2005-01-24

1. வாழ்த்து

இன்று
கோமதி நாயகனாகும் குப்ஸாமிக்கு வாழ்த்துக்கள்!
கொஸப்பேட்டை டாட் காம் வழி
கொஸப்பேட்டை குப்ஸாமியின் குசும்புகள்
குட்த்த கேவிஆர்
எங்கிற வலை நண்பருக்கு
என் இதயம் நிறைந்த மணவிழா வாழ்த்துக்கள்.

2. வலைப்பதிவு பிரச்சினை

பிளாக்கரில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். என் பிரச்சினை என்னவென்றால் எனது சில பதிவுகள் முன்பின்னாக இடம் மாறி விழுகின்றன. 25ம் தேதி நள்ளிரவில் இந்திய நேரப்படி 12.30 க்கு (அதாவது 26ம் தேதி அதிகாலை 0.30 a.m.) பதிந்த பதிவு 24ம் தேதி பதிந்ததாகக் காட்டுகிறது. அதுவும் 24ம் தேதி பதிந்த பதிவுக்கு பின்பான பதிவை முந்தைய பதிவாகக் காட்டுகிறது. 26ம் தேதி பதிந்த பதிவில் 24ம் தேதிய பதிவின் தலைப்புக் காட்டப் படவில்லை. 24ம் தேதிய பதிவில் 26ம் தேதி பதிந்ததன் தலைப்பு இருக்கிறது.முகப்புப் பக்கம் பார்த்தால் (Home) வரிசை சரியாகவே உள்ளது. இது என்ன குழப்பம்?

3. ஒரு கேள்வி

Firefox, thamizha. உலாவிகளில் இயங்கு எழுத்துருவான .eot வேலை செய்யுமா? தெரிந்தவர்கள் / சோதித்தவர்கள் சொல்லுங்கள்.

மறுமொழிகளும் மனக்காயங்களும்

டிஜே தனது பதிவில் தனது பதிவிற்கான தொடுப்பை ஒரு நண்பர் நீக்கி விட்டது குறித்து எழுதியிருந்தார். அவரது பதிவில் எழுதிய கருத்துக்கள் (முந்தைய பதிவுகள் உட்பட) எதுவும் இந்தியத் தமிழர்கள் யாரும் புறக்கணிப்பதற்கான அல்லது கண்டிப்பதற்கான எந்த விடயமும் காணப்படவில்லை.

//ஆனால் சகமனிதனைக்கூடப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ஒற்றைப்படையாக விவாதத்தின் எல்லைகளை மீறிப் பேசியது கோபத்தையும் விரக்தியையும் ஒன்றாய் என்னுள் ஏற்படுத்தியது.//
//ஆனால் அவர்கள் எவரிடமும் இருந்து இப்படியான வன்மமான சொற்களை, வசையான சொல்லாடல்களைக் கேட்டதில்லை//

அவருக்கு இவ்வளவு வருத்தம் தரும்படியான சம்பவம் யாரால் எப்போது ஏற்படுத்தப்பட்டது? என்பது புரியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அவரது இந்தப் பதிவின் மறுமொழிகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகளை இங்கு பதிய விரும்புகிறேன்.

டிஜே பதிவில் பின்னூட்டமிட்ட ரோசாவசந்த் இந்தியத் _______ என்ற பதத்தைப் பிரயோகித்திருந்தார். "ஒரு குட்டிபூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும், சில நல்லிணக்க முயற்சிகளும்__!" என்ற ரோசாவின் பதிவுகளை நான் பெரும்பாலும் தவறாமல் படிப்பதுண்டு. அதில் அவரது விரிவான வாசிப்பு அனுபவங்களை கண்டு வியந்திருக்கிறேன். சுனாமி மீட்புப்பணி தொடர்பான அவரது பதிவும் சிறப்பானது.

ஆனால் பின்னூட்டப் பெட்டிகளில் மட்டும் ரோசாவசந்த் அடிக்கடி நிதானமிழந்து விடுகிறார். அவரது மறுமொழிகளைப் பலமுறை அவரே பின்பு நீக்கி விடுவதிலிருந்து இதை உணரமுடியும். பத்ரி, காசி, மாலன் போன்ற வலைப்பதிவு முன்னோடிகள் உட்பட நாங்கள் நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்கள் இந்தியத் தமிழர்கள் தான். ரோசாவின் மேற்கண்ட வசை எங்களுக்கும் சேர்த்தா?

