2005-04-27

புகைக்காத ரஜினி

பத்திரிகைகளின் விமர்சனத்தை அல்ல பிரபாகரனின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் என்று ரஜினிராம்கி எழுதப்போக அவரது வலைப்பதிவின் பின்னூட்டங்கள் எகிறிவிட்டன. கடைசியில் பாபாவை புலிகள் தடை செய்யவில்லை; பாய்ஸ் மட்டுமே தடை செய்யப்பட்டது என்று சாரம். ஆனால் புலிகள் சந்திரமுகியைத் தடை செய்தால் இணையத்திலிருந்து சந்திரமுகிக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற ராம்கியின் கனவும் பலிக்கவில்லை.(முதலிலேயே உள்நாட்டு உரிமையையும் வழங்காமல் வெளிநாட்டு உரிமையை மட்டும் வழங்கிவிட்டு குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்?)

விமர்சனங்கள், தணிக்கைகள், எதிர்ப்புகள் குறித்து சிந்திக்கும்போது பாபாவுக்கு எதிராக பாமக போராட்டங்கள் செய்திராவிட்டாலும் கூட பாபா ஓடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. பொதுவாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான திரைப்பட ரசிகர்களுக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும். இந்தப் பிடிக்கும் என்பதில் நல்ல படத்துக்கான ரசனை என்பதல்ல.

ஒவ்வொரு மனிதருள்ளும் குழந்தைத்தனம் ஒன்று ஒளிந்திருக்கும். பொதுவாக அது தனிமையில் (வேறு பெரியவர்கள் இல்லாமல்) சிறு குழந்தைகளோடு விளையாடும் தருணங்களில் வெளிப்படும். அடுத்தபடியாக ரஜினி படங்களைப் பார்க்கும் போது.

பெரியவர்களே இப்படியென்றால் சிறியவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும். ரஜினியின் மேனரிசங்கள் அவர்களை குஷிப்படுத்துவதில் அதிசயமில்லை. கூடவே சமீப காலமாக ரஜினியே நகைச்சுவை நடிகராகவும் அவதாரமெடுக்கும் போது பொழுதுபோக்கிற்கும் (சிந்தனையைக் கழற்றி வைத்து விட்டு ரிலாக்சாகப் பார்க்கும்) ரசனைக்கும் வேறென்ன வேண்டும்.

இந்தநிலையில் வந்த பாபா அதன் தெய்வீக? அம்சங்களால் வழக்கமான ரஜினியிசத்தை இழந்தது. ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்காத இந்த மாற்றம் பாபாவின் தோல்வியை உறுதி செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் பாமகவின் போராட்டம் வேறு சேர்ந்து கொள்ள, ரஜினி ரசிகர்களுக்கு தர்மசங்கடம் தவிர்க்கப்பட்டது.

நடிகர்களின் மேனரிசங்களை ரசிக்கும் இளைய தலைமுறை குறிப்பாக 10 வயதிற்குக் கீழுள்ள பையன்ஸ் மத்தியில் பீடி, சிகரெட், சுருட்டு ஊதி வளையம் வளையமாகப் புகைவிடும் ஹீரோக்கள் மாஜீசியன்களாகக் காட்சியளிப்பதில் வியப்பில்லை. அதை அவர்களும் செய்து பார்க்க விரும்புவார்கள் என்பதிலும் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதை யாராவது கடிதமாக எழுதியிருந்தாலோ, பத்திரிகையில் கட்டுரையாகவே எழுதியிருந்தாலும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போயிருப்பார்கள். அரசியல் வாதிகளால் எழுப்ப்பட்டதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. சந்திரமுகியில் ரஜினி இவற்றை முற்றிலும் தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது. நடிகர் விஜய்யும் இனி தன் படங்களில் மது, புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என்று தெரிவித்திருக்கிறார். (இவரும் பையன்ஸ்களின் பெட்.)

அதிகமான தமிங்கிலீஷுக்கு ஸாரி....

2005-04-24

மணிச்சித்திரமுகி

இந்த வாரம் முழுவதும் வலைப்பதிவுகளில் முக்கிய இடம்பிடித்தது சந்திரமுகி. இணையத்தில் பதிவிறக்க வாய்ப்பில்லாததாலும் திருட்டு விசிடியில் பார்க்கும் வழக்கமில்லாததாலும் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜெயா டிவியில் (தான்) போடும்போது பார்த்துக் கொள்ளலாம். அல்லது அதற்கு முன்னதாக உள்ளூர் கேபிளில் (அதுவும் திருட்டு விசிடி தான்) போட்டால் பார்க்கலாம்.

ஏப்ரல் 14 அன்று ஜெயாவில் சந்திரமுகி கண்ணோட்டம் முடியும் நேரம் தான் பார்க்கமுடிந்தது. சன்னில் திரைவிமர்சனம் பார்த்ததில் சந்திரமுகி பாடல்கள் மணிச்சித்திரத்தாழ் பாடல்களோடு ஒப்பிட, போதாது என்று தான் தோன்றுகிறது.

ரஜினி படத்துக்கு இவை நல்ல பாடல்கள் தான். இன்றைய ஹிட் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும். ரஜினி ரசிகர்கள் மனதில் அடுத்த ரஜினி படம் வரும் வரை நிற்கும். தொழில்நுட்ப ரீதியில் கூட மேம்பட்டு இருக்கலாம். ஆனால் பத்தாண்டுகளுக்கும் மேலாக நினைவில் நிற்கும், மனதை ஏதோ செய்யும் இளையராஜாவின் மணிச்சித்திரத்தாழுக்கு முன் சந்திரமுகி திரையரங்குகளில் இருக்கும் வரையேயான ஆயுள் கொண்ட வித்யாசாகரின் இசை ஒரு படி கீழேதான்.

மலையாளப் படத்தில் சுரேஷ்கோபி (தமிழில் பிரபு செய்துள்ள வேடம்) முறைப்பெண்ணாக வரும் வினயாபிரசாத்துக்குத் தான் மனநோய் என்று முடிவுகட்டி அவரைக் குணப்படுத்த குடும்ப நண்பரான மனநல நிபுணர் மோகன்லாலை அழைக்கிறார். மனநோய் அவருக்கல்ல சுரேஷ்கோபியின் மனைவியாக வரும் ஷோபனாவுக்குத்தான் என்று கண்டறிந்து......படத்தின் முடிவில் வினயாவைத்தான் மோகன்லாலின் ஜோடியாக காட்டுகிறார்கள்.

