2005-05-20

520+ பதிவுகள்:-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை

520+ பதிவுகள்:
-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை
+ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!

தமிழ் வலைப்பதிவுகளில் என்னென்ன எழுதப்படுகின்றன?

தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு வலைப்பதிவுகள் கலவையாக உள்ளன. வலைப்பதிவு அடிப்படையிலும் பதிவுகளை வகைப்படுத்துவது அசாத்தியம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வலைப்பதிவிலும் தனித்தனி பதிவுகள் பலதரப்பட்ட விஷயங்களை முன்வைப்பவையாக உள்ளன.

பொதுவாக ஆராய்ந்தால் இலக்கியத்துக்கு வலைப்பதிவுகளில் குறிப்பிடத் தகுந்த வரவேற்பு இல்லையென்றே கூறலாம். எனவே படைப்பாக்க வலைப்பதிவுகள் இங்கு குறைவு.

நிகழ்வுகளை மையமாக்கி தன் எண்ணங்களை பதிவாக்கி வரும் முறையிலேயே பெரும்பாலான பதிவுகள் எழுதப்பட்ட போதிலும் பத்ரியின் வலைப்பதிவு போல தொடர்ந்து எழுதும் பதிவுகளும் குறைவே.

தொழில்நுட்ப சங்கதிகள், வலையுலக நுட்பங்கள், புதிய தளங்களை அறிமுகப் படுத்தும் வலைப் பதிவுகள் ஓரளவுக்கு உள்ளன.

பிற இணையதளங்கள், பத்திரிகைகளில் வெளியான விஷயங்களை மறுபிரசுரம் செய்யும் வலைப்பதிவுகள் உண்டு.

மத சம்பந்தமான கருத்துக்களை பிரச்சாரம்போலச் செய்யும் வலைப்பதிவுகள் உண்டு.

பழந்தமிழ் இலக்கியம் குறித்த பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சில பொதுவான வலைப்பதிவுகளில் இவை அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு.

பகுத்தறிவு, ஆரியம்-திராவிடம், தலித்தியம் சில பதிவுகளில் உண்டு. பல பதிவுகளில் பின்னூட்டமாகவும் இவை அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு.
புகைப்படம், அறிவியல் போன்றவை உண்டு.

பெண்கள் ஓரளவுக்கு வலைப்பதிகிறார்கள் என்றபோதும் பெண்ணியம் பேசும் வலைப்பதிவுகள் இல்லையென்றே கூறலாம்.

சினிமா நிறையப் பதிவுகளில் காணக்கிடைக்கும் விஷயமாக இருக்கிறது. தமிழ் சினிமா குறித்து மட்டுமல்லாமல் உலக சினிமா குறித்தும் தமிழில் வலைப்பதிகிறார்கள்.

வலைப்பதிவுகளில் சுவாரசியமான விஷயமாக இருப்பதும் எழுதப்படுவதும் அனுபவ அடிப்படையில் எழுதப்படும் பதிவுகள் தான். சுய வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் எழுதப்படும் நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எல்லோருக்கும் பிடித்த விஷயமாக இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் பதிவுகளின் தரம் குறித்த கேள்விகள் எழுந்த போதிலும் அது எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது. வலைப்பதிவுகள் என்ற சுதந்திரமான கருத்துக் களத்தில் யாரும் யாரையும் கட்டுப் படுத்தவும் முடியாது.

தமிழ்மணம் போன்ற கட்டமைப்புகள் வழியாகவரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு பொதுவான சில விதிமுறைகளும், நெறிமுறைகளும் இருக்கலாம். ஆனாலும் எழுத்து என்பது எழுதுகிறவர்களின் பொறுப்புணர்வால் மட்டுமே தரப்படுத்தப் படமுடியும்.

குறிப்பாக வலைப்பதிவுகளின் பின்னூட்டங்கள் பல சமயங்களில் தடம் மாறிச் சென்று விடுகின்றன. அனானிமஸ்களின் பின்னூட்டங்கள் பல சமயங்களில் முகம் சுழிக்க வைக்கின்றன.

