2005-12-10

இன்னுமொரு பாட்டு

இன்று தொலைக்காட்சியில் ஒரு பாடல் பார்க்க/கேட்க நேர்ந்தது.

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்...

கல்லூரிப் பருவத்தின் இறுதிநாள் பிரிவுபசார நிகழ்வில் பாடப்படும் பாடலாக ஸ்ரீகாந்த் சினேகா + நடித்திருந்தார்கள். படம் பெயர் தெரியவில்லை. அதைப் பார்த்தவுடன் எங்கள் கல்விப்பருவங்கள் நினைவுக்கு வந்தன.

அப்போதெல்லாம் வகுப்புகள் நிறைவுறும் நாளில் பள்ளி, கல்லூரிகளில் பாடப்படும் பிரியாவிடைப் பாடல் இதுதான்

பாடித்திரிந்த பறவைகளே... (படம்: இரத்தத் திலகம்)

அந்தப் பாடலின் கருத்தும் உணர்வும் எப்போது கேட்டாலும் அந்த நாளை நினைக்க வைத்துவிடும். அது போன்ற நினைவுகளை மீட்டிய பாடல்களை பட்டியலிட பாடல் ரசிகர்களை அழைக்கிறேன்.

2005-12-06

பாட்டுக்கள் தேடி...

ஒவ்வொரு பூக்களுமே...(ஆட்டோகிராப்)

மாதிரி தமிழில் நல்ல தன்னம்பிக்கைப் பாடல்கள் எத்தனை தேறும் என்று யோசித்தால்

தோல்வி நிலையென நினைத்து....(ஊமை விழிகள்)

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...(உன்னால் முடியும் தம்பி)

இவ்வளவுதான் என் நினைவுக்கு எட்டியது...

இந்தப் பட்டியலை பாடல் ரசிகர்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்...

2005-11-25

தேர்தல் ஜோதிடம்?

கேரளாவில் திருவனந்தபுரம் பாராளுமன்ற இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 18 அன்று நடை பெற்றது. இத்தேர்தல் முடிவுகளை வாக்கு எண்ணிக்கை உட்பட தான் முன்கூட்டியே கணிக்கப்போவதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாட் அறிவித்திருந்தார்.

இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என அரசியல்வாதிகளும் பிற மேஜிக் நிபுணர்களும் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியாக நடத்துவதைத் தவிர்த்த கோபிநாத் மாநில அமைச்சர் ஒருவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இதன்படி தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் 11 பேர்கள் கையெழுத்திட்ட காகிதத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையை எழுதினார். இந்தக்காகிதத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்பது பெட்டிகளில் அடைத்து ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியாக பூட்டு போடப்பட்டது. பின்னர் அதை வங்கி லாக்கரில் வைத்து சீல் செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை துவங்கிய உடன் கோபிநாத் ஒரு இரும்புக் கூண்டுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொண்டார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அமைச்சர் மற்றும் வங்கி பொது மேலாளர் ஆகியோர் பொறுப்பில் லாக்கர் திறக்கப் பட்டு பெட்டி வெளியே எடுக்கப் பட்டது இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியே இருந்த மற்றவர்களுக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

பின்னர் ஒன்பது பெட்டிகளும் ஒவ்வொன்றாகத் திறக்கப் பட்டு உள்ளே இருந்த கவர் கேரள சபாநாயகரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவ்ர் அதைத்திறந்து அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டார். சரியாக மூன்று முக்கிய வேட்பாளர்களும் கோபிநாத் கணித்து எழுதிய வாக்கு எண்ணிக்கையே பெற்றிருந்தனர். முடிவுகள் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டதும் கோபிநாத் மகிழ்ச்சியுடன் தான் சிறைப்பட்டிருந்த கூண்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். மாஜிக் உலகில் இது ஒரு முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

கோபிநாத் மாஜிக் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார் இதன் மூலம் நிறைய மாணவர்களுக்கு மாஜிக் தந்திரங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். இது தவிர தொலைக்காட்சியிலும் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தும் கோபிநாத் பல எளிய மாஜிக் தந்திரங்களை தொலைக்காட்சியில் வெளிப்படையாக கற்பிக்கிறார். இவை பிற மாஜிக் நிபுணர்களுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மாணவர்கள் பார்வையாளர்களாக உள்ள அரங்குகளில் அவர்கள் செய்யும் தந்திரங்கள் தோற்றுப் போய்விடுவதும் இதற்குக்காரணம்.

கோபிநாத் ஏற்கனவே தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ILLUTION INDIA என்ற மேஜிக் கலைநிகழ்ச்சியை நடத்தி புகழ்பெற்றவர். மரபு ரீதியான மாஜிக் ரகசியங்களும் நவீன மாஜிக் தந்திரங்களும் கலந்த புதுமை நிறைந்தவை இவரது நிகழ்ச்சிகள். தவிர வெறும் துணுக்கு மாஜிக் நிகழ்ச்சிகளாக இல்லாமல் பொதுவான ஒரு கருத்தை வலியுறுத்தும் மாஜிக் கலைநிகழ்ச்சிகள் இவரது தனிச்சிறப்பு.

இணைப்புகள்

1. வாக்கு முன்னறிவிப்பு-செய்தி 2. கோபிநாத்தின் இணையதளம்.

2005-11-20

சிவகாசி பட்டாசு..._\|/_

விஜய் நடித்த சிவகாசி திரைப்படம் வக்கீல்களை இழிவு படுத்துவதாகக் கூறி வக்கீல்கள் கடுமையான எதிர்ப்புக்குரல் எழுப்பினர். படத்தைத் தடை செய்யக்கோரியும் காட்சிகளை நீக்கக் கோரியும் வழக்குகளும் போடப்பட்டன. சமீபத்தில் சினிமாக் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் சினிமாக்காரர்களின் பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எதிர்க்கும் போக்கு வலுத்து வருகிறது.

இதே தமிழ் சினிமாவில் தமிழக கவர்னரை வில்லனாகச் சித்தரித்து படம் வந்திருக்கிறது. முதல் அமைச்சரை கொடூரமான வில்லனாக்கியும் இங்கு பல படங்கள் வந்துள்ளன. கலெக்டர்களை கொடுமைக் காரர்களாகவும் லஞ்ச ஊழல்வாதிகளாகவும் காட்டி பல படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.மாநிலத்திற்கு ஒரே கவர்னர், ஒரே முதல்வர்தான். முப்பதுக்குள் தான் கலெக்டர்கள். இவர்களில் யாரும் அவை தங்களை சித்தரிப்பதாகவோ இழிவு படுத்தி விட்டதாகவோ கருதி படத்தை தடை செய்ய முயல வில்லை. அவர்களெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க, ஆயிரக்கணக்கில் இருக்கும் வக்கீல்கள் தங்கள் தொழில் பெயரை பயன்படுத்தி கிண்டலடித்ததற்காக போராட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கு முன் வக்கீல்களை மோசமானவர்களாகச் சித்தரித்தும் பல படங்கள் வந்துள்ளன. அதே சமயம் ஒரு வக்கீல் வில்லனாக இருந்தால் அதே படத்தில் மற்றொரு நல்ல வக்கீலும் இருப்பார். அல்லது ஹீரோவே (நல்ல) வக்கீலாக இருப்பார். சிவகாசியில் நகைச்சுவைக் காட்சியாகவே நண்பர்கள் கிண்டலடிப்பதாக வருவதற்கே இவ்வளவு எதிர்ப்பும்.

உண்மையில் பல இளம் வ்க்கீல்கள் தங்கள் நண்பர்களால் இதைவிட கேவலமாக கிண்டலடிக்கப்படுவதை நானே நேரில் கண்டிருக்கிறேன். வழக்குகள் குறைவாக உள்ள, அல்லது ஆரம்ப நிலையில் உள்ள வக்கீல்கள் தினமும் கோர்ட்டுக்கு சும்மா வந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஜாமீன் அல்லது வாய்தாவுக்கு மட்டுமே அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். டீக்காசு மட்டுமே கிடைக்கக் கூடும் என்பதால் இவர்களை நண்பர்கள் 'ஆமைவடை' என்று கிண்டலடிப்பார்கள். (தினசரி ஆமைவடையும் டீயும் சாப்பிட மட்டுமே கோர்ட்டுக்குப் போகிறவர்கள் என்று அர்த்தம்.) இதுபோல இன்னும் கேவலமான பல பிரயோகங்கள் வழக்கத்தில் உள்ளன. அதில் 10% கிண்டல் கூட படத்தில் இல்லாத போதும் இத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன? (யதார்த்தம் வேண்டும் என்பவர்கள் கவனிக்க)

தமிழன் படத்தில் வக்கீலாக நடித்து பெருமைப் படுத்திய விஜய் இதில் நகைச்சுவையாகக் காட்டியதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமே என்று என் வக்கீல் நண்பரிடம் கேட்டேன்.

"பிரச்சினையே அதுதான். தமிழன் படத்தில் அவன் நல்ல வக்கீலாக நடித்திருக்கலாம். ஆனால் அந்தப்படத்தில் மற்ற வக்கீல்களை எல்லாம் சட்டம் தெரியாத கேனப்பயல்களாகவும் பொதுமக்களுக்குத் தெரிந்த சட்டம் கூட வக்கீல்களுக்குத் தெரியாதது போலவும் கேவலப்படுத்தி இருந்தான். அந்தப்படத்தை நாங்கள் எதிர்த்திருந்தால் பொதுமக்களிடம் அடி வாங்கியிருப்போம். அதான் பேசாமல் இருந்தோம். இப்போ வசமா மாட்டிக்கிட்டான்யா!" என்றார்.

இது எப்படி இருக்கு?

தமிழ்ப்பதிவுகள் | தமிழ் | வலைப்பதிவு | tamilblog | tamil | tamilblogs |

2005-10-31

தீபங்கள் ஒளிர்கின்றன.

தீபங்கள் ஒளிர்கின்றன.

குண்டு வெடிப்புகள

ரயில் விபத்துகள்

பட்டாசு விபத்துகள்

வெள்ளம், புயல், சூறாவளிகள்

உடலை விட்டகற்றிய

சில உயிர்களின் இறுதி தீபங்களும்.

2005-10-22

சுந்தர ராமசாமி மறைவு: எழுத்தாளர்கள் அஞ்சலி

சுந்தர ராமசாமி உடல் தகனம்.

நாகர்கோவில்.அக்.21-

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த 15ம் தேதி அமெரிக்காவில் காலமானார். அவருடைய உடல் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

இறுதி மரியாதைக்காக இன்று (21ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் 669, கேபி சாலை, சுந்தர விலாஸ் இல்லத்தில் வைக்கப் பட்டிருக்கும். 5 மணிக்கு உடல் செட்டிகுளம் பிள்ளையார் கோவில் அறக்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்படும். மதச் சடங்குகள் எதுவும் இராது.

மாலை 6.30 மணிக்கு நெய்தல் சார்பில் ராமவர்மபுரம் பி.டி. பிள்ளை மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் நடை பெறும்.
***

Image hosted by TinyPic.com

நாகர்கோவில்.அக்.22-

தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உடல் நாகர்கோவிலில் நேற்று தகனம் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இலக்கிய உலகில் நாவல் மற்றும் சிறுகதை அடிப்படையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளராக சுந்தர ராமசாமி கருதப்படுகிறார். அவரது இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புகள் தமிழ் புதின வரலாற்றில் நவீன இலக்கிய தடத்தை பதித்தது. தமிழ் இலக்கிய உலகில் நீண்ட மைல்கல்லை கடந்து வந்துள்ள எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அமெரிக்காவில் சிகிட்சை பெற்று வந்த சுந்தராமசாமி கடந்த 15ம் தேதி காலமானார் அவரது உடல் அமெரிக்காவில் இருந்து நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகை சேர்ந்த எழுத்தாளர்களும், உறவினர்கள் பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை அவரது உடலுக்கு இறுதி மாரியாதை செலுத்தப்பட்டது. எழுத்தாளர்கள் திலகவதி, பிரசன்னா ராமசாமி, பொன்னிலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், தேவேந்திர பூபதி, அப்பாஸ், சுகுமாரன், இளவேனில், சுகிர்தா ராணி, சல்மா, ரமேஷ், பிரமிள், வெங்கடாசலபதி, மோகன், நஞ்சுண்டான், கோணங்கி, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வன், கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன், விக்கிரமாதித்தன், ஓவியர் ஆதிமுலம், கேரள பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் நாச்சிமுத்து, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பரமசிவன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மலையாள எழுத்தாளர்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா, சக்கரியா, ஆற்றுர் ரவிவர்மா, மதுநாயர், தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் ஸ்ரீகுமார், நெய்தல் கிருஷ்ணன், டாக்டர் நாச்சி முத்து, தமிழாலயம் பச்சைமால் ஆகியேரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்து செட்டிக்குளம் பிள்ளையார் கோயில் அறக்கட்டளை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் ஏற்கனவே அறிவித்தபடி மதசடங்குகள் எதுவுமின்றி தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நெய்தல் அமைப்பு சார்பில் நகர்கோவில் பி.டி.பிள்ளை மண்டபத்தில் அவருக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேராசிரியர் பத்மனாபன் பேசியதாவது:-

"சுந்தர ராமசாமியை எழுத்தாளர் என்பதைவிட நண்பர் என்னும் அடிப்படையில் அதிகமாக நான் அறிவேன். அவரது எழுத்துக்களை விட அவரது ஆளுமை மிகவும் எனக்கு பிடிக்கும். அவரது கவிதை,கட்டுரைகளை விட உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது உரையாடல்கள் நிறைய பதிவு செய்யப்பட வில்லை. மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நட்பை பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார். புதிய எழுத்தாளர்களுக்கான ஆதரவு, மனிதாபிமானம் ஆகியவை அவரை மனித நேயமுள்ள ஒரு மனிதராக படம்பிடித்துக் காட்டியது. ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல் மனதில் இடம்பிடித்த அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில தலைவரும், எழுத்தாளருமான பொன்னீலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

"என்னோடு துவங்கி, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறையை அவர் காட்டி வந்தார். கவிஞனாக இருந்த என்னை நாவல் உலகத்திற்கு நுழைய செய்த பெருமை அவரையே சாரும். ஜீவாவின் தாக்கம், புதுமைப் பித்தனின் ஆளுமை, ரகுநாதனின் நட்பு ஆகியவை அவரை மிகவும் பாதித்திருந்ததை நான் அறிவேன்.

இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்த அவர் 1955ல் உலக அளவில் நடந்த மாறுதல் காரணமாக தன் எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தமிழ் இலக்கியத்தில் அவர் தடம் பதித்த முதல் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை இடதுசாரிகள் சிந்தனை கலந்தே எழுதப் பட்டுள்ளது. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்றும் சொல்லலாம். தகழியின் பல படைப்புகளை அவர் மலையாளத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ் இலக்கிய சூழலுக்கு பொருத்தமில்லாத குமரிமாவட்டத்தில் ஒரு இலக்கிய இதழை துவங்கி, இங்கிருந்து சென்னைவரை ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தினார். அந்த இதழ் வியாபார தன்மையற்று இருந்தது மற்றுமொரு சாதனையாகும். சென்னையில் சென்று வாங்க வேண்டிய புத்தகங்களைக்கூட இங்கு வாங்கும் அளவிற்கு ஒரு பெரிய புத்தக நிறுவனத்தை அவர் துவங்கியதும் ஒரு சாதனை தான். எழுத்து உலகிற்கு அவருடைய இழப்பு மிகப்பெரிய பேரிழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

இரங்கல் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மறைந்த எழுத்தாளரின் குடும்பத்தினர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- தினமலர் நாகர்கோவில். (அக். 21, 22.)
***
தமிழ்ப்பதிவுகள்

2005-10-18

மாமதயானையும் மறக்க இயலாத நாளும்

Image hosted by TinyPic.com

நாகர்கோவில் அருகிலுள்ள வேளிமலையில் உள்ள முருகன் கோயில் பிரசித்தமானது. இதனை குமாரகோவில் என்று அழைப்பார்கள். இங்கிருந்து நவராத்திரி உற்சவத்துக்காக ஆண்டு தோறும் திருவனந்தபுரத்துக்கு சுவாமி ஊர்வலம் செல்லும். வெள்ளிவாகனம் என்னும் குதிரை சிலையுடன் குண்டனி அம்மையும் கோரச்சாமியும் ஊர்வலம் செல்வதாக பெரியவர்கள் கூறுவர். கோரச்சாமி என்பது குமாரசாமியின் மருவல்.
(இந்தப் புராணத்தை பின்னொரு சமயம் எழுதுகிறேன்.) ஊர்வலத்தில் நெற்றிப்பட்டம் சூட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகளும் செல்வது வழக்கம். இந்த ஆண்டு இவ்வூர்வலம் குமாரகோவிலில் இருந்து செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.

*
செப்டம்பர் 30 அன்று பகல் திருவனந்தபுரத்தில் என் சகோதரர் திருமணம் முடிந்து மணமக்களுடன் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தோம். தமிழக எல்லைக்குள் நுழைந்து மார்த்தாண்டத்தை கடந்து சென்றபோது வழியில் காவலர்கள் நின்று வாகனங்களை திருப்பிக் கொண்டு செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர். எந்த வாகனமும் அதைப் பொருட்படுத்தாமல் முன்னேற நாங்களும் அதைப் பின்பற்றினோம். சற்று தூரத்தில் சில காவலர்கள் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடிவிடுங்கள் என்று கத்திக் கொண்டே ஓடிவந்தனர். நாங்கள் நிதானமாக வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்க காவலரோ பதட்டத்துடன் "ஊர்வல யானைக்கு மதம் பிடித்துவிட்டது. இந்தப் பக்கமாக ஓடிவந்து கொண்டிருக்கிறது. உடனே இறங்கி ஓடிவிடுங்கள்..." என்று கூவினார்.

அதைக்கேட்டதும் மணமக்கள் வாகன ஓட்டுநர் காரை நிறுத்தி இறங்கி சாலையோரமாக போய் நின்று கொண்டார். பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் காரோட்டி காரை ஓரமாக செலுத்தி அங்கே நின்று கொண்டிருந்த பேருந்தின் மறுபுறம் கொண்டு போய் நிறுத்தினார். சில நிமிடங்களில் வேகமாக எதிர்ப்புறமிருந்து ஓடிவந்து கொண்டிருந்த யானையை காண முடிந்தது. அதன் பின்னாலேயே துப்பாக்கியால் குறிபார்த்தபடி வேனில் தொற்றிக்கொண்டு போலீசார். ஒருவர் வேகமாக சைக்கிளை ஓட்டியபடி வர பின்னாலிருந்தவர் கையில் ஒரு பெரிய வாழைக்குலை. சைக்கிள்வேகமாக முன்னேறி யானையைக்கடந்து சென்றது. பின்னாலிருந்தவர் வாழைக்குலையை யானையின் முன்பாக எறிந்தார். யானை திரும்பிக்கூடப் பார்க்காமல் வாழைக்குலையைக் கடந்து சென்றது. யானை கண் மறைந்ததும் நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வந்த பிறகே யானையை பின்னே விரட்டி வந்த மக்கள் கூட்டம் எதிர்வரக்கண்டோம். அப்போ யானை எவ்ளோ வேகமா போயிருக்கும்?

