2005-05-25

சுரதாவின் செயலிகள்!

நான் இணையத்தை வெறும் பார்வையாளனாக மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த நேரம். வலைப் பதிவுகளும் அப்போது எனக்கு அறிமுகமாகி இருக்க வில்லை.

தமிழ்த் தளங்களை தேடித்தேடி வாசிக்க முயன்ற எனக்கு அதில் உள்ள எழுத்துருக் குழப்பங்கள் புரிபட சிலகாலம் பிடித்தது. ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி எழுத்துருக்களை பதிவிறக்க வேண்டிய கட்டாயம். பதிவிறக்கிய எழுத்துருவை நிறுவி சிரமப்பட்டு தளத்தைப் பார்த்தால் அதில் குறிப்பிடத்தக்கதாக அல்லது பயனுள்ளதாக ஒன்றும் இருக்காது.

பிறகு அடுத்த தளம்...அதே பிரச்சினை...அதே பதிவிறக்கம், நிறுவல்...

ஒருமுறை தேடுபொறியில் tamil என்று தேடியபோது அகப்பட்டது தான் சுரதாவின் 'பொங்குதமிழ்'.

அது எனது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தந்தது. முதல் பார்வையில் (வாசிக்க முடியாத) எந்தத் தளத்தையும் பொங்குதமிழில் உள்ளிட்டு வாசித்துவிட்டு தேவை என்றால் மட்டும் எழுத்துருவைப் பதிவிறக்குவது வழக்கமானது. இதற்காக பொங்குதமிழை கணினியில் சேமித்து, டெஸ்க்டாப்பில் அதன் சுட்டியையும் இட்டு வைத்தேன். (இப்போதும் வைத்திருக்கிறேன்.)

எந்தத் தெரியாத எழுத்துரு கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தையும், தளத்தையும் சரியாகத் தெரிய வைப்பது மட்டுமல்ல அந்த ஆவணத்தை யூனிகோடு எழுத்துருவில் மாற்றித் தருகிறது. இது பொங்குதமிழின் மிகச்சிறந்த பயன்பாடு.

தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் அறிமுகமானபோது இணைய தளங்கள் பலதரப்பட்ட எழுத்துருக்களில் உருவாக்கப்பட்ட நிலை மாறி திஸ்கியிலும் டாப் எழுத்துரு முறையிலும் நிறையத் தளங்கள் உருவாகின.

அடுத்தக் கட்ட வளர்ச்சியான யூனிகோடு என்னும் உலகப் பொதுத்தர எழுத்துமுறை வந்த பிறகும் பழைய ஆவணங்களை என்ன செய்வது என்ற தயக்கத்தில் சிலர் யூனிகோடுக்கு மாற்றாமலிருந்தனர். சுரதா அதற்கும் தீர்வு கண்டார். அவரது அடங்காத்தமிழ் என்னும் செயலி திஸ்கி அல்லது டாப் முறையில் அமைந்த இணையப் பக்கங்களை நேரடியாக யூனிகோடு இணையப் பக்கமாக மாற்றித் தருகிறது.

இ-ராவணன் என்றொரு செயலியை சுரதா வெளியிட்டார். அது தமிழில் இணையப் பக்கங்களை உருவாக்கவும், பலவண்ண வடிவ மாற்றங்களுடன் கண்கவர் தோற்றமுள்ள தமிழ் ஆவணங்களை உருவாக்கவும், அவற்றை பல்வேறு வகை கோப்புகளாக சேமித்துக் கொள்ளவும் வகை செய்தது. மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஃப்ரண்ட் பேஜ் செயலிகளின் அடிப்படை செயல்பாடுகளை எளிமையாக செயல்படுத்தக் கூடியதாகவும் தமிழ் வெளிப்பாட்டிற்கு உகந்ததாகவும் அது இருந்தது.

புகழ்பெற்ற கூகுள் தேடுபொறியில் தமிழில் எழுதித் தேடும் கூகுள்-யாழ் என்னும் தேடுகருவியை உருவாக்கினார். தமிழ்த்தளங்களை தமிழிலேயே தேடிப்பெற இது பயன்மிக்கதாக இருந்தது. அதன் அடுத்த கட்டமாக முக்கியமான எல்லா தேடுபொறிகள் மூலமாகவும் தேடும் வசதியுள்ளதாக முழு வலையுலகிற்குமான தமிழ்த் தேடியந்திரமாக யாழ்தேவி தமிழ் தேடியந்திரத்தை உருவாக்கினார்.

அவரது புதுவை எழுதி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை transliteration முறையில் தமிழில் மாற்றித் தரும் எளிய தமிழ் தட்டச்சுச் செயலி. ரோமன் ஒலியியல் தட்டச்சு முறையில் இதில் தமிழைத் தட்டச்சு செய்யலாம். பாமினி, டாப், திஸ்கி மற்றும் யூனிகோடு வகை எழுத்துருக்களை தட்டச்சு செய்வதற்கான தனித்தனி புதுவை எழுதிகளை உருவாக்கியுள்ளார்.

இவை தவிர யூனிகோடு-பாமினி, யூனிகோடு-திஸ்கி, யூனிகோடு-டாப், பாமினி-திஸ்கி, பாமினி-யூனிகோடு எழுத்துரு மாற்றத்திற்கான தனித்தனி செயலிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதன்பிறகு ஈழம் எழுதி என்ற ரோமன், பாமினி இருவகை தட்டச்சு முறைகளும் கொண்ட யூனிகோடு எழுதுகருவியை வெளியிட்டுள்ளார். இது தமிழ் வலைப் பதிவுகளுக்கான பின்னூட்டக் கருவியாகவும் பயன்படுத்தப் படுவது இதன் சிறப்பான பயன்பாடாகும்.

உலகத்துச் செய்திகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரே முகப்பில் தரும் அவரது சுரதா.காம் இணையதளமும் இன்னொரு பயன்மிக்க தமிழ்ச்சுரங்கம்.

வலைப்பதிவுகளை சுரதா குடில் என்ற பெயரில் ஒருங்கிணைத்து வந்தார். அவை இப்போது புதிதாக யாழ்குடில் என்ற வலைவாசலில் மிளிர்கின்றன.

சுரதா என்ற தனிமனித சாதனைகள் இவை. இவற்றின் பின்னுள்ள உழைப்பும் தமிழார்வமும் போற்றப்பட வேண்டியவை.

அவரது முயற்சிகள் மற்றவர்களுக்கும் ஆர்வத்தை ஊட்டக்கூடியவை. அதன் சிறு துளியில் நானும் மூழ்கித் திளைக்கிறேன்.

நன்றி சுரதா...!

4 comments:

Suresh said...

ஆம்...சுரதா போன்றவர்களின் உழைப்பிற்கு நாம் நிச்சயமாக கடமைப்பட்டிருக்கிறோம்.

வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு. நன்றிகள்.

Anonymous said...

:-)
இராவணனை கணினியில் இறக்க முடியவில்லை.

அன்பு said...

சுரதாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் அவரைப்பாராட்டுவதோடு நின்று விடாமல் அவர்போன்றவர்கள் கொண்டுவரும் செயலிகளுக்கு கைமாறாக நாமும் பயன்படுத்தி - நமக்குத்தெரிந்த நாலுபேருக்காவது அதை எடுத்துச்செல்வதுதான் அவருக்கு தெரிவிக்கும் நன்றி.

அந்த நன்றியை உங்களின் இந்தப்பதிவு செய்கிறது. அதனால் உங்களுக்கும் நன்றி, அனுராக் அப்பா:)