(நண்பர் காசியின் பதிவில் வாக்கெடுப்பு!)
1.
ஒரு இணையப் பக்கத்தையோ அறிக்கையையோ படிவத்தையோ கணினியில் வடிவமைக்கும்போது விதவிதமான எழுத்துருக்கள் கொண்டு வடிவமைத்தால் அதன் அமைப்பில் அழகு, கவர்ச்சி ஏற்படுகின்றன. அச்சுத்தொழிலுக்கும் இது மிகவும் அவசியமானது. இதற்காகவே விதவிதமான வடிவங்களில் கணினி எழுத்துருக்கள் ஆக்கப் படுகின்றன.
ஆங்கிலத்தில் எழுத்துருக்கள் என்றால் அவை வேறுபடுவது அதன் வெளித்தோற்ற வடிவங்களில்தான். ஆனால் தமிழில் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்கள் என்றவுடன் அதன் வடிவங்களில் மட்டுமல்லாமல் அதன் தகவமமைப்பிலும் வேறுபாடுகள் இருந்தன. ஆரம்பக்காலத்தில் அவரவர் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு தகவமைப்பில் இருந்தன. இதனால் ஒரு தகவமைப்பில் உருவான எழுத்துருவில் ஆக்கப்பட்ட வலைப்பக்கங்களை மற்றொரு எழுத்துரு கொண்டு வாசிக்க இயலாததாக இருந்தது. இதனால் ஒவ்வொரு செயலியும் தனித்தனி எழுத்துருக்களைக் கொண்டிருந்தன. ஒன்று மற்றொன்றோடு இணைந்து இயங்க இயலவில்லை.
இந்நிலை மாற முயற்சியெடுத்து கணித்தமிழ் அறிஞர்களால் திஸ்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பரவலாக பல தளங்களிலும் செயலிகளிலும் பயன்பாட்டுக்கு வந்தது. இதன்பிறகு கணித்தமிழ் மாநாட்டில் தமிழக அரசால் தரப்படுத்தப்பட்ட டாம்/டாப் எழுத்துருக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை தமிழகத்துக்கு வெளியே பெரிய வரவேற்புப் பெறவில்லை என்றாலும் இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்தி பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன.
இதற்கிடையில் உலகளாவிய பொதுமைப் படுத்தப்பட்ட எழுத்துருக்கள் பற்றிய கருத்தாக்கம் வலுப்பெற்றிருந்தது. ஒரே எழுத்துருவில் பல மொழிகளையும் கொண்ட இந்த யூனிகோடு எழுத்துருக்கள் பற்றி ஆரம்பத்தில் கணித்தமிழ் அறிஞர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் யூனிகோடில் தமிழை உள்ளீடு செய்யும் வாய்ப்புப் பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்த திஸ்கியிலோ டாப் முறையிலோ அல்லாமல் வேறொரு முறையில் அமைத்து விட்டனர்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தமிழ் எழுதுமுறைக்கு பாதகம் ஏதும் இல்லை என்றாலும் தமிழ் இலக்கண முறைப்படி சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கணித்தமிழ் அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். எவ்வாறிருப்பினும் யூனிகோடு வருகையால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.
வலைத்தளங்கள் பெரும்பாலும் யூனிகோடுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. யூனிகோடு முறையில்தான் புதிய செயலிகள் ஆக்கப் படுகின்றன. வலைப்பதிவுகள் 100% யூனிகோடுக்கு மாறிவிட்டன. மின்னஞ்சல்குழுக்களும் யூனிகோடில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இனி யூனிகோடின் ராச்சியம்தான். எல்லோரும் யூனிகோடு பாவிப்பதால் கணித்தமிழின் எல்லா முன்னேற்றங்களும் எல்லா கணினி பாவனையாளர்களையும் சென்றடைய வாய்ப்புள்ளது.
2.
எழுத்துருக்கள், விசைப்பலகை முறைகள், தட்டச்சுச் செயலிகள் ஆகியவற்றின் இடையில் பலருக்கும் சில குழப்பங்கள் இருக்கின்றன. உதாரணமாக சுரதாவின் செயலியைப் பின்பற்றி தமிழ் எழுதுகருவி உருவாக்கியுள்ள ஒரு நண்பர் ரோமன் தட்டச்சு முறையை திஸ்கி என்று குறிப்பிட்டுள்ளார். திஸ்கி எழுத்துருக்களைப் பயன்படுத்துவோர்களில் பெரும்பாலானோர் ரோமன் தட்டச்சு முறையில் தட்டச்சுகின்றனர் என்பதைத் தவிர இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது திஸ்கி என்பது எழுத்துரு அமைப்பு. ரோமன் என்பது தட்டச்சு முறை. அதுபோலவே யூனிகோடு என்று தட்டச்சு முறை கிடையாது. யூனிகோடு எழுத்துரு அமைப்பை பல்வேறு செயலிகளின் உதவியால் ரோமன், பாமினி, தட்டச்சு, தமிழ்99 போன்ற தட்டச்சு முறைகளில் எழுதலாம்.
திஸ்கி ஆதரவாளர்கள் டாம்/டாப் எழுத்துருக்கள் மீது வெறுப்புக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது. இதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் அதே வெறுப்பு தமிழ்99 விசைப்பலகை முறை மீதும் இருப்பது புரிந்து கொள்ள முடியாதது.
டாம்/டாப் எழுத்துருக்களும் தமிழ்99 விசைப்பலகையும் ஒரே சமயத்தில் வெளியிடப் பட்டவை; தமிழக அரசால் தரப்படுத்தப் பட்டவை என்பது தவிர இரண்டும் பயன்பாடுகளில் வெவ்வேறானவை.
யூனிகோடின் வருகைக்குப் பின் டாம்/டாப் எழுத்துருக்களின் தேவையே இல்லை. திஸ்கியும் கூட காலப்போக்கில் வழக்கொழிந்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அதே சமயம் யூனிகோடில் தமிழின் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
3.
முரசு, எ-கலப்பை, குறள் செயலி என்பவை தமிழை கணினியில் எழுத உதவும் கருவிகள்.
முரசு ஒரு இணைய செயலி. பல உள்ளமைந்த எழுத்துருக்களைக் கொண்டது. வேறுபட்ட எழுத்துருக்களைக் கொண்ட பல இணைய தளங்களை இவற்றின் உதவியால் வாசிக்க முடியும். முரசு அஞ்சல் (Murasu Anjal 2000-second edition-version 9.5.2) உதவியால் Anjal keyboard, Tamil99 keyboard, TamilNet97 keyboard, Mylai keyboard, New Typewriter keyboard, Old Typewriter keyboard, Anjal Indic keyboard, Murasu-6 keyboard ஆகிய 8 தட்டச்சு முறைகள் மூலம் கணினியில் தட்டச்சு செய்ய முடியும். ஆனால் குறிப்பிட்ட சில text-editor களில் மட்டுமே இதன்மூலம் தட்டச்சு செய்ய முடியும்.
எ-கலப்பை என்பது முரசுவைப்போல முழுமையான செயலி அல்ல. அது விசைப்பலகைக்கான driver எனப்படும் இயக்கி. இதைப்பயன்படுத்தி எல்லா வகையான செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்ய முடியும். இதன் மூலம் பல தட்டச்சு முறைகளில் தட்டச்ச முடியும் என்றாலும், தேவையான தட்டச்சு முறையில் அமைந்த e-kalappai driver-ஐ தனித்தனியாக பதிவிறக்கிக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு அஞ்சால், பாமினி, தமிழ்99 விசைப்பலகை முறைகள் உள்ளன. விரைவில் தட்டச்சு விசைப்பலகை முறையில் எ-கலப்பை வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
குறள் செயலியும் பல பயன்பாடுகள் இணைந்த செயலி. இதன் புதிய பதிப்பில் தமிழ் குரல் வழி வாசிப்பானும் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. குறள் செயலி மூலம் ஒலியியல்(ரோமன்), தமிழ்99, புதிய தட்டச்சு, பழைய தட்டச்சு ஆகிய 4 முறைகளில் பிற செயலிகளில் தட்டச்ச முடியும்.
இவை தவிர வலைப்பதிவுகளில் அதிகமாகப் பயன்படும் ஒன்று சுரதாவின் செயலி. இதில் ரோமன் எனப்படும் ஒலியியல் முறையும் பழைய தட்டச்சு முறைகளில் ஒன்றான பாமினியும் தட்டச்ச பயன்படுத்தப் படுகின்றன.
4.
தட்டச்சும் கருவி எதுவாக இருப்பினும் தட்டச்ச நமக்கு வசதியான முறையைத் தேர்ந்து கொள்ள முடியும். அந்த முறை எது என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.
தட்டச்சுக் கருவியில் தட்டச்சு செய்யப் பயின்றவர்களுக்கு வேகமாகத் தட்டச்ச முடியும். அவர்களுக்காக தட்டச்சு விசைப்பலகை அமைப்புத் தேவை. புதிதாகக் கற்றவர்களுக்கு புதிய தட்டச்சு முறையும் பழையவர்களுக்கு பழைய தட்டச்சு முறையோ பாமினியோ தேவை. பாமினி பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. அதிகமாகப் பயன்படுத்தப் படும் எ-கலப்பையில் புதிய தட்டச்சு முறை இதுவரை வெளியிடப்படாததால் தட்டச்சுப் பயின்றவர்களும் வேறுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
தட்டச்சுக் கற்காதவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பிலேயே தமிழில் எழுதும் ரோமன் முறை பயன்படுகிறது. (உதாரணம்: ammaa= அம்மா, thamizh= தமிழ்) இது அஞ்சல், பொனட்டிக், ஒலியியல் என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. இதையே அதிகம் பேர் (தட்டச்சுக் கற்றவர்களும்!) கணித்தமிழ் எழுதப் பயன்படுத்துகின்றனர்.
புதிதாகக் கணினியிலேயே தமிழை தட்டச்ச கற்பவர்களுக்கு தமிழ்99 முறை எளிமையானது. 'shift' பயன்படுத்தாமலேயே நேரடியாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் எழுத முடியும் என்பதே இதன் சிறப்பம்சம். ஸஷஜஹக்ஷஸ்ரீ ஆகிய எழுத்துக்களுக்காக மட்டுமே 'shift' பயன்படுத்த வேண்டும். இம்முறை எளிமையானதாக இருந்தாலும் பரவலான கவனிப்புப் பெறவில்லை. இதற்கு மேற்கூறிய ஒருவகை வெறுப்பும் காரணம்.
தட்டச்சு முறைகளிடையே உதாரணமாகச் சில வேறுபாடுகள்:
ரோமன்- asdfg=அச்ட்fக், ழ=zha (இசட்+எச்+எ=ழ)
தமிழ்99- asdfg=அஇஉஃஎ, ழ=/ ('பார்' குறியீடு=ழ)
பாமினி- asdfg=யளனகப, ழ=o (சிறிய 'ஓ'=ழ)
தட்டச்சு- asdfg=யளனகப, ழ=H (பெரிய 'எச்'=ழ)
பாமினி மற்றும் தட்டச்சு முறைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லையென்றாலும் ழ,ஹ மற்றும் இன்னும் சில எழுத்துக்கள் மாறுபட்டுள்ளன.
5.
பாமினி போன்ற பழைய தட்டச்சு முறைகள் ஒருகட்டத்தில் வழக்கொழிந்து விடும். அலுவலகங்கள் எல்லாம் கணினிமயமாக்கப் பட்டு வருவதால் இப்போதே தட்டச்சுப் பயிற்சி நிலையங்களும் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் புதிய தட்டச்சு முறையும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் பயன்பாட்டில் இருக்கும்.
அதன்பிறகு தமிழுக்கென்று உள்ளீட்டு முறையாக எது மீதமிருக்கும்? நிரந்தரமாக ஆங்கில ஒலியியல் விசைப்பலகையை தமிழ் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது தமிழ்99 போன்ற எளிமையான தட்டச்சு முறை ஏற்கப்படுமா? அதுவுமல்லாது புதிதாக இன்னொன்றை எதிர்நோக்கி காத்திருப்பதா?
2005-05-11
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தமிழ் உள்ளிடுவதற்கான முறைகளைப் பற்றி இருந்த குழப்பம் எனக்கு நீங்கியது. நன்றி அனுராக்! ஹ்ம்ம்.. நான் முறையாக தமிழ் தட்ட கற்றுக் கொள்ளாததால் ஆங்கிலத்தில் தட்டச்சிக் தமிழாக்கிக் கொண்டிருக்கிறேன்.
அன்பின் அனுராக் அவர்களுக்கு
தமிழ்எழுத்துருக்கள் பற்றிய ஆழமான பதிவுக்கு நன்றி. ரோமன்ஸ்கிரிப்ற் என்பதற்கும் திஸ்கி என்பதற்கும் வேறுபாடு எனக்கு தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் ஆங்கில ஒலியியல் உச்சரிப்பு முறைப்படி தட்டெழுதுவது குறைவு.
மேலும் தமிழ்99 தட்டெழுத்துமுறை நல்லது என கூறுகிறீர்கள். ஆனால் அம்முறையில் தட்டெழுதினால் சில குறியீடுகளை வேறுகீகளில் இடவேண்டும். அதனை தவிர்த்து ஆங்கில எழுத்துகளுக்குரிய 26 கீகளை மட்டும் பயன்படுத்தி தமிழம் தட்டெழுத்து முறையை நீங்கள் குறிப்பிடும் அந்த நண்பர் பிரேரித்தார்.
நீங்கள் தமிழ்99 விரும்புவது போல கிருபா அவர்கள் திஸ்கியையும் நான் தமிழம் முறையையும் விரும்புகிறோம். ஆனால் ஒவ்வொன்றில் உள்ள குறைநிறைகளை பார்த்து ஒரு முறைக்குள் எல்லோரும் எப்போது உள்நுழைகிறோமோ அப்போதுதான் தமிழ் வளரும்.
அதுவரை ஏதோ எங்களால் ஆனதை செய்வோம்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் கூறி
அன்புடன்
தமிழ்வாணன்.
அன்பின் அனுராக்,
நீங்கள் குறிப்பிடும் தமிழ் 99 தட்டெழுதும் முறையில்
க + ஒ = கொ
க + ஆ= கா
க + இ = கி
என தட்டெழுதவேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு தட்டெழுதுவது கணனி முறைப்படி சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் சரியாக இருக்குமா?
க + ா = கா
ெ + க + ா = கொ
க + ி = கி
இப்படி தட்டெழுதி பெற்றுக்கொள்வது இலகுவாக இல்லையா? கற்பவர்களுக்கும் இம்முறை இலகுவாக இருக்கும் அல்லவா?
( some characters havent be shown properly. plz visit my comment page if you want to see properly)
Post a Comment