தமிழில் பிரபுவுக்கு முறைப்பெண்ணாக மாளவிகா வருவதாக விமர்சனங்களில் பார்த்தேன். இங்கே ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா. அவரும் டாக்டர்தான் என்று ஏதோ ஒரு விமர்சனத்தில் காட்டினார்கள்?
சன்டிவி திரை விமர்சனத்தில் பார்த்தால் நயன்தாரா பாட்டு டீச்சர் மாதிரி
தெரிகிறது. உண்மையில் துர்கா யார்? வலைப்பதிவுகளில் விமர்சனம் எழுதிய
ஏராளமானவர்களில் யாரும் இதைப் பற்றிக் குறிப்பிடக் காணோம்!

மணிச்சித்திரத்தாழுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து பாசில் எடுத்த விஸ்மயகும்பத்து என்ற படத்தில் 'கோமா நிலையில் பூட்டிய வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணின் ஆன்மா தனக்கு உதவக்கூடிய ஒருவரைத்தேடி அலைகிறது. இறுதியில் ஏழாவது அறிவுகொண்ட மோகன்லால் கதாபாத்திரத்தின் உதவியால் அவள் தன் பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறாள். இந்த அனுமாஷ்யமான பெண்ணின் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நயன்தாரா'. இதனாலேயே அவர் துர்கா கதாபாத்திரத்திற்காகத் தேர்வு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

படம் வந்த பிறகான விமர்சனங்கள் வாயிலாக ரஜினிக்கேற்றபடி ஒருசில
காட்சிகளையும் சில கதாபாத்திரங்களையும் மட்டும் மாற்றிவிட்டு
மணிச்சித்திரத்தாழை அப்பட்டமாகக் காப்பியடித்த படம் என்று தெரிகிறது.
பிரதான கதாபாத்திரமான கங்கா பெயர் கூட மாறவில்லை.

அப்புறம் ஜோதிகாவின் நடிப்பை எல்லோரும் ஒருமனதாகப் பாராட்டியுள்ளனர். ஷோபனாவுக்கு தேசிய விருது வாங்கித்தந்த வேடமாச்சே. படத்தின் மற்ற விடயங்களை படம் பார்க்காததால் ஒப்பிட முடியவில்லை.

இயக்குநர் பாசில் இந்தப் படத்திற்காக என்னென்ன ஆராய்ச்சிகள் செய்தார்; எத்தனை ஆண்டுகள் உழைத்தார், என்று அப்போது வெளிவந்த (மலையாளப்) பேட்டிகளைப் பார்த்தால் தெரியும். அவரிடம் முன்பு உதவி இயக்குநர்களாக இருந்த சித்திக், லால், மது உட்பட பல பிரபல இயக்குநர்கள் இதில் பாசிலுக்கு உதவியிருக்கிறார்கள். அத்தனை பேரின் உழைப்பையும் சுரண்டிவிட்டு இது என்னுடைய சொந்தக் கதை என்று கூசாமல் சொல்கிறார் பி.வாசு. இதனால்தான் பாசில் வழக்குத் தொடரப் போவதாக நோட்டீஸ் அனுப்பினார். பெரிய இயக்குநரான பாசில் இப்படிச் செய்யலாமா? என்று வாசு அங்கலாய்க்கிறார். 12 வருடங்களுக்கு முன்வந்த படத்தைச் சொல்லி காசு கேட்கிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார். இவரைப்போல அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் உருவி படம் பண்ணுகிறவர்களுக்கு கதைகளுக்காக ஆராய்ச்சி செய்வதும் சிற்பியின் லாவகத்துடன் செதுக்கிச் செதுக்கி உருவாக்கும் திரைக்கதைகளும் புதிதாகத்தானிருக்கும்.

சந்திரமுகி மட்டும் பார்த்தவர்கள் இந்தப் பாடல்களை (இதுவரை கேட்காவர்கள்) ஒவ்வொன்றும் குறைந்தது மூன்றுமுறை கேட்டுவிட்டு கீழே பின்னூட்டமிடவும்...

ஒருமுறை வந்து பார்த்தாயா

பழந்தமிழ்ப் பாட்டிழையும்

வருவாயென் றானதும்

2005-04-23

தமி(ழ)ழா!

இந்திய அரசு சார்பில் சிடாக் வெளியிட்டுள்ள தமிழ் குறுவட்டு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இணைய வேகக்குறைவால் பதிவிறக்குவதிலும் சிக்கல். சிடிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அதைப் பார்த்தபின் கருத்துச் சொல்லலாம் என்று இருந்தேன். இதற்குள்ளாக இதைச் சொல்லி வலைப்பதிவுகளில் தீவிர வாக்குவாதங்கள் வேறு நடைபெற்று வருகின்றன. பத்ரி மற்றும் மதியின் பதிவுகளின் பின்னூட்டத்தில் முகுந்தும் ஜெயராதாவும் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொள்வதையும் பார்க்கமுடிகிறது. இதில் எனக்குச் சில சந்தேகங்கள் எழுகின்றன.


பத்ரியின் பதிவில் ஜெயராதா எழுதியது இது


//ஃபையர் ஃபாக்ஸ் பொருத்தவரை பதிவு செய்தது. மேலாண்மை பொருப்பு மற்றும் ·பையர் ஃபாக்ஸ் cvs க்கு விண்ணப்பித்தது எல்லாம் அடியேன் தான். அதுவும் ஃபையர் பாக்ஸைமுழுவதும் முடித்து அந்நிறுவனத்திற்கு அனுப்பி அதன் அடுத்த பதிப்பில் தமிழ் ஆதரவு என்ற நற்செய்தியை எதிர்பார்த்து காத்திக்கும் சமயத்தில், தமிழா குழு மொசில்லாவில் ஒரு சின்ன ஒட்டு போட்டு ஃபையர் ஃபாக்ஸை தான் முடித்ததாக அறிவித்தது.....//


பத்ரியின் பதிவில் முகுந்த் எழுதியது இது


//தாங்கள் பயர்பாக்ஸ் இல் வேலை செய்வதாக எழுதிய மடல்கள் எல்லாமே. 18 பிப்ரவரி 2005 அன்று தமிழ் பயர்பாக்ஸ் பொதியை நாங்கள் வெளியிட்டு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தப் பிறகுதான் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீரா?//


மேற்கண்டவைகளை வாசித்தால் தமிழ் பயர்பாக்ஸ் வேலையை இருவருமே (தனித்தனியாக) செய்து முடித்து விட்டதாகத் தோன்றுகிறது.ஆனால் அதே கருத்தின் தொடர்ச்சியாக முகுந்த் எழுதியது இது.


//தங்களிடம் இருக்கும் கோப்புகளை எங்களுக்குத் தேவையான .po வடிவில் மாற்றித் தாருங்கள் முழுமையான தமிழ் பயர்பாக்ஸ் பொதியை தமிழுலகுக்கு அளிப்போம் என்று நான் பொது அரங்கில் (தமிழ்லினக்ஸ் குழுவில்) (date: Mar 4, 2005) எழுதிய மடலுக்கு இன்னும் இவரிடம் இருந்து பதிலே காணோம்.//


பிப்ரவரி 18ல் முடித்து வெளியிட்டவர் மார்ச் 4ல் கோப்புகளைத் தாருங்கள் முழுமையாக முடிக்கலாம் என்று மடல் எழுதியதாகக் கூறுகிறார். அப்படியானால் முடிக்காமலே வெளியிட்டு விட்டாரா?


ஜெயராதாவின் இந்த வரிகள் அவரும் முழுவதுமாக செய்து முடிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

//நான் ஃபையர் ஃபாக்ஸ் முயற்சியையும் நிறுத்திக்கொள்கிறேன். நீங்களே முயன்று முடிக்கவும்.//


இது ஒருபுறமிருக்க


//ஜெயராதாவின் பின்னூட்டத்தைப் பற்றி என் கருத்துக்கள்...
முன்பு ழ-கணினி குழுவைச் சேர்ந்தவரும் தற்போது ஒரு பன்னாட்டு நிறுவணத்திற்காக முழுநேர மொழிபெயர்பில் இருக்கும் ஜெயராதாதானா அல்லது வேறு ஒரு ஜெயராதாவா என்று தெரியவில்லை.
ஏற்கணவே ழ-கணினி ஆட்களுடன் முட்டி மோதி ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. அதனால் மீண்டும் இவருடன் வாதிட எனக்கு விருப்பமில்லை//


என்கிறார் முகுந்த். மதியின் பதிவிலும் வலைக்குழுக்களில் இருவரும் முன்பு மோதிக்கொண்ட தகவல் வருகிறது. எனக்கு இத்தகவல்கள் புதிது என்பதனால் பிரச்சினையின் பரிமாணங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு பொதுக்களத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள் மற்றவர்களை முட்டாளாக்குவதாக இருக்கக் கூடாது.


ஜெயராதா அறிமுகமே இல்லாதவர் போல ஒருபுறம் எழுதும் முகுந்த் வலைக்குழுக்களில் விவாதித்தாகவும் எழுதுகிறார். இந்தக் குழப்பத்தினிடையே நான் முன்பு வாசித்திருந்த இந்தச் செய்தி வேறு என்னைக் குழப்புகிறது.


தமிழ் கம்ப்யூட்டர் பிப் 18-29, 2004 இதழில் "ழ" கணினி பற்றிய அறிமுகக் கட்டுரையில்

".....செல்வி ஜெயராதாவும் டிஷ்நெட் குழுமத்தில்தான் பணிபுரிகிறார். சீனியர் சாப்ட்வேர் எஞ்சினியரான இவர் கணினியில் தமிழ் தொடர்பான தொழில் நுட்பங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். "இ-கலப்பை என்ற பெயரில் தமிழ் விசைப்பலகைக்கான டிரைவரை உருவாக்கிய குழுவில் இவரும் ஒருவர்......"


இ-கலப்பையின் Readme கோப்பில் பரிசோதித்தபோது இந்தவரிகள் காணப்பட்டன.


"Jayaradha - Helped in creating the tscii keyboard , graphics and also shared the cost involved in buying the developer licence for ekalappai 1.0"


இ-கலப்பை தயாரித்த 'தமிழா' குழுவின் தலைவர் 'முகுந்த்'!


ஆக இது பின்னாளில் ஏற்பட்ட EGO Clash என்பது அப்பட்டமாகப் புலனாகிறது.தனிப்பட்ட பிரச்சினைகளால் நஷ்டம் தமிழுக்குத்தான்.


கணித்தமிழில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள் இப்படி தனித்தனி குழுக்களாக அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது தமிழனின் தலைவிதியே இதுதானோ என்ற எண்ணம் மீண்டும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


'ழ' கணினி பற்றிய அதீத விளம்பரங்களைப் பார்த்துவிட்டு கணினி வாங்கியவன் நான். அதுவும் அரைகுறைதான் என்பதை அறியும்போது எரிச்சல்தான் வருகிறது.

2005-04-14

விடைபெறுதலும் வினாக்களும்

(கீழே இருப்பதை எழுதி ஐந்து நாட்களாச்சு. என் பதிவிலேயே நுழைய முடியாமல் பிளாக்கர் மீண்டும் சொதப்பியதை மீறி, ஆறிப் போனாலும் இன்னும் தீர்வு தேவையாக இருப்பதானால் இன்று இடுகிறேன்.)

ஒருவாரம் எப்படியோ ஒப்பேத்தி விட்டு இந்த வாரம் முழுவதும் படிப்பதிலேயே கழிந்தது. சில பதிவுகளுக்கு பின்னூட்டம் இட முயன்ன்ன்று தோற்றபின் வெறுமனே வாசிக்கத்தான் முடிந்தது. இன்றும் தமிழ்மணத்தைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது மாலனின் விடைபெறுகிறேன் பதிவு.

சம்பந்தப்பட்ட எல்லாப் பதிவுகளையும் வாசித்து முடித்தபின் முயன்றால் மீண்டும் பின்னூட்டப் பிரச்சினை. ஒருவழியாக சன்னல் பதிவில் பின்னூட்டமிட்டேன் பெயர் பதிவாகவில்லை. எப்படியோ கருத்து பதிவானால் சரி என்று விட்டுவிட்டேன்.

கணினியை நிறுத்திவிட்டுப் போனாலும் மனசில் இந்த கருத்தைத் தொடர்ந்தே நினைவுகளின் ஊடாட்டம். எழுதியாக வேண்டும் என்ற உறுததல்.

மாலனின் பேட்டியை வெளியிட்டபின் தொடர்ந்தும் மாலனைப்பற்றியே எழுத நேர்ந்திருக்கிறது. மாலனின் அரசியல் சார்ந்த கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கிறேன். விவாதித்துமிருக்கிறேன். ஆனால் மாலன் என்ற படைப்பாளியைப்பற்றி எதிர்மறையாக இதுவரை தோன்றியதில்லை. பிகேசிவகுமாருக்கும் கூட இதற்குமுன் தோன்றியிராது. ஆனால் ஜெயகாந்தனைப் பற்றிய மாலனின் விமர்சனமும் திண்ணை இதழ் பற்றிய மாலனின் கருத்துமே சிவகுமாருக்கு மாலனின் படைப்புத் தகுதி பற்றிய கேள்வியெழுப்பும் உள்ளார்ந்த ஆவலைக் கிளறியிருக்கிறது. அதற்குத்தோதாக காலச்சுவடு விமர்சனமும் அவர் கையில் மாட்டியிருக்கிறது.

காலச்சுவடு விமர்சனம் குறித்து இந்தத் தளத்தில் நான் விமர்சிக்க விரும்பவில்லை

அதே சமயம் மாலன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கில் பாராட்டு மட்டுமேன்? என்பதும் பிகேசி முன்வைக்கும் கேள்வி. இதை அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடமே அவர் கேட்டுத்தெளிவு பெறுவதே முறையானது.
ஜெயகாந்தனை வாழ்த்துபவர்கள் கூட அவரது குறைகளை சொல்லியே வாழ்த்துகிறார்கள் என்று அவர் கூறும்போதே மேற்கூறிய பாராட்டு மட்டுமேன் என்ற கேள்விக்கான பதிலும் நமக்குக் கிடைத்து விடுகிறது.

அடுத்து மாலன் தன்னைப் பற்றி உருவாக்கும் பிம்பங்கள் பற்றியது. எனது கேள்விகளுக்குப் பதிலளித்த மாலன் அவரது பிம்பங்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதை கவனமாகத் தவிர்த்திருந்தார். அதிலிருந்தே சிவகுமாரின் இந்தக் கருத்தின் நேர்மையை? என்னால் உணரமுடிகிறது.

ஜெயகாந்தனை மாலன் விமர்சித்தது குறித்த சிவகுமாரின் உறுத்தல்களுக்கிடையே எனது கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மாலன் கூறியதைப் பாருங்கள்.

//10. உங்கள் ஆரம்பகாலப் படைப்புகளில் யாருடைய பாதிப்பு இருந்தது?

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்

11. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழில்..., பிற இந்திய மொழிகளில்..., ஆங்கிலத்தில்..., பிற உலக மொழிகளில்...

தமிழில் பாரதியார். தி.ஜா, (பழைய) ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி (கதைகளுக்காக) ஆங்கிலத்தில், சாமர் செட் மாம், ஜே.டி.சாலிங்கர், ஜான் அப்டைக், மார்கஸ். எனக்கு வேறு மொழிகள் தெரியாது.//

அவர் எழுத்தில் ஜெயகாந்தனின் பாதிப்பு இருந்ததாகக் கூறுகிறார். அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களில் வாழும் எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே என்பதையும் கவனியுங்கள். அந்தப் 'பழைய' என்ற அடைமொழி புதிய ஜெயகாந்தன் மீதான விமர்சனமாக இருக்கலாம். அதையே நீராவி எஞ்சின் என்ற கட்டுரையிலும் குறிப்பிடுகிறார். மாலனுக்கு ஜெயகாந்தனை பாலபாடமாக அறிமுகப் படுத்துமுன் மேற்கண்ட வரிகளை சிவகுமார் கொஞ்சம் ஊன்றிப் படித்திருக்கலாம்.

இது குறித்தெல்லாம் எழுதி நேரத்தை வீணாக்குவதை விரும்பாவிட்டாலும் தவிர்க்க முடியவில்லை.

இனி மாலனின் பதிவு குறித்து....

வலைப் பதிவுகள் நீர்த்துப் போயக்கொண்டிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம். மாலனைப் போன்ற அனுபவமிக்க வலைப்பதிவர்கள் அதை மாற்ற என்ன செய்யலாம்? என்று சிந்திக்க வேண்டுமேயல்லாது ஓடி ஒளிவது தீர்வாகாது.

வலைப்பதிவுகள் ஒரு சிலேட் மாதிரி. நமக்கான சிலேட்டில் நாம் எழுதலாம். எழுதாமல் இருக்கலாம். வெளிநடப்புச் செய்வதற்கு இது சட்டமன்றமல்ல. ராஜினாமா செய்வதற்கு இது உத்தியோகமுமல்ல. மாலன் தினந்தோறும் வலைப்பதிகிற வழக்கமில்லை. எப்போதாவதுதான் பதிகிறார் என்பதால் காசி சொன்ன மாதிரி இதை விடுப்பு என்று கொள்வதற்கும் இடமில்லை.

மாலனுக்கு:(சன்னல் பதிவில் எழுதிய பின்னூட்டம்)
உங்களின் இந்த முடிவு விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாகத்தான் காட்டும.குறைபாடுகள் எங்குதான் இல்லை? விமர்சனங்களை விமர்சனங்களால் எதிர்கொள்ள உங்களால் முடியாதா? உங்கள் இத்தனை வருட அனுபவங்களை மீறி ஏன் இந்தப் பதட்டம்?
எழுதும் மனநிலை வாய்க்கும்போது எழுதுங்கள். தொடர்ந்தும்.

உங்கள் வருத்தம் ஒட்டுமொத்த வலைப்பதிவுகள் குறித்த மதிப்பீடு குறித்து எனில் அது காலத்தின் கோலம். தரம் ஏறும், இறங்கும். முடிந்தவரை உங்களைப் போன்றவர்கள் தான் வழிகாட்டவேண்டும். புறக்கணித்துச் செல்வது நியாயமானதில்லை.

தனிப்பட்ட வருத்தங்கள் எனில் உணர்ச்சிப்பெருக்கில் எடுக்கப்பட்ட முடிவாகிறது. அது ஆறும்போது நீங்கள் மீண்டு(ம்) வந்தேயாக வேண்டும். மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பதிவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து இங்கிருந்து வெளியேறுவேன் என்பது அந்தப் பதிவை அதன் sub-text ஐ நீங்கள் ஏற்பதாகிவிடும். உங்களை வாசிக்கக் காத்திருக்கும் பிற வலைப்பதிவர்களையும் வாசகர்களையும் தான் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவரையும் புறக்கணித்து நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருப்பதானால் நான் சொல்வதற்கும் இனி ஒன்றுமில்லை.

2005-04-03

மாலன் படைப்புகள்

Image hosted by TinyPic.com

மைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா குழுவினருடன் மாலன்மாலன் எழுதிய நூல்களின் பட்டியல்:

சிறுகதைத் தொகுதிகள்:

மாலன் சிறுகதைகள்
கல்லிற்குக் கீழும் பூக்கள்
இறகுகளும் பாறைகளும்
மாறுதல் வரும்

நாவல்கள்:

வழிதவறிய வண்ணத்துப் பூச்சிகள்
நந்தலாலா
ஜன கண மன
எம்.எஸ்

இலக்கிய விமர்சனம்:

புரட்சிக்காரர்கள் நடுவே

கட்டுரைகள்:

சொல்லாத சொல்
நேற்றின் நிழல்கள்

அயலக அனுபவம்:

அன்புள்ள தமிழன்

மாலனின் வலைப்பதிவுகள்:

என் ஜன்னலுக்கு வெளியே

வாசகன்

2005-04-02

மாலன்...தொடர்ச்சி

Image hosted by TinyPic.com

புளோரிடா பல்கலைக்கழக இதழியல் மாணவராக மாலன்

14. நிறைய எழுதாவிட்டாலும் நிறைவாக எழுதுகிறவர் நீங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்புகள் மிகவும் பாராட்டப்படும் படைப்புகள். கட்டுரைகளும் முக்கியமானவை. நாவல்களும் எழுதியிருக்கிறீர்கள். புதிய எழுத்தாளர்கள் உதாரணமாகக் கொள்ளத்தக்க எழுத்துக்கள் உங்களுடையவை. உங்களுடைய படைப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? பிறரால் அதிகம் பாராட்டுப் பெற்றது எது?

அதிகம் பேரின் பாராட்டைப் பெற்றது ஜன கண மன. எனக்கு பிடித்தது பத்திரிகை உலகப் பின்னணியில் நான் எழுதிய Trilogy- ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஆனால் தனித்தனியான மூன்று சிறுகதைகள். (ஆயுதம், அடிமைகள், ஏன்?) அவற்றுக்குப் பின் அறிவியல் புனைகதையான வித்வான்.

15. பல்லூடகத் துறைக்கு நீங்கள் சென்ற அனுபவம்...காரணம் குறித்து...
1991ம் ஆண்டுத் தேர்தலின் போது தேர்தல் முடிவுகளை அவை வெளிவரும் போதே live ஆக அலசுகிற ஒரு முயற்சியை தூர்தர்ஷன் மேற்கொண்டது. ஆங்கிலத்தில் பிராணாய் ராய், இந்தியில் துவா, தமிழ்நாட்டில் இந்தி ஒளிபரப்புக் கிடையாதது ஆகையால் தமிழில் அலச என்னை அழைத்தது. அதை நினைவு வைத்திருந்து சன் டிவி 94ல் என்னை வாரந்தோறும் ஒரு current affairs நிகழ்ச்சி நடத்த அழைத்தது. நான் பொதுவாகவே ஊடக உரிமையாளர்களிடம் பேச வாய்ப்புக் கிடைக்கும் போது எப்படி நாம் புதிய திசைகளை நோக்கி நகர வேண்டுமென வலியுறுத்துவேன். கலாநிதி மாறனிடமும் ஒரு செய்தி சேனலை துவக்க வேண்டும் எனச் சொல்லி வந்தேன். அவர் 2000ல் அந்த முயற்ச்சியில் இறங்கிய போது என்னைப் பொறுப்பேற்றுக் கொள்ள அழைத்தார்.
ஊடகத்துறையில் அச்சிதழ்கள் வாசகர்களால் வழிநடத்தப்படுகின்றன (readership driven) தொலைக்காட்சிகள் சந்தையால் வழிநடத்தப்படுகின்றன (Market driven) அதனால் அது இன்னும் முழு வீச்சோடு வெளிப்படவில்லை.அதன் பொருளாதர காரணங்கள் சிறு பத்திரிகை போல, சிறு தொலைக்காட்சி உருவாக அனுமதிப்பதில்லை. ஆனால் விரைவிலேயே ஓர் துறை சார்ந்த சிறு தொலைகாட்சிகள் (niche television) வரும். செய்தி தொலைக்காட்சிகள் அவற்றின் முன்னோடி.

16. இணையத் தமிழை மற்றவர்களுக்கு அறிமுகம் செயகிறவர் நீங்கள். இணையத் தமிழ் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இதழியல் துறைக்கு வந்து பல காலத்திற்குப் பிறகு ·புளோரிடாப் பல்கலையில் முதுநிலை இதழியல் படிக்கப் போனேன். அங்கு என்னுடைய புரோஜக்ட் மின்னணு செய்தித் தாளுக்கு ஒரு முன்மாதிரி (Prototype) உருவாக்குவது. அப்போது அதற்கான மென்பொருட்கள் கூட சந்தைக்கு வந்திருக்கவில்லை. நாசாவின் துணை அமைப்பான NCSA (National Center for supercomputing applications)விடம் மொசைக் என்ற மென்பொருளை இரவல் வாங்கி எங்கள் முன்மாதிரியை உருவாக்கினோம். இந்தியா திரும்பும் வழியில் சிங்கப்பூர் வந்தேன். என் நெருங்கிய நண்பரும் எழுத்தாளரும், இணைய ஆர்வலருமான நா. கோவிந்தசாமியிடம் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நா.கோ அப்போது கணினிக்கான எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். நாம் இணையத்தில் தமிழில் எழுதமுடியாதா என்று என் தாபத்தை வெளியிட்டேன். அவர் இணையத் தமிழில் தீவிரமாக முனைந்தார்.இன்னும் நன்றாக் நினைவிருக்கிறது. இணையத்தில் தமிழ் அடி எடுத்து வைத்த நாளன்று அவர் என்னை சிங்கப்பூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து, " தமிழ் வந்திருச்சி மாலன், இணையத்திற்குள்ளே தமிழ் வந்திருச்சி " என்று உற்சாகமாகக் கூவியது. என்ன போட்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்க அவர் தனது கணினித் திரையைப் பார்த்து கணியன் பூங்குன்றன் வரிகளை வாசிக்க, சந்தோஷத்தினால் தூங்க முடியாது போன இரவு அது. இணையத் தமிழுக்கு நா.கோ. மதுரைத் திட்ட கல்யாணசுந்தரம், முரசு அஞ்சல் நெடுமாறன், தமிழ்மணம் காசி இவர்கள் எல்லாம் செய்ததைப் பார்க்கும் போது நான் இங்கு எதுவுமே செய்துவிடவில்லை என்பதுதான் நிஜம்..

17. தினமணிக் கதிரில் காந்திஜி சுடப்பட்ட சம்பவத்தையட்டி நீங்கள் எழுதிய தொடர்கதை (ஜன கன மன) மூலம்தான் எனக்கு மாலன் என்ற பெயர் பரிச்சயமானது. அப்போதிருந்தே மாறுபட்டுச் சிந்திப்பவர் என்ற மனப்பதிவு எனக்குண்டு. அது இயல்பானதா? பிரக்ஞையோடே செய்வதா?

மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என ந்தையும் சிந்திப்பதில்லை. கேள்விகளை எழுப்பிக் கொண்டே சிந்திப்பதே வழக்கமாகி விட்டதால் அவை இழுத்துச் செல்லும் திசைகளிலெல்லாம் சிந்தனையும் செல்கிறது. ' போடா! உனக்குக் கோணக் கட்சி ஆடறதே வழக்கமா போச்சு ' என்பது என் அம்மா என்னை வைய அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்.

18. தினமணிக் கதிரில் அந்தக் காலகட்டத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆசிரியர் கஸ்தூரிரங்கனுடனான அனுபவங்கள்?

கஸ்தூரி ரங்கனுடன் கணையாழி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. எமெர்ஜென்சியின் போது அவர் தில்லியில் நியூயார்க் டைம்ஸ் நிருபராக இருந்தார். அதனால் அது பற்றி எங்களுக்குள் கருத்தொற்றுமை இருந்தது. பின்னர் அவர் தினமணிக் கதிருக்குப் பொறுப்பேற்றக் கொண்ட போது நான் சொல்லவிரும்புவதை சொல்ல இடமளித்தார். நல்ல மனிதர்.

19. அன்றைய திசைகள் மலரக் காரணம் மற்றும் தூண்டுதல் எது? திசைகள் இதழ் எதுவரை, எத்தனை இதழ்கள் வெளியாயின?

சாவி வார இதழின் முதலிரண்டு ஆண்டுகளில் அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு நான் ஆலோசனைகளும் கருத்துக்களும் சொல்லி வந்தேன்.தமிழ் வார இதழ்கள் இளைஞர்களை பிரதிபலிக்கவில்லை அவர்களது படைப்புக்களுக்கு இடமளிக்கவில்லை என நான் அநேகமாக ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வந்தேன்.நாளடைவில் 'ஆரம்பிச்சிட்டான்யா' என்று மற்றவர்கள் அலுத்துக் கொள்கிற அளவிற்கு அது இருந்தது.
ஒருநாள் சாவி என்னை அழைத்து ஒரு புதிய பத்திரிகையை துவக்கப் போகிறேன். நீங்கள்தான் அதன் ஆசிரியர். அதை நீங்கள் விரும்புகிறபடியே இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துங்கள் என்று சொன்னார். முப்பது வயதிற்குட்பட்டவர்களைக் கொண்ட ஓர் ஆசிரியக் குழு அமைப்பது எனத் தீர்மானித்து சாவியில் அறிவிப்புக் கொடுத்தேன். வந்த படைப்புக்களின் அடிப்படையில் திறமையானவர்களை மாவட்டம்தோறும் தேர்ந்தெடுத்து குழுவை இறுதி செய்தேன். ( அப்போது ஜூனியர் விகடன் தோன்றியிருக்கவில்லை. அந்த முறையைத்தான் இப்போது ஜூவி பின்பற்றுகிறது) அப்படி உருவான குழுவில் இருந்தவர்கள் இன்றும் பத்திரிகைத் துறையில், படைப்புத் துறையில் சிறப்பாகப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். சில உதாரணங்கள்: சுதாங்கன் (ஜெயா டிவி) மணா( பொறுப்பாசிரியர் புதிய பார்வை) சாருப்பிரபா சுந்தர் ( பொறுப்பாசிரியர் குங்குமம்) பன்னீர் செல்வன் ( முன்னாள் அவுட்லுக்) பானுமதி ராஜாராம் ( இந்தியா டுடே தமிழ்) வஸந்த் (திரைப்பட இயக்குநர்) அரஸ் (ஓவியர்) மருது (ஓவியர்) பட்டுக்கோட்டை பிரபாகர் (எழுத்தாளர்) கார்த்திகா ராஜ்குமார் ( எழுத்தாளர்) பா.கைலாசம் ( மின் பிம்பங்கள்) நலினி சாஸ்திரி (எழுத்தாளர்) குன்றில் குமார் ( குங்குமம்) கல்யாண்குமார் ( தொலைக்காட்சி- திரைப்பட இயக்குநர்) திருவேங்கிமலை சரவணன் ( குமுதம்) இப்படி அது ஒரு நீண்ட பட்டியல்.முப்பது வயதிற்குட்பட்டவர்கள்தான் எழுதலாம் என்று திட்டவட்டமாக முடிவு செய்திருந்தோம். மற்ற பத்திரிகைகளில் எழுதுபவர்கள், படம் வரைபவர்கள் படம் எடுப்பவர்கள் இவர்களின் படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது இன்னொரு முடிவு ( விதிவிலக்கு சுஜாதா- அறிவியல் கதைகளை அறிமுகப்படுத்த, மணியன் செல்வன் -அந்த அறிவியல் கதைகளுக்குப் படம் போட) ஒரே ஒரு தொடர்கதை, நிறைய தகவல் கட்டுரைகள், புதுக்கவிதைகள், abstract ஓவியங்கள் என அது ஓர் வித்தியாசமான முயற்சி. எட்டு மாதங்கள் பத்திரிகை வந்தது.ஆனால் அது அன்றைய வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் நினைவு கூர்பவர்கள் இருக்கிறார்கள்.

20. மிகவும் பரபரப்பான பத்திரிகையாளரான, ஊடகவியலாளரான தாங்கள் மறுபடி சிற்றிதழ் சார்ந்த, அல்லது அதைப்போன்ற இணையச்சிற்றிதழாக திசைகளை வெளியிடவும் வலைப்பதிவுகளில் பங்கேற்கவும் முன்வந்த காரணம் அல்லது ஆர்வம் எதனால் ஏற்பட்டது?

2002ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் தமிழ் எழுத்துக்கள் பற்றி உரையாற்ற வருமாறு அழைப்பு வந்தது. இந்திய, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்கள் கடந்து வந்திருக்கிற பாதை அவற்றின் போக்கு பற்றி ' கயல் பருகிய கடல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். அதற்காக பல நாடுகளில் எழுதப்பட்டவற்றைப் படித்தேன். சில முன்னரே படித்தவை. மீண்டும் காலம் சென்று படித்த போது சில புதிய பார்வைகளைத் தந்தன. ஆனால் தமிழ் உலகளாவிய மொழியாக இருந்த போதிலும், தமிழ் இலக்கிய உலகில் ஓர் ஒருங்கிணைப்பு இல்லை, ஒரு நாட்டில் எழுதப்படும் எழுத்தை இன்னொருவர் அறிமுகம் கூட செய்து கொள்வதில்லை என்ற உண்மை விளைவித்த சிந்தனைகளின் தாக்கம்தான் அதிகம். உலகு தழுவிய ஓர் இதழ் வேண்டும் என நினைத்தேன். திண்ணை வந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் குழுச் சண்டைகள் அதிகம், அது தினமலரின் வாரமலர் போல வம்புகள், கொச்சையான மொழி இவற்றில் ஆர்வம் காட்டி வந்தது. தமிழ் எழுத்துலகின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, கண்ணியமான எழுத்துகளை ஊக்கப்படுத்துவது, சச்சரவை விட சாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற இலக்குகளுடன் திசைகளை ஆரம்பித்தேன்.

21. தங்களின் தற்போதைய பணி மற்றும் பதவி குறித்து கூறுங்கள். இப்பணியில் தாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் கடமையாற்ற முடிகிறதா? அல்லது வாழ்க்கைத்தொழில் மற்றும் இலக்கியம்+இலட்சியம் ஆகியவை வேறுவேறானவை எனக் கருதுகிறீர்களா?

நான் என் பத்திரிகை ஆசிரியர் பணியில் சமரசம் செய்து கொள்வதில்லை. சமரசம் செய்து கொள்பவனாக இருந்தால் குமுதத்திலேயே தொடர்ந்திருப்பேன். நான் பொறுப்பேற்ற பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும், திசைகளில் துவங்கி, அதை நடத்துபவர்களின் அழைப்பின் பேரிலேயேதான் சென்றேன். இணக்கமில்லாத சூழ்நிலை ஏற்பட்டால்தான் விலகி வந்தேன்.
இப்போது இருக்கும் இடத்தில் எதுவும் நிர்பந்தங்கள் இல்லை. செய்திகளை உருவாக்க முடியாது. ஒளித்து வைக்க முடியாது. இந்தத் தொலைக்காட்சியில் இல்லை என்றால் இன்னொரு தொலைக்காட்சியில் அதை நேயர்கள் பார்ப்பார்கள். தொலைக்காட்சிக்கு வருமானம் வரும் முக்கிய வழி விளம்பரங்கள். மக்கள் பார்க்காத தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் கிடைக்காது. பொய்ச் செய்திகளைப் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த தொலைக்காட்சி படுத்துவிடும். ஜேஜே டிவி ஒர் சிறந்த உதாரணம்.
தமிழ்நாட்டில் ஊடகங்கள் பாரம்பரியமாக அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இந்துப் பத்திரிகையின் நிறுவனரும், காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவரும் ஒருவர்தான். ஏ.என்.எஸ் காலத்தில் தினமணி அப்பட்டமான காங்கிரஸ் நிலைப்பாட்டைக் கொண்டுதான் இயங்கி வந்தது. ஆதித்தனார் அரசியல் ஆர்வமாகப் பங்கெடுத்தவர். இதன் காரணமாக மக்கள் எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் கேட்பது அறிவு என்ற ஞானம் கொண்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் எனக்கு உதவுகின்றன.

22. ஞானபீடம் முதல்முறை தமிழுக்குக் கிடைத்ததில் ஏற்பட்ட சர்ச்சைகளும் அது இரண்டாம் முறை கிடைத்திருப்பதற்கான இடைவெளியும் குறித்து..?

இடைவெளி அதிகம்தான். ஆனால் அநியாயமானதில்லை. தமிழ் இலக்கியம் மீண்டும் ஒரு குழு மனோபாவத்தை நோக்கிப் போகும் கால கட்டத்தில் ஒரு ' வெகுஜன' எழுத்தாளனுக்கு இந்த விருது கிடைத்திருப்பது நல்ல மருந்து.

23. இணையத் தமிழின் எதிர்காலம் யார் கையில்?

புதிய படைப்பாளிகளின் கையில். பொறுப்பான வலைப்பதிவர்கள் கையில்.

24. மறக்க முடியாத பொன்மொழி?

பொன்மொழி அல்ல, கவிதை:

" பெரியோர் எனினும் வியத்தலும் இலமே.
அதனினும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே!"

2005-04-01

திசைகள்- மாலன்

மாலன்....

தமிழ்ப் பத்திரிகை உலகின் சிகரம் கண்டவர். இலக்கியப் பத்திரிகையிலிருந்து இணையப் பத்திரிகை வரை, செய்திப் பத்திரிகையிலிருந்து செயற்கைக்கோள் தொலைக் காட்சிவரை ஊடகத்துறையில் ஆழமாகக் கால்பதித்தவர். தமிழின் நம்பர் 1. பத்திரிகையாக இருந்த குமுதம் இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். நம் சக வலைப்பதிவராக நம்மிடையே உரையாடுகிறவர். தற்போது சன்நியூஸ் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
மாலன் என்ற மனிதரை, மாலனுக்குள் இருக்கும் ஆளுமையைப் புரிந்து கொள்ள அவரது இந்தப் பகிர்வு உதவக்கூடும்.

Image hosted by TinyPic.com


கேள்விகள்:

1. உங்களுடைய பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம் குறித்து கூறுங்கள்?

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஓர் இரண்டாம் நிலை சிற்றூரில் படித்த, நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். எனது தாத்தா, அப்பா எல்லோரும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப்பங்கு கொண்டவர்கள்.ஆர்வதோடு நாளிதழ்களும் இலக்கியங்களும் படித்து விவாதிப்பவர்கள். அம்மாவும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். அவருக்கு காந்தி தெய்வம். நேரு மாமனிதர். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மையம் கோயில்கள். இன்று தமிழக அரசின் இலச்சினையாகத் திகழும் கோபுரம் அந்த ஊரினுடையதுதான். ஆண்டாள் பிறந்த ஊர். ஒரு பெரும் சிவன் கோவிலும் உண்டு. அந்த ஊரின் தேர் திருவாருர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே பெரியது. நாங்கள் வசித்த வீதிக்கு (வடக்கு) ரதவீதி என்று பெயர்.தேர் ஊர் சுற்றக் கிளம்பினால் நிலைக்குப் போய்ச் சேர 10 நாளாகும். எங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு நாள் பூரா கிடந்து நான் பார்த்திருக்கிறேன். ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு திருவிழா. அரையர் சேவை என்று ஒன்று நடக்கும். அதை வேறு ஊர்களில் பார்க்க முடியாது ( ஸ்ரீரங்கம் தவிர) ராமநவமி வந்தால் வீட்டுக்கு வீடு கூப்பிட்டு பானகம் என்று வெல்லம் கரைத்த ஏலக்காய் வாசனை கொண்ட இனிப்பு நீர் தருவார்கள்.பக்கத்து கிராமங்களில் இருந்து ·பிரஷ்ஆக காய்கறிகள், பால் ( கூமாப்பட்டி கத்திரிக்காய், கிருஷ்ணங்கோவில் மாவடு, மம்சாபுரம் பால், வெண்ணை) இவற்றை அற்புதமான எளியமனிதர்கள் கொண்டு வந்து விற்பார்கள்.

அந்த ஊரில் இருந்த மூன்று மருத்துவர்களில் என் தாத்தாவும் ஒருவர் என்பதால் எனக்கு எங்கு போனாலும் ராஜ உபசாரம் நடக்கும். ஓர் இளவரசனைப் போல் வளர்ந்தேன்.

2. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று சிறுவயதில் நினைத்திருந்தீர்கள்?

எனக்கென பெரிய கனவுகள் இருக்கவில்லை. அம்மா நான் அவரது அப்பாவைப் போல டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள்.

3. தமிழ் வாசிப்பு அனுபவம் எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணமாக அமைந்தவர்கள் யார்?

என் அப்பா ஒரு தீவிர வாசகர்.ஒரு ஆசிரியர் எழுதிய அனைத்தையும் படிக்காமல் அவரைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்பது அவரது கொள்கை.சாமர்செட் மாம், அலக்சாண்டர் டுமா என்று தலையணை தலையணையாகப் புத்தகங்கள் கொண்டு வந்து இரவில் தலைக்குப் பின் மேஜை விளக்கை எரிய விட்டுக் கொண்டு படிப்பார்.இப்போது அவருக்கு 80 வயதாகிறது. ஸ்பாண்டிலைட்டீஸ் காரணமாக நீண்ட நேரம் உட்கார முடிவதில்லை. ஆனாலும் படிக்கிறார். அவர் ஏதாவது புதிய புத்தகம் படித்தால் உடனே என்னிடம் தொலைபேசியில் அழைத்து அரைமணி நேரமாவது அதைப்பற்றிப் பேசுவார். அப்பாவிற்கு நிறைய நண்பர்கள். கிவாஜ, எழுத்தாளர் தேவன், கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி எல்லோரும் அவரது நண்பர்கள். அவர்களோடும் புத்தகம் பற்றி அல்லது அரசியல் பற்றித்தான் பேசுவார். இவர்களையெல்லாம் நான் என் சிறு வயதில் என் வீட்டில் வெகு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
அம்மாவும் ஒரு நல்ல வாசகி. தமிழில் நிறையப்படிப்பார். அறுபதுகளில் வெள்ளிகிழமை வந்தால் வீட்டில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி எங்கள் இருவருக்கும் இடையே விவாதம் நடக்கும். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான். அவர் மறைவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட படுக்கையில் இருந்தபடியே நித்ய ஸ்ரீ பாடிய பாரதியின் பாட்டொன்றைப் பற்றிப் பேசினார்.

4. உங்களுடைய பள்ளி வாழ்க்கை வாசிப்பைத் தூண்டுவதாக அமைந்ததா? இதைக் கேட்கக் காரணம் இன்றைய மாணவர்களின் பள்ளி வாழ்க்கையில் வெளிவாசிப்பைத் தூண்டும் ஆசிரியர்கள் குறைவு. மாணவர்கள் பள்ளிப் பாடங்களை மட்டும் ஒழுங்காகப் படித்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அன்றும் இம்மாதிரியான சூழல்தான் நிலவியதா?

வாசிக்கத் தூண்டினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு சம்பவம் மறக்கமுடியாதது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை தினமணியில், ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் கட்டிட வேலைக்காகத் தோண்டியபோது ஓரிடத்தில் கட்டுக் கட்டாக கரன்சிகள் கிடைத்தது என்றும், ஆனால் அவற்றைக் கரையான் தின்றிருந்தன என்றும் செய்தி வந்தது. நான் பள்ளிக்குப் போகும் போதும், பிராத்தனைக்காக வரிசையில் நின்றிருந்த போதும் அந்தச் செய்தியே மூளையைப் பிறாண்டிக் கொண்டிருந்தது. வகுப்பிற்குப் போய் உட்கார்ந்து என் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன்.ஆசிரியர் வந்தது, எழுந்து நின்றது, ஆஜர் கொடுத்தது எல்லாம் இயந்திரகதியில் நடந்தது. ஆசிரியர் மத்தியதரைக் கடல் பகுதிