2006-10-20

கடைசி பதிவு

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இத்துடன் அகரவலை தன் பயணத்தை முடித்துக்கொள்கிறது.

2004 செப்டம்பர் 24 அன்று முதல் பதிவை துவக்கிய அகரவலையின் பயணம் இன்று நிறைவு பெறுகிறது.

இதுவரை வாசித்த விமர்சித்த அனைவருக்கும் நன்றி.

அபூர்வ ராகங்கள்

அதிசய ராகமாக தமிழ்த் திரையுலகில் பூத்த ஸ்ரீவித்யா என்ற தாரகை நேற்று உதிர்ந்தது. பாலசந்தரின் இயக்கத்தில் ஸ்ரீவித்யாவின் அபூர்வமான நடிப்பில் கமல் நாயகனாக நடித்த புகழ்பெற்ற படத்தில் தான் ரஜனிகாந்த் அறிமுகமானார். குணச்சித்திர தாரகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி.

சமீபகாலமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீவித்யா மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். புற் றுநோய் தாக்கி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானார். இன்று காலை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலும் பின்னர் பொது அரங்கு ஒன்றிலும் வைக்கப் பட்டபின் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழில் சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் திரைப்படத்திலும் மலையாளத்தில் நடிகர் சத்யன் நடித்த சட்டம்பிக்கவல என்ற படத்திலும் தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்த போது ஸ்ரீவித்யாவுக்கு 13 வயது.

அபூர்வராகங்களின் போது கமலஹாசனால் காதலிக்கப்பட்ட அவர், குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காததால் திருமணம் தாமதமான நிலையில் கமல் வாணியைத் திருமணம் செய்து கொண்டதால் இவரும் தனக்கு அச்சூழலில் ஆறுதலாக இருந்த ஜார்ஜ் தாமஸ் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

நோய் கடுமையாகி மருத்துவமனையில் இருந்த போது கடைசி தினங்களில் தன்னைக்காண திரையுலக நண்பர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆயினும் அந்நிலையிலும் தன்னைக் காண வந்த கமலஹாசனை மட்டும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையாக மட்டுமல்லாமல் நர்த்தகியாகவும் புகழ் பெற்றிருந்த ஸ்ரீவித்யா தன் இறுதிக்காலத்தில் ஒரு நடனப்பள்ளி நடத்த விரும்பியிருந்தாராம். அது நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.

உலகப்புகழ் சங்கீதப் பாடகியின் மகளான ஸ்ரீவித்யாவும் நல்ல பாடகி. சில திரைப்படங்களிலும் பாடியுள்ள அவர் நான்கு வருடங்களுக்கு முன் நண்பர்களின் வற்புறுத்தலால் கேரளாவில் தானே இயற்றிய கீர்த்தனங்களுடன் சங்கீதக்கச்சேரி நிகழ்த்தினார். அதற்குக்கிடைத்த பாராட்டுக்களால் தொடர்ந்து பல கச்சேரிகள் பாடினார்.

கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இவர் இருமுறை பெற்றுள்ளார். மாநில அரசு மரியாதையோடு நடைபெற்ற இவரது இறுதிச்சடங்கை மூன்று மலையாள தொலைக்காட்சி சேனல்கள் இன்று காலை முதலே நேரடி ஒளிபரப்புச் செய்தன.

கணவனைப் பிரிந்து தனியாகவே வாழ்ந்து வந்த ஸ்ரீவித்யாவுக்கு குழந்தைகள் இல்லை என்பதே மிகப்பெரிய சோகமாக இருந்திருக்கிறது.

2006-10-17

பாட்டுக் கேட்க!

இதில் உள்ள பாடல் classmates என்ற புதிய திரைப்படப்பாடல். உள்ளூர் கேபிள்களில் ஒரு நாளைக்கு 50 முறையாவது ஒளிபரப்பாகி வருகிறது. பாடலின் இனிமையோடு காட்சியில் நகைச்சுவையும் மிகுந்த ரசனைக்குரியவை. கேட்கக்கேட்க பார்க்கப்பார்க்க இனிமை.

இந்தப்படத்தில் நான்கு நாயகர்கள். பாக்கியராஜ் மகளுடன் டூயட் பாடிய பிரித்விராஜ், பிரித்வியின் அண்ணன் இந்திரஜித் (இவர்கள் மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் புதல்வர்கள்), என்மனவானில் ஊமைப்பையன் ஜெயசூர்யா, சித்திரம்பேசுதடி நரேன்.

நாயகி எனமனவானில் ஊமைப்பெண் காவ்யா. கேரள பாக்கியராஜ் பாலச்சந்திரமேனன், கேரளாவின் வடிவேலு (கவுண்டமணி?) ஜகதி மற்றும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட்.



2006-10-16

யாருக்கு முதலிடம்?

இது தேர்தல் நேரம். உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து விட்டன. தேர்தல் எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் நாளை எதிர்பார்க்கும் வேளை இது. இதற்கிடையில் முக்கியமான மற்றொரு தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அது என்ன?

ஐஆர்எஸ் என்னும் இந்திய இதழியல் வாசக கணக்கெடுப்பு 2006 முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த முடிவுகளின் படி முந்தைய கணக்கெடுப்பிலிருந்து இதழ்களின் வாசக எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி தென்படுகிறது.

முதல் இடத்தில் இருக்கும் ஸரஸ் ஸலில் இந்தி இதழ் 63 லட்சம் வாசக எண்ணிக்கை கொண்டுள்ளது. ஆயினும் இது முந்தைய எண்ணிக்கையான 73.61 லட்சத்திலிருந்து பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது இடத்திலிருக்கும் மலையாள இதழான வனிதா 35.16 லட்சத்திலிருந்து 33.1 லட்சமாகக் குறைந்துள்ளது. 31.93 லட்சத்திலிருந்து 27.7 லட்சமாக இறங்கியுள்ள க்ரிஹஷோபா இந்தி இதழுக்கு மூன்றாமிடம்.

37.59 லட்சம் வாசகர்களைக் கொண்டிருந்த குங்குமம் 26.3 லட்சம் வாசகர்களாக குறைந்தாலும் தமிழில் முதலாவது இடத்தையும் இந்திய அளவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்திலிருக்கும் குமுதம் தமிழில் இரண்டாவது இடம் பெற்று வாசக எண்ணிக்கையில் 30.71 லட்சத்திலிருந்து 25.4 லட்சமாக குறைந்துள்ளது. .

28.49 லட்சத்திலிருந்து 24.4 லட்சம் வாசகர்களாக குறைந்துள்ள இந்தியா டுடேயின் இந்திப் பதிப்பு ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏழாவது இடத்திலிருக்கும் ஆனந்தவிகடன் 25.5 லட்சத்திலிருந்து 23.4 லட்சத்துக்கு சென்று தமிழில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆங்கில இதழ்களில் India Today முதலிடம், Reader’s Digest இரண்டாமிடம், General Knowledge Today மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.

தமிழில் பிரம்மாண்டமான தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமும் ஏராளமான இலவச இணைப்பு பரிசுகளின் மூலமும் பெற்ற முதலிடத்தை குங்குமம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வாசக ஈர்ப்பையும் அது தொடர்ந்து பேண முடிந்திருக்கிறது. நீண்ட கால முதலிடத்தை இழந்த குமுதம் அதை மீண்டும் பெற முயற்சித்ததாக தெரியவில்லை. விகடன் எப்போதுமே குமுதத்திற்கு பின்னால் நிற்பதிலேயே திருப்திப் பட்டுக்கொள்கிறது.

ஒரு முக்கிய அறிவிப்பு

2006-10-15

சில குறும்படங்கள்

சில தமிழ் குறும்படங்கள் இங்கே,,,

ஒலியும் ஒளியும்

2006-10-12

ரஜினி - ஆல்பம்-2

இன்னும் சில சிவாஜி பட ஸ்டில்கள். ரஜினி, ஸ்ரேயா.

முந்தைய ஆல்பம் இங்கே








சிவாஜி படக்காட்சிகள்



2006-10-11

தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள்

உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலை top universities தளம் வெளியிட்டுள்ளது. அது குறித்த வெற்றியின் பதிவு இங்கே.

இங்கே நான் கூற வந்தது இந்தியப் பல்கலைக் கழகங்கள் எத்தனை இதில் இடம் பெற்றுள்ளன என்பதைப் பற்றியது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் இருநூறு பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் மூன்று மட்டும் இடம் பெற்றுள்ளன.

தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 50 வது இடத்தில் இருந்த ஐஐடி இந்த ஆண்டு 57 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 84 வது இடத்தில் இருந்த ஐஐஎம் இந்த ஆண்டு 68 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 192 வது இடத்தில் இருந்த ஜவகர்லால் நேரு பல்கலை இந்த ஆண்டு 183 வது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களின் நிலையே இதுவென்றால் மற்ற பல்கலைக்கழகங்கள் உலகத்தரத்தில் எந்த இடத்தில் இருக்கும்?

கணினித்துறையில் சாதனைகளைப் புரிந்து வரும் இந்தியர்கள் இந்த உலகத்தரமில்லாத பல்கலைக்கழகங்களில் படித்து வந்தவர்களே என்று எண்ணும்போது வியப்பாகவும் இருக்கிறது.

சிவாஜியில் ரஜினி-ஆல்பம்-1












இயக்குநர் ஷங்கர் இயக்கும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் பல்வேறு தோற்றங்கள்

2006-10-04

மழை! கவிதை

மழை!

மேகப்படைகளின்
மோதலில் சிதறிய
ரத்தத்துளிகள்!

அகரவலையில் இது 100 வது பதிவு!

2006-10-01

கதைக்கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-4

விடுதலை?

பத்து மாதம்
பந்தச் சிறையில்...
இடையில் ஏதோ வெளிச்சம்.
அவள் பெண்ணென்று அறிய
அநீதியான சோதனை...
அறிந்ததும்
ஏதோ
விஷமாத்திரை
விரைந்து வந்தது...
எப்படியோ
தப்பிப் பிழைத்து
விடுதலைக்காக
காத்திருப்பு.
அந்த நாளும் வந்தது.
சுதந்திரக்
காற்றைச்
சுவாசிக்கும் ஆர்வத்தில்
அவள் அறியாமல் போனது
வெளியே
காத்திருக்கும்
கள்ளிப் பால் சொட்டு.

இருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-3

விடுதலை!

அந்த ஆயுள் தண்டனைக் கைதிக்கு இன்று விடுதலை நாள்.
சிறைக்கதவுகள் திறக்கப்படு முன்பே அவன் உயிர் விடுதலை பெற்றிருந்தது.

ஒருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-2

விடுதலை!

கிழவியின் உடலில் சிறைப் பட்டிருந்த உயிர் அவளின் நிறைவேறாத காதலின் நாயகனான பக்கத்து வீட்டுக் கிழவர் வந்து வாயில் நீரூற்றியதும் விடுதலை பெற்று சென்றது.

கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-1

விடுதலை?

நாம் நிரந்தரச் சிறைவாசிகள்
நமக்கெப்போது விடுதலை?

கருவறையிலிருந்து விடுதலையாகி
கல்லறைக்குச் செல்லுமுன்னே
இடையில்
இன்னுமொரு சிறைச்சாலை

சாதிக்கொடுமைகளிலிருந்து
மதமோதல்களிலிருந்து
ஊழல்களில் இருந்து
வன்கொடுமைகளிடமிருந்து
எப்போது விடுதலை

தேசத்தின் விடுதலை
அன்னியர்களிடமிருந்து
இந்த
தேகத்தின் விடுதலை
வன்முறைகளிடமிருந்து

எப்போது கிடைக்கும் விடுதலை?

தேன்கூடு போட்டி விவாதங்கள் தொடர்ச்சி...

தேன்கூடு போட்டி விவாதங்கள் என்ற என் முந்தைய பதிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளோடு தொடர்புடைய சில விளக்கங்கள் தேன்கூடு வலைப்பதிவில் அளிக்கப் பட்டிருக்கின்றன.

அதன் சில பகுதிகள்:

இந்த போட்டிகளின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று:

நல்ல எழுத்துக்களை
வலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது, புதிய வலைப்பதிவர்களுக்கு தமிழில் எழுதும்
ஆர்வத்தினை உருவாக்குவது.

தேன்கூடு.காம் - தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி,
தொகுப்பகம் மற்றும் வலைவாசல் என்ற முறையில் நல்ல எழுத்துக்களை வலைப்பதிவுகளில்
ஊக்குவிப்பது எங்களின் முக்கிய நோக்கமாகக் கருதுகிறோம்.

ஒவ்வொரு முறையும்
நாங்கள் குறிப்பிடுவது போல, வலைப்பதிவாளர்களின் திறமையை அவர்கள் பாணியில் அவர்கள்
பதிவிலேயே வெளிப்படுத்துவதில் உள்ள சுவாரசி்யம் வேறெதிலும் இல்லை என்று நிச்சயம்
நம்புகிறோம். ஆக்கங்களில் கூட, வலைப்பதிவுகளின் அனைத்து சாத்தியக்கூறுகளையும்
எதிர்பார்க்கிறோம். அது பிளாஷ் மென்பொருளில் செய்யப்பட்டு பதியப்படுவதாக
இருக்கலாம்; பாட் கேஸ்டிக் ஆக இருக்கலாம்; புகைப்படங்களாக இருக்கலாம்; வீடியோவாக
இருக்கலாம்; அல்லது கவிதை கதை போன்ற அனைத்து படைப்புக்கூறுகளாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், போட்டிக்கான தலைப்பின் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே
முக்கியம்.

பெயர் வெளியிடாமல், ஆக்கங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு
பதிப்பிப்பது போன்ற முறைகள் இந்த நோக்கங்களுக்கு தடையாக இருக்கும் என்பதினை மனதில்
கொள்ள வேண்டுகிறோம்.

போட்டியில் பங்கேற்பவர்களின் ஆக்கத்திற்கு உடனடியாக
கிடைக்கும், பின்னூட்டங்கள்; விமர்சனங்கள் இவையே இங்கு போட்டியாளர்களுக்கு
கிடைக்கும் உடனடி பரிசுகள் என்று கருதுகிறோம்.

வாக்கெடுப்பின் முறையிலுள்ள
குறைகளைக் குறைக்கும் விதமாக, இந்த மாதத்தின் சில நேரங்களில் சோதனையில் இருந்த
முறைகள் வரும் மாதப் போட்டியில் முழுமையாக இருக்கும். இது கள்ள வோட்டுகளின்
எண்ணிக்கையை முற்றிலும் குறைக்ககூடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம்
குறைக்கக்கூடும்.( உதா: செப்டம்பர் போட்டியின், கடைசி நாள் கடைசி சில
மணித்துளிகளில் ஒரே கணிணியிலிருந்து மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பில் கலந்து
கொண்டு போட்டியின் நோக்கத்தினை, எங்களின் முயற்சி மற்றும் உழைப்பினை,
போட்டியாளர்களின் ஆர்வத்தினை வேடிக்கையாக்க முயற்சி செய்திட்ட சிலரின் முயற்சிகளைத்
தவிர்க்கக் கூடும்.)

வரும் மாதங்களின் போட்டிகளில் வேறு சில மாற்றங்களும்
உங்கள் ஆதரவுடன் செய்ய நினைத்திருக்கிறோம்!

ஆகவே வலைப்பதிவுகளில் படைப்புக்களின் தர மேம்பாட்டுக்கு இந்தப் போட்டி உதவ வேண்டும் என்ற தேன்கூடு நண்பர்களின் நோக்கம் போட்டிப் படைப்புகள் வலைப்பதிவிலேயே இருக்க வேண்டியதன் காரணமாகிறது.

அவ்வாறாக இருந்தாலும் வலைப்பதிவுகளுக்கு தொடர்பேயில்லாத படைப்பாளர்களின் நண்பர்கள் வாக்களிப்பில் மட்டும் கலந்து கொண்டு வாக்களிப்பது என்பது சில நேரங்களில் நேர்மையற்ற முடிவுகளைத் தர வாய்ப்புண்டு.

மேலும் ஐபி தடை போன்ற தொழில் நுட்ப விவகாரங்கள் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதும் கேள்விக்குறியே. அதில் பல்வேறு பிரச்சினைகளும் உள்ளன.

இதற்கு மாற்றாக குறைந்த பட்சம் ஒரு இயங்கும் வலைப்பதிவைச் சொந்தமாகக் கொண்ட வலைப்பதிவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதித்தால் தொடர்பற்ற பிற நபர்கள் வாக்களிப்பதை தவிர்க்க முடியும்.

இதற்கெல்லாம் மேலானது படைப்பாளர்கள் தங்கள் படைப்பின் மீது வைக்கும் நம்பிக்கை. அதுவே இப்போட்டிக்கு வெற்றியை தேடித்தரும்.

வழக்கம் போல ஆர்வமுள்ள நண்பர்கள் படைப்புகளை விமர்சனம் செய்வது போட்டிக்கு சுவை கூட்டும். படைப்புகளை திரட்டிகளில் அவ்வப்போது வாசிக்காத, கவனிக்காதவர்களும் படைப்பை தேடி வாசிக்க வைப்பது விமர்சனங்களே. படைப்பை உருவாக்குவது போலவே விமர்சனமும் ஒரு தனித்திறமை. அதில் தெரியும் ஆர்வமும் படைப்பை பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகளும் படைப்பாளிக்கும் ஊக்கமூட்டுவன. மதிப்பெண்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.

இம்மாத போட்டிக்கு ஆசாத் அவர்கள் விடுதலை என்ற தலைப்பை தந்திருக்கிறார். அனைவரும் விடுதலையோடு விளையாடுவோம்.