ஐந்து வருடங்களுக்கு முன்வரை எல்லோரையும் போல துள்ளி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்தான் இவனும். ஆனால் இன்று? இரு கைகளையும் ஒரு காலையும் இழந்து வாழ்வின் பல இன்பங்களை இழந்த வேதனைக்கு உள்ளானவன். என்ன தான் நிகழ்ந்தது இவன் வாழ்வில்?

அது புத்தாயிரமாண்டில் மார்ச் நான்காம் தேதி. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 8 வயது ஜனார்த்தனன் பள்ளி விட்டு வீடு திரும்பியபின் மொட்டைமாடியில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே கிடந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்துச் சுழற்றியபடி இருந்த போது அந்த விபரீதம் நிகழ்நதது. அருகிலிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் அவன் கையிலிருந்த கம்பி உரச மின்சாரம் ஜனாவின் உடலில் பாய்ந்தது. டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதற, உறவினர்கள் வந்து பார்த்த போது பாதி வெந்த, வெந்து கொண்டிருந்த ஜனாவின் உடலைத் தான் கண்டார்கள்.

ஊசலாடிக் கொண்டிருந்த உயிரை மருத்துவர்கள் அரும் பாடுபட்டு மீட்டார்கள். தோள்வரை வலதுகரம், மூட்டுவரை இடதுகரம், மூட்டுவரை இடதுகால், வலதுகாலின் முன்பாதம் ஆகிய கருகிய பாகங்களை அகற்றி இன்றைய ஜனாவுக்கு மறுபிறவி கொடுத்தனர் மருத்துவர்கள்.
வாழ்வே சோதனைக்கு உள்ளான ஜனாவுக்கு படிப்பும் கேள்விக்குறியானது. பல பள்ளிகள் அவனைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கின. SRNM மெட்ரிக் பள்ளி அவனைச் சேர்த்துக் கொண்டது. ஜனா இன்று ஏழாம் வகுப்பில் படிக்கிறான்.

அவன் வாயினால் பென்சில் பிடித்து எழுதக் கற்றுக்கொண்டான். வாயினாலேயே படிப்படியாக படங்கள் வரையவும் கற்றுக் கொண்டான். அதுவே அவன் வாழ்வில் புதிய வசந்தத்தைக் கொண்டு வந்து சேர்த்தது.
ஜனா ஓவியப்போட்டிகளில் பரிசுகள் குவிக்கத் தொடங்கினான். உலகளாவிய அளவில் ஜனாவின் ஓவியங்கள் பாராட்டப் படத்துவங்கியது. கணிப்பொறி வரைகலையிலும் தேர்ச்சி பெற்றுள்ள ஜனாவுக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. 2003 ல் தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற ஜனா இந்த வருடம் ஏப்ரல் 21 அன்று குடியரசுத் தலைவரிடம் 'பாலஸ்ரீ' விருது பெற்றான்.

'அழகி' மென்பொருள் தயாரிப்பாளர் திரு. விஸ்வநாதன் தனது வலைத்தளத்தில் ஜனாவுக்கென்றே ஒரு வலையகத்தை நிறுவி ஜனா பற்றிய விரிவான தகவல்களையும் ஏராளமான புகைப்படங்களையும் இணையத்தில் இட்டுள்ளார். (இங்குள்ள படங்களும் இத்தளத்திலிருந்து எடுக்கப் பட்டவையே)
ஜனாவின் வலைப்பக்க முகவரி: http://www.azhagi.com/jana