப்பலகைகளில் தமிழ்99 விசைப்பலகை போல் இனிதாவதெங்கும் காணோம் !!! :)

வேறு விசைப்பலகைக்கு வக்காலத்து வாங்குகிறவர்களை கண்டு பரிதாபப்படத்தான் முடிகிறது. ஒரு முறையாவது தமிழ்99 பயன்படுத்திப் பார்த்தால் பிறகு கனவில் கூட வேறு எதையும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html