2004-12-26

பாதிப்பும் பார்வையும்

கடலின் சீற்றம் எத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது என்பதும் போன உயிர்கள் தவிர இருக்கும் உயிர்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன என்பதும் தான் இனி சிந்தித்தாக வேண்டியவை. உலகளாவிய நிவாரண உதவிகள் கிடைக்கத் துவங்கியுள்ள நிலையில் முழுமூச்சாய் பலரும் நிவாரணப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உழைப்பதைப் பார்க்க முடிகிறது. தேவைகள் மிக அதிகமாக உள்ளதால் சிலபல குறைபாடுகள் தென்பட்டாலும் உதவும் உள்ளங்களின் தன்னலமற்ற செயல்பாடுகள் அவற்றை ஈடு செய்யக்கூடும்.

முதல்வர், பிரதமர், மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் பார்வையிடுகிறோம், ஆறுதல் கூற வந்தோம் என வந்து போவது தேவையற்றது மட்டுமல்ல நிவாரணப் பணிகளுக்கு இடையூறாகவும், அதிகாரிகளுக்குத் தொல்லையாகவும் அமைகின்றன.

அரசியல் சார்புள்ள தொலைக்காட்சிகள் இந்தக் கோர நிகழ்விலும் அரசியல் செய்யத் தவறவில்லை. சன் டிவியில் காட்டப்பட்டதெல்லாம் பார்த்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பது போலவும் அவர்களே நிவாரண பணிகளை செய்வதாகவும் தோன்றியது. ஜெயா டிவியிலோ எல்லாம் அம்மா உத்தரவுப்படி நடைபெறுவதாக வரிக்கொரு தரம் உளறல் கேட்டது. கடல் பொங்கியதும் அம்மா உத்தரவுப்படிதானோ என்னவோ?. கலெக்டர்கள் பிற அதிகாரிகள் எல்லாம் இருப்பதாகவே இவர்களுக்குத் தெரியாது போலும். கடைசியில் உறக்கம் விழிப்பது என்னவோ அவர்கள் தான். அவர்களெல்லாம் சும்மா இருப்பது போலவும் எல்லாம் அரசியல்வாதிகள் தான் செய்வதாகவும் ஒரு மாயையை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
திரும்பத் திரும்ப சடலங்களைக் குளோசப்பில் காட்டியதில் பாதிப்புக்குள்ளாகாத இடங்களிலும் பல பெண்கள் மயங்கி விழுந்தார்கள்..

வாழ்வே மாயம்

முதல் அடியில் கடற்கரைக் குடிசைகள் நாசமாகிவிட கடலோரம் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போயினர். மிச்சம் மீதி இருந்தவர்களை கடல் இழுத்துக் கொண்டு போனது. குடிசைகள் மட்டுமல்ல பெரிய புதிய வீடுகளும் நிறையவே சேதமடைந்து விட்டன. வாகனங்கள் தூக்கியடிக்கப்பட்டு பாதி மண்ணுக்குள் புதையுண்டு சிதைந்து கிடந்தன. சுற்றுலா வந்தவர்கள், விழாக்கால விடுமுறைக்கு வந்தவர்கள், விடுமுறையில் விசேசங்களை நடத்த எண்ணியிருந்தவர்கள் என சகலரும் பூமிக்குள் புதையுண்டு போயினர்.
சகதிகளுக்கிடையிலிருந்து சாரி சாரியாக சடலங்களை எடுக்கத் தொடங்கிய போதுதான் சூழ்நிலையின் பயங்கரம் பலருக்கும் உறைத்தது. கும்பகோண நெருப்பு தந்த சோகம் மறைவதற்குள் வெள்ளம் உலகைச் சூறையாடி மற்றொரு சோக வரலாற்றை அரங்கேற்றி விட்டது. தப்பி ஓடி ஆங்காங்கே தஞ்சமடைந்தவர்கள் வரிசையாகக் கொண்டு வரப்பட்ட சடலங்களிடையே தங்கள் உற்றவரைத் தேடிக் கதறி அழத் தொடங்கினர்.

நேற்றிருந்தவர்கள்..... இன்றில்லை

கடல் கொண்டது...

வெளியே எழுந்த கூக்குரல் கேட்டு வாசலுக்கு வந்த பெண்கள் "எல்லாம் ஓடுங்க...கடல் ஊருக்குள்ள வருது" என்றபடி மக்கள் கூட்டம் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பதறியபடி தங்கள் பிள்ளைகளைத் தேடத் தொடங்கினார்கள்.
தகவல் கூறியபடி எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் "நீங்க ஓடுங்க...பிள்ளைக பின்னால வந்துருவாக..வெள்ளம் வேகமா வருது" என்று தடுத்து விரட்டினார்கள். புலம்பியபடி பெண்கள் போட்டது போட்டபடி ஓடினார்கள். வழியில் வந்து கொண்டிருந்த வேன் டாக்சி ஆட்டோக்களில் அவர்களை ஏற்றி அனுப்பினார்கள். பதறியபடி கட்டளைகளுக்கு அடிபணிந்த பெண்கள் பத்திரமான இடங்களில் இறக்கி விடப்பட்ட போதுதான் தங்கள் பிள்ளைகள் சகோதரர்கள் கணவர் மாமனார் மாமியார் என்ன ஆனார்களோ என்று புலம்பத் தொடங்கினார்கள்.
முதற்கட்ட ஓட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு அழைத்துச் செல்லப் பட்டதில் தடுமாறினாலும் பின்னர் மற்ற இடங்களைக் கண்டுபிடித்து தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். சிலர் கண்டடைந்து ஆசுவாசப் பட்ட நேரத்தில் உயிர்களும் உடமைகளும் வீடுகளும் குப்பையாய் வீசி எறியப்பட்ட கடற்கரையிலிருந்து வரிசையாய் பிரேதங்கள் மீட்கப் பட்டு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்தன.....

ஆர்ப்பரிக்கும் கடல்

இன்று காலை பக்கத்து வீடொன்றில் வசிக்கும் மீனவப்பெண்மணி அவர்கள் வீட்டு போன் வேலை செய்யவில்லை என்பதால் எங்கள் வீட்டில் வந்து யாருக்கோ போன் செய்தார். பலமுறை அடித்தும் பயனில்லை. என் மனைவியும் அவர்கள் நம்பரை வாங்கி அடித்துப் பார்த்து எங்கேஜ்டாகவே இருப்பதாகக் கூறிய போது கடல் கொந்தளிப்புக் குறித்தும் கடற்கரையோரம் வசிக்கும் தன் தம்பி வீட்டுக்குப் போன் செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார். அப்போது நான் அது வழக்கமான கடல் கொந்தளிப்புத் தான் என்றிருந்து விட்டேன். சற்று நேரத்தில் அருகில் உள்ள இன்னொரு வீட்டில் போன் வேலை செய்யாததால் வெளிநாட்டில் உள்ள அவர்களின் தம்பி எங்கள் தொலைபேசியில் அழைத்தார். அவர்களின் உறவினர்களும் கடற்கரையோரம் வசிப்பதால் அங்கேயும் தொலைத்தொடர்புகள் சேதமாகிவிட்டதால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றார்.
அதன்பிறகே சன்னில் பார்த்து அதிர்ந்தேன்.
சற்று நேரத்திற் கெல்லாம் மூட்டை முடிச்சுகளுடன் நண்டும் சின்டுமாக பக்கத்து ஊர்களில் வசிக்கும் மேற்படி உறவினர்கள் பக்கத்துவீடுகளில் வந்து நிரம்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது போன் பேச வந்த அவர்கள் சொன்ன கதைகள் சன்னில் கண்டதை விட கோரமானவை.....