2006-06-18

சினிமா புதிர் - 2

நிறம் என்றொரு மலையாளப்படம். கமல் என்ற இயக்குநர் இயக்கிய இப்படத்தில் குஞ்சாக்கோ கோபனும் ஷாலினியும் நடித்திருந்தனர். இதில் ஒரு காட்சி.

இளம் பாடகன் ஒருவன் கல்லூரியில் பாடுகிறான். குறும்புக்காரர்களான நாயகனும் நாயகியும் நண்பர்களும் விசிலடித்து கலாட்டா செய்கிறார்கள். பாடகனும் விடாது பாடுகிறான். ஒருகட்டத்தில் அவன் கையிலிருந்து பாடல் காகிதம் பறந்து நாயகியின் கையில் வந்து சேருகிறது. பாடகன் தடுமாற நாயகி தொடர்கிறாள். பாடகன் அவளை மேடைக்கு அழைக்கிறான். நாயகனும் நண்பர்களுமாக அவளை மேடையேற்ற பாடல் தொடர்கிறது. கீழிருந்தே நாயகனும் நண்பர்களும் கூட ஆடுகிறார்கள்.

தமிழில் இந்தப்படம் அதே இயக்குநரால் பிரியாத வரம் வேண்டும் என்ற பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. பிரசாந்த் ஷாலினி நடித்தார்கள். தமிழில் நாயகனும் மேடையேறி சிலவரிகள் பாடுவான். (இல்லாவிட்டால் நாயக இமேஜ் என்னாவது?)

மலையாளத்தில் அந்தப்பாடல்

ப்ராயம் நம்மில் மோகம் நல்கி
மோகம் கண்ணில் ராகம் நல்கி
ராகம் சுண்டில் கானம் நல்கி
கானம் மூளான் ராகம் நல்கி
ஈணம் தேடும் ஈறத்தண்டில்
காற்றின் கைகள் தாளம் தட்டி
தாளக் கொம்பத் தூஞ்ஞால் ஆடி
பாடூ... நாட்டு மயிலே
கூடே ஆடூ... சோல மயிலே...

தமிழ்ப்படத்தில் இதே சூழ்நிலைக்கு வரும் பாடல்

டிக்கிடிக்கி லோனா ஆடலாமா
திலக்கிலி கானா பாடலாமா
திக்கிதிக்கி லவ்வ சொல்லலாமா
டீனேஜ் பொண்ணை வெல்லலாமா

எல்கேஜி பையன் பிஎஸ்ஸி பொண்ணை
லுக்கொண்ணு விடற காலமிது
பொண்ணோட மனசை ஆராய்ச்சி பண்ண
கம்பியூட்டர் கேட்கும் காலமிது
பிஸ்கட் வெண்ணிலா .................................
....................................மடிசாரு
நம்ம மாமி பொண்ணுக்கு சுடிதாரு...

(கோடிட்ட இடத்தை நிரப்பவும். எத்தனை முறை கேட்டும் எனக்குப் புரியவில்லை.)

*
சமீபத்தில் மலையாள நடிகை ஒருவரின் பேட்டி ஏசியாநெட் சானலில் பார்த்த போது அவருக்கு தமிழ்ப்படல்கள் தான் பிடிக்கும் என்றார். காரணம் தமிழில் உள்ள ஏராளமான அழகான சொல்வளமும் பாடல்களில் அவை பயன்படுத்தப்படும் விதமும் என்றார். உதாரணத்துக்கு அவர் கூறியவற்றுள் கண்ணதாசன் பாடல்களும் உண்மையிலேயே அழகான புதிய (தூய)தமிழ்ப்பாடல்களும் இருந்தன.

இப்படி பிறமொழிக்காரர்களால் சொல்வளம் மிக்க மொழி என்று பாராட்டப்படும் தமிழ் மொழியில், தூய மலையாளத்தில் இருந்த ஒரு பாடல் வரிக்குவரி ஆங்கிலம் கலந்து எழுதப்பட்டதற்கு யார் காரணம்? நிச்சயம் இயக்குநராக இருக்க முடியாது. இதைவிட அந்த மலையாளப்பாட்டையே மொழி பெயர்த்திருக்கலாம்.

குறைந்த சொற்களைக்கொண்டு அவர்களால் அழகாக எழுத முடிகிறது. நிறைய சொற்கள் உள்ள மொழியில் ஆங்கிலம் கலக்காமல் எழுத முடியவில்லை. டிக்கிலோனா என்னமொழியோ? இப்படித் தமிழ்க் கொலை செய்ததற்கு கவிஞருக்கு என்ன நியாயம் இருக்குமோ?.

மலையாளப்பாடல்..

தமிழ்ப்பாடல்(mp3)..

புதிர்: கோடிட்ட இடத்தை நிரப்பவும்.
விடை: எனக்கே தெரியாது.

2006-06-13

சினிமா புதிர் - 1

அன்னக்கிளி நீ வாடி....ஜெஸ்ஸி கிப்ட் என்ற பாடகர் இசையமைப்பாளர் அறிமுகமாகி பிரபலமான திரைப்படம் 4 the people என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி 4 students என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. நான்கு மாணவர்கள் சேர்ந்து 4 the people இணையதளம் நடத்தி பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்று அன்னியன் பாணியில் (அன்னியனுக்கு முன்பே வெளியானது!) சமூக விரோதிகளை தண்டிக்கும் கதை கொண்ட இப்படத்தில் மாணவர்களைப் பிடிக்க வரும் ராஜன் மேத்யூ ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சுனில் என்ற புதுமுக நடிகர்.

புதிர் என்னவென்றால் இந்த சுனில் சமீபத்திய நேரடி தமிழ்ப்படமொன்றில் வேறொரு பெயரில் கதாநாயகனாக அறிமுகமானார். படத்தின் பெயர் என்ன? நாயகன் யார்?