2006-05-20

கலைஞருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கலைஞருக்கு

வணக்கம். தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பதவியேற்ற சூட்டோடு வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைகிறீர்கள். நல்லது.

ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நீங்களும் உங்கள் கட்சியினரும் சந்தித்த இன்னல்கள் ஏராளம். வயதில் முதியவர் என்று பாராமல் உங்களை நள்ளிரவில் கைது செய்தார்கள். உங்கள் அன்புக்குரிய மாறனை குண்டுக்கட்டாகத் தூக்கி எறிந்தனர்.

உங்கள் அமைச்சரவையில் இருந்தவர்கள் மீதெல்லாம் பலவகை வழக்குகள் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்கள். உங்கள் மகன் ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து விலக வைத்தார்கள்.

எத்தனை சிரமங்கள்? அத்தனைக்கும் இன்று முடிவு வந்து விட்டது.

எல்லோரும் வியக்கும் வண்ணம் ஏழுகட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று சொல்லி சாதித்துக் காட்டினீர்கள். அந்த நன்றிக்கடனை சோனியாவிடமிருந்து மத்திய அமைச்சர்கள் வடிவில் வசூலித்து விட்டீர்கள்.

இப்போது உங்கள் முறை. நீங்கள் முதல்வராக காங்கிரஸ் உங்களுக்குத் தோள் கொடுத்தது. நீங்களோ முகட்டில் ஏறிக்கொண்டு படிக்கட்டுகளை பந்தாடத் தொடங்கிவிட்டீர்கள்.

அவசர அவசரமாக அமைச்சரவையை முடிவு செய்து யாரும் பங்கு கேட்டுவிடாதபடி பெரியதொரு மந்திரிசபையை அமைத்து விட்டீர்கள்.

அன்று கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொன்னதற்காக இளங்கோவனைப் பந்தாடினீர்கள். அவரோ இன்றும் அந்த அடியின் வலியில் பேதலித்துக் கிடக்கிறார். உங்களிடம் பங்கு கேட்பதற்கு வேறு யாருக்குத் துணிவிருக்கிறது? ஆனால் மக்களை நீங்கள் மறந்து விட்டீர்கள். அன்று உங்களிடம் கணக்குக் கேட்ட எம்ஜிஆரைத் துரத்தினீர்கள். மக்கள் உங்களை எம்ஜிஆர் உள்ளவரை ஆட்சியிலிருந்து அகற்றி வைத்தார்கள்.

இன்று ஜெயலலிதாவின் அகங்காரத்துக்கு பேரிடியைத் தந்த அதே மக்கள் உங்களுக்கும் ஒரு பாடமாகத்தான் தனிப் பெரும்பான்மையை மறுத்தார்கள். அதை ஏற்க மறுத்து மீண்டும் உங்கள் தவறுகளை அரங்கேற்றத் துணிந்து விட்டீர்கள்.

நீங்கள் மாறவேயில்லை. உங்கள் குடும்ப ஆட்சியை நிறுவப் பார்க்கிறீர்கள் என்ற வைகோவை தூக்கி எறிந்தீர்கள். அவரோ சகதியிலிருந்து எழுந்து சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்.

உங்கள் கட்சி தவிர வேறொருகட்சி வளர்ந்து விடக்கூடாது. தேர்தலில் மட்டும் உங்களுக்கு அவர்கள் தயவு வேண்டும். தேர்தல் முடிந்தபின் அவர்கள் உங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் நீங்கள் தூக்கிப்போடும் எச்சில் இலைகளை மட்டுமே அவர்கள் ஏந்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இதில் மட்டும் என்னே ஒற்றுமை.

மத்தியில் முதன்முறை உறுப்பினரான ஒருவரை நெறிகளை மீறி காபினட் அமைச்சராக்கவும், விரும்பிய இலாகாவை பிடிவாதம் பிடித்துப் பெறுவதிலும் உங்களுக்கு வெட்கமேயில்லை. அளவுக்கு மீறி அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொள்வதிலும் நீங்கள் நாணப்படவில்லை. பாவம் உங்களை நம்பிய அவர்கள் தான் இப்போது ஏமாந்து நிற்கிறார்கள். பூட்டிய வீட்டுக்குள் நீங்களும் உங்கள் பரிவாரங்களும் பரிகசிப்பது கேட்கிறது.

கூட்டணி ஆட்சியில் பிரதமர் பதவியைக் கூட வேண்டாம் என்றவர்கள் எம் 'தோழர்கள்'. அவர்கள் இப்போதும் உங்களைப் பின்தாங்கி நிற்பதில் வியப்பேதுமில்லை.

பாமகவின் கணக்கே வேறு. அதனால் அவர்களும் இப்போதைக்கு சுணங்க மாட்டார்கள்.

சுதந்திரத்துக்கு முந்திய 'தியாகி'களின் கட்சியல்ல இப்போது காங்கிரஸ். அன்று உங்களிடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதே காங்கிரஸ் இன்று நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிப் பங்கை எதிர்பார்க்கிறது. வாங்கித்தான் பழக்கமுண்டு கொடுத்துப் பழக்கமில்லை என்பதுதான் உங்கள் கொள்கையா?

(கொள்ளைக்காரர்கள் தான் கொள்ளையில் பங்கு கொடுக்க மறுப்பவர்கள். ஆட்சிபீடமே கொள்ளைக் கூட்டமென்கிறீர்களா? அப்படியானால் இன்னொரு கூட்டத்துக்கு கொள்ளையில் பங்கு கொடுத்தால் உங்கள் பங்கு குறைந்து விடுமென்பது நியாயம்தான்.)

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தான் மக்கள் தந்த தீர்ப்பு. ஏற்பதில் உங்களுக்கு ஏனிந்தத் தயக்கம். அறிவுள்ளவர் தாங்கள். அதை அழிவை நோக்கிப் பயன்படுத்தாதிருங்கள்.

குடும்பப் பாசத்தால் கட்சியையும் கட்சிப்பாசத்தால் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைக்கப் பார்க்கிறீர்கள். மற்றவர்கள் வளர்வதை அனுமதிக்க மறுக்கிறீர்கள். மக்கள் பங்கிட்டுத் தந்ததை பங்கிடாமல் வைத்துக் கொண்டீர்கள்.

அன்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகத்தான் நீங்கள் சொன்னீர்கள். சோனியாவின் அழைப்புக்குப் பின்னரே அமைச்சரவையில் சேர ஒப்புக்கொண்டீர்கள். (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டீர்கள்) இப்போது அதே முறையில் உங்கள் அழைப்பை எதிர்பார்க்கிறது காங்கிரஸ். ஆனால் நீங்களோ கமுக்கமாக கவிழ்த்து விட்டீர்கள்.

கூட்டணிக் கட்சியோடு மோதல் வேண்டாமென்று காங்கிரஸ் தலைமை மவுனித்து விட்டது. தலைமையின் கட்டளையால் தமிழகத் தலைவர்களும் அடக்கியே வாசிக்கிறார்கள். குமுறிக் கொண்டிருப்பவர்கள் தொண்டர்கள் தான். அவர்களை விடுங்கள் இரண்டு பேருக்குமேல் தமிழகத் தெருக்களில் கூடிப்பேசும் பொதுசனம் பேசிக்கொள்வதே இதுதான்.

ராசதந்திரமென்று நீங்கள் நினைக்கலாம். சனநாயகத் துரோகமென்கிறது சனம். இப்போதைக்கு நீங்கள் மறுக்கலாம். எப்போதுமே மறைத்துவிட முடியுமா?

நீங்கள் உங்கள் கூட்டணி நண்பர்களை ஏமாற்றி விட்டதற்காக இறுமாப்புக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அவமானப்படுத்தியது உங்களுக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனையும் தான்.
அவர்களுக்கு என்ன இலவசங்களை ஈந்து விட்டால் இசைந்து போவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் புதிரானவர்கள். உரிய காலத்தில் புரிய வைப்பார்கள்.

அன்புடன்
உங்கள் அணிக்கே வாக்களித்த
பாவம் வாக்காளன்.













96
34
18
9
6












61
6
2











1









சுயேட்சை
1

கொடி படங்கள் : நன்றி : இட்லிவடை

2006-05-10

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் இன்று பல ஊடகங்கள் வழி நமக்கு உடனுக்குடன் தெரிய வருகிறது. ஆனாலும் இணையத்தில் யூனிகோடில் ஒரு செய்தித்தளம் இல்லாதது பெருங்குறையாகவே இருந்து வருகிறது. அக்குறையை இன்று நம் வலைப்பதிவர்கள் தான் தீர்த்து வைக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் நாள் செய்திகளை இட்லி வடை வலைப்பதிவில் மிகச் சிறப்பாக காண முடிந்தது. தேர்தல் முடிவுகளையும் அவர் சிறப்பாகத் தருவார். நண்பர் முத்துவும் தேர்தல் முடிவுகளை சுடச்சுடத் தருவதாகக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுக்கான தமிழ் இணைய தளத்தை யூனிகோடிலேயே அமைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

இந்நிலையில் எனது இப்பதிவை சிறப்பு தேர்தல் திரட்டியாக தேர்தல் முடிவுகளுக்கான இணைப்புத்தளமாக அமைத்திருக்கிறேன்.