இன்னும் இரண்டு கிமீ தூரத்தில் ஊர்வலத்தில் வந்த மற்றொரு யானையும், சப்பறங்களும், பக்தர்களும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். அந்த இடத்தில் தான் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. யானைக்கு மதம் பிடித்து ஓடினாலும் உண்மையில் அது யாரையும் துன்புறுத்தவில்லை. சாலையின் மத்தியக் கோட்டை ஒட்டியே பல கிலோமீட்டர் தூரம் ஓடி கடைசியில் ஒரு சிறிய கோவிலருகே படுத்துக் கொண்டதாக மறுநாள் பத்திரிகைகளில் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

முதுமலைக் காடுகளில் காட்டு யானைக் கூட்டத்துக்கு நடுவே ஜீப்பில் சாகச சவாரி செய்தபோது கிட்டாத திரில்லை இங்கே அனுபவித்தோம். கையில் டிஜிட்டல் கேமராவை வைத்துக் கொண்டு நான் எடுக்க மறந்த ஷாட்டை கல்யாண போட்டோகிராபர் எடுத்துத் தந்தார்...

2005-10-16

சுரா எனும் எழுத்துச்சுடர் அணைந்தது

Image hosted by TinyPic.com


ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று தான் மீண்டும் வலைப்பதிவுகளை வாசிக்க முடிந்தது. காலை ஆறரை மணிக்கு இணையத்தில் நுழைந்து தமிழ்மணத்தில் பதிவுகளின் தலைப்புகளை மேய்ந்த போது சுந்தரமூர்த்தி மற்றும் தங்கமணி எழுதிய பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டது. கூகுளில் செய்திகளைத் தேடியபோது மலையாள மனோரமா இணைய தளத்தில் மட்டுமே சுராவின் மரணச்செய்தி வெளியிடப் பட்டிருந்தது. பின்னும் தேடியபோது News Today, NewKerala.com, Webindia123 போன்ற தளங்களில் காண முடிந்தது. தமிழ் யூனிகோடில் இந்தச்செய்தியை அந்த நேரத்தில் எந்தத் தளத்திலும் காணமுடியவில்லை.

காலை செய்தித்தாள்கள் வந்த பிறகு பார்த்ததில் தினமணியில் மட்டும் முதல்பக்கத்தில் குறிப்பு கொடுத்து உள்ளே விரிவாக சுராவின் வாழ்க்கைக் குறிப்பு வெளியிட்டிருந்தார்கள். தினமலரில் உள்ளே செய்தி இருந்தது. தினத்ததந்தியில் இந்தச் செய்தியை காணவில்லையென்று நண்பர் சொன்னார்.

ஆனால் மலையாளப் பத்திரிகைகளில் முதல் பக்கத்திலேயே புகைப்படத்துடன் விரிவான முக்கியச்செய்தியாக சுராவின் இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர் மலையாள இலக்கியங்கள் பலவற்றை மொழி பெயர்த்ததும், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அவரது படைப்புக்கு சாகித்ய அகாதமி விருதை மொழி பெயர்ப்பாளர் பெற்றதும் அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயங்கள்.

தேசிய விருது பெறாத சிவாஜியைப்போல சாகித்ய அகாதமி விருது பெறாமலே இறந்துவிட்ட சுராவின் படைப்புகள் பலமுறை விவாதத்துக்குள்ளாகி இருக்கின்றன. கடைசியாக பிள்ளை கெடுத்தான்விளை வரை!

* * *
92ல் உதயதாரகையை வெளியிட்ட சமயம் நான் நாகர்கோயில் செல்ல வேண்டியிருந்தது. அப்போது சுராவை சந்தித்து இதழை கொடுக்க விரும்பி அவரது வீட்டுக்குச் சென்றேன். அவர் ஊரில் இல்லை என்பதை அறிந்து கடையில் அவர் மகன் கண்ணனைச் சந்தித்து இதழைக் கொடுத்தேன். இன்னொரு முறையும் நான் சென்ற வேளை அவர் அமெரிக்காவில் இருப்பதாக அறிந்தேன். இப்படியாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது.

என் சக சிற்றிதழ் நண்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவதும் அடுத்த இதழிலேயே அவரை கடுமையாக விமர்சிப்பதும், அதே நண்பர்கள் மீண்டும் அவரைச் சந்திக்கும் போது அவரும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பேசுவதும் இலக்கியமும் வாழ்க்கையும் குறித்த பல புரிதல்களை எனக்குத் தந்துள்ளன.

அவரது படைப்புகள் தந்த அனுபவங்கள் என்பது நான் புதிதாக எதுவும் சொல்ல அவசியமில்லை. ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு படைப்பாளியும் தவிர்க்க இயலாத படைப்புகள் அவருடையவை. அவரது விமர்சகர்களாலும் மதிக்கப்படும் நமது காலத்தின் படைப்பாளிக்கு அஞ்சலி.

2005-08-15

ஒரு வேண்டுகோள்

இன்று இந்தியாவுக்கு விடுதலைத் திருநாள். 58 வருடங்களுக்கு முன் அன்னிய அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றதன் நினைவுநாள். இந்நாளில் இன்று அன்னிய நாடுகளின் சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் இந்தியர்களைப்பற்றிய ஒரு வேண்டுகோளுடன் வந்திருக்கிறேன்.

பல்வேறு வெளிநாடுகளில் சிறைகளில் வாடும் இந்தியர்கள் பற்றிய தகவல்களை நாம் அவ்வப்போது பல செய்தி ஊடகங்களில் அறிய முடிகிறது. அது போலவே தங்கள் குடும்ப நலனுக்காக பிழைப்புத்தேடி அரபு நாடுகளுக்கு வரும் ஏழை இந்திய இளைஞர்கள் ஏஜென்டுகளால் ஏமாற்றப்படுவது, குறைந்த சம்பளம், அறிவிக்கப்பட்ட வேலைக்கு பதிலாக வேறு வேலை தரப்படுவது என பல விதங்களில் அலைக்கழிக்கப் படுகிறார்கள். இதையெல்லாம் மீறி வேலையில் அமர்ந்து ஓரளவு சம்பாதிக்கத் தொடங்குபவர்களுக்கும் பல சிக்கல்கள் காத்திருக்கின்றன.

வெளிநாட்டு வேலைக்காக வட்டிக்கு கடன் வாங்கி அனுப்பப் படும் அவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக அயல்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்படும் நிலையில் அந்தக்குடும்பங்கள் படும்பாடு சொல்லி மாளாது. சவுதி அரேபியா போன்ற நாடுகளின் சிறைகளில் வாடும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்துக்கே கூட தெரிவிக்கப் படுவதில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல் இந்த அதிர்ச்சியை மேலும் அதிகமாக்குகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சாலை விபத்து தொடர்பான வழக்கில் சிறையிலிருப்பது தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதைப்படித்த நண்பர் சாகரன் அவரது நண்பர் திரு வெற்றிவேல் மூலமாக இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இதைக்குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தார்.

சமீபத்தில் அவ்வாறு கிடைத்த ஒரு தகவலை அவர் அனுப்பியிருந்தார். அதன்படி சவுதி அரேபியச்சிறைகளில் வாகன விபத்து வழக்குகளில் சிறையிலிருக்கும் இந்தியர்கள் ஆறு பேர் குறித்த தகவல்கள் அவர்களின் உறவினர்களின் முறையீடுகளால் இந்திய தூதரகத்தில் அறியப்பட்டிருக்கிறது. இன்னும் கூட பலர் இருக்கலாம் என்றாலும் இவர்கள் ஆறு பேர் குறித்த தகவல்கள் மட்டுமே இதுவரை கிடைக்கப் பட்டிருக்கிறது.

U.V.குமரன் (கேரளா)
மைனுதீன்
K.E. வாஷிங்டன் (மகாராஷ்ட்ரா)
காவும்புறத்து ஹம்சா (கேரளா)
முகமது அவுசத் (உத்தரப் பிரதேசம்)
அகஸ்டின் துரைசாமி (தமிழ்நாடு)

இவர்கள் BLOOD MONEY எனப்படும் நஷ்ட ஈட்டுத் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் தங்கள் எஞ்சிய வாழ்நாளை சவுதி அரேபிய சிறையில் கழிக்க வேண்டியதுதான்.

வெளிநாட்டு வேலைக்காக வாங்கிய கடன்களே தீர்ந்திராத நிலையில் இந்த அபராதத்தை இவர்கள் எப்படி செலுத்தப்போகிறார்கள்? அபராதம் கொஞ்சநஞ்சமல்ல. இந்திய பணமதிப்பில் பத்து லட்சம் ரூபாய் முதல் நாற்பத்தைந்து லட்சம் ரூபாய்வரை இவர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.

இதற்காக வெளிநாடுவாழ் மலையாளிகள் கூட்டமைப்பு நன்கொடைகள் மூலம் நிதிதிரட்டி இவர்களை மீட்க முயற்சி எடுத்து வருகிறது. ரியாத் தமிழ்ச்சங்கமும் இம்முயற்சியில் இணைந்துள்ளது. ரியாத் இந்திய தூதரகம் இந்த முயற்சியை அங்கீகரித்து ஒத்துழைப்பு தருகிறது.

இத்தனை பெரிய தொகையை திரட்டுவதென்பது சாதாரண காரியமல்ல. ஆனாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பதால் ஒவ்வொருவர் தரும் சிறு தொகையும் இம்முயற்சிக்கு வளம் சேர்க்கும். இது ஆறு குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால் நம்மால் முடிந்த உதவியை செய்ய முயல்வோம். முடிந்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை இந்த முயற்சிக்கு பங்களிக்க வேண்டுகிறேன்.

நன்கொடைகள் அனுப்ப விவரம் & முகவரி:

The Embassy of India has agreed to receive funds from the Indian community and keep it in a separate account and register under the Community Welfare Wing. The donors making contributions must state specifically the name of the detainee for whom contributions are made.

Cheques and Drafts must be drawn in favor of “EMBASSY OF INDIA – INDIAN WORKERS WELFARE FUND” and posted to Embassy of India, P.O.Box No. 94387, Riyadh-11693, Saudi Arabia.

நன்கொடை அனுப்பும் வலைப்பதிவர்கள் sanuragc at yahoo.com மின்னஞ்சலுக்கு தகவலாக தெரிவித்தால் நன்று.

தொடர்புள்ள சுட்டி

ஓர் உதவிக்குறிப்பு
குறிப்பு:
திரு. அகஸ்டின் துரைசாமி விடுவிக்கப்பட சுமார் இருபது லட்சரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் எனத்தெரிகிறது. நன்கொடை அனுப்புவோர் யாருடைய விடுதலைக்காக என்பதைக் குறிப்பிட்டே அனுப்ப வேண்டும். இதன்மூலம் குறிப்பிட்ட ஒருவரை விடுவிப்பதற்கான தொகை சேர்ந்தவுடன் அவரது விடுதலைத்தொகை செலுத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட முடியும்.

2005-08-07

திருவாசகம் உருக்குகிறதா?

இளையராஜாவின் திருவாசக ஒலிவட்டு வெளியானது முதல் அதற்கு பலதரப்பட்ட விமர்சனங்களும் வந்து விட்டன. இன்றும் வந்து கொண்டுள்ளன. தமிழின் பெருமை, அரிய முயற்சி என்ற வகையில் அதைக் குறை கூறக்கூடாது எனவும், அதன் அசல் ஒலிவட்டையே எல்லோரும் வாங்கி அதனை ஆதரிக்க வேண்டும் என்பதாகவும் தமிழ் வலைப்பதிவுகளிலும் பிறவற்றிலும் பல நண்பர்கள் எழுதிய கருத்துக்களை வாசிக்க முடிந்தது.

இதனால் நானும் அசல் வட்டு கிடைக்கும் வரை கேட்பதில்லை என்று காத்திருந்தேன். சென்னையில் ஒரு பிரபலமான கடையில் வாங்கிவரப்பட்ட திருவாசக ஒலிவட்டை கணினியில் போட்டுக் கேட்டபின் சிலவற்றை எழுத வேண்டுமென்று தோன்றியது.

இளையராஜாவின் முயற்சி பாராட்டத் தக்கது. சிம்பொனி இசைக்குள் திருவாசகத்தை கொண்டு வந்திருப்பது அதற்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. திண்ணையில் நாக இளங்கோவன் எழுதிய விமர்சனத்தில் இசைமுழக்கம் அதிகமாக இருப்பதான கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அதுவும் கூட சிம்பொனியின் தன்மையால் விளைந்ததுதானே தவிர வேறு வலிந்த பெருகோசை அல்ல. மற்றபடி இளங்கோவன் கூறியுள்ள பிழைகள் குறித்த கருத்துகள் ஆழமானவை. ஞாநி பாடலையோ இசையையோ அல்லாமல் திருவாசக இசை வெளியீட்டின் பின்னணி குறித்த தன் பார்வையை முன்வைத்துள்ளார். சாருநிவேதிதாவும் தன்பங்குக்கு தன்பாணியில் திருவாசக இசைக்கு அப்பாற்பட்டு இளையராஜாவை விமர்சனம் செய்திருக்கிறார். இவை போன்ற ஆழமான பின்னணி முன்னணிகளுக்குள் நுழையாமல் பாமர இசை ரசிகனாக இதைப் பார்ப்போம்.

நான் கேட்டவரையில் இசை வித்தியாசமான முயற்சி. புதிய அனுபவமாகவும் இருக்கிறது. பாடலின் உணர்வுகளுக்குள் நுழைந்து கேட்டால் உருக்கும் என்று சொல்லமுடியா விட்டாலும் இனிமையாகத் தான் இருக்கிறது.

குரல் தான் கொஞ்சம் உறுத்துகிறது. இளையராஜா தானே பாடியிருக்க வேண்டாம். ஹரிஹரன் அல்லது எஸ்பிபி பொருத்தமாக இருந்திருப்பார்கள். எப்போதோ எதிலோ திருவாசகத்திலிருந்து ஒரு துண்டு எஸ்பிபி பாடிக்கேட்டிருக்கிறேன். அதன் உருக்கம் இதில் குறைவுதான் என்னைப்பொறுத்தவரை.

இது உலகளாவிய இசை முயற்சி என கூறப்பட்டிருப்பதால் ஒலிவட்டின் தரமும் அப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால் கணினியில் போடும்போது ஒலிவட்டில் பாடல்களின் விபரமும் பாடகர்களின் விபரங்களும் கூட பதிவு செய்யப்படாமல் track1,track2 என பல்லிளிக்கிறது. அதனால் அது அசலா நகலா என்று சந்தேகமே வருகிறது. CD வாங்கிய நண்பர்கள் இதனை பரிசோதித்து உங்களுக்கு என்ன வருகிறது என்பதை தெரிவிக்கவும்.

இது குறித்த பத்ரியின் வலைப்பதிவு

2005-08-06

காதல் விரோதி

வழக்கம் போல நரேந்திரமோடி அரசு சத்தம் போடாமல் ஒரு சமூகப் புரட்சிக்கு மூடுவிழா நடத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்தில் சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தும் முக்கியமான ஒரு காரணிக்கு குஜராத்தில் சாவுமணி அடிக்கப் பட்டிருக்கிறது.

திருமணங்கள் பெற்றோர் சம்மதமின்றி பதிவு செய்யப்படக்கூடாது என்றொரு உத்தரவை திருமணப் பதிவாளர்களுக்கும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களாக பெற்றோர் சம்மதத்துடன் கூடிய திருமணங்களையே சட்டப்பூர்வமானதாக ஏற்க வேண்டும் என நீதிமன்றங்களுக்கும் குஜராத் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்திய சமூகத்தில் இன்றும் காதல் திருமணங்களை பெற்றோர் அங்கீகரிப்பதில் மிகப்பெரிய தயக்கம் இருக்கிறது. அதற்கான மிக முக்கியமான காரணி சாதி. காதல் சாதிமதம் பார்ப்பதில்லை. காதலர்களும் அவ்வாறே. ஆனால் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டிய பெற்றோர்கள் சாதி வேறுபாடு இருந்தால் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவும் சட்டப்பூர்வமான பாதுகாப்பைப் பெறவும் பதிவுத் திருமணங்களையே நம்பியிருந்தார்கள். இந்நிலையில் குஜராத் அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய உத்தரவு காதல் திருமணங்களை தடை செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியல் சட்டப்படி திருமண வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் எந்தத் தடையுமின்றி திருமணம் செய்து கொள்வதற்கு இருந்த அடிப்படை உரிமையையே கேள்விக் குறியாக்குகிறது இந்த உத்தரவு. வயதுவந்த ஆணும் பெண்ணும் திருமண விஷயத்தில் என்றும் பெற்றோரை சார்ந்திருக்க வேண்டிய பழமைவாத கோட்பாடுகளுக்கு மீண்டும் இந்திய சமூகத்தை இட்டுச் செல்வதன் மூலம் கலப்புத் திருமணங்களை ஒழிப்பதும் அதன்மூலம் ஏற்படும் சாதிக்கலப்பு, சாதிமறுப்பு போன்றவற்றை தடுப்பதுமாகிய பிற்போக்குத் தனங்களை தொடர்ந்தும் நரேந்திர மோடியின் பிஜேபி அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசாணைக்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் கிளம்பாததற்கும் மோடி அரசின் தந்திரமான அணுகுமுறையே காரணம்.

பணத்துக்காக பெண்களை தந்திரமாக ஏமாற்றி திருமணம் செய்து கைவிடுவது, முன்னரே திருமணமான விஷயத்தை மறைத்து பெண்களை ஏமாற்றி பல திருமணங்கள் செய்வது போன்ற சமூக மோசடிகளிலிருந்து அப்பாவிப் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கை களாலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப் பட்டதாக அரசு செய்த தந்திரப் பிரச்சாரம் பெண்ணிய அமைப்புகளின் வாயை அடைத்து விட்டது. அரசு இதற்கு ஆதாரமாக காட்டியது இந்த அரசாணைக்கு வந்த பாராட்டுரைகள். அவை பெற்றோர்களிடமிருந்து வந்தவை என்பதை சொல்லவும் வேண்டுமா?

உண்மையில் ஏமாற்றித் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் சட்டப்பூர்வமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு திருமணம் செய்யமாட்டார்கள் என்பதும், உண்மையான காதலர்களே பதிவுத்திருமணங்களை அதிகம் நாடுபவர்கள் என்பதும் மறக்கப் பட்டு விட்டது. ஏமாற்றும் நோக்கமுடையவர்களில் மிகச்சிறு சதவீதத்தினரே பதிவுத்திருமணம் செய்பவர்கள். அவர்களை தண்டிப்பற்காக அல்லது கண்டறிவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக சொல்லப் பட்டாலும் உண்மையில் இதனால் பாதிக்கப் படுவது முழுக்க முழுக்க கலப்புத்திருமணம் செய்யும் காதலர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பெற்றோர்களால் செய்யப்பட்டு வந்த பால்ய விவாகங்களை நிறுத்த சமூகப்புரட்சிகள் பல தேவைப்பட்டன. குறிப்பிட்ட வயதுவந்தோர் திருமண உரிமை சட்டமாக்கப் பட்ட ஒன்று. இன்று இத்தகைய பிற்போக்குத்தனங்களால் நமது முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை மனித உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

2005-08-02

முனைவர் அ. சிவசூரியன்.

தஞ்சை கல்யாணசுந்தரம் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியும் முனைவர் அ. சிவசூரியன் செய்திருக்கும் தமிழ்ப்பணி மகத்தானது.

1988 முதல் 2005 வரை 315 வாரங்கள் தொடர்ச்சியாக தனி திருக்குறள் வகுப்புகள் நடத்திய சிறப்பான சாதனை இவருடையது.

"திருக்குறள் 20 ஆம் நூற்றாண்டுப் புத்துரைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திருக்குறளை மையப்படுத்தி எழுதியது 'ஒளி பிறந்தது' என்னும் சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுதி.

தனது இல்லத்தில் திருக்குறள் நூலகம் அமைத்து குறள் உரைகள், திருக்குறள் பற்றிய ஆய்வு நூல்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என திருக்குறளோடு தொடர்புடைய நூல்களை சேகரித்து வைத்து குறளில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

1988 முதல் நாள்தோறும் தனது வீட்டு வாயிலிலும் பள்ளியிலும் தினந்தோறும் ஒரு குறளை அதன் பொருளுடன் எழுதி வருகிறார். 1988 முதல் இவர் ஆரம்பித்து நடத்திவரும் திருக்குறள் விளக்கத் தொடர் வகுப்புகள் ஒரு சுற்று முடிய நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இதனை ஞாயிறு தோறும் இடைவிடாமல் இதுவரை நடத்தி வருவது மிகப் பெரிய சாதனை.

தொலைக்காட்சியின் 'மகா........பா...ர...த...ம்' குழந்தைகளை ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் அந்த நேரத்திலேயே குறள் வகுப்புகளை நடத்தி அதில் குழந்தைகளும் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்து கோண்டது வியப்புக்குரிய செய்திதான்.

2001ல் கரந்தையில் இவர் தொடர்வகுப்பை ஆரம்பித்தபோது அதுவரை பெரும்பாலும் ஏழைக்குழந்தைகளே பங்கேற்றிருந்த திருக்குறள் வகுப்புகளுக்கு திடீரென ஓரளவு வசதியான குழந்தைகள் பலர் வந்து குவிந்துள்ளனர்.

திருக்குறள் முழுவதும் ஒப்பித்தால் ஆயுள் முழுக்க அரசு ஆயிரம் ரூபாய் தருகிறது என்ற அறிவிப்பால் தான் இந்தக்கூட்டம் வந்திருக்கிறது. 'இது திருக்குறள் மனப்பாட வகுப்பல்ல; திருக்குறள் விளக்கத் தொடர்வகுப்பு' என்று சொன்னதும் அந்தப் புதிய கூட்டம் காணாமல் போயிருக்கிறது.

இவரிடம் பயின்ற பிரதீபா என்ற மாணவி அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதாக வந்த செய்திதான் அந்தக் கூட்டம் இந்த வகுப்புகளை நாடி வந்த காரணம்.

பிரதீபா

உலகின் முதல் பெண் 'பதின்கவனக்கலைஞர்'(தசாவதானி). இவர் சிறு வயதில் முதலில் 100 திருக்குறள்களை ஒப்பித்து பரிசு பெற்றதில் ஊக்கம் பெற்று 1330 குறள்களையும் பயிற்சி செய்து ஒப்பித்து பரிசுக்ள் பெற்றிருக்கிறார். இவரது தந்தை கோபிசிங் தான் இவரது திறமைகளைக் கண்டறிந்து அவரை பயிற்றுவித்திருக்கிறார்.

பிரதீபா திருக்குறள் ஒப்பித்து பரிசுகள் பெற்ற செய்தியையும் அவர் தமது பள்ளியிலேயே பயிலும் மாணவி என்பதையும் அறிந்து முனைவர் சிவசூரியன் அவரை ஊக்கப் படுத்தியிருக்கிறார். பின்னர் பிரதீபா திருக்குறள் தொடர் வகுப்புகளுக்கும் சென்று உச்சரிப்புத் தெளிவும், குறள் விளக்க உரைகளையும் பயின்றிருக்கிறார்.

பிரதீபாவின் தாய்மொழி தமிழல்ல; 'இந்தி' என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தி.

பின்னர் கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலைத்திறப்பு விழாவின்போது திருக்குறள் ஒப்பித்தலில் பிரதீபாவும் கலந்து கொண்டு ஆயுள் முழுக்க ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார்.

பிரதீபா தற்போது கணிப்பொறியாளராக பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். (?!)

தகவல்: நன்றி: சௌந்தரசுகன்.

2005-07-05

சாதனைச்சிறுவன் ஜனா!

ஐந்து வருடங்களுக்கு முன்வரை எல்லோரையும் போல துள்ளி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்தான் இவனும். ஆனால் இன்று? இரு கைகளையும் ஒரு காலையும் இழந்து வாழ்வின் பல இன்பங்களை இழந்த வேதனைக்கு உள்ளானவன். என்ன தான் நிகழ்ந்தது இவன் வாழ்வில்?
Image hosted by TinyPic.com

அது புத்தாயிரமாண்டில் மார்ச் நான்காம் தேதி. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 8 வயது ஜனார்த்தனன் பள்ளி விட்டு வீடு திரும்பியபின் மொட்டைமாடியில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே கிடந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்துச் சுழற்றியபடி இருந்த போது அந்த விபரீதம் நிகழ்நதது. அருகிலிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் அவன் கையிலிருந்த கம்பி உரச மின்சாரம் ஜனாவின் உடலில் பாய்ந்தது. டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதற, உறவினர்கள் வந்து பார்த்த போது பாதி வெந்த, வெந்து கொண்டிருந்த ஜனாவின் உடலைத் தான் கண்டார்கள்.
Image hosted by TinyPic.com
ஊசலாடிக் கொண்டிருந்த உயிரை மருத்துவர்கள் அரும் பாடுபட்டு மீட்டார்கள். தோள்வரை வலதுகரம், மூட்டுவரை இடதுகரம், மூட்டுவரை இடதுகால், வலதுகாலின் முன்பாதம் ஆகிய கருகிய பாகங்களை அகற்றி இன்றைய ஜனாவுக்கு மறுபிறவி கொடுத்தனர் மருத்துவர்கள்.

வாழ்வே சோதனைக்கு உள்ளான ஜனாவுக்கு படிப்பும் கேள்விக்குறியானது. பல பள்ளிகள் அவனைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கின. SRNM மெட்ரிக் பள்ளி அவனைச் சேர்த்துக் கொண்டது. ஜனா இன்று ஏழாம் வகுப்பில் படிக்கிறான்.
Image hosted by TinyPic.com

அவன் வாயினால் பென்சில் பிடித்து எழுதக் கற்றுக்கொண்டான். வாயினாலேயே படிப்படியாக படங்கள் வரையவும் கற்றுக் கொண்டான். அதுவே அவன் வாழ்வில் புதிய வசந்தத்தைக் கொண்டு வந்து சேர்த்தது.

ஜனா ஓவியப்போட்டிகளில் பரிசுகள் குவிக்கத் தொடங்கினான். உலகளாவிய அளவில் ஜனாவின் ஓவியங்கள் பாராட்டப் படத்துவங்கியது. கணிப்பொறி வரைகலையிலும் தேர்ச்சி பெற்றுள்ள ஜனாவுக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. 2003 ல் தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற ஜனா இந்த வருடம் ஏப்ரல் 21 அன்று குடியரசுத் தலைவரிடம் 'பாலஸ்ரீ' விருது பெற்றான்.
Image hosted by TinyPic.com

'அழகி' மென்பொருள் தயாரிப்பாளர் திரு. விஸ்வநாதன் தனது வலைத்தளத்தில் ஜனாவுக்கென்றே ஒரு வலையகத்தை நிறுவி ஜனா பற்றிய விரிவான தகவல்களையும் ஏராளமான புகைப்படங்களையும் இணையத்தில் இட்டுள்ளார். (இங்குள்ள படங்களும் இத்தளத்திலிருந்து எடுக்கப் பட்டவையே)

ஜனாவின் வலைப்பக்க முகவரி: http://www.azhagi.com/jana

2005-06-06

சிற்றிதழ்ச் செய்தி

பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியைச் சேர்ந்த ம. நடேசன் என்ற நசன் 20 ஆண்டு ஆசிரியப்பணி புரிந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். இலக்கிய ஆர்வம் காரணமாக தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களைச் சேகரிக்க ஆரம்பித்த அவர் தமிழில் வெளியான ஏராளமான சிற்றிதழ்களை முழுவதுமாகச் சேகரித்துள்ளார். சுமார் 2500 க்கு மேற்பட்ட சிற்றிதழ்கள் அவரது சேகரிப்பில் உள்ளன.

அவற்றைத் தொகுத்து பட்டியலிட்டு வெளியிட சிறிய அச்சகம் ஒன்றைத் துவங்கி சிற்றிதழ்ச் செய்தி என்ற சிற்றிதழை தானே அச்சுக்கோர்த்து அச்சிட்டு வெளியிட்டார். இதழின் சார்பில் சிறந்த தமிழ்ச்சிற்றிதழ்களுக்கு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் தமிழம் வலை என்ற இணையதளம் தொடங்கி சிற்றிதழ்ச் செய்தி இதழை அதன் இணைப்பாக, இணைய இதழாக வெளியிட்டு வருகிறார்.

பணி ஓய்வுக்குப் பிறகு தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ் மற்றும் பொதுவான கற்பித்தலுக்கான எளிய கருவிகளை ஆய்வு நோக்கில் உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார். இணையத்தின் மூலம் தமிழ் கற்பித்து வருகிறார். தமிழ் இலக்கியங்களை கற்பிப்பதற்காக தமிழமுது வலைப்பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளாக அவர் சேகரித்துச் சேர்த்த சிற்றிதழ்களை குறுவட்டுகளாக படிப்படியாக வெளியிட்டு வருகிறார். தமிழில் புதுக்கவிதை இயக்கத்தை வளர்த்த வானம்பாடி இதழை முழுமையாக சேகரித்து குறுவட்டாக வெளியிட்டுள்ளார்.

இவரது இணையத் தமிழ்ப்பணிகளின் தொடர்ச்சியாக தமிழ்வலைப்பதிவு ஒன்றைத் துவக்கி தமிழ் அறிஞர்களை அறிமுகம் செய்ய முனைந்துள்ளார். தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக அவரை வரவேற்கிறேன்.

நசனின் வலைப்பதிவு: http://www.pollachinasan.blogspot.com/

2005-06-01

விஷியின் 'அழகி'

தேடுபொறிகளில் தமிழ் மென்பொருள்களைத் தேடும்போது அழகி என்ற மென்பொருளைப்பற்றிய குறிப்புகள் நிச்சயமாகத் தென்படும்.
அது என்ன அழகி?

அது ஒரு தமிழ் transliteration மென்பொருள் என்பதும்; அதன்வகையில் முதலாவதான மென்பொருள் என்பதுமே ஆரம்ப குறிப்புகள் தரும் அறிமுகம். உண்மையில் அழகி வெறும் transliteration மென்பொருள் அல்ல. அது ஒரு முழுமையான தமிழ்ச் செயலி.

அழகியின் பயன்பாடுகள் பின்வருமாறு:

1. அழகி ஒரு தனித்த முழுமையான செயலி

2. அழகி மூலம் ஒலியியல், தமிழ்99, தட்டச்சு ஆகிய 3 முறைகளில் தமிழை தட்டச்சு செய்யலாம்.

3. அழகியில் நேரடியாக தமிழை தட்டச்சு செய்யலாம்.

4. அழகி மூலம் அனைத்து, விண்டோஸ் மற்றும் அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்களில் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

5. ஆங்கில transliteration முறையில் இருதிரை தட்டச்சு அல்லது ஒரு திரை தட்டச்சு செய்யலாம்.

6. தமிழை ஆங்கில எழுத்துக்கு reverse transliteration செய்யலாம்.

7. தமிழில் மின்னஞ்சல் அனுப்பலாம்.

8. தமிழில் chat செய்யலாம்.

9. தமிழில் வலைப்பக்கங்களை வடிவமைக்கலாம்.

10. யூனிகோடு எழுத்துருவிலும் செயல்படும்.

11. இணையப் பக்கங்களுக்கான டைனாமிக் ஃபான்ட் எனப்படும் இயங்கு எழுத்துரு இணைந்து வருகிறது.

12. அழகியின் விரிவான உதவிப் பக்கங்கள் தமிழில் விரிவான ஒரு ஆய்வையே மேற்கொள்ளுமளவுக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

13. தமிழ் அறியாதவர்கள் கூட தமிழில் எழுத முடியும்.

14. தமிழ் கற்க உதவும் கருவியாகவும் அழகி பயன்படும் என்பது பலரும் அறியாத செய்தி.

சாதாரணமான எல்லா கணிப்பொறியாளர்களையும் போலவே தன் வாழ்வைத் துவங்கிய விஷி என்னும் விஸ்வநாதன் அபூர்வமான ஒரு கொடிய நோயால் தாக்குண்ட போது தன் மென்பொருள் நிறுவனப் பணியைத் துறக்க வேண்டி வந்தது.

கடுமையான நோயின் வேதனைகளிலிருந்து ஓரளவுக்கு மீண்டு, சோதனைகள் தந்த சாதனையாக அவர் தமிழ் மென்பொருள் ஒன்றை உருவாக்கினார். அதுவே தமிழின் முழுமையான செயலியாக விளங்கும் அழகி என்ற தமிழ்ச் செயலி மென்பொருள்.

விஷியின் வாழ்க்கைச் சாதனைகளும் அவர் சந்தித்த சோதனைகளும் அழகி.காம் என்ற அவரது வலைதளத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன. அழகியின் சோதனைப் பதிப்பை இந்த இணைப்பில் பதிவிறக்கலாம்.

2005-05-31

சிடாக் சி.டி.

காத்துக்காத்து கண்கள் பூத்திருந்த தமிழ் மென்பொருள் கருவிகள் சிடி வந்தே விட்டது. சொன்ன வாக்கை நிறைவேற்றி விட்டார் அமைச்சர். நன்றி...

சரி இனி சிடி எப்படி என்று பார்ப்போம். முதலில் இருப்பது டாப்/டாம் எழுத்துருக்கள். (டாப் 22, டாம் 96) அவற்றோடு தமிழ் விசைப்பலகை இயக்கியும் இருக்கிறது. தமிழ்99 மற்றும் தட்டச்சு விசைப்பலகை முறைகளில் இயங்குகின்றன.

அடுத்தது யூனிகோடு எழுத்துருக்கள் (120). அவற்றோடும் தமிழ் விசைப்பலகை இயக்கியும் இருப்பதாகத் தெரிகிறது அல்லது தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஒலியியல், தமிழ்99, தட்டச்சு முறைகளுக்கான லே-அவுட் குறிப்புகள் உள்ளன. ஆனால் என் கணினியில் அவை ஏதும் இயங்கக் காணவில்லை.

மூன்றாவதாக இருப்பது பாரதீய-ஓஓ எனப்படும் அலுவலகப் பயன்பாட்டுத் தொகுப்பு. புதியவர்களுக்கு திரை தமிழில் தெரிவது பயனுள்ளதுதான். ஏற்கனவே officeXP பழகி விட்டதால் அதிகம் என்னால் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

தமிழ் உலாவியை நிறுவிய போது ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த பயர்பாக்ஸ் தமிழுக்கு மாறிவிட்டது. அதனால் கொலம்பா (கொலும்பா?) தமிழ் மின்னஞ்சல் செயலியை நிறுவவில்லை:-))

மின்-ஓலை எனப்படும் சொற்பிழை திருத்தி டாப் எழுத்துருவை உள்ளிட்டால் மட்டுமே இயங்கும். இதில் அஞ்சால் விசைப்பலகை முறையில் எழுத முடியும். இது யூனிகோடில் இல்லாததால் எனக்குப் பயன்படப் போவதில்லை.
தட்டச்சுப் பயிலவும் ஒரு செயலி உள்ளது.குழந்தைகளுக்காக 'பாப்பாப் பாட்டுப் பாடுவோம்' என்று தமிழ் நர்சரி ரைம் 10 பாட்டுகள் சினிமா மெட்டுகளில் இருக்கிறது.

அகராதி english-english-தமிழ் மற்றும் தமிழ்-தமிழ்-english இருப்பதாக தகவல் பலகை சொல்கிறது. ஆனால் english-english-தமிழ் மட்டுமே எனக்குத் தெரிகிறது. தேடல் பெட்டியில் தமிழ் வார்த்தை கொடுத்தும் தேட முடிந்தாலும்english-english-தமிழ் முறையில் தான் விடை கிடைக்கிறது. இது யூனிகோடில் இருப்பது ஆறுதல். முன்பின்னாக நகர்த்திப் பார்க்கும் வசதியில் நவீன தொழில் நுட்பங்கள் இன்னும் தேவை. ஒரு எழுத்து வரிசையில் 500 பக்கங்கள் இருந்தால் முதலிலிருந்தே வரிசையாகத்தான் நகர்த்த முடிகிறது. குறிப்பிட்ட பக்க எண் வரிசைக்குச் செல்ல முடியவில்லை.

நான் மிகவும் எதிர்பார்த்திருந்த பொன்விழி OCR ஒளிவழி எழுத்துப் பகுப்புணரியை என் கணினியில் நிறுவ முடியவில்லை. காரணம் கணினியின் பிரச்சினையா மென்பொருளின் பிரச்சினையா? குறுவட்டின் பிரச்சினையா? தெரியாது.

எழுத்துருக்கள் ஏராளமாக உள்ளன. இத்தனை தேவையா? என்ற எண்ணம் தோன்றினாலும் விதவிதமான எழுத்துருக்கள் அச்சு மற்றும் பத்திரிகை, விளம்பரத் துறைகளுக்கு பயன்படக் கூடும்.

மொத்தத்தில் தமிழ்அகராதி மட்டுமே எனக்கு ஓரளவுக்குப் பயன்படும் என்று தோன்றுகிறது. கணினியில் புதிதாகத் தமிழைப் புகுத்த இந்த மென்பொருள்கள் எந்த அளவுக்குப் பயன்படும் என்று ஆராய்வது கொஞ்சம் கடினமான காரியம்தான்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாக திட்டமிட்டு இந்த மென்பொருள்களை ஒருங்கிணைத்திருந்தால் சில குறைபாடுகளை அகற்றி முழுப்பயனுள்ள குறுவட்டை வெளியிட்டிருந்திருக்கலாம். அரசு இதற்காகச் செலவழிக்கும் பணத்திற்கு தகுந்த பலன் கிடைப்பது இப்போதைக்குச் சந்தேகமே.

2005-05-25

சுரதாவின் செயலிகள்!

நான் இணையத்தை வெறும் பார்வையாளனாக மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த நேரம். வலைப் பதிவுகளும் அப்போது எனக்கு அறிமுகமாகி இருக்க வில்லை.

தமிழ்த் தளங்களை தேடித்தேடி வாசிக்க முயன்ற எனக்கு அதில் உள்ள எழுத்துருக் குழப்பங்கள் புரிபட சிலகாலம் பிடித்தது. ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி எழுத்துருக்களை பதிவிறக்க வேண்டிய கட்டாயம். பதிவிறக்கிய எழுத்துருவை நிறுவி சிரமப்பட்டு தளத்தைப் பார்த்தால் அதில் குறிப்பிடத்தக்கதாக அல்லது பயனுள்ளதாக ஒன்றும் இருக்காது.

பிறகு அடுத்த தளம்...அதே பிரச்சினை...அதே பதிவிறக்கம், நிறுவல்...

ஒருமுறை தேடுபொறியில் tamil என்று தேடியபோது அகப்பட்டது தான் சுரதாவின் 'பொங்குதமிழ்'.

அது எனது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தந்தது. முதல் பார்வையில் (வாசிக்க முடியாத) எந்தத் தளத்தையும் பொங்குதமிழில் உள்ளிட்டு வாசித்துவிட்டு தேவை என்றால் மட்டும் எழுத்துருவைப் பதிவிறக்குவது வழக்கமானது. இதற்காக பொங்குதமிழை கணினியில் சேமித்து, டெஸ்க்டாப்பில் அதன் சுட்டியையும் இட்டு வைத்தேன். (இப்போதும் வைத்திருக்கிறேன்.)

எந்தத் தெரியாத எழுத்துரு கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தையும், தளத்தையும் சரியாகத் தெரிய வைப்பது மட்டுமல்ல அந்த ஆவணத்தை யூனிகோடு எழுத்துருவில் மாற்றித் தருகிறது. இது பொங்குதமிழின் மிகச்சிறந்த பயன்பாடு.

தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் அறிமுகமானபோது இணைய தளங்கள் பலதரப்பட்ட எழுத்துருக்களில் உருவாக்கப்பட்ட நிலை மாறி திஸ்கியிலும் டாப் எழுத்துரு முறையிலும் நிறையத் தளங்கள் உருவாகின.

அடுத்தக் கட்ட வளர்ச்சியான யூனிகோடு என்னும் உலகப் பொதுத்தர எழுத்துமுறை வந்த பிறகும் பழைய ஆவணங்களை என்ன செய்வது என்ற தயக்கத்தில் சிலர் யூனிகோடுக்கு மாற்றாமலிருந்தனர். சுரதா அதற்கும் தீர்வு கண்டார். அவரது அடங்காத்தமிழ் என்னும் செயலி திஸ்கி அல்லது டாப் முறையில் அமைந்த இணையப் பக்கங்களை நேரடியாக யூனிகோடு இணையப் பக்கமாக மாற்றித் தருகிறது.

இ-ராவணன் என்றொரு செயலியை சுரதா வெளியிட்டார். அது தமிழில் இணையப் பக்கங்களை உருவாக்கவும், பலவண்ண வடிவ மாற்றங்களுடன் கண்கவர் தோற்றமுள்ள தமிழ் ஆவணங்களை உருவாக்கவும், அவற்றை பல்வேறு வகை கோப்புகளாக சேமித்துக் கொள்ளவும் வகை செய்தது. மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஃப்ரண்ட் பேஜ் செயலிகளின் அடிப்படை செயல்பாடுகளை எளிமையாக செயல்படுத்தக் கூடியதாகவும் தமிழ் வெளிப்பாட்டிற்கு உகந்ததாகவும் அது இருந்தது.

புகழ்பெற்ற கூகுள் தேடுபொறியில் தமிழில் எழுதித் தேடும் கூகுள்-யாழ் என்னும் தேடுகருவியை உருவாக்கினார். தமிழ்த்தளங்களை தமிழிலேயே தேடிப்பெற இது பயன்மிக்கதாக இருந்தது. அதன் அடுத்த கட்டமாக முக்கியமான எல்லா தேடுபொறிகள் மூலமாகவும் தேடும் வசதியுள்ளதாக முழு வலையுலகிற்குமான தமிழ்த் தேடியந்திரமாக யாழ்தேவி தமிழ் தேடியந்திரத்தை உருவாக்கினார்.

அவரது புதுவை எழுதி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை transliteration முறையில் தமிழில் மாற்றித் தரும் எளிய தமிழ் தட்டச்சுச் செயலி. ரோமன் ஒலியியல் தட்டச்சு முறையில் இதில் தமிழைத் தட்டச்சு செய்யலாம். பாமினி, டாப், திஸ்கி மற்றும் யூனிகோடு வகை எழுத்துருக்களை தட்டச்சு செய்வதற்கான தனித்தனி புதுவை எழுதிகளை உருவாக்கியுள்ளார்.

இவை தவிர யூனிகோடு-பாமினி, யூனிகோடு-திஸ்கி, யூனிகோடு-டாப், பாமினி-திஸ்கி, பாமினி-யூனிகோடு எழுத்துரு மாற்றத்திற்கான தனித்தனி செயலிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதன்பிறகு ஈழம் எழுதி என்ற ரோமன், பாமினி இருவகை தட்டச்சு முறைகளும் கொண்ட யூனிகோடு எழுதுகருவியை வெளியிட்டுள்ளார். இது தமிழ் வலைப் பதிவுகளுக்கான பின்னூட்டக் கருவியாகவும் பயன்படுத்தப் படுவது இதன் சிறப்பான பயன்பாடாகும்.

உலகத்துச் செய்திகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரே முகப்பில் தரும் அவரது சுரதா.காம் இணையதளமும் இன்னொரு பயன்மிக்க தமிழ்ச்சுரங்கம்.

வலைப்பதிவுகளை சுரதா குடில் என்ற பெயரில் ஒருங்கிணைத்து வந்தார். அவை இப்போது புதிதாக யாழ்குடில் என்ற வலைவாசலில் மிளிர்கின்றன.

சுரதா என்ற தனிமனித சாதனைகள் இவை. இவற்றின் பின்னுள்ள உழைப்பும் தமிழார்வமும் போற்றப்பட வேண்டியவை.

அவரது முயற்சிகள் மற்றவர்களுக்கும் ஆர்வத்தை ஊட்டக்கூடியவை. அதன் சிறு துளியில் நானும் மூழ்கித் திளைக்கிறேன்.

நன்றி சுரதா...!

2005-05-20

520+ பதிவுகள்:-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை

520+ பதிவுகள்:
-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை
+ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!

தமிழ் வலைப்பதிவுகளில் என்னென்ன எழுதப்படுகின்றன?

தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு வலைப்பதிவுகள் கலவையாக உள்ளன. வலைப்பதிவு அடிப்படையிலும் பதிவுகளை வகைப்படுத்துவது அசாத்தியம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வலைப்பதிவிலும் தனித்தனி பதிவுகள் பலதரப்பட்ட விஷயங்களை முன்வைப்பவையாக உள்ளன.

பொதுவாக ஆராய்ந்தால் இலக்கியத்துக்கு வலைப்பதிவுகளில் குறிப்பிடத் தகுந்த வரவேற்பு இல்லையென்றே கூறலாம். எனவே படைப்பாக்க வலைப்பதிவுகள் இங்கு குறைவு.

நிகழ்வுகளை மையமாக்கி தன் எண்ணங்களை பதிவாக்கி வரும் முறையிலேயே பெரும்பாலான பதிவுகள் எழுதப்பட்ட போதிலும் பத்ரியின் வலைப்பதிவு போல தொடர்ந்து எழுதும் பதிவுகளும் குறைவே.

தொழில்நுட்ப சங்கதிகள், வலையுலக நுட்பங்கள், புதிய தளங்களை அறிமுகப் படுத்தும் வலைப் பதிவுகள் ஓரளவுக்கு உள்ளன.

பிற இணையதளங்கள், பத்திரிகைகளில் வெளியான விஷயங்களை மறுபிரசுரம் செய்யும் வலைப்பதிவுகள் உண்டு.

மத சம்பந்தமான கருத்துக்களை பிரச்சாரம்போலச் செய்யும் வலைப்பதிவுகள் உண்டு.

பழந்தமிழ் இலக்கியம் குறித்த பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சில பொதுவான வலைப்பதிவுகளில் இவை அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு.

பகுத்தறிவு, ஆரியம்-திராவிடம், தலித்தியம் சில பதிவுகளில் உண்டு. பல பதிவுகளில் பின்னூட்டமாகவும் இவை அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு.
புகைப்படம், அறிவியல் போன்றவை உண்டு.

பெண்கள் ஓரளவுக்கு வலைப்பதிகிறார்கள் என்றபோதும் பெண்ணியம் பேசும் வலைப்பதிவுகள் இல்லையென்றே கூறலாம்.

சினிமா நிறையப் பதிவுகளில் காணக்கிடைக்கும் விஷயமாக இருக்கிறது. தமிழ் சினிமா குறித்து மட்டுமல்லாமல் உலக சினிமா குறித்தும் தமிழில் வலைப்பதிகிறார்கள்.

வலைப்பதிவுகளில் சுவாரசியமான விஷயமாக இருப்பதும் எழுதப்படுவதும் அனுபவ அடிப்படையில் எழுதப்படும் பதிவுகள் தான். சுய வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் எழுதப்படும் நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எல்லோருக்கும் பிடித்த விஷயமாக இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் பதிவுகளின் தரம் குறித்த கேள்விகள் எழுந்த போதிலும் அது எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது. வலைப்பதிவுகள் என்ற சுதந்திரமான கருத்துக் களத்தில் யாரும் யாரையும் கட்டுப் படுத்தவும் முடியாது.

தமிழ்மணம் போன்ற கட்டமைப்புகள் வழியாகவரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு பொதுவான சில விதிமுறைகளும், நெறிமுறைகளும் இருக்கலாம். ஆனாலும் எழுத்து என்பது எழுதுகிறவர்களின் பொறுப்புணர்வால் மட்டுமே தரப்படுத்தப் படமுடியும்.

குறிப்பாக வலைப்பதிவுகளின் பின்னூட்டங்கள் பல சமயங்களில் தடம் மாறிச் சென்று விடுகின்றன. அனானிமஸ்களின் பின்னூட்டங்கள் பல சமயங்களில் முகம் சுழிக்க வைக்கின்றன.

சில விஷயங்களில் கருத்துக் கூறும்போது விஷயத்தின் முக்கியத்துவம் எழுதியவர் யாரென்று தெரிவதால் அடிபட்டுப் போய்விட வாய்ப்புண்டு. இத்தருணங்களில் அனானிமஸ் ஆக எழுதுவதில் தவறில்லை.

ஆனால் முகமூடியைச் சாக்காகப் பயன்படுத்தி தற்றவர்களை வசைபாடுவது, தரங்கெட்டு விமர்சிப்பது, தனிப்பட திட்டுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். எழுத்தை விட்டுவிட்டு எழுதியவரை வசைபாடும் போக்கு அநாகரிகமானது.

மற்றபடி தமிழ் வலைப்பதிவுகளின் நோக்கும் போக்கும்....

ம்! பரவாயில்லை...!

(ஆரம்பத்தில் சில பின்னுட்டங்களில் "பெயரிலி" என்று கண்டபோது அனானிமஸின் தமிழ்ப்படுத்தல் என்று தோன்றியது. பிறகுதான் அந்தப் பெயரில் ஒருவர் வலைப்பதிவதை அறிந்தேன். பின்னர் ஒருமுறை புதிய டெம்ப்லேட்டில் அனானிமஸ் என்பதைத் தமிழ்ப் படுத்த முயன்று சரியான சொல் தேடியபோதும் வலைப்பதிவுகளைப் பொறுத்தமட்டில் "பெயரிலி" என்பதே பொருத்தமானதாகத் தோன்றியது.ஆனால் பெயரிலி என்ற பெயரிலேயே ஒருவர் இருப்பதால் அனானிமஸ்ஸை பெயரிலியாகப் பெயர்ப்பதில் சிக்கல். பெயரிலி வேறு பெயர் சூட்டிக் கொண்டால் அனானிமஸ்ஸை பெயரிலி ஆக்கலாம்.

சரிதான்...அப்போது யாராவது பெயரிலி என்ற பெயரில் வேண்டாததை எழுதினால் இங்கே ரமணிக்கு டின்கட்ட அலைவார்கள். ஆகவே பெயரிலி கோபப்பட வேண்டாம். என் யோசனையை வாபஸ் செய்கிறேன்.)

2005-05-17

தட்டச்சும் தமிழும்

காசியின் பதிவில் விசைப்பலகைகள் குறித்த வாக்கெடுப்பில் குறைவானவர்களே பங்கேற்ற போதிலும் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் ரோமன் முறையை அதிகம் பேர் பயன்படுத்தி வருவது தெரிகிறது.

அஞ்சால், பொனட்டிக், ஒலியியல் என்று பல்வேறு செயலிகளில் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் பட்டாலும் அடிப்படையில் இது ஆங்கில எழுத்துருவின் உச்சரிப்பு அடிப்படையில் தட்டி தமிழில் பெறும் முறைதான்.

எந்தச் செயலியிலும் நேரடியாக தமிழில் எழுத பயன்படும் எ-கலப்பை அதிகமானவர்களால் பயன்படுத்தப் படுகிறது. அதன் முதன்மைப் பதிப்பில் இந்த அஞ்சால் முறைதான் பயன்படுத்தப் பட்டுள்ளது. (பாமினி மற்றும் தமிழ்99 முறைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.)

எளிமையான தமிழ் கருவிகள் உருவாக்கும் சுரதாயாழ்வாணனின் தமிழ் எழுதியிலும் ரோமன் தட்டச்சு முறைதான் இருந்தது. (பின்னர் அவர் பாமினி இணைத்து வெளியிட்டார்) இது போன்ற காரணங்களால் ரோமன் முறையை அதிகம்பேர் பயன்படுத்த வாய்ப்பாக இருந்தது.

இணையத் தமிழுக்கு ஈழத்தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இலங்கையிலும் பிற தென்கிழக்காசிய நாடுகளிலும் புழக்கத்தில் இருந்த தமிழ் தட்டெழுத்து முறையான பாமினியும் பலரால் பயன்படுத்தப் பட்டது.

தமிழக தட்டச்சுப் பயிற்சிநிலையங்களில் கற்பிக்கப் பட்ட தட்டெழுத்து முறையையும் பலர் பயன்படுத்த விரும்பினர். ஆனால் அதற்கான செயலிகள் இல்லாததால் அதன் சதவீதம் குறைவாகவே உள்ளது. குறள் செயலியில் இம்முறை இருந்த போதிலும் அதை அறிந்து பயன்படுத்துவோர் குறைவுதான். பலரின் வேண்டுகோளை அடுத்து எ-கலப்பை தட்டச்சு முறையில் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்99 என்பது உலகக் கணித்தமிழ் மாநாட்டில் கணித்தமிழ் அறிஞர்களால் தமிழில் அதுகாறும் புழங்கி வந்த எல்லா விசைப் பலகை முறைகளையும் ஒப்பு நோக்கி விவாதித்து இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட எளிமையான முறை. அதையே தமிழக அரசு அங்கீகரித்து வெளியிட்டது. இம்முறையும் ஓரளவு பயன்படுத்தப் படுகிறது.

மயிலை. நளினம், தமிழம் போன்ற சில புதிய, பழைய முறைகளும் குறைந்த அளவில் புழக்கத்தில் உள்ளன.

இன்று நிறையப்பேர் ரோமன் முறையைப் பயன்படுத்தினாலும் அவசரத்துக்கு உதவுமேயல்லாமல் அதை தமிழ் தட்டச்சு முறையாக நிரந்தரமாக ஏற்பதில் எல்லோருக்குமே தயக்கமிருக்கிறது.. பாமினியையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பயன்படுத்தினாலும் அது தட்டச்சு முறை என்பதால் அதை முறையாகக் கற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

காலப்போக்கில் தட்டச்சுப் பயிற்சி நிலையங்கள் இல்லாது போகும் நிலையில் பாமினி உட்பட எல்லா தட்டச்சு(ப்பொறி) சார்ந்த முறைகளும் பயனற்றுப் போகும்.

அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம். நமக்காக இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு கணித்தமிழ் எழுதுமுறையாக அனைவரும் ஏற்கக் கூடிய எளிய ஒருஎழுதுமுறை கண்டிப்பாக அங்கீகரிக்கப் படவேண்டும். அது தமிழ்99 ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் நான் கூறிவரும் காரணங்களால் பிற முறைகள் பயனற்றுப்போகும் நிலைகுறித்து யாரேனும் சிந்தித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

வெறுமனே நாம் விரும்பும் முறைக்கு எதிரானவர்.இவர் என்று முத்திரை குத்தி ஒதுக்கி/ஒதுங்கி விடாமல் விவாதத்தில் பங்கெடுங்கள். ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர் இது.

தனிநபர்களை முன்வைத்தல்ல. சமூகத்தை முன்வைத்து, எதிர்கால தமிழ் தலைமுறையை முன்வைத்து கணித்தமிழுக்கு அவசியமான விவாதம் இது.

யூனிகோடில் பன்மொழி.

என் முந்தைய கட்டுரையொன்றில் கூறியபடி யூனிகோடுக்கான தமிழ் உள்ளீட்டைச் செய்தவர்கள்/ செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததும் கணித்தமிழ் அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டதுமான திஸ்கி அடிப்படையிலோ, உலகக் கணித்தமிழ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட டாப் முறையிலோ அமைக்காமல் வேறொரு முறையில் தமிழ் எழுத்துக்குறியீட்டு முறைகளை அமைத்து விட்டார்கள்.

மேற்கண்ட முறைகள் தமிழ் இலக்கண கணித முறைகளில் அமைக்கப் பட்டிருந்தன. இப்போதைய முறையில் சில அடிப்படை இணைவுப் பிழைகள் இருப்பதாக சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆயினும் இன்றைய தொழில்நுட்ப மேம்பாடுகளால் பிழைகளை நிவர்த்தி செய்து சரியான வெளிப்பாடுகளை யூனிகோடில் செயல்படுத்த முடிகிறது. தமிழிலேயே இணையத்தில் தேடவும் முடிகிறது. தனித்தனி எழுத்துருக்களின் தேவையின்றியே வலைத்தளங்களை வாசிக்க முடிகிறது.

இவையல்லாமல் யூனிகோடின் தனிச்சிறப்பாகக் கருதப்படுவது ஒரே எழுத்துருவில் பல மொழிகளின் எழுத்து வடிவங்களைப் பெற முடியும் என்பது. இது கணினி மொழியியலின் மிகப்பெரிய/மிகச்சிறந்த வசதியாகும்.

தமிழில் நாம் காணும் யூனிகோடு எழுத்துருக்கனில் TSCu_InaiMathi, TheneeUniTx ,Latha, aAvarangal, Arial Unicode MS போன்றவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

திஸ்கி குறியீட்டில் அமைந்த எழுத்துருக்கள் பலவும் TSCu அடைமொழியுடன் யூனிகோடாக மாற்றப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ் இயங்குதளத்துடன் இணைத்து வழங்கியதால் 'லதா' எழுத்துரு அதிக பயன்பாட்டைப் பெற்றுள்ளது. உமர்த்தம்பியால் உருவாக்கப் பட்ட TheneeUniTx தமிழ் இணையதளங்களுக்குப் பொதுவான இயங்கு எழுத்துருவாகவும் பயன்படுவதால் இன்று பெரும்பாலான வலைப்திவுகளிலும் சில இணையத் தளங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. இணையத்தில் யூனிகோடில் கிடைத்த முதல் தனி எழுத்துருவான சின்னத்துரை சிறீவாஸின் aAvarangal இன்னமும் பலரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

Latha எழுத்துரு முழுவதும் தமிழ் குறியீட்டை மட்டுமே கொண்டது. பிற எழுத்துருக்கள் வழமை போல ஆங்கிலமும் தமிழும் இணைந்தவை.
பன்மொழிக் குறியீடுகளுக்கான வசதியை மேற்கொண்ட எழுத்துருக்களில் Arial Unicode MS மட்டுமே முழுமையாகக் கொண்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அலுவலகப் பயன்பாட்டுத் தொகுப்பான MS Office தொகுப்புடன் வழங்கப் படுகிறது.

இதில் (ஒரே எழுத்துருவில்) தமிழ், ஆங்கிலம் மற்றும் Greek, Cyrillic, Armenian, Hebrew, Arabic, Devanagri, Gurmukhi, Gujarati, Kannada, Thai, Lao, Tibetan, Georgian, Korean, Japanese, Chinese ஆகிய மொழிகளும் சின்னங்கள், வணிக, கணிதக் குறியீடுகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. பெங்காலி, ஒரிய, தெலுங்கு, மலையாள மொழிகளில் சில குறியீடுகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துரு பன்மொழி ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு சிறப்பாகப் பயன்படக் கூடியது.

இவை தவிர மத்திய அரசின் சிடாக் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள தமிழ் செயலிகள் அடஙகிய குறுவட்டில் நிறைய யூனிகோட் எழுத்துருக்கள் இருப்பதாக தெரிகிறது. அவற்றின் அமைப்பு பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

(அதுசரி... குறுவட்டுகள் இலவசமாக வெளியிடப்படுவதாகவும் தேவைப்படுவோருக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கப்படும் எனவும் ஒரு வாரத்தில் அவை வந்து சேரும் என்றும் வெளியீட்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டிருந்ததே. பதிவு செய்தவர்களில் யாருக்காவது அப்படி வந்து சேர்ந்ததாக தகவல் உண்டா? அல்லது வெறும் மேடைப்பேச்சுத்தானா?

* * *

இங்கே ஒரு பாட்டு கேட்டு போங்களேன்

2005-05-16

இடைத்தேர்தல்

இடைத்தேர்தலில் அதிமுக வென்றிருக்கிறது. திமுகவின் மெகா கூட்டணியை மீறி, சங்கராச்சாரியார் பக்தர்களின் கோபத்தை மீறி, பிஜேபியின் ரகசிய லாபியை மீறி, தனித்தே நின்ற அதிமுகவுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியது எது?

திமுகவின் கூட்டணித் தலைவர்களெல்லாம் இதை அதிமுகவின் பணபலமும், கள்ள ஓட்டுக்களும், அதிகார துஷ்பிரயோகமும் தந்த அநியாய வெற்றி என்று வர்ணித்துள்ளனர்.

இந்தத் தேர்தலின் கதாநாயகரான ராவ் என்ற தேர்தல் பார்வையாளரின் பார்வையில் இரு தரப்புமே முடிந்தவரை அதிகார அநியாய அரசியலைத்தான் நடத்தியுள்ளன. அதை முடிந்தவரை அவரும் முறியடித்துத் தான் இந்தத் தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

அவரை மீறிக்கொண்டு அதிமுகவினர் போட்ட கள்ள ஓட்டுக்கள் அதிகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சுய உதவிக் குழுக்களின் மூலமாக ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று நோட்டுக்கள் கைமாறியுள்ள போதிலும் விலைக்கு வாங்க முடியாத சிலவும் உண்டு.

அதிலொன்று ஜாதி,மத அபிமானம்.
இம்முறை அது சற்றே முரண்பட்ட திசையில் பயணித்திருக்கிறது.

சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாருக்கு இருந்த அகில இந்திய செல்வாக்கின் அடிப்படையில் பார்த்தால் ஜெ மண்ணைக் கவ்வியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அது நேர்மாறானது என்ற ஜெயலலிதாவின் கணிப்பு உண்மையாகியிருக்கிறது. கொல்லப்பட்ட சங்கரராமனின் மீதான ஆதரவு ஜெவின் வெற்றியாக வந்து விழுந்திருக்கிறது.

தமிழ்நாடு ஓட்டல் விவகாரம், ஜெயலலிதா-சங்கராச்சாரியார் மோதல் குறித்த தகவல்கள் எந்தளவு நம்பப் படுகிறதோ அதே அளவுக்கு சங்கரராமன் கொலையில் சங்கராச்சாரியார்களின் பங்களிப்பும் மடத்தில் பெண்தொடர்புகள் குறித்த கதைகளும் நம்பப் படுகின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. முதல் விவகாரத்தின் விளைவுதான் சங்கராச்சாரியார்கள் கைது செய்யப்பட்டதும் குண்டர்சட்டம், கஞ்சா வழக்கு என வழக்குகள் போடப்படுவதுமான நிகழ்வுகளுக்கான அடிப்படை. ஆனால் அதற்கான வழியையும் காரணத்தையும் அளித்தது இரண்டாவதாகக் கூறப்பட்ட நிகழ்வுதான்.

ஊழல் வழக்குகளில் ஜெயலலிதாவின் பங்குகள் வெளிப்படையானவை. ஆனாலும் ஒவ்வொரு வழக்கும் நீர்த்துப் போய் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுவிக்கப் பட்டதை நாம் கண்டுள்ளோம்.

சங்கராச்சாரியார் மீதான வழக்குகளும் அதே பாதையில் தான் பயணிக்கின்றன. ஒன்று ஊழல் வழக்கு. மற்றது கொலை வழக்கு. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தீர்ப்புகளும் செல்வாக்குள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும் மற்றவர்களுக்கு மற்றொரு விதமாகவும் செயல்படுகிற காலமிது.

அதே சமயம் ஒவ்வொன்றையும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென இன்று அரசியல்வாதிகள் முழங்குவதன் பொருள் அர்த்தப்படுத்துவது என்ன? தன் ஆட்சிக்காலத்தில் மெகா ஊழல்புரிந்து ஆடம்பரத்தில் ஊறித்திளைத்த ஜெயலலிதா அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வினார். அதற்கடுத்த தேர்தலில் தண்டனைக்காலம் முடிந்தது என மக்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்தனர்.

இன்று செல்வாக்கு மிக்க சங்கராச்சாரியார் கொலையே செய்தாலும் கைது செய்தது தவறு என மேடைபோட்டு முழங்கிய தேசியத்தலைவர்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக அந்தக் கைதைக் கண்டித்த திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டனர்.

மக்களின் மனநிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் காரணங்கள் தேடி சாக்குப் போக்குக் கூறிக்கொண்டிராமல் ஆக வேண்டியதைப் பாருங்கைய்யா!

2005-05-11

தமிழ் விசைப்பலகைகள்

(நண்பர் காசியின் பதிவில் வாக்கெடுப்பு!)

1.
ஒரு இணையப் பக்கத்தையோ அறிக்கையையோ படிவத்தையோ கணினியில் வடிவமைக்கும்போது விதவிதமான எழுத்துருக்கள் கொண்டு வடிவமைத்தால் அதன் அமைப்பில் அழகு, கவர்ச்சி ஏற்படுகின்றன. அச்சுத்தொழிலுக்கும் இது மிகவும் அவசியமானது. இதற்காகவே விதவிதமான வடிவங்களில் கணினி எழுத்துருக்கள் ஆக்கப் படுகின்றன.

ஆங்கிலத்தில் எழுத்துருக்கள் என்றால் அவை வேறுபடுவது அதன் வெளித்தோற்ற வடிவங்களில்தான். ஆனால் தமிழில் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்கள் என்றவுடன் அதன் வடிவங்களில் மட்டுமல்லாமல் அதன் தகவமமைப்பிலும் வேறுபாடுகள் இருந்தன. ஆரம்பக்காலத்தில் அவரவர் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு தகவமைப்பில் இருந்தன. இதனால் ஒரு தகவமைப்பில் உருவான எழுத்துருவில் ஆக்கப்பட்ட வலைப்பக்கங்களை மற்றொரு எழுத்துரு கொண்டு வாசிக்க இயலாததாக இருந்தது. இதனால் ஒவ்வொரு செயலியும் தனித்தனி எழுத்துருக்களைக் கொண்டிருந்தன. ஒன்று மற்றொன்றோடு இணைந்து இயங்க இயலவில்லை.

இந்நிலை மாற முயற்சியெடுத்து கணித்தமிழ் அறிஞர்களால் திஸ்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பரவலாக பல தளங்களிலும் செயலிகளிலும் பயன்பாட்டுக்கு வந்தது. இதன்பிறகு கணித்தமிழ் மாநாட்டில் தமிழக அரசால் தரப்படுத்தப்பட்ட டாம்/டாப் எழுத்துருக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை தமிழகத்துக்கு வெளியே பெரிய வரவேற்புப் பெறவில்லை என்றாலும் இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்தி பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன.

இதற்கிடையில் உலகளாவிய பொதுமைப் படுத்தப்பட்ட எழுத்துருக்கள் பற்றிய கருத்தாக்கம் வலுப்பெற்றிருந்தது. ஒரே எழுத்துருவில் பல மொழிகளையும் கொண்ட இந்த யூனிகோடு எழுத்துருக்கள் பற்றி ஆரம்பத்தில் கணித்தமிழ் அறிஞர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் யூனிகோடில் தமிழை உள்ளீடு செய்யும் வாய்ப்புப் பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்த திஸ்கியிலோ டாப் முறையிலோ அல்லாமல் வேறொரு முறையில் அமைத்து விட்டனர்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தமிழ் எழுதுமுறைக்கு பாதகம் ஏதும் இல்லை என்றாலும் தமிழ் இலக்கண முறைப்படி சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கணித்தமிழ் அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். எவ்வாறிருப்பினும் யூனிகோடு வருகையால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.

வலைத்தளங்கள் பெரும்பாலும் யூனிகோடுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. யூனிகோடு முறையில்தான் புதிய செயலிகள் ஆக்கப் படுகின்றன. வலைப்பதிவுகள் 100% யூனிகோடுக்கு மாறிவிட்டன. மின்னஞ்சல்குழுக்களும் யூனிகோடில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இனி யூனிகோடின் ராச்சியம்தான். எல்லோரும் யூனிகோடு பாவிப்பதால் கணித்தமிழின் எல்லா முன்னேற்றங்களும் எல்லா கணினி பாவனையாளர்களையும் சென்றடைய வாய்ப்புள்ளது.

2.
எழுத்துருக்கள், விசைப்பலகை முறைகள், தட்டச்சுச் செயலிகள் ஆகியவற்றின் இடையில் பலருக்கும் சில குழப்பங்கள் இருக்கின்றன. உதாரணமாக சுரதாவின் செயலியைப் பின்பற்றி தமிழ் எழுதுகருவி உருவாக்கியுள்ள ஒரு நண்பர் ரோமன் தட்டச்சு முறையை திஸ்கி என்று குறிப்பிட்டுள்ளார். திஸ்கி எழுத்துருக்களைப் பயன்படுத்துவோர்களில் பெரும்பாலானோர் ரோமன் தட்டச்சு முறையில் தட்டச்சுகின்றனர் என்பதைத் தவிர இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது திஸ்கி என்பது எழுத்துரு அமைப்பு. ரோமன் என்பது தட்டச்சு முறை. அதுபோலவே யூனிகோடு என்று தட்டச்சு முறை கிடையாது. யூனிகோடு எழுத்துரு அமைப்பை பல்வேறு செயலிகளின் உதவியால் ரோமன், பாமினி, தட்டச்சு, தமிழ்99 போன்ற தட்டச்சு முறைகளில் எழுதலாம்.

திஸ்கி ஆதரவாளர்கள் டாம்/டாப் எழுத்துருக்கள் மீது வெறுப்புக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது. இதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் அதே வெறுப்பு தமிழ்99 விசைப்பலகை முறை மீதும் இருப்பது புரிந்து கொள்ள முடியாதது.

டாம்/டாப் எழுத்துருக்களும் தமிழ்99 விசைப்பலகையும் ஒரே சமயத்தில் வெளியிடப் பட்டவை; தமிழக அரசால் தரப்படுத்தப் பட்டவை என்பது தவிர இரண்டும் பயன்பாடுகளில் வெவ்வேறானவை.

யூனிகோடின் வருகைக்குப் பின் டாம்/டாப் எழுத்துருக்களின் தேவையே இல்லை. திஸ்கியும் கூட காலப்போக்கில் வழக்கொழிந்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அதே சமயம் யூனிகோடில் தமிழின் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

3.
முரசு, எ-கலப்பை, குறள் செயலி என்பவை தமிழை கணினியில் எழுத உதவும் கருவிகள்.

முரசு ஒரு இணைய செயலி. பல உள்ளமைந்த எழுத்துருக்களைக் கொண்டது. வேறுபட்ட எழுத்துருக்களைக் கொண்ட பல இணைய தளங்களை இவற்றின் உதவியால் வாசிக்க முடியும். முரசு அஞ்சல் (Murasu Anjal 2000-second edition-version 9.5.2) உதவியால் Anjal keyboard, Tamil99 keyboard, TamilNet97 keyboard, Mylai keyboard, New Typewriter keyboard, Old Typewriter keyboard, Anjal Indic keyboard, Murasu-6 keyboard ஆகிய 8 தட்டச்சு முறைகள் மூலம் கணினியில் தட்டச்சு செய்ய முடியும். ஆனால் குறிப்பிட்ட சில text-editor களில் மட்டுமே இதன்மூலம் தட்டச்சு செய்ய முடியும்.

எ-கலப்பை என்பது முரசுவைப்போல முழுமையான செயலி அல்ல. அது விசைப்பலகைக்கான driver எனப்படும் இயக்கி. இதைப்பயன்படுத்தி எல்லா வகையான செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்ய முடியும். இதன் மூலம் பல தட்டச்சு முறைகளில் தட்டச்ச முடியும் என்றாலும், தேவையான தட்டச்சு முறையில் அமைந்த e-kalappai driver-ஐ தனித்தனியாக பதிவிறக்கிக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு அஞ்சால், பாமினி, தமிழ்99 விசைப்பலகை முறைகள் உள்ளன. விரைவில் தட்டச்சு விசைப்பலகை முறையில் எ-கலப்பை வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

குறள் செயலியும் பல பயன்பாடுகள் இணைந்த செயலி. இதன் புதிய பதிப்பில் தமிழ் குரல் வழி வாசிப்பானும் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. குறள் செயலி மூலம் ஒலியியல்(ரோமன்), தமிழ்99, புதிய தட்டச்சு, பழைய தட்டச்சு ஆகிய 4 முறைகளில் பிற செயலிகளில் தட்டச்ச முடியும்.

இவை தவிர வலைப்பதிவுகளில் அதிகமாகப் பயன்படும் ஒன்று சுரதாவின் செயலி. இதில் ரோமன் எனப்படும் ஒலியியல் முறையும் பழைய தட்டச்சு முறைகளில் ஒன்றான பாமினியும் தட்டச்ச பயன்படுத்தப் படுகின்றன.

4.
தட்டச்சும் கருவி எதுவாக இருப்பினும் தட்டச்ச நமக்கு வசதியான முறையைத் தேர்ந்து கொள்ள முடியும். அந்த முறை எது என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

தட்டச்சுக் கருவியில் தட்டச்சு செய்யப் பயின்றவர்களுக்கு வேகமாகத் தட்டச்ச முடியும். அவர்களுக்காக தட்டச்சு விசைப்பலகை அமைப்புத் தேவை. புதிதாகக் கற்றவர்களுக்கு புதிய தட்டச்சு முறையும் பழையவர்களுக்கு பழைய தட்டச்சு முறையோ பாமினியோ தேவை. பாமினி பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. அதிகமாகப் பயன்படுத்தப் படும் எ-கலப்பையில் புதிய தட்டச்சு முறை இதுவரை வெளியிடப்படாததால் தட்டச்சுப் பயின்றவர்களும் வேறுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

தட்டச்சுக் கற்காதவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பிலேயே தமிழில் எழுதும் ரோமன் முறை பயன்படுகிறது. (உதாரணம்: ammaa= அம்மா, thamizh= தமிழ்) இது அஞ்சல், பொனட்டிக், ஒலியியல் என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. இதையே அதிகம் பேர் (தட்டச்சுக் கற்றவர்களும்!) கணித்தமிழ் எழுதப் பயன்படுத்துகின்றனர்.

புதிதாகக் கணினியிலேயே தமிழை தட்டச்ச கற்பவர்களுக்கு தமிழ்99 முறை எளிமையானது. 'shift' பயன்படுத்தாமலேயே நேரடியாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் எழுத முடியும் என்பதே இதன் சிறப்பம்சம். ஸஷஜஹக்ஷஸ்ரீ ஆகிய எழுத்துக்களுக்காக மட்டுமே 'shift' பயன்படுத்த வேண்டும். இம்முறை எளிமையானதாக இருந்தாலும் பரவலான கவனிப்புப் பெறவில்லை. இதற்கு மேற்கூறிய ஒருவகை வெறுப்பும் காரணம்.

தட்டச்சு முறைகளிடையே உதாரணமாகச் சில வேறுபாடுகள்:

ரோமன்- asdfg=அச்ட்fக், ழ=zha (இசட்+எச்+எ=ழ)
தமிழ்99- asdfg=அஇஉஃஎ, ழ=/ ('பார்' குறியீடு=ழ)
பாமினி- asdfg=யளனகப, ழ=o (சிறிய 'ஓ'=ழ)
தட்டச்சு- asdfg=யளனகப, ழ=H (பெரிய 'எச்'=ழ)

பாமினி மற்றும் தட்டச்சு முறைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லையென்றாலும் ழ,ஹ மற்றும் இன்னும் சில எழுத்துக்கள் மாறுபட்டுள்ளன.

5.
பாமினி போன்ற பழைய தட்டச்சு முறைகள் ஒருகட்டத்தில் வழக்கொழிந்து விடும். அலுவலகங்கள் எல்லாம் கணினிமயமாக்கப் பட்டு வருவதால் இப்போதே தட்டச்சுப் பயிற்சி நிலையங்களும் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் புதிய தட்டச்சு முறையும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் பயன்பாட்டில் இருக்கும்.

அதன்பிறகு தமிழுக்கென்று உள்ளீட்டு முறையாக எது மீதமிருக்கும்? நிரந்தரமாக ஆங்கில ஒலியியல் விசைப்பலகையை தமிழ் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது தமிழ்99 போன்ற எளிமையான தட்டச்சு முறை ஏற்கப்படுமா? அதுவுமல்லாது புதிதாக இன்னொன்றை எதிர்நோக்கி காத்திருப்பதா?

2005-04-27

புகைக்காத ரஜினி

பத்திரிகைகளின் விமர்சனத்தை அல்ல பிரபாகரனின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் என்று ரஜினிராம்கி எழுதப்போக அவரது வலைப்பதிவின் பின்னூட்டங்கள் எகிறிவிட்டன. கடைசியில் பாபாவை புலிகள் தடை செய்யவில்லை; பாய்ஸ் மட்டுமே தடை செய்யப்பட்டது என்று சாரம். ஆனால் புலிகள் சந்திரமுகியைத் தடை செய்தால் இணையத்திலிருந்து சந்திரமுகிக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற ராம்கியின் கனவும் பலிக்கவில்லை.(முதலிலேயே உள்நாட்டு உரிமையையும் வழங்காமல் வெளிநாட்டு உரிமையை மட்டும் வழங்கிவிட்டு குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்?)

விமர்சனங்கள், தணிக்கைகள், எதிர்ப்புகள் குறித்து சிந்திக்கும்போது பாபாவுக்கு எதிராக பாமக போராட்டங்கள் செய்திராவிட்டாலும் கூட பாபா ஓடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. பொதுவாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான திரைப்பட ரசிகர்களுக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும். இந்தப் பிடிக்கும் என்பதில் நல்ல படத்துக்கான ரசனை என்பதல்ல.

ஒவ்வொரு மனிதருள்ளும் குழந்தைத்தனம் ஒன்று ஒளிந்திருக்கும். பொதுவாக அது தனிமையில் (வேறு பெரியவர்கள் இல்லாமல்) சிறு குழந்தைகளோடு விளையாடும் தருணங்களில் வெளிப்படும். அடுத்தபடியாக ரஜினி படங்களைப் பார்க்கும் போது.

பெரியவர்களே இப்படியென்றால் சிறியவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும். ரஜினியின் மேனரிசங்கள் அவர்களை குஷிப்படுத்துவதில் அதிசயமில்லை. கூடவே சமீப காலமாக ரஜினியே நகைச்சுவை நடிகராகவும் அவதாரமெடுக்கும் போது பொழுதுபோக்கிற்கும் (சிந்தனையைக் கழற்றி வைத்து விட்டு ரிலாக்சாகப் பார்க்கும்) ரசனைக்கும் வேறென்ன வேண்டும்.

இந்தநிலையில் வந்த பாபா அதன் தெய்வீக? அம்சங்களால் வழக்கமான ரஜினியிசத்தை இழந்தது. ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்காத இந்த மாற்றம் பாபாவின் தோல்வியை உறுதி செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் பாமகவின் போராட்டம் வேறு சேர்ந்து கொள்ள, ரஜினி ரசிகர்களுக்கு தர்மசங்கடம் தவிர்க்கப்பட்டது.

நடிகர்களின் மேனரிசங்களை ரசிக்கும் இளைய தலைமுறை குறிப்பாக 10 வயதிற்குக் கீழுள்ள பையன்ஸ் மத்தியில் பீடி, சிகரெட், சுருட்டு ஊதி வளையம் வளையமாகப் புகைவிடும் ஹீரோக்கள் மாஜீசியன்களாகக் காட்சியளிப்பதில் வியப்பில்லை. அதை அவர்களும் செய்து பார்க்க விரும்புவார்கள் என்பதிலும் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதை யாராவது கடிதமாக எழுதியிருந்தாலோ, பத்திரிகையில் கட்டுரையாகவே எழுதியிருந்தாலும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போயிருப்பார்கள். அரசியல் வாதிகளால் எழுப்ப்பட்டதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. சந்திரமுகியில் ரஜினி இவற்றை முற்றிலும் தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது. நடிகர் விஜய்யும் இனி தன் படங்களில் மது, புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என்று தெரிவித்திருக்கிறார். (இவரும் பையன்ஸ்களின் பெட்.)

அதிகமான தமிங்கிலீஷுக்கு ஸாரி....

2005-04-24

மணிச்சித்திரமுகி

இந்த வாரம் முழுவதும் வலைப்பதிவுகளில் முக்கிய இடம்பிடித்தது சந்திரமுகி. இணையத்தில் பதிவிறக்க வாய்ப்பில்லாததாலும் திருட்டு விசிடியில் பார்க்கும் வழக்கமில்லாததாலும் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜெயா டிவியில் (தான்) போடும்போது பார்த்துக் கொள்ளலாம். அல்லது அதற்கு முன்னதாக உள்ளூர் கேபிளில் (அதுவும் திருட்டு விசிடி தான்) போட்டால் பார்க்கலாம்.

ஏப்ரல் 14 அன்று ஜெயாவில் சந்திரமுகி கண்ணோட்டம் முடியும் நேரம் தான் பார்க்கமுடிந்தது. சன்னில் திரைவிமர்சனம் பார்த்ததில் சந்திரமுகி பாடல்கள் மணிச்சித்திரத்தாழ் பாடல்களோடு ஒப்பிட, போதாது என்று தான் தோன்றுகிறது.

ரஜினி படத்துக்கு இவை நல்ல பாடல்கள் தான். இன்றைய ஹிட் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும். ரஜினி ரசிகர்கள் மனதில் அடுத்த ரஜினி படம் வரும் வரை நிற்கும். தொழில்நுட்ப ரீதியில் கூட மேம்பட்டு இருக்கலாம். ஆனால் பத்தாண்டுகளுக்கும் மேலாக நினைவில் நிற்கும், மனதை ஏதோ செய்யும் இளையராஜாவின் மணிச்சித்திரத்தாழுக்கு முன் சந்திரமுகி திரையரங்குகளில் இருக்கும் வரையேயான ஆயுள் கொண்ட வித்யாசாகரின் இசை ஒரு படி கீழேதான்.

மலையாளப் படத்தில் சுரேஷ்கோபி (தமிழில் பிரபு செய்துள்ள வேடம்) முறைப்பெண்ணாக வரும் வினயாபிரசாத்துக்குத் தான் மனநோய் என்று முடிவுகட்டி அவரைக் குணப்படுத்த குடும்ப நண்பரான மனநல நிபுணர் மோகன்லாலை அழைக்கிறார். மனநோய் அவருக்கல்ல சுரேஷ்கோபியின் மனைவியாக வரும் ஷோபனாவுக்குத்தான் என்று கண்டறிந்து......படத்தின் முடிவில் வினயாவைத்தான் மோகன்லாலின் ஜோடியாக காட்டுகிறார்கள்.

தமிழில் பிரபுவுக்கு முறைப்பெண்ணாக மாளவிகா வருவதாக விமர்சனங்களில் பார்த்தேன். இங்கே ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா. அவரும் டாக்டர்தான் என்று ஏதோ ஒரு விமர்சனத்தில் காட்டினார்கள்?
சன்டிவி திரை விமர்சனத்தில் பார்த்தால் நயன்தாரா பாட்டு டீச்சர் மாதிரி
தெரிகிறது. உண்மையில் துர்கா யார்? வலைப்பதிவுகளில் விமர்சனம் எழுதிய
ஏராளமானவர்களில் யாரும் இதைப் பற்றிக் குறிப்பிடக் காணோம்!

மணிச்சித்திரத்தாழுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து பாசில் எடுத்த விஸ்மயகும்பத்து என்ற படத்தில் 'கோமா நிலையில் பூட்டிய வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணின் ஆன்மா தனக்கு உதவக்கூடிய ஒருவரைத்தேடி அலைகிறது. இறுதியில் ஏழாவது அறிவுகொண்ட மோகன்லால் கதாபாத்திரத்தின் உதவியால் அவள் தன் பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறாள். இந்த அனுமாஷ்யமான பெண்ணின் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நயன்தாரா'. இதனாலேயே அவர் துர்கா கதாபாத்திரத்திற்காகத் தேர்வு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

படம் வந்த பிறகான விமர்சனங்கள் வாயிலாக ரஜினிக்கேற்றபடி ஒருசில
காட்சிகளையும் சில கதாபாத்திரங்களையும் மட்டும் மாற்றிவிட்டு
மணிச்சித்திரத்தாழை அப்பட்டமாகக் காப்பியடித்த படம் என்று தெரிகிறது.
பிரதான கதாபாத்திரமான கங்கா பெயர் கூட மாறவில்லை.

அப்புறம் ஜோதிகாவின் நடிப்பை எல்லோரும் ஒருமனதாகப் பாராட்டியுள்ளனர். ஷோபனாவுக்கு தேசிய விருது வாங்கித்தந்த வேடமாச்சே. படத்தின் மற்ற விடயங்களை படம் பார்க்காததால் ஒப்பிட முடியவில்லை.

இயக்குநர் பாசில் இந்தப் படத்திற்காக என்னென்ன ஆராய்ச்சிகள் செய்தார்; எத்தனை ஆண்டுகள் உழைத்தார், என்று அப்போது வெளிவந்த (மலையாளப்) பேட்டிகளைப் பார்த்தால் தெரியும். அவரிடம் முன்பு உதவி இயக்குநர்களாக இருந்த சித்திக், லால், மது உட்பட பல பிரபல இயக்குநர்கள் இதில் பாசிலுக்கு உதவியிருக்கிறார்கள். அத்தனை பேரின் உழைப்பையும் சுரண்டிவிட்டு இது என்னுடைய சொந்தக் கதை என்று கூசாமல் சொல்கிறார் பி.வாசு. இதனால்தான் பாசில் வழக்குத் தொடரப் போவதாக நோட்டீஸ் அனுப்பினார். பெரிய இயக்குநரான பாசில் இப்படிச் செய்யலாமா? என்று வாசு அங்கலாய்க்கிறார். 12 வருடங்களுக்கு முன்வந்த படத்தைச் சொல்லி காசு கேட்கிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார். இவரைப்போல அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் உருவி படம் பண்ணுகிறவர்களுக்கு கதைகளுக்காக ஆராய்ச்சி செய்வதும் சிற்பியின் லாவகத்துடன் செதுக்கிச் செதுக்கி உருவாக்கும் திரைக்கதைகளும் புதிதாகத்தானிருக்கும்.

சந்திரமுகி மட்டும் பார்த்தவர்கள் இந்தப் பாடல்களை (இதுவரை கேட்காவர்கள்) ஒவ்வொன்றும் குறைந்தது மூன்றுமுறை கேட்டுவிட்டு கீழே பின்னூட்டமிடவும்...

ஒருமுறை வந்து பார்த்தாயா

பழந்தமிழ்ப் பாட்டிழையும்

வருவாயென் றானதும்

2005-04-23

தமி(ழ)ழா!

இந்திய அரசு சார்பில் சிடாக் வெளியிட்டுள்ள தமிழ் குறுவட்டு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இணைய வேகக்குறைவால் பதிவிறக்குவதிலும் சிக்கல். சிடிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அதைப் பார்த்தபின் கருத்துச் சொல்லலாம் என்று இருந்தேன். இதற்குள்ளாக இதைச் சொல்லி வலைப்பதிவுகளில் தீவிர வாக்குவாதங்கள் வேறு நடைபெற்று வருகின்றன. பத்ரி மற்றும் மதியின் பதிவுகளின் பின்னூட்டத்தில் முகுந்தும் ஜெயராதாவும் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொள்வதையும் பார்க்கமுடிகிறது. இதில் எனக்குச் சில சந்தேகங்கள் எழுகின்றன.


பத்ரியின் பதிவில் ஜெயராதா எழுதியது இது


//ஃபையர் ஃபாக்ஸ் பொருத்தவரை பதிவு செய்தது. மேலாண்மை பொருப்பு மற்றும் ·பையர் ஃபாக்ஸ் cvs க்கு விண்ணப்பித்தது எல்லாம் அடியேன் தான். அதுவும் ஃபையர் பாக்ஸைமுழுவதும் முடித்து அந்நிறுவனத்திற்கு அனுப்பி அதன் அடுத்த பதிப்பில் தமிழ் ஆதரவு என்ற நற்செய்தியை எதிர்பார்த்து காத்திக்கும் சமயத்தில், தமிழா குழு மொசில்லாவில் ஒரு சின்ன ஒட்டு போட்டு ஃபையர் ஃபாக்ஸை தான் முடித்ததாக அறிவித்தது.....//


பத்ரியின் பதிவில் முகுந்த் எழுதியது இது


//தாங்கள் பயர்பாக்ஸ் இல் வேலை செய்வதாக எழுதிய மடல்கள் எல்லாமே. 18 பிப்ரவரி 2005 அன்று தமிழ் பயர்பாக்ஸ் பொதியை நாங்கள் வெளியிட்டு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தப் பிறகுதான் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீரா?//


மேற்கண்டவைகளை வாசித்தால் தமிழ் பயர்பாக்ஸ் வேலையை இருவருமே (தனித்தனியாக) செய்து முடித்து விட்டதாகத் தோன்றுகிறது.ஆனால் அதே கருத்தின் தொடர்ச்சியாக முகுந்த் எழுதியது இது.


//தங்களிடம் இருக்கும் கோப்புகளை எங்களுக்குத் தேவையான .po வடிவில் மாற்றித் தாருங்கள் முழுமையான தமிழ் பயர்பாக்ஸ் பொதியை தமிழுலகுக்கு அளிப்போம் என்று நான் பொது அரங்கில் (தமிழ்லினக்ஸ் குழுவில்) (date: Mar 4, 2005) எழுதிய மடலுக்கு இன்னும் இவரிடம் இருந்து பதிலே காணோம்.//


பிப்ரவரி 18ல் முடித்து வெளியிட்டவர் மார்ச் 4ல் கோப்புகளைத் தாருங்கள் முழுமையாக முடிக்கலாம் என்று மடல் எழுதியதாகக் கூறுகிறார். அப்படியானால் முடிக்காமலே வெளியிட்டு விட்டாரா?


ஜெயராதாவின் இந்த வரிகள் அவரும் முழுவதுமாக செய்து முடிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

//நான் ஃபையர் ஃபாக்ஸ் முயற்சியையும் நிறுத்திக்கொள்கிறேன். நீங்களே முயன்று முடிக்கவும்.//


இது ஒருபுறமிருக்க


//ஜெயராதாவின் பின்னூட்டத்தைப் பற்றி என் கருத்துக்கள்...
முன்பு ழ-கணினி குழுவைச் சேர்ந்தவரும் தற்போது ஒரு பன்னாட்டு நிறுவணத்திற்காக முழுநேர மொழிபெயர்பில் இருக்கும் ஜெயராதாதானா அல்லது வேறு ஒரு ஜெயராதாவா என்று தெரியவில்லை.
ஏற்கணவே ழ-கணினி ஆட்களுடன் முட்டி மோதி ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. அதனால் மீண்டும் இவருடன் வாதிட எனக்கு விருப்பமில்லை//


என்கிறார் முகுந்த். மதியின் பதிவிலும் வலைக்குழுக்களில் இருவரும் முன்பு மோதிக்கொண்ட தகவல் வருகிறது. எனக்கு இத்தகவல்கள் புதிது என்பதனால் பிரச்சினையின் பரிமாணங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு பொதுக்களத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள் மற்றவர்களை முட்டாளாக்குவதாக இருக்கக் கூடாது.


ஜெயராதா அறிமுகமே இல்லாதவர் போல ஒருபுறம் எழுதும் முகுந்த் வலைக்குழுக்களில் விவாதித்தாகவும் எழுதுகிறார். இந்தக் குழப்பத்தினிடையே நான் முன்பு வாசித்திருந்த இந்தச் செய்தி வேறு என்னைக் குழப்புகிறது.


தமிழ் கம்ப்யூட்டர் பிப் 18-29, 2004 இதழில் "ழ" கணினி பற்றிய அறிமுகக் கட்டுரையில்

".....செல்வி ஜெயராதாவும் டிஷ்நெட் குழுமத்தில்தான் பணிபுரிகிறார். சீனியர் சாப்ட்வேர் எஞ்சினியரான இவர் கணினியில் தமிழ் தொடர்பான தொழில் நுட்பங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். "இ-கலப்பை என்ற பெயரில் தமிழ் விசைப்பலகைக்கான டிரைவரை உருவாக்கிய குழுவில் இவரும் ஒருவர்......"


இ-கலப்பையின் Readme கோப்பில் பரிசோதித்தபோது இந்தவரிகள் காணப்பட்டன.


"Jayaradha - Helped in creating the tscii keyboard , graphics and also shared the cost involved in buying the developer licence for ekalappai 1.0"


இ-கலப்பை தயாரித்த 'தமிழா' குழுவின் தலைவர் 'முகுந்த்'!


ஆக இது பின்னாளில் ஏற்பட்ட EGO Clash என்பது அப்பட்டமாகப் புலனாகிறது.தனிப்பட்ட பிரச்சினைகளால் நஷ்டம் தமிழுக்குத்தான்.


கணித்தமிழில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள் இப்படி தனித்தனி குழுக்களாக அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது தமிழனின் தலைவிதியே இதுதானோ என்ற எண்ணம் மீண்டும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


'ழ' கணினி பற்றிய அதீத விளம்பரங்களைப் பார்த்துவிட்டு கணினி வாங்கியவன் நான். அதுவும் அரைகுறைதான் என்பதை அறியும்போது எரிச்சல்தான் வருகிறது.

2005-04-14

விடைபெறுதலும் வினாக்களும்

(கீழே இருப்பதை எழுதி ஐந்து நாட்களாச்சு. என் பதிவிலேயே நுழைய முடியாமல் பிளாக்கர் மீண்டும் சொதப்பியதை மீறி, ஆறிப் போனாலும் இன்னும் தீர்வு தேவையாக இருப்பதானால் இன்று இடுகிறேன்.)

ஒருவாரம் எப்படியோ ஒப்பேத்தி விட்டு இந்த வாரம் முழுவதும் படிப்பதிலேயே கழிந்தது. சில பதிவுகளுக்கு பின்னூட்டம் இட முயன்ன்ன்று தோற்றபின் வெறுமனே வாசிக்கத்தான் முடிந்தது. இன்றும் தமிழ்மணத்தைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது மாலனின் விடைபெறுகிறேன் பதிவு.

சம்பந்தப்பட்ட எல்லாப் பதிவுகளையும் வாசித்து முடித்தபின் முயன்றால் மீண்டும் பின்னூட்டப் பிரச்சினை. ஒருவழியாக சன்னல் பதிவில் பின்னூட்டமிட்டேன் பெயர் பதிவாகவில்லை. எப்படியோ கருத்து பதிவானால் சரி என்று விட்டுவிட்டேன்.

கணினியை நிறுத்திவிட்டுப் போனாலும் மனசில் இந்த கருத்தைத் தொடர்ந்தே நினைவுகளின் ஊடாட்டம். எழுதியாக வேண்டும் என்ற உறுததல்.

மாலனின் பேட்டியை வெளியிட்டபின் தொடர்ந்தும் மாலனைப்பற்றியே எழுத நேர்ந்திருக்கிறது. மாலனின் அரசியல் சார்ந்த கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கிறேன். விவாதித்துமிருக்கிறேன். ஆனால் மாலன் என்ற படைப்பாளியைப்பற்றி எதிர்மறையாக இதுவரை தோன்றியதில்லை. பிகேசிவகுமாருக்கும் கூட இதற்குமுன் தோன்றியிராது. ஆனால் ஜெயகாந்தனைப் பற்றிய மாலனின் விமர்சனமும் திண்ணை இதழ் பற்றிய மாலனின் கருத்துமே சிவகுமாருக்கு மாலனின் படைப்புத் தகுதி பற்றிய கேள்வியெழுப்பும் உள்ளார்ந்த ஆவலைக் கிளறியிருக்கிறது. அதற்குத்தோதாக காலச்சுவடு விமர்சனமும் அவர் கையில் மாட்டியிருக்கிறது.

காலச்சுவடு விமர்சனம் குறித்து இந்தத் தளத்தில் நான் விமர்சிக்க விரும்பவில்லை

அதே சமயம் மாலன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கில் பாராட்டு மட்டுமேன்? என்பதும் பிகேசி முன்வைக்கும் கேள்வி. இதை அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடமே அவர் கேட்டுத்தெளிவு பெறுவதே முறையானது.
ஜெயகாந்தனை வாழ்த்துபவர்கள் கூட அவரது குறைகளை சொல்லியே வாழ்த்துகிறார்கள் என்று அவர் கூறும்போதே மேற்கூறிய பாராட்டு மட்டுமேன் என்ற கேள்விக்கான பதிலும் நமக்குக் கிடைத்து விடுகிறது.

அடுத்து மாலன் தன்னைப் பற்றி உருவாக்கும் பிம்பங்கள் பற்றியது. எனது கேள்விகளுக்குப் பதிலளித்த மாலன் அவரது பிம்பங்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதை கவனமாகத் தவிர்த்திருந்தார். அதிலிருந்தே சிவகுமாரின் இந்தக் கருத்தின் நேர்மையை? என்னால் உணரமுடிகிறது.

ஜெயகாந்தனை மாலன் விமர்சித்தது குறித்த சிவகுமாரின் உறுத்தல்களுக்கிடையே எனது கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மாலன் கூறியதைப் பாருங்கள்.

//10. உங்கள் ஆரம்பகாலப் படைப்புகளில் யாருடைய பாதிப்பு இருந்தது?

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்

11. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழில்..., பிற இந்திய மொழிகளில்..., ஆங்கிலத்தில்..., பிற உலக மொழிகளில்...

தமிழில் பாரதியார். தி.ஜா, (பழைய) ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி (கதைகளுக்காக) ஆங்கிலத்தில், சாமர் செட் மாம், ஜே.டி.சாலிங்கர், ஜான் அப்டைக், மார்கஸ். எனக்கு வேறு மொழிகள் தெரியாது.//

அவர் எழுத்தில் ஜெயகாந்தனின் பாதிப்பு இருந்ததாகக் கூறுகிறார். அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களில் வாழும் எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே என்பதையும் கவனியுங்கள். அந்தப் 'பழைய' என்ற அடைமொழி புதிய ஜெயகாந்தன் மீதான விமர்சனமாக இருக்கலாம். அதையே நீராவி எஞ்சின் என்ற கட்டுரையிலும் குறிப்பிடுகிறார். மாலனுக்கு ஜெயகாந்தனை பாலபாடமாக அறிமுகப் படுத்துமுன் மேற்கண்ட வரிகளை சிவகுமார் கொஞ்சம் ஊன்றிப் படித்திருக்கலாம்.

இது குறித்தெல்லாம் எழுதி நேரத்தை வீணாக்குவதை விரும்பாவிட்டாலும் தவிர்க்க முடியவில்லை.

இனி மாலனின் பதிவு குறித்து....

வலைப் பதிவுகள் நீர்த்துப் போயக்கொண்டிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம். மாலனைப் போன்ற அனுபவமிக்க வலைப்பதிவர்கள் அதை மாற்ற என்ன செய்யலாம்? என்று சிந்திக்க வேண்டுமேயல்லாது ஓடி ஒளிவது தீர்வாகாது.

வலைப்பதிவுகள் ஒரு சிலேட் மாதிரி. நமக்கான சிலேட்டில் நாம் எழுதலாம். எழுதாமல் இருக்கலாம். வெளிநடப்புச் செய்வதற்கு இது சட்டமன்றமல்ல. ராஜினாமா செய்வதற்கு இது உத்தியோகமுமல்ல. மாலன் தினந்தோறும் வலைப்பதிகிற வழக்கமில்லை. எப்போதாவதுதான் பதிகிறார் என்பதால் காசி சொன்ன மாதிரி இதை விடுப்பு என்று கொள்வதற்கும் இடமில்லை.

மாலனுக்கு:(சன்னல் பதிவில் எழுதிய பின்னூட்டம்)
உங்களின் இந்த முடிவு விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாகத்தான் காட்டும.குறைபாடுகள் எங்குதான் இல்லை? விமர்சனங்களை விமர்சனங்களால் எதிர்கொள்ள உங்களால் முடியாதா? உங்கள் இத்தனை வருட அனுபவங்களை மீறி ஏன் இந்தப் பதட்டம்?
எழுதும் மனநிலை வாய்க்கும்போது எழுதுங்கள். தொடர்ந்தும்.

உங்கள் வருத்தம் ஒட்டுமொத்த வலைப்பதிவுகள் குறித்த மதிப்பீடு குறித்து எனில் அது காலத்தின் கோலம். தரம் ஏறும், இறங்கும். முடிந்தவரை உங்களைப் போன்றவர்கள் தான் வழிகாட்டவேண்டும். புறக்கணித்துச் செல்வது நியாயமானதில்லை.

தனிப்பட்ட வருத்தங்கள் எனில் உணர்ச்சிப்பெருக்கில் எடுக்கப்பட்ட முடிவாகிறது. அது ஆறும்போது நீங்கள் மீண்டு(ம்) வந்தேயாக வேண்டும். மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பதிவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து இங்கிருந்து வெளியேறுவேன் என்பது அந்தப் பதிவை அதன் sub-text ஐ நீங்கள் ஏற்பதாகிவிடும். உங்களை வாசிக்கக் காத்திருக்கும் பிற வலைப்பதிவர்களையும் வாசகர்களையும் தான் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவரையும் புறக்கணித்து நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருப்பதானால் நான் சொல்வதற்கும் இனி ஒன்றுமில்லை.

2005-04-03

மாலன் படைப்புகள்

Image hosted by TinyPic.com

மைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா குழுவினருடன் மாலன்



மாலன் எழுதிய நூல்களின் பட்டியல்:

சிறுகதைத் தொகுதிகள்:

மாலன் சிறுகதைகள்
கல்லிற்குக் கீழும் பூக்கள்
இறகுகளும் பாறைகளும்
மாறுதல் வரும்

நாவல்கள்:

வழிதவறிய வண்ணத்துப் பூச்சிகள்
நந்தலாலா
ஜன கண மன
எம்.எஸ்

இலக்கிய விமர்சனம்:

புரட்சிக்காரர்கள் நடுவே

கட்டுரைகள்:

சொல்லாத சொல்
நேற்றின் நிழல்கள்

அயலக அனுபவம்:

அன்புள்ள தமிழன்

மாலனின் வலைப்பதிவுகள்:

என் ஜன்னலுக்கு வெளியே

வாசகன்

2005-04-02

மாலன்...தொடர்ச்சி

Image hosted by TinyPic.com

புளோரிடா பல்கலைக்கழக இதழியல் மாணவராக மாலன்

14. நிறைய எழுதாவிட்டாலும் நிறைவாக எழுதுகிறவர் நீங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்புகள் மிகவும் பாராட்டப்படும் படைப்புகள். கட்டுரைகளும் முக்கியமானவை. நாவல்களும் எழுதியிருக்கிறீர்கள். புதிய எழுத்தாளர்கள் உதாரணமாகக் கொள்ளத்தக்க எழுத்துக்கள் உங்களுடையவை. உங்களுடைய படைப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? பிறரால் அதிகம் பாராட்டுப் பெற்றது எது?

அதிகம் பேரின் பாராட்டைப் பெற்றது ஜன கண மன. எனக்கு பிடித்தது பத்திரிகை உலகப் பின்னணியில் நான் எழுதிய Trilogy- ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஆனால் தனித்தனியான மூன்று சிறுகதைகள். (ஆயுதம், அடிமைகள், ஏன்?) அவற்றுக்குப் பின் அறிவியல் புனைகதையான வித்வான்.

15. பல்லூடகத் துறைக்கு நீங்கள் சென்ற அனுபவம்...காரணம் குறித்து...
1991ம் ஆண்டுத் தேர்தலின் போது தேர்தல் முடிவுகளை அவை வெளிவரும் போதே live ஆக அலசுகிற ஒரு முயற்சியை தூர்தர்ஷன் மேற்கொண்டது. ஆங்கிலத்தில் பிராணாய் ராய், இந்தியில் துவா, தமிழ்நாட்டில் இந்தி ஒளிபரப்புக் கிடையாதது ஆகையால் தமிழில் அலச என்னை அழைத்தது. அதை நினைவு வைத்திருந்து சன் டிவி 94ல் என்னை வாரந்தோறும் ஒரு current affairs நிகழ்ச்சி நடத்த அழைத்தது. நான் பொதுவாகவே ஊடக உரிமையாளர்களிடம் பேச வாய்ப்புக் கிடைக்கும் போது எப்படி நாம் புதிய திசைகளை நோக்கி நகர வேண்டுமென வலியுறுத்துவேன். கலாநிதி மாறனிடமும் ஒரு செய்தி சேனலை துவக்க வேண்டும் எனச் சொல்லி வந்தேன். அவர் 2000ல் அந்த முயற்ச்சியில் இறங்கிய போது என்னைப் பொறுப்பேற்றுக் கொள்ள அழைத்தார்.
ஊடகத்துறையில் அச்சிதழ்கள் வாசகர்களால் வழிநடத்தப்படுகின்றன (readership driven) தொலைக்காட்சிகள் சந்தையால் வழிநடத்தப்படுகின்றன (Market driven) அதனால் அது இன்னும் முழு வீச்சோடு வெளிப்படவில்லை.அதன் பொருளாதர காரணங்கள் சிறு பத்திரிகை போல, சிறு தொலைக்காட்சி உருவாக அனுமதிப்பதில்லை. ஆனால் விரைவிலேயே ஓர் துறை சார்ந்த சிறு தொலைகாட்சிகள் (niche television) வரும். செய்தி தொலைக்காட்சிகள் அவற்றின் முன்னோடி.

16. இணையத் தமிழை மற்றவர்களுக்கு அறிமுகம் செயகிறவர் நீங்கள். இணையத் தமிழ் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இதழியல் துறைக்கு வந்து பல காலத்திற்குப் பிறகு ·புளோரிடாப் பல்கலையில் முதுநிலை இதழியல் படிக்கப் போனேன். அங்கு என்னுடைய புரோஜக்ட் மின்னணு செய்தித் தாளுக்கு ஒரு முன்மாதிரி (Prototype) உருவாக்குவது. அப்போது அதற்கான மென்பொருட்கள் கூட சந்தைக்கு வந்திருக்கவில்லை. நாசாவின் துணை அமைப்பான NCSA (National Center for supercomputing applications)விடம் மொசைக் என்ற மென்பொருளை இரவல் வாங்கி எங்கள் முன்மாதிரியை உருவாக்கினோம். இந்தியா திரும்பும் வழியில் சிங்கப்பூர் வந்தேன். என் நெருங்கிய நண்பரும் எழுத்தாளரும், இணைய ஆர்வலருமான நா. கோவிந்தசாமியிடம் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நா.கோ அப்போது கணினிக்கான எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். நாம் இணையத்தில் தமிழில் எழுதமுடியாதா என்று என் தாபத்தை வெளியிட்டேன். அவர் இணையத் தமிழில் தீவிரமாக முனைந்தார்.இன்னும் நன்றாக் நினைவிருக்கிறது. இணையத்தில் தமிழ் அடி எடுத்து வைத்த நாளன்று அவர் என்னை சிங்கப்பூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து, " தமிழ் வந்திருச்சி மாலன், இணையத்திற்குள்ளே தமிழ் வந்திருச்சி " என்று உற்சாகமாகக் கூவியது. என்ன போட்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்க அவர் தனது கணினித் திரையைப் பார்த்து கணியன் பூங்குன்றன் வரிகளை வாசிக்க, சந்தோஷத்தினால் தூங்க முடியாது போன இரவு அது. இணையத் தமிழுக்கு நா.கோ. மதுரைத் திட்ட கல்யாணசுந்தரம், முரசு அஞ்சல் நெடுமாறன், தமிழ்மணம் காசி இவர்கள் எல்லாம் செய்ததைப் பார்க்கும் போது நான் இங்கு எதுவுமே செய்துவிடவில்லை என்பதுதான் நிஜம்..

17. தினமணிக் கதிரில் காந்திஜி சுடப்பட்ட சம்பவத்தையட்டி நீங்கள் எழுதிய தொடர்கதை (ஜன கன மன) மூலம்தான் எனக்கு மாலன் என்ற பெயர் பரிச்சயமானது. அப்போதிருந்தே மாறுபட்டுச் சிந்திப்பவர் என்ற மனப்பதிவு எனக்குண்டு. அது இயல்பானதா? பிரக்ஞையோடே செய்வதா?

மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என ந்தையும் சிந்திப்பதில்லை. கேள்விகளை எழுப்பிக் கொண்டே சிந்திப்பதே வழக்கமாகி விட்டதால் அவை இழுத்துச் செல்லும் திசைகளிலெல்லாம் சிந்தனையும் செல்கிறது. ' போடா! உனக்குக் கோணக் கட்சி ஆடறதே வழக்கமா போச்சு ' என்பது என் அம்மா என்னை வைய அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்.

18. தினமணிக் கதிரில் அந்தக் காலகட்டத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆசிரியர் கஸ்தூரிரங்கனுடனான அனுபவங்கள்?

கஸ்தூரி ரங்கனுடன் கணையாழி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. எமெர்ஜென்சியின் போது அவர் தில்லியில் நியூயார்க் டைம்ஸ் நிருபராக இருந்தார். அதனால் அது பற்றி எங்களுக்குள் கருத்தொற்றுமை இருந்தது. பின்னர் அவர் தினமணிக் கதிருக்குப் பொறுப்பேற்றக் கொண்ட போது நான் சொல்லவிரும்புவதை சொல்ல இடமளித்தார். நல்ல மனிதர்.

19. அன்றைய திசைகள் மலரக் காரணம் மற்றும் தூண்டுதல் எது? திசைகள் இதழ் எதுவரை, எத்தனை இதழ்கள் வெளியாயின?

சாவி வார இதழின் முதலிரண்டு ஆண்டுகளில் அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு நான் ஆலோசனைகளும் கருத்துக்களும் சொல்லி வந்தேன்.தமிழ் வார இதழ்கள் இளைஞர்களை பிரதிபலிக்கவில்லை அவர்களது படைப்புக்களுக்கு இடமளிக்கவில்லை என நான் அநேகமாக ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வந்தேன்.நாளடைவில் 'ஆரம்பிச்சிட்டான்யா' என்று மற்றவர்கள் அலுத்துக் கொள்கிற அளவிற்கு அது இருந்தது.
ஒருநாள் சாவி என்னை அழைத்து ஒரு புதிய பத்திரிகையை துவக்கப் போகிறேன். நீங்கள்தான் அதன் ஆசிரியர். அதை நீங்கள் விரும்புகிறபடியே இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துங்கள் என்று சொன்னார். முப்பது வயதிற்குட்பட்டவர்களைக் கொண்ட ஓர் ஆசிரியக் குழு அமைப்பது எனத் தீர்மானித்து சாவியில் அறிவிப்புக் கொடுத்தேன். வந்த படைப்புக்களின் அடிப்படையில் திறமையானவர்களை மாவட்டம்தோறும் தேர்ந்தெடுத்து குழுவை இறுதி செய்தேன். ( அப்போது ஜூனியர் விகடன் தோன்றியிருக்கவில்லை. அந்த முறையைத்தான் இப்போது ஜூவி பின்பற்றுகிறது) அப்படி உருவான குழுவில் இருந்தவர்கள் இன்றும் பத்திரிகைத் துறையில், படைப்புத் துறையில் சிறப்பாகப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். சில உதாரணங்கள்: சுதாங்கன் (ஜெயா டிவி) மணா( பொறுப்பாசிரியர் புதிய பார்வை) சாருப்பிரபா சுந்தர் ( பொறுப்பாசிரியர் குங்குமம்) பன்னீர் செல்வன் ( முன்னாள் அவுட்லுக்) பானுமதி ராஜாராம் ( இந்தியா டுடே தமிழ்) வஸந்த் (திரைப்பட இயக்குநர்) அரஸ் (ஓவியர்) மருது (ஓவியர்) பட்டுக்கோட்டை பிரபாகர் (எழுத்தாளர்) கார்த்திகா ராஜ்குமார் ( எழுத்தாளர்) பா.கைலாசம் ( மின் பிம்பங்கள்) நலினி சாஸ்திரி (எழுத்தாளர்) குன்றில் குமார் ( குங்குமம்) கல்யாண்குமார் ( தொலைக்காட்சி- திரைப்பட இயக்குநர்) திருவேங்கிமலை சரவணன் ( குமுதம்) இப்படி அது ஒரு நீண்ட பட்டியல்.முப்பது வயதிற்குட்பட்டவர்கள்தான் எழுதலாம் என்று திட்டவட்டமாக முடிவு செய்திருந்தோம். மற்ற பத்திரிகைகளில் எழுதுபவர்கள், படம் வரைபவர்கள் படம் எடுப்பவர்கள் இவர்களின் படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது இன்னொரு முடிவு ( விதிவிலக்கு சுஜாதா- அறிவியல் கதைகளை அறிமுகப்படுத்த, மணியன் செல்வன் -அந்த அறிவியல் கதைகளுக்குப் படம் போட) ஒரே ஒரு தொடர்கதை, நிறைய தகவல் கட்டுரைகள், புதுக்கவிதைகள், abstract ஓவியங்கள் என அது ஓர் வித்தியாசமான முயற்சி. எட்டு மாதங்கள் பத்திரிகை வந்தது.ஆனால் அது அன்றைய வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் நினைவு கூர்பவர்கள் இருக்கிறார்கள்.

20. மிகவும் பரபரப்பான பத்திரிகையாளரான, ஊடகவியலாளரான தாங்கள் மறுபடி சிற்றிதழ் சார்ந்த, அல்லது அதைப்போன்ற இணையச்சிற்றிதழாக திசைகளை வெளியிடவும் வலைப்பதிவுகளில் பங்கேற்கவும் முன்வந்த காரணம் அல்லது ஆர்வம் எதனால் ஏற்பட்டது?

2002ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் தமிழ் எழுத்துக்கள் பற்றி உரையாற்ற வருமாறு அழைப்பு வந்தது. இந்திய, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்கள் கடந்து வந்திருக்கிற பாதை அவற்றின் போக்கு பற்றி ' கயல் பருகிய கடல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். அதற்காக பல நாடுகளில் எழுதப்பட்டவற்றைப் படித்தேன். சில முன்னரே படித்தவை. மீண்டும் காலம் சென்று படித்த போது சில புதிய பார்வைகளைத் தந்தன. ஆனால் தமிழ் உலகளாவிய மொழியாக இருந்த போதிலும், தமிழ் இலக்கிய உலகில் ஓர் ஒருங்கிணைப்பு இல்லை, ஒரு நாட்டில் எழுதப்படும் எழுத்தை இன்னொருவர் அறிமுகம் கூட செய்து கொள்வதில்லை என்ற உண்மை விளைவித்த சிந்தனைகளின் தாக்கம்தான் அதிகம். உலகு தழுவிய ஓர் இதழ் வேண்டும் என நினைத்தேன். திண்ணை வந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் குழுச் சண்டைகள் அதிகம், அது தினமலரின் வாரமலர் போல வம்புகள், கொச்சையான மொழி இவற்றில் ஆர்வம் காட்டி வந்தது. தமிழ் எழுத்துலகின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, கண்ணியமான எழுத்துகளை ஊக்கப்படுத்துவது, சச்சரவை விட சாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற இலக்குகளுடன் திசைகளை ஆரம்பித்தேன்.

21. தங்களின் தற்போதைய பணி மற்றும் பதவி குறித்து கூறுங்கள். இப்பணியில் தாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் கடமையாற்ற முடிகிறதா? அல்லது வாழ்க்கைத்தொழில் மற்றும் இலக்கியம்+இலட்சியம் ஆகியவை வேறுவேறானவை எனக் கருதுகிறீர்களா?

நான் என் பத்திரிகை ஆசிரியர் பணியில் சமரசம் செய்து கொள்வதில்லை. சமரசம் செய்து கொள்பவனாக இருந்தால் குமுதத்திலேயே தொடர்ந்திருப்பேன். நான் பொறுப்பேற்ற பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும், திசைகளில் துவங்கி, அதை நடத்துபவர்களின் அழைப்பின் பேரிலேயேதான் சென்றேன். இணக்கமில்லாத சூழ்நிலை ஏற்பட்டால்தான் விலகி வந்தேன்.
இப்போது இருக்கும் இடத்தில் எதுவும் நிர்பந்தங்கள் இல்லை. செய்திகளை உருவாக்க முடியாது. ஒளித்து வைக்க முடியாது. இந்தத் தொலைக்காட்சியில் இல்லை என்றால் இன்னொரு தொலைக்காட்சியில் அதை நேயர்கள் பார்ப்பார்கள். தொலைக்காட்சிக்கு வருமானம் வரும் முக்கிய வழி விளம்பரங்கள். மக்கள் பார்க்காத தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் கிடைக்காது. பொய்ச் செய்திகளைப் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த தொலைக்காட்சி படுத்துவிடும். ஜேஜே டிவி ஒர் சிறந்த உதாரணம்.
தமிழ்நாட்டில் ஊடகங்கள் பாரம்பரியமாக அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இந்துப் பத்திரிகையின் நிறுவனரும், காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவரும் ஒருவர்தான். ஏ.என்.எஸ் காலத்தில் தினமணி அப்பட்டமான காங்கிரஸ் நிலைப்பாட்டைக் கொண்டுதான் இயங்கி வந்தது. ஆதித்தனார் அரசியல் ஆர்வமாகப் பங்கெடுத்தவர். இதன் காரணமாக மக்கள் எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் கேட்பது அறிவு என்ற ஞானம் கொண்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் எனக்கு உதவுகின்றன.

22. ஞானபீடம் முதல்முறை தமிழுக்குக் கிடைத்ததில் ஏற்பட்ட சர்ச்சைகளும் அது இரண்டாம் முறை கிடைத்திருப்பதற்கான இடைவெளியும் குறித்து..?

இடைவெளி அதிகம்தான். ஆனால் அநியாயமானதில்லை. தமிழ் இலக்கியம் மீண்டும் ஒரு குழு மனோபாவத்தை நோக்கிப் போகும் கால கட்டத்தில் ஒரு ' வெகுஜன' எழுத்தாளனுக்கு இந்த விருது கிடைத்திருப்பது நல்ல மருந்து.

23. இணையத் தமிழின் எதிர்காலம் யார் கையில்?

புதிய படைப்பாளிகளின் கையில். பொறுப்பான வலைப்பதிவர்கள் கையில்.

24. மறக்க முடியாத பொன்மொழி?

பொன்மொழி அல்ல, கவிதை:

" பெரியோர் எனினும் வியத்தலும் இலமே.
அதனினும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே!"

2005-04-01

திசைகள்- மாலன்

மாலன்....

தமிழ்ப் பத்திரிகை உலகின் சிகரம் கண்டவர். இலக்கியப் பத்திரிகையிலிருந்து இணையப் பத்திரிகை வரை, செய்திப் பத்திரிகையிலிருந்து செயற்கைக்கோள் தொலைக் காட்சிவரை ஊடகத்துறையில் ஆழமாகக் கால்பதித்தவர். தமிழின் நம்பர் 1. பத்திரிகையாக இருந்த குமுதம் இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். நம் சக வலைப்பதிவராக நம்மிடையே உரையாடுகிறவர். தற்போது சன்நியூஸ் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
மாலன் என்ற மனிதரை, மாலனுக்குள் இருக்கும் ஆளுமையைப் புரிந்து கொள்ள அவரது இந்தப் பகிர்வு உதவக்கூடும்.

Image hosted by TinyPic.com


கேள்விகள்:

1. உங்களுடைய பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம் குறித்து கூறுங்கள்?

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஓர் இரண்டாம் நிலை சிற்றூரில் படித்த, நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். எனது தாத்தா, அப்பா எல்லோரும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப்பங்கு கொண்டவர்கள்.ஆர்வதோடு நாளிதழ்களும் இலக்கியங்களும் படித்து விவாதிப்பவர்கள். அம்மாவும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். அவருக்கு காந்தி தெய்வம். நேரு மாமனிதர். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மையம் கோயில்கள். இன்று தமிழக அரசின் இலச்சினையாகத் திகழும் கோபுரம் அந்த ஊரினுடையதுதான். ஆண்டாள் பிறந்த ஊர். ஒரு பெரும் சிவன் கோவிலும் உண்டு. அந்த ஊரின் தேர் திருவாருர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே பெரியது. நாங்கள் வசித்த வீதிக்கு (வடக்கு) ரதவீதி என்று பெயர்.தேர் ஊர் சுற்றக் கிளம்பினால் நிலைக்குப் போய்ச் சேர 10 நாளாகும். எங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு நாள் பூரா கிடந்து நான் பார்த்திருக்கிறேன். ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு திருவிழா. அரையர் சேவை என்று ஒன்று நடக்கும். அதை வேறு ஊர்களில் பார்க்க முடியாது ( ஸ்ரீரங்கம் தவிர) ராமநவமி வந்தால் வீட்டுக்கு வீடு கூப்பிட்டு பானகம் என்று வெல்லம் கரைத்த ஏலக்காய் வாசனை கொண்ட இனிப்பு நீர் தருவார்கள்.பக்கத்து கிராமங்களில் இருந்து ·பிரஷ்ஆக காய்கறிகள், பால் ( கூமாப்பட்டி கத்திரிக்காய், கிருஷ்ணங்கோவில் மாவடு, மம்சாபுரம் பால், வெண்ணை) இவற்றை அற்புதமான எளியமனிதர்கள் கொண்டு வந்து விற்பார்கள்.

அந்த ஊரில் இருந்த மூன்று மருத்துவர்களில் என் தாத்தாவும் ஒருவர் என்பதால் எனக்கு எங்கு போனாலும் ராஜ உபசாரம் நடக்கும். ஓர் இளவரசனைப் போல் வளர்ந்தேன்.

2. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று சிறுவயதில் நினைத்திருந்தீர்கள்?

எனக்கென பெரிய கனவுகள் இருக்கவில்லை. அம்மா நான் அவரது அப்பாவைப் போல டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள்.

3. தமிழ் வாசிப்பு அனுபவம் எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணமாக அமைந்தவர்கள் யார்?

என் அப்பா ஒரு தீவிர வாசகர்.ஒரு ஆசிரியர் எழுதிய அனைத்தையும் படிக்காமல் அவரைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்பது அவரது கொள்கை.சாமர்செட் மாம், அலக்சாண்டர் டுமா என்று தலையணை தலையணையாகப் புத்தகங்கள் கொண்டு வந்து இரவில் தலைக்குப் பின் மேஜை விளக்கை எரிய விட்டுக் கொண்டு படிப்பார்.இப்போது அவருக்கு 80 வயதாகிறது. ஸ்பாண்டிலைட்டீஸ் காரணமாக நீண்ட நேரம் உட்கார முடிவதில்லை. ஆனாலும் படிக்கிறார். அவர் ஏதாவது புதிய புத்தகம் படித்தால் உடனே என்னிடம் தொலைபேசியில் அழைத்து அரைமணி நேரமாவது அதைப்பற்றிப் பேசுவார். அப்பாவிற்கு நிறைய நண்பர்கள். கிவாஜ, எழுத்தாளர் தேவன், கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி எல்லோரும் அவரது நண்பர்கள். அவர்களோடும் புத்தகம் பற்றி அல்லது அரசியல் பற்றித்தான் பேசுவார். இவர்களையெல்லாம் நான் என் சிறு வயதில் என் வீட்டில் வெகு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
அம்மாவும் ஒரு நல்ல வாசகி. தமிழில் நிறையப்படிப்பார். அறுபதுகளில் வெள்ளிகிழமை வந்தால் வீட்டில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி எங்கள் இருவருக்கும் இடையே விவாதம் நடக்கும். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான். அவர் மறைவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட படுக்கையில் இருந்தபடியே நித்ய ஸ்ரீ பாடிய பாரதியின் பாட்டொன்றைப் பற்றிப் பேசினார்.

4. உங்களுடைய பள்ளி வாழ்க்கை வாசிப்பைத் தூண்டுவதாக அமைந்ததா? இதைக் கேட்கக் காரணம் இன்றைய மாணவர்களின் பள்ளி வாழ்க்கையில் வெளிவாசிப்பைத் தூண்டும் ஆசிரியர்கள் குறைவு. மாணவர்கள் பள்ளிப் பாடங்களை மட்டும் ஒழுங்காகப் படித்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அன்றும் இம்மாதிரியான சூழல்தான் நிலவியதா?

வாசிக்கத் தூண்டினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு சம்பவம் மறக்கமுடியாதது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை தினமணியில், ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் கட்டிட வேலைக்காகத் தோண்டியபோது ஓரிடத்தில் கட்டுக் கட்டாக கரன்சிகள் கிடைத்தது என்றும், ஆனால் அவற்றைக் கரையான் தின்றிருந்தன என்றும் செய்தி வந்தது. நான் பள்ளிக்குப் போகும் போதும், பிராத்தனைக்காக வரிசையில் நின்றிருந்த போதும் அந்தச் செய்தியே மூளையைப் பிறாண்டிக் கொண்டிருந்தது. வகுப்பிற்குப் போய் உட்கார்ந்து என் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன்.ஆசிரியர் வந்தது, எழுந்து நின்றது, ஆஜர் கொடுத்தது எல்லாம் இயந்திரகதியில் நடந்தது. ஆசிரியர் மத்தியதரைக் கடல் பகுதிகளின் சீதோஷணம் பற்றி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால் கை கவிதையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. என்கவனம் பாடத்தில் இல்லை என்பதை ஆசிரியர் கவனித்து விட்டார். அருகில் வந்து வெடுக்கென்று என் கையெழுத்துப் பத்திரிகையைப் பறித்துக் கொண்டார். அதிலிருந்ததை ஒரு முறை படித்துக் கொண்டார். மேடைக்குப் போய் என்ன அருகில் வர அழைத்தார். சரி தொலைந்தோம், எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்போகிறார் என்று பயந்து கொண்டே போனேன். ஆனால் என்ன ஆச்சரியம். கவிதை எழுதுவது கடவுள் சிலருக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வரம் அப்படி கடவுளின் அன்பிற்குப் பாத்திரமானவன் ஒருவன் நம் வகுப்பில் இருக்கிறான் என்று சொல்லி என் கவிதையைப் படிக்கச் சொன்னார். அவர் அன்று என்னை அவமானப்படுத்தியிருந்தாலோ, வைது அடித்திருந்தாலோ ஒருவேளை நான் அன்றே எழுதுவதை நிறுத்தியிருந்திருப்பேன். இத்தனைக்கும் அவர் தமிழாசிரியர் அல்ல. பூகோள ஆசிரியர்.

நம் குழந்தைகள் துரதிருஷ்டவசமாக தின்று விளையாடி இன்புற்றிருக்கும் வாழ்க்கையை இழந்து விட்டார்கள். நான் முன்பு ஒருமுறை இந்தியா டுடேயில் எழுதிய மாதிரி, இந்த தேசத்தில் குழந்தையாக இருப்பதுதான் எவ்வளவு துன்பமானது!

5. உங்கள் வீட்டுச் (குடும்ப) சூழல் இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்ததா?

ஆமாம். அவர்கள் எழுதச் சொல்லித் தூண்டவில்லை. படிக்கச் சொல்லித் தூண்டவில்லை. ஆனால் எழுதுவதும் படிப்பதும் தவறானது என்று நினைத்ததும் இல்லை.

6. உங்கள் ஆரம்ப வாசிப்பு எத்தகையதாக இருந்தது? தீவிர இலக்கியம் பக்கம் எப்போது வந்தீர்கள்?

வீட்டிற்கு வந்து விழும் வாரப்பத்திரிகைகளை வாசிப்பதில்தான் ஆரம்பித்தது.பள்ளி இறுதி நாட்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தீவிர ஈடுபாடு கொண்டேன். அது பற்றிய செய்திகளைப் படிப்பதற்காக (தினமணி, ஹிந்துவில் அவை மிதமாக இருக்கும்) நூலகங்களுக்குப் போகத் துவங்கினேன்.அங்கு எனக்கு ' எழுத்து' அறிமுகமாயிற்று. அதன் வழையே புதுக் கவிதை இயக்கம் அறிமுகமாயிற்று. சில மாதங்களில் எழுத்தில் என் கவிதை பிரசுரமானதும் சிறு பத்திரிகைகள் மீது ஆர்வம் அதிகமாகி விட்டது.

7. எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது? முதலில் எழுதிய படைப்பு எது?

13 வயதிலிருந்து எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அச்சில் முதலில் வெளிவந்தது கவிதை. 1967ல் சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழில் பிரசுரமாயிற்று. 1972ல். முதல் சிறுகதை கண்ணதாசனில் வெளிவந்தது.

8. நிறையப்பேர் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் அதை அச்சுக்குக் கொண்டு வரும் எண்ணம் இருக்காது, அல்லது தெரியாது. பிரசுர வாய்ப்புகள் குறித்து நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? முதல் படைப்பு எங்கே பிரசுரமாயிற்று?

எழுத்தில் என் கவிதை பிரசுரமாகக் காரணம் முத்துப்பாண்டி என்ற என் வகுப்புத் தோழர். என்னுடன் நூலகத்திற்குப் படிக்க வருபவர். நான் என் பிசிக்ஸ் நோட்டில் எழுதியிருந்த கவிதையை நகல் எடுத்து அவர்தான் அனுப்பி வைத்தார். பிரசுரமாகாது ஆனால் அவர் ஆசையைக் கெடுப்பானேன் என்று நினைத்தேன். பிரசுரமாகிவிட்டது!

9. எழுத்து அல்லது ஊடகம் சார்ந்த தொழில் என்பதான எண்ணம் எப்போது உருவானது?

70 களில் நான் வாசகன் என்று ஒரு சிறு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். 300 பேருக்கு அஞ்சல் வழியில் மட்டும் அனுப்பப்படும் 32 பக்க இலக்கியப் பத்திரிகை. எமெர்ஜென்சியின் போது தஞ்சாவூரில் இருந்தேன். சென்னையிலிருந்து புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகள் தஞ்சை வந்து அந்த முகவரிப் புத்தகத்தை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போனார்கள். எனக்கு ஆச்சரியமும் கோபமும் ஏற்பட்டது. சர்வ வல்லமை உள்ள இந்திய அரசை, ஒரு 300 பேருக்குப் போகிற இலக்கியப் பத்திரிகையால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் வெகுஜனங்கள் அறியாத இலக்கியவாதிகள் எழுதும், பத்திரிகையால்? என்று அந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டேன். ஆறடி ஆளைக் கொல்றதுக்கு அங்குல புல்லட் போதும் தம்பி என்று ஒரு அதிகாரி சொன்னார். உடனடி எதிர்வினையாக நான் எமெர்ஜென்சி பற்றிக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நேரடியாக எழுதினால் அவற்றை அப்போது பிரசுரிக்க முடியாது. பூடகமாக எழுதினேன். அவை கணையாழியில் பிரசுரமாயின. ( ஆலிவர் பெர்ரி என்ற அமெரிக்கப் பேராசிரியர், பின்னால் எமெர்ஜ்ர்ன்சியின் போது எழுதப்பட்ட கவிதைகளைத் திரட்டி Voices of Emergengy என்ற தொகுப்பாக வெளியிட்டார். அதில் இதுவும் இடம் பெற்றது) கதைகளும் எழுதினேன். அவை பாலம் இதழில் வெளிவந்தது.
தொழில்முறைப் பத்திரிகைக்காரனாக வேண்டும் என்ற உந்தல் எமெர்ஜென்சி தந்தது.

10. உங்கள் ஆரம்பகாலப் படைப்புகளில் யாருடைய பாதிப்பு இருந்தது?

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்

11. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழில்..., பிற இந்திய மொழிகளில்..., ஆங்கிலத்தில்..., பிற உலக மொழிகளில்...

தமிழில் பாரதியார். தி.ஜா, (பழைய) ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி (கதைகளுக்காக) ஆங்கிலத்தில், சாமர் செட் மாம், ஜே.டி.சாலிங்கர், ஜான் அப்டைக், மார்கஸ். எனக்கு வேறு மொழிகள் தெரியாது.

12. நீங்கள் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற அளவுக்கு உங்களை இத்துறையில் ஊக்குவித்தவர்கள் எவர்?

ஆசிரியர் சாவி. எடுத்த எடுப்பிலேயே என்னை ஆசிரியாக ஆக்கியவர். பத்திரிகைத் துறையின் வேறு நிலைகளில் (நிருபர், துணை ஆசிரியர்) நான் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார்.

13. உங்கள் பத்திரிகைத்துறை அனுபவங்கள் குறித்து...

வருமானத்திற்குரிய வாழ்வு உபாயமாக மட்டும் பத்திரிகைத் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல் செயல்படுவதாலோ என்னவோ நிறைவாக இருக்கிறது. விளிம்புகளை நகர்த்துவது ( expanding the boundries) என்பதை என் பத்திரிகை உலகப் பணியின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அந்த திசையில் என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன்.சிறு பத்திரிகை- வெகுஜனப் பத்திரிகை இடையேயான இடைவெளியைக் குறைத்து ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக வழி சமைத்தது, இளைய தலைமுறையை எழுத்தின் மீதும் பத்திரிகைகளின் மீதும் நம்பிக்கையும் ஆர்வமும் கொள்ளச் செய்தது, கதை கட்டுரை பேட்டி என்று இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு, அவற்றுக்கு அப்பால் செய்திப் பத்திரிகை என்று ஓர் தளம் இருக்கிறது என அறிமுகப்படுத்தி வைத்தது, கணினித் தொழில் நுட்பத்தை வரவேற்று இடமளித்தது, சினிமா சார்ந்த பொழுது போக்கு ஊடகமாக இருந்த தொலைக்காட்சியை தகவல் ஊடகமாக மாற்ற உழைத்தது என்று என்னால் இயன்ற அளவு உருப்படியாக சில செயல்களை செய்திருக்கிறேன். இவற்றை எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல், கோஷ்டி சேர்க்காமல் செய்திருக்கிறேன். வரலாறு என்னை ஒரு காற்புள்ளியாகக் கூடப் பதிவு செய்து கொள்ளாமல் போகலாம். சிறுபத்திரிகை உலகப் பீடாதிபதிகள் எனக்கு தீப்பெட்டி கூடக் கொடுக்கக் கூடாது என்று ஜாதி பிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனாலும் கண்ணெதிரே விளைச்சலைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. வயிற்றில் பசியோடு வயலில் சாய்ந்து கிடக்கும் கதிர் பார்த்துச் சிரிக்கும் விவசாயியின் நிறைவு.

(தொடரும்)