சில விஷயங்களில் கருத்துக் கூறும்போது விஷயத்தின் முக்கியத்துவம் எழுதியவர் யாரென்று தெரிவதால் அடிபட்டுப் போய்விட வாய்ப்புண்டு. இத்தருணங்களில் அனானிமஸ் ஆக எழுதுவதில் தவறில்லை.

ஆனால் முகமூடியைச் சாக்காகப் பயன்படுத்தி தற்றவர்களை வசைபாடுவது, தரங்கெட்டு விமர்சிப்பது, தனிப்பட திட்டுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். எழுத்தை விட்டுவிட்டு எழுதியவரை வசைபாடும் போக்கு அநாகரிகமானது.

மற்றபடி தமிழ் வலைப்பதிவுகளின் நோக்கும் போக்கும்....

ம்! பரவாயில்லை...!

(ஆரம்பத்தில் சில பின்னுட்டங்களில் "பெயரிலி" என்று கண்டபோது அனானிமஸின் தமிழ்ப்படுத்தல் என்று தோன்றியது. பிறகுதான் அந்தப் பெயரில் ஒருவர் வலைப்பதிவதை அறிந்தேன். பின்னர் ஒருமுறை புதிய டெம்ப்லேட்டில் அனானிமஸ் என்பதைத் தமிழ்ப் படுத்த முயன்று சரியான சொல் தேடியபோதும் வலைப்பதிவுகளைப் பொறுத்தமட்டில் "பெயரிலி" என்பதே பொருத்தமானதாகத் தோன்றியது.ஆனால் பெயரிலி என்ற பெயரிலேயே ஒருவர் இருப்பதால் அனானிமஸ்ஸை பெயரிலியாகப் பெயர்ப்பதில் சிக்கல். பெயரிலி வேறு பெயர் சூட்டிக் கொண்டால் அனானிமஸ்ஸை பெயரிலி ஆக்கலாம்.

சரிதான்...அப்போது யாராவது பெயரிலி என்ற பெயரில் வேண்டாததை எழுதினால் இங்கே ரமணிக்கு டின்கட்ட அலைவார்கள். ஆகவே பெயரிலி கோபப்பட வேண்டாம். என் யோசனையை வாபஸ் செய்கிறேன்.)

9 comments:

Anonymous said...

மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு சொல்லமுடியுமா ? பெரும்பாலும் தனிநபரின் தாக்கங்களே பதிவாகின்றன. காராசாரமான விவாதங்களில் "அமைதிப் பெரும்பான்மை"யினரின் கருத்துக்கள் விழுவதில்லை.
நீங்களும் சுஜாதா போல் வலைப்பதிவுகளில் இலக்கியம் இல்லை என்கிறீர்கள், டின் கட்டி விடப் போகிறார்கள். :)்

Mookku Sundar said...

Blog என்றால் என்ன என்றும், அதில் எதை எழுதலாம் என்றும் வரையறுக்க முயன்றிருக்கிறீர்கள். எதை வேண்டுமானாலும் (சுவையாக எழுதமுடிந்தால்) எழுதலாம் என்பதுதான் என் வரையறை. என்னைப் பொறுத்த்வரை blog ஒரு Scribble pad. அதில் எழுதப்படுகின்ற விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்தோ, களம் சார்ந்தோ எழுதப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. (நம்மவர்கள் எழுதாத ) ஆங்கில வலப்பதிவுகளைப் படித்துப் பாருங்கள். ஒரு ஐடியா கிடைக்கும்...
எழுதும் 400 பேரும் ஒருவருக்கொருவர் சம்பந்தத்தோடு எழுத வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

எனக்குத் தெரிந்த ஒரே குறை - சாதாரண விஷயங்களை எழுதுவதற்கே முகமூடி போடுகிறார்கள் இங்கே. எனக்குத் தெரிந்த பலபேர் ஒரிஜினல் பெயரில் ஒன்று, முகமூடி பெயரில் ஒன்று என்று பதிவு செய்கிறார்கள்.நட்பைக் கெடுத்துக் கொள்ளாமல் கருத்தைச் சொல்ல முகமூடி போட்டே ஆக வேண்டி இருக்கிறது போலும்.. நம் சகிப்புத்தன்மை அந்த லடசணத்தில் இருக்கிறது. "உள்ளே" பார்த்துக் கொள்ள நம்மவர்கள் தயாராய்ப் இல்லை.

newsintamil said...

மூக்கன்

//Blog என்றால் என்ன என்றும், அதில் எதை எழுதலாம் என்றும் வரையறுக்க முயன்றிருக்கிறீர்கள்//

வலைப்பதிவுகளில் என்னென்ன காணக்கிடைக்கின்றன என்பதை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.என் சொந்த வரையறை எதையும் விதிக்கவில்லை. மேலும் பதிவுகளின் தரம் கூட எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது என்றே சொல்லியிருக்கறேன்.

//எழுதும் 400 பேரும் ஒருவருக்கொருவர் சம்பந்தத்தோடு எழுத வேண்டும் என்ற அவசியமும் இல்லை.//

தலைப்பின் முதல் வரியைப்பார்த்து விட்டு எழுதியிருக்கிறீர்கள்.

520+ பதிவுகள்:
-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை
+ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!

520+ பதிவுகள்: தமிழ்மணத்தில் பதிவாகியுள்ள பதிவுகளின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 521.

-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை= minus ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை

+ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!=plus ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!

தொடர்புடைய பதிவுகளும் உண்டு. தொடர்பற்றவை தான் பலவும். தொடர்பிருக்க அவசியமில்லைதான்.

மாயவரத்தான்... said...

//நட்பைக் கெடுத்துக் கொள்ளாமல் கருத்தைச் சொல்ல முகமூடி போட்டே ஆக வேண்டி இருக்கிறது//

அது சரி.. உங்க 'முகமூடி' பேரு என்னன்னு என் காதிலே மட்டும் சொல்லுங்க சாரே!

Mookku Sundar said...

ரமேஷ்..அட வெண்ணை..!! நான் சொன்ன வாக்கியத்தில "போலும்" ங்கிற கடசி வார்த்தையை விட்டுட்டு பாக்கிய பிடிச்சிட்டு தொங்கறீங்களே..மாயவரத்து குசும்பு..அப்படியே உடம்பு முழுக்க நெளியுது. மயூரநாதர் சத்தியமா எனக்கு முகமூடி பதிவு கிடையாது. போதுமா...காரணம், எழுதணும்னு முடிவு பண்ணிட்ட பிறகு விளைவுகளை நினைத்து நான் கவலைப்படுவது கிடையாது. எப்போதுமே தர்ம அடிக்கு ரெடி..ஹி..ஹி..

Muthu said...

///"பெயரிலி" என்று கண்டபோது அனானிமஸின் தமிழ்ப்படுத்தல் என்று தோன்றியது.///

அனானிமஸைப் பெயரிலி என்பதைவிட முகமூடி என்று சொல்வது பொருத்தமாயிருக்கும். ஆனால் நம்ம "முகமூடி" சண்டைக்கு வரப்போகிறார் எனவே இந்த யோசனையை நான் கூறவில்லை :-).

Anonymous said...

[[அது சரி.. உங்க 'முகமூடி' பேரு என்னன்னு என் காதிலே மட்டும் சொல்லுங்க சாரே!]]

நீங்க மாயவரத்தான், ரமேஷ், நான்தான், விஜயகாந்த் என்று பல பெயர்களில் எழுதும்போது மூக்கன் அவர்கள் எழுதினால் என்ன குறைவு எனக் கேட்கிறேன்?

newsintamil said...

இந்தப் பதிவுக்கு (_) வாக்குகளை பெருவாரியாக அள்ளித்தரும் முகமறியாத Anonymous நண்பருக்கு நன்றி.

மாயவரத்தான்... said...

//நீங்க மாயவரத்தான், ரமேஷ், நான்தான், விஜயகாந்த் என்று பல பெயர்களில் எழுதும்போது மூக்கன் அவர்கள் எழுதினால் என்ன குறைவு எனக் கேட்கிறேன்?//

அட.. டூப்ளிகேட் டோண்டு இங்கேயும் வந்தாச்சா? உங்கள் வரவு நல்வரவாகுக! ரஜினிகாந்ட், டூப்ளிகேட் டோண்டு, பாப்பான் அப்படீங்கிற பெயரிலெல்லாம் எழுதினது கூட நான் தான் (அட.. இது வேற நான் தான்) அப்படீன்னு சொல்ல வேண்டியது தானே?!