இப்பதிவில் உள்ள நிறைகுறைகளை அறியத்தாருங்கள். வேறு ஏதேனும் இணைக்ககூடிய தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் மறுமொழியில் சுட்டி தாருங்கள்.
















தமிழக தேர்தல் முடிவுகள்

சிறப்பு தேர்தல் திரட்டி

தமிழ்மணம்தேன்கூடு
Thamizmanam.com










2006-05-09

தேர்தல்பிற செய்திகள்

9 மே 2006

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 70.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களை வெளியிட்டார். அதிக பட்சமாக கருர் மாவட்டத்தில் 77.5 சதவீதமும் குறைந்த பட்சமாக சென்னையில் 58.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சில தொகுதிகளில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சில குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் 85 சதவீதத்துக்குமேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு அசாதாரண வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் கள்ள ஓட்ட போடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆயினும் இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் 10 தொகுதிகளைச் சேர்ந்த 18 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

வியாழக்கிழமை 234 தொகுதிகளுக்கான வாக்குகள் மொத்தம் 82 மையங்களில் எண்ணப்படுகிறது.

திண்டிவனம் தொகுதியில் ஏற்பட்ட தேர்தல் கலவரத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். அதிமுக வேட்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது.

தூத்துக்குடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஆயிரக்கணக்கான குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

2006-05-08

தேர்தல்கள செய்திகள்

மேலும் சில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் தாக்கப்பட்டதாக சன் டிவியும் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு மையத்தில் புகுந்து கலாட்டா செய்ததாக ஜெயா டிவியும் சொல்லிக் கொண்டிருக்க கண் தெரியாத ஒருவருக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக வேட்பாளர் சீமான் அதிமுகவினரால் தாக்கப்பட்டார் என்று பொதிகை தெரிவித்தது.

தமிழகத்தில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார். துல்லியமான விபரம் நாளை காலைதான் வெளியிட முடியும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தில் 80 வாகனங்களைப் பயன்படுத்திய ஜெயலலிதாவும் 34 வாகனங்களுடன் சென்ற தயாநிதி மாறனும் இவ்வாறு கண்டிக்கப்பட்டனர்.

எக்சிட் போல் எனப்படும் வாக்குப்பதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் திமுக அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அதிமுக தொண்டர்களும் தங்களின் தோல்வியை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். திமுக அணி இறுதிக் கட்ட கருத்துக் கணிப்புகளும், எக்சிட்போல் முடிவுகளும் சாதகமாக இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

2006-05-07

தேர்தல்நாள் செய்திகள்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலையிலேயே காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம்கொடுக்க முயன்றதாக அதிமுகவினர் மீது திமுகவினரும், திமுகவினர் மீது அதிமுகவினரும் ஆங்காங்கே குற்றச்சாட்டு பதிவு செய்து வருகின்றனர்.

இரண்டு செய்திகள்

1.சன் செய்திகள்

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிமுகவினரால் தாக்கப்பட்டார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து தாக்குதல்.

2. ஜெயா செய்திகள்

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வாக்காளர்களுக்கு பணம்கொடுக்க முயன்றபோது சுற்றி வளைப்பு. பெட்டி பெட்டியாக பணத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

updates below (Comments section)

2006-05-04

சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவர் ஜெயலலிதாவா?

இன்று தேர்தல் பிரச்சாரக்களத்தில் சுய உதவிக்குழுக்களின் வாக்குகள் ஜெயலலிதாவுக்கே கிடைக்கும் என்பதாக பேசப்படுகிறது. அதற்குக் காரணமாகக் கூறப்படுவது ஜெயலலிதா தான் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி மகளிர் பொருளாதார தன்னிறைவு பெற வழிகாட்டினார் என்பதாகும்.

சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த நடிகரும் இயக்குநருமான விசு தன் ஜெயா டிவி பேட்டியில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டது இந்த விஷயம்தான். கிராமங்கள் தோறும் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை உருவாக்கியதற்காக பெண்கள் அவரைப் போற்றுகின்றனர் என்பது அவரது கருத்து.

இது உண்மையா?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டனவா?

தமிழகத்தில் மட்டுமே சுய உதவிக்குழுக்கள் உள்ளனவா?

இது ஜெயலலிதாவின் மூளையில் உதித்த மகத்தான திட்டம் என்பது உண்மையா?

வலைப்பதிவர்களின் கருத்தறிய விரும்புகிறேன். குறிப்பாக வங்கிப்பணி தொடர்புடைய தமிழினி முத்து மற்றும் டிபிஆர்ஜோசப் அவர்கள் ஆகியோர் இதுபற்றி கூடுதல் தகவல் தரமுடியும்.