2006-03-05

தமிழ் எழுத்துச்சீர்மை

மனித வாழ்வின் ஆதார தொடர்பு இயக்கம் மொழி. சைகைகள், ஓசைகளிலிருந்து சொற்கள், சொற்றொடர்கள், உரையாடல், இசைப்பாடல், கதை என ஒலிக்குறிப்பு வளர்ச்சி கண்டபோது எழுத்து என்னும் நிலையான வடிவம் தேவைப்பட்டது. அதனடிப்படையில் வாழ்விடம், சூழல், இயற்கை அமைப்பிற்கேற்ப மொழிகள் உருவாகின.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியாகக் கருதப்படும் தமிழ், மொழிகளுள் பழமையும் தொன்மையும் மிக்கது. மொழிகளும் கால மாற்றத்திற்கேற்ப மாறுதல்களை உடையது என்பதால் தமிழும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன் இன்றைய வடிவத்தைக் கண்டுள்ளது. இறுதியாக மாறுதல் கண்டது 'ஆ'கார மற்றும் 'ஐ' கார உயிர்மெய் வடிவங்களில் தமிழக அரசினால் 1978ம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றமாகும்.

இதே காலகட்டத்தில் உகர ஊகார உயிர்மெய்க் குறியீடுகளை மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டபோதிலும் பரிந்துரை செய்யப்பட்ட புதிய குறியீடுகள் வேற்று மொழி போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்ததாலும் ஒத்த கருத்தினை எட்ட முடியாமலும் இம்முயற்சி தடைப்பட்டது.

என்றாலும் மொழி ஆர்வலர்கள் பலரும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு தொடர்ந்து உகர ஊகார குறியீடுகளை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். இந்த முயற்சிகள் பற்றிய பல கட்டுரைகள் தந்த ஊக்கத்தினால் நானும் சிலகாலம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.

எளிமையான குறியீட்டு வடிவங்கள் பலவற்றை நம் அறிஞர்கள் பலரும் ஆக்கித் தந்துள்ள போதிலும் அவற்றின் வடிவம் தமிழுக்கு அன்னியமாகத் தோற்றமளிப்பதே அவை வரவேற்புப் பெறாததற்குக் காரணம். எனவே தமிழ் எழுத்து வடிவங்களுக்கு மாறுபடாத வகையில் ஒரு வடிவை உருவாக்க முனைந்தேன்.

இறுதியாக நான் கண்டடைந்த வரிவடிவம் பின்வருமாறு. எகர, ஏகாரக் குறியீடுகளை இடவலமாகத் திருப்பி இடுவதின் மூலம் உகர ஊகாரக் குறியீடுகளைப் பெறலாம். இதன் மூலம் வாசிக்கும் போது வேற்று மொழி போல அதிக வேறுபாடு தோன்றாமல் குறியீடுகளைப் பெறலாம். எகர ஏகாரக் குறிகள் ஏற்கனவே ஒகர ஓகார வரிசைக்கும் பயன்படுத்தப் படுவதால் இது மிக வசதியான மாற்றாக விளங்கும்.

இதில் உகரக்குறியீட்டை மட்டும் வசதிக்கேற்ப தேவைப்பட்டால் சற்று குறுக்கிக் கொள்ளலாம். இதற்கான மாதிரி வரிவடிவங்கள் பின்வருவன:


Image hosting by TinyPic

இவ்வரிவடிவங்களைச் சற்று உற்று நோக்கினால் கிரந்த எழுத்துக்களில் பயன்படுத்தப்படும் உகர ஊகாரக்குறியீடுகள் ு ூ இதே அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பது புலப்படும்


Image hosting by TinyPic
கிரந்த எழுத்துக் குறியீடுகளையே தமிழுக்கும் பயன்படுத்தலாம் என்று சில தமிழறிஞர்கள் கருத்துக் கூறியதுண்டு. ஆனால் அதற்கான அவசியமே இன்றி இக்குறியீடுகள் தமிழ் எழுத்துக் குறியீடுகளிலிருந்தே தோன்றியவை என்பது மேற்கண்ட அமைப்பிலிருந்து விளங்கும். எனவே தமிழுக்கு அன்னியமாகத் தோன்றாத அதே சமயம் கிரந்தக் குறியீடுகளை ஒத்த சரியான குறியீடாக இதனை நான் தேர்ந்துள்ளேன்.

Image hosting by TinyPic
'உ'கரத்திற்கு இக்குறியீட்டை சற்று குறுக்கிக் கொள்வதால் அதனை மீண்டும் பயன்படுத்த ஏதுவாக உள்ளது. 'ஊ'கார உயிரெழுத்து, 'ஔ'கார உயிரெழுத்து போன்றவற்றிலும் மாற்றங்கள் வேண்டின் இக்குறியீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் 'ஔ'கார உயிர்மெய்களும் மேற்கணடவாறு மாற்றம் பெறும்.

இகரத்தில் சிலர் செய்வது போல டி எழுத்து மாற்றம் தேவையில்லை என்பது என் கருத்து. இப்போது 'உ'கர 'ஊ'கார உயிர்மெய் தொட்டெழுத்துக்களாக இருந்தாலும் சீர்மைக்குப்பின் 'ஆ'கார, 'எ'கர, 'ஏ'கார எழுத்துக்களைப்போன்று 'உ'கர 'ஊ'கார வரிசை முழுமையும் தொடா எழுத்துக்களாக மாறுவதால் அதிக வேறுபாடு தோன்றாது. 'இ'கர, 'ஈ'கார உயிர்மெய்கள் அனைத்தும் இப்போது தொட்டெழுத்துக்களாக உள்ளன. டி, டீ மட்டும் சீர்மைப் படுத்துவதால் தொடாமல் தனித்துத் தெரியும்.

மேற்கண்ட வடிவமைப்பின் முக்கிய நோக்கமே தமிழின் சீர்திருத்தம் தமிழுக்கு இயைந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான். எத்தனை எழுத்துரு வடிவங்கள் ஆக்கப்பட்டாலும் அவை பயன்பாட்டுக்கு வருவது முக்கியம். அதற்கு அரசின் அங்கீகாரம் அதனினும் முக்கியம்.

1978ல் அமலாக்கப்பட்ட எழுத்துச் சீர்மைகள் இன்று தமிழுக்கு மிகப்பலமாக இருக்கின்றன. அதுபோல அரசு இந்தப் புதிய எழுத்துச் சீர்மையையும் ஏற்று அமல்படுத்துமானால் தமிழ் கற்பவர்களுக்கும் கணினிவழிப் பயன்பாடுகளுக்கும் இன்னும் எளிமையாக இனிமையானதாக இருக்கும்.