இதற்குமுன் ஒருபோதும் இணையத் தமிழர்களில் இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற பாகுபாடு எனக்குத் தோன்றியதேயில்லை. இப்போதும் அந்த உணர்வில் கூறவில்லை. ஆனால் அந்தச் சொல் மிகக் கடுமையானது. வார்த்தைகள் விடுவது மிக எளிது. திருப்பமுடியாது. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் (எழுத்தினாலும்!) சுட்டவடு.

அந்த மறுமொழியில் ரோசாவசந்த் கோபம் கொள்ளுமளவிற்கு சிவகுமாரும் வந்தியத்தேவனும் என்ன எழுதினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. அவர்களின் சமீபத்திய பதிவுகளில் தேடிப் பார்த்தும் ஒன்றும் புரிபடவில்லை. எப்படி இருந்தாலும் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கிறோமோ முதலில் அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இதுபோலவே சங்கராச்சாரியார் விவகாரத்தில் வெங்கடேஷ் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக சில அநாகரிக வசைகள் வந்திருந்தன. வெங்கடேஷின் அந்தப் பதிவு அவரது மிக மோசமான பதிவு என்பதில் சந்தேகமில்லை. சில கருத்துகள் அறிவை மீறி காலங்காலமாக கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுபவை. அவை நமக்கு உடன்பாடாக இல்லாவிட்டால் நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. அதற்காக அந்த நம்பிக்கையாளர்களை வசை பாடுவது நியாயமல்ல. முடிந்தால் தவறை நயமாகச் சுட்டிக்காட்டலாம். ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை.

வெங்கடேஷின் "நேசமுடன்" தன் தொடர்ச்சியை இழந்ததும் இந்தப் பின்னூட்டப் பதிவுகளின் விளைவாக எழுந்த மனச்சோர்வின் வெளிப்பாடாகத் தான் உணர முடிகிறது. அடிப்படையில் கலையும் இலக்கியமும் தன் வெளிப்பாட்டின்போது பார்வையாளர்களின் மன உணர்வுகளால் கலைஞனை எழுச்சியூட்டும் அல்லது வீழ்த்தும்.

கணினி வல்லுநர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் நிறைந்த வலைப்பதிவர் சமூகத்தில் இத்தகைய அநாகரிகம் நியாயமானதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்தியத் தமிழர் - ஈழத்தமிழர் என்ற பேதமோ, பிராமணர் அல்லாதார் - பிராமணர் என்னும் மாறுபாடோ கருத்துக் களத்தில் வெளிக்காட்டப் படுவது நியாயமல்ல.

முகம் தெரியாத மனிதர்கள்தான் என்றபோதிலும் இனம், மதம், நாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட நண்பர்கள் நாம். உலகத்தமிழர்களாக ஒரு புள்ளியில் சந்திக்கும் நாம் சற்று நேரம் இளைப்பாறி அளவளாவிச் செல்வோம். கருத்துக்களை மட்டும் பரிமாறுவோம்; கசப்புகளை அல்ல.

கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளுவோம். நட்பு தொடரட்டுமே!

நானும் கணிப்பொறியும் தமிழும்

என் பள்ளிப் பருவத்தில் நாங்கள் ஈரோட்டில் இருந்த போது ஒருமுறை சேஷசாயி பேப்பர் மில்லை சுற்றிப் பார்க்க சென்றிருந்தோம். இயந்திரங்களின் செயல்பாடுகளைப் பார்த்து முடித்த பின் அலுவலக அறைகளைச் சுற்றிக் காட்டினார்கள். அடுத்து அவர்கள் அழைத்துப்போன அறை கண்ணாடியால் ஆனது போல இருந்தது. அதன் கண்ணாடிக் கதவைத் திறக்குமுன் எல்லோரையும் செருப்புகளை கழற்றிவிடச் சொன்னார்கள். கம்பிச் செருப்பணிந்திருந்த எனக்கு மட்டும் விலக்களித்தார்கள். உள்ளே நுழைந்ததும் சில்லென்றிருந்தது. குளிர்சாதன வசதி செய்யப் பட்டிருப்பதை உணர்ந்து கொண்டோம். தரையில் உயர்ரக கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. வரிசையாய் மேசைகள். அதில் கருப்புத்திரையுடன் இருந்தவைதான் கணிப்பொறிகள் என்று சொன்னார்கள். அவற்றை இயக்கி ஏதோ தட்டியபோது கண்ணுக்குப் புலப்படாததுபோல சிறிய வெள்ளை எழுத்துக்கள் பிரகாசித்தன. அறையின் ஓரமாக ஒரு மேசை உயரத்தை விட பெரிதாக இருந்த கருவியில் நீளமான காகிதங்களில் தட்டச்சுப்போல எழுதப்பட்டு கீழிறங்கி மடங்கி விழுந்து கொண்டிருந்தது. அந்த முதல் பார்வையிலேயே கணினி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பார்த்துவிட்டு வந்த சில தினங்களுக்கு என் கனவில்கூட அந்தக் கறுப்புத் திரை.மின்மினிப்பூச்சி போல வெள்ளை எழுத்துகள்......

பதின்பருவ இறுதியிலிருந்து செய்தித்தாள்களிலோ வாரப்பத்திரிகைகளிலோ கணிப்பொறி பற்றி எந்தச் செய்தி வந்தாலும் சேகரிக்க ஆரம்பித்தேன். பட்டப் படிப்பிற்கு பொறியியல் படிக்க இயலாமல் வணிகவியலாகிவிட்டது. கிராமத்தில் வசிக்க ஆரம்பித்ததில் கணினிக் கனவு கைகூடாமலே இருந்தது. ஆர்வங்கள் திசைதிரும்பி இலக்கியம் இதழியல் என்றானது. தகவல் சேகரிப்பு மட்டும் நிற்கவில்லை. கணிப்பொறி, இணையம் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் பற்றி நிகழ்நிலவரங்கள் என்னிடமிருந்தன. கணித்தமிழின் அவ்வப்போதைய வளர்ச்சி பற்றியும் அவதானித்து வந்தேன். கணிப்பொறியைத் தொட்டுணராமலே அதன் செயல்பாடுகளை கற்றுணர்ந்திருந்தேன். இணையம் காணாமலே இணையதளம் (உதவி: HTML புத்தகம்) வடிவமைத்திருந்தேன். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பது பின்னர் நிரூபணமானாலும் அடிப்படை அறிவை எனது சேகரிப்புகளிலிருந்தே பெறமுடிந்தது.

தமிழ்க்கணினி தயாராகி விட்டதாக பத்திரிகைச்செய்திகளில் பார்த்து சில கட்டுரைகளும் படித்து கணிப்பொறி வாங்கும்போதே தமிழ்க்கணினி வேண்டுமென்று அசட்டுத்தனமாய்க் கேட்டபோது விற்பனையாளர்கள் சிரித்து பொறுமையாக கணிமொழி ஆங்கிலம்தான். தமிழில் மென்பொருட்களே இப்போதைக்கு உண்டென்று விளக்க முற்பட, நானோ பத்திரிகைகளைக் காட்டி ழ கணினியாமே அது என்ன எனக்கேட்க அவர்கள் திருதிருவென விழிக்க இறுதியில் அவர்கள் சொன்னபடி சன்னல்(?) வைத்த கணினி வாங்கி பின்னர் இணையத்தில் ஒவ்வொன்றாகக் கற்று வருகிறேன். என் கணினியின் முகப்பைப் பின்னர் வந்து பார்த்தவர்களுக்கு "எல்லாம் தமிழில்? எப்படி?" என்று ஆச்சரியம்தான்.

எக்ஸ்பியும் யூனிகோடும் செய்த மாயம் தானென்று நான் சொல்லவில்லை. ழ கணினி இன்னும் சாத்தியமாகவில்லை. தமிழா உலாவியையாவது நிறுவலாமென்று பார்த்தால் தமிழா தளம் திறக்க மறுக்கிறது.. முரசுவும், கலப்பையும், சுரதாவின் கருவிகளும் என் கணித்தமிழை இப்போதைக்கு வாழவைத்துக் கொண்டுள்ளன. தேடல் தொடர்கிறது.

தமிழ் வலைதளங்களை தேடுபொறிகளில் மாறிமாறி தேடிய போது ஒருமுறை தமிழ்ப்பதிவுகளின் பட்டியல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்த போதுதான் இத்தனைநாள் நான் தவறவிட்டிருந்த தமிழ்ப்புதையல் கிடைத்ததாய் உணர்ந்தேன்.

ஓரிரு நாட்கள் சில பதிவுகளை வாசித்த உடன் ஆவல் உந்த நானும் ஒரு வலைப்பதிவை உருவாக்கினேன். என் பெயர் அகரத்தில் இருந்திருந்தால் தமிழ்ப்பதிவுகளின் பட்டியலில் ஆரம்பத்திலேயே இடம்பெற்றிருக்கலாமே என்றொரு யோசனை வந்ததில் என் மகனின் பெயரில் பதிவு செய்தேன்.

குரூரமாக கும்பகோணம் குழந்தைகள் கருகிய நிகழ்வு நடந்திருந்த வேளையாதலால் கவிதையில் பதிவு செய்த அந்தச் சோகத்தை பதிவில் இட்டேன். வாரம் ஒருமுறை எழுதலாம். என்று தான் எண்ணியிருந்தேன். அந்தச்சமயம் தான் தமிழ்மணம் வந்தது. பலரும் தினமும் பதியக் கண்டேன். அகர வரிசை இல்லாமலே நமது புதிய பதிவுகளை உடனுக்குடன் எல்லோரும் படிக்க முடிகிற அதிசயம் இன்னும் இரண்டு பதிவுகளை உருவாக்க வைத்தது. அடிக்கடி எழுத வைத்தது. புதிய சிந்தனைகளில் மனம் சிறகடித்தது. எல்லாம் சரியாகத்தான் ஆரம்பித்தது. விதி யாரை விட்டது?

என் கணினியின் வன்தட்டு பழுதாகி வலைத்தொடர்பில் இருந்து ஐம்பது நாட்கள் இடைவெளியாகிவிட என் ஆர்வமான திட்டங்களில் அதே ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த நண்பர்கள் இது வேலைக்காகாது என்று விலகிப் போய் விட்டனர். புதிய வன்தட்டு மாற்றி என் ஓராண்டு உழைப்புகள் இழக்கப்பட்ட வருத்தத்தோடு திரும்பி வந்த போது நண்பர்களின் உதாசீனம் உறைத்ததில் என் ஆர்வமும் வற்றிப் போய்விட்டது. எழுதும் ஆர்வம் மங்கிப்போய் வெறும் பார்வையாளனாக பதிவுகளை மேய்ந்தேன். என்றாலும் தொட்டகுறை விட்டகுறை போல ஆழிப்பேரலை வந்த மூன்றாம் நாளில் சுனாமி என்ற பெயரிலேயே ஒரு பதிவை ஆரம்பித்தேன். அதைக் கூட்டுப் பதிவாக்க நண்பர்களை அழைப்பதில் ஒரு தயக்கம். வலைமேடை போல வீணாகிவிடுமோ என்ற அச்சம்...தமிழ்மணத்திலும் சமர்ப்பிக்காமல் விட்டுவிட்டேன்.

பின்னர் நான் நினைத்திருந்த வடிவிலேயே ரோசாவசந்த் ட்சுனாமி மீட்பு பணி ஒருங்கிணைப்பு வலைப்பதிவை ஆரம்பித்து ஆர்வத்தோடு முன்னெடுத்துச் செல்வது கொஞ்சம் திருப்தி தருகிறது. வலைமேடையில் உத்தேசித்திருந்த பணியும் காசியின் மன்றத்தின் மூலம் நிறைவேறியதில் மகிழ்ச்சி.

2005-01-12

மட விவகாரங்கள்

இரவு எட்டுமணி செய்தியில் சன் டிவி காட்டிய ஜெயேந்திரர் வீடியோ காட்சிகள் ஜெயேந்திர விஜயேந்திர மோதல் செய்திகளை உறுதிப்படுத்துவதற்காக வெளியிடப் பட்டது?