2005-05-16

இடைத்தேர்தல்

இடைத்தேர்தலில் அதிமுக வென்றிருக்கிறது. திமுகவின் மெகா கூட்டணியை மீறி, சங்கராச்சாரியார் பக்தர்களின் கோபத்தை மீறி, பிஜேபியின் ரகசிய லாபியை மீறி, தனித்தே நின்ற அதிமுகவுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியது எது?

திமுகவின் கூட்டணித் தலைவர்களெல்லாம் இதை அதிமுகவின் பணபலமும், கள்ள ஓட்டுக்களும், அதிகார துஷ்பிரயோகமும் தந்த அநியாய வெற்றி என்று வர்ணித்துள்ளனர்.

இந்தத் தேர்தலின் கதாநாயகரான ராவ் என்ற தேர்தல் பார்வையாளரின் பார்வையில் இரு தரப்புமே முடிந்தவரை அதிகார அநியாய அரசியலைத்தான் நடத்தியுள்ளன. அதை முடிந்தவரை அவரும் முறியடித்துத் தான் இந்தத் தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

அவரை மீறிக்கொண்டு அதிமுகவினர் போட்ட கள்ள ஓட்டுக்கள் அதிகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சுய உதவிக் குழுக்களின் மூலமாக ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று நோட்டுக்கள் கைமாறியுள்ள போதிலும் விலைக்கு வாங்க முடியாத சிலவும் உண்டு.

அதிலொன்று ஜாதி,மத அபிமானம்.
இம்முறை அது சற்றே முரண்பட்ட திசையில் பயணித்திருக்கிறது.

சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாருக்கு இருந்த அகில இந்திய செல்வாக்கின் அடிப்படையில் பார்த்தால் ஜெ மண்ணைக் கவ்வியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அது நேர்மாறானது என்ற ஜெயலலிதாவின் கணிப்பு உண்மையாகியிருக்கிறது. கொல்லப்பட்ட சங்கரராமனின் மீதான ஆதரவு ஜெவின் வெற்றியாக வந்து விழுந்திருக்கிறது.

தமிழ்நாடு ஓட்டல் விவகாரம், ஜெயலலிதா-சங்கராச்சாரியார் மோதல் குறித்த தகவல்கள் எந்தளவு நம்பப் படுகிறதோ அதே அளவுக்கு சங்கரராமன் கொலையில் சங்கராச்சாரியார்களின் பங்களிப்பும் மடத்தில் பெண்தொடர்புகள் குறித்த கதைகளும் நம்பப் படுகின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. முதல் விவகாரத்தின் விளைவுதான் சங்கராச்சாரியார்கள் கைது செய்யப்பட்டதும் குண்டர்சட்டம், கஞ்சா வழக்கு என வழக்குகள் போடப்படுவதுமான நிகழ்வுகளுக்கான அடிப்படை. ஆனால் அதற்கான வழியையும் காரணத்தையும் அளித்தது இரண்டாவதாகக் கூறப்பட்ட நிகழ்வுதான்.

ஊழல் வழக்குகளில் ஜெயலலிதாவின் பங்குகள் வெளிப்படையானவை. ஆனாலும் ஒவ்வொரு வழக்கும் நீர்த்துப் போய் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுவிக்கப் பட்டதை நாம் கண்டுள்ளோம்.

சங்கராச்சாரியார் மீதான வழக்குகளும் அதே பாதையில் தான் பயணிக்கின்றன. ஒன்று ஊழல் வழக்கு. மற்றது கொலை வழக்கு. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தீர்ப்புகளும் செல்வாக்குள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும் மற்றவர்களுக்கு மற்றொரு விதமாகவும் செயல்படுகிற காலமிது.

அதே சமயம் ஒவ்வொன்றையும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென இன்று அரசியல்வாதிகள் முழங்குவதன் பொருள் அர்த்தப்படுத்துவது என்ன? தன் ஆட்சிக்காலத்தில் மெகா ஊழல்புரிந்து ஆடம்பரத்தில் ஊறித்திளைத்த ஜெயலலிதா அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வினார். அதற்கடுத்த தேர்தலில் தண்டனைக்காலம் முடிந்தது என மக்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்தனர்.

இன்று செல்வாக்கு மிக்க சங்கராச்சாரியார் கொலையே செய்தாலும் கைது செய்தது தவறு என மேடைபோட்டு முழங்கிய தேசியத்தலைவர்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக அந்தக் கைதைக் கண்டித்த திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டனர்.

மக்களின் மனநிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் காரணங்கள் தேடி சாக்குப் போக்குக் கூறிக்கொண்டிராமல் ஆக வேண்டியதைப் பாருங்கைய்யா!

9 comments:

Moorthi said...

//சுய உதவிக் குழுக்களின் மூலமாக ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று நோட்டுக்கள்//

அடடே சுய உதவிக்குழுக்கள்னா இதானா? இதுக்குத்தான் அரம்பிக்கப்பட்டதா?

Mookku Sundar said...

தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

newsintamil said...

நன்றி மூக்கன்!

பெண்களின் சுய முன்னேற்றத்தை முன்வைத்து துவங்கப்பட்ட அற்புதமான திட்டம் தான் சுய உதவிக்குழுக்கள். பெண்கள் சக்தியை எளிதில் திரட்ட முடிகிற வழிமுறை கிடைத்தால் விட்டுவிடுவார்களா அரசியல்வாதிகள்? அரசியல்வாதிகளின் கையில் சிக்கி சீரழிந்த எல்லா நல்ல திட்டங்களையும் போல இப்போது சுய உதவிக்குழுக்களும்!

மூர்த்தி! கிண்டல் புரிகிறது. புரியாதவர்களுக்காக இது.

கோவிந்தா! said...

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது இயல்புதான். இந்த இடைத்தேர்தல் முடிவு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கூறுவதற்கு இல்லை. எது எப்படி இருப்பினும் மக்கள் ஆதாயம் கிடைத்தால் யாருக்கும் வாக்கு அளிக்கத் தயாராக உள்ளனர் என்பதே உண்மையாகும். ஊழலாவது கத்தரிக்காயாவது?

newsintamil said...

மககள் ரொம்பப் புத்திசாலிகள். ஜெயலலிதா பாராளுமன்றத் தேர்தல் தோல்வியால் முன்னர் செய்த எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியதை உணர்ந்தவர்கள். இப்போது செய்ததையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். ஏழுகட்சி கூட்டணியோடு "மகா" சக்திகளும் கூட்டணி சேர்ந்தும் ஜெவை ஜெயிக்க முடியாததற்கு அதுதான் காரணம்.

வழக்கமான இடைத்தேர்தல் வெற்றியாக நினைத்து புலம்பிக்கொண்டிருந்தால் அடுத்த தேர்தலிலும் திமுக+ கட்சிகள் ஏமாந்து விடவாய்ப்புண்டு.

இந்த விஷயத்தில் எல்லாம் சீரியசாகவே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் இதோ வருகிறார்:

"மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஓராண்டு ஆட்சிக்கு எதிரானது இந்த இடைத்தேர்தல் தீர்ப்பு."-சி.பி.ராதாகிருஷ்ணன் (தினமணியில்)

மாயவரத்தான்... said...
This comment has been removed by a blog administrator.
மாயவரத்தான்... said...

//பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது இயல்புதான்.//

சுத்தப் பொய். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலேயே மயிலாடுதுறையில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் எதிர்கட்சியான தி.மு.க. தான் வெற்றி பெற்றது. இத்தனைக்கு வீதி வீதியாக சென்று எம்.ஜி.ஆரும் இன்னபிற அமைச்சர்களும் கடும் பிரசாரம் செய்தனர்.
தேர்தல் முடிவெல்லாம் வந்தப்புரம் இப்படியெல்லாம் சொல்றது நியாயமா? இதை தேர்தலுக்கு முன்னடியே சொல்லியிருந்தா எவ்வளவோ செலவை மிச்சபடுத்தியிருக்கலாமே?! 'இந்த இடைத் தேர்தல் என்னோட மானப் பிரச்னை' அப்படீன்னு சொல்லி தெருத் தெருவா ஓட்டுக் கேட்ட தமிழ்க்குடிதாங்கி (எல்லா பத்ரிகைகளிலும் ஆதாரம் இருக்கு சார்..! கேட்டா, பத்திரிகைகள் அவருக்கு எதிரி அப்படீங்காதீங்க!) இப்போ இப்படி சொல்றது அந்தர் பல்டி.

அனுராக் சார், ஒரு பேச்சுக்கு இந்த தொகுதிகளிலே தி.மு.க. ஜெயிச்சிருந்திச்சின்னா என்ன சொல்லியிருப்பீங்க..?!

* சங்கராச்சறியார் மேலே பழி வாங்கும் நடவடிக்கை எடுத்ததினால தான் அ.தி.மு.க. தோத்துச்சுன்னு யாரும் வாயை தொறந்திருப்பாங்களா?!

* இது அ.தி.மு.க்.அ அரசின் செயல் பாட்டுக்கு கெடச்ச அடி., மத்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டுக்கு கெடச்ச வெற்றி அப்படீன்னு தானே பேசுவாங்க.

கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் சொல்ற மாதிரி, 'தோல்வியை ஒப்புக்குற பக்குவத்தை வளர்த்துக்கணும்'. அதை விட்டுட்டு அடுத்த பொதுத் தேர்தலிலே நாங்க தான் அப்படீங்கிறது நொண்டிச்சாக்கு.

newsintamil said...

திமுக ஜெயித்திருந்தால் ஏழுகட்சி கூட்டணிதான் காரணமென்று தான் நானும் நினைத்திருப்பேன். புள்ளி விபரங்களும் கருத்துக் கணிப்புகளும் அதைத்தானே சொல்லியிருந்தன. இந்தப்பதிவுக்கு காரணமே

//திமுகவின் கூட்டணித் தலைவர்களெல்லாம் இதை அதிமுகவின் பணபலமும், கள்ள ஓட்டுக்களும், அதிகார துஷ்பிரயோகமும் தந்த அநியாய வெற்றி என்று வர்ணித்துள்ளனர்.//

இப்படித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களுக்குப் பதிலளிக்கு முகமாகத்தான்.

தஞ்சையன் said...

அனுராக் கூறுவது முற்றிலும் சரி. இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மற்ற கட்சிகளின் ஓட்டு திமுகவுக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக பாமக,காங்கிரஸ் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துவிட்டது. பணம் விளையாடி இருப்பதாக எதிர்கட்சிகளின் கூற்றில் உண்மை உள்ளதாகவே தெரிகிறது.பணத்தை பெற்றுக்கொண்டு திமுகவினர் உட்பட அதிமுகவிற்கு ஓட்டு போட்டுள்ளனர் என்பது ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தைப் பார்த்தாலே புரிகிறது. காசேதான் கடவுளப்பா..
அந்த கடவுளுக்கும் அது தெரியும்ப்பா...பணம் பாதாளம் வரை பாய்ந்து விட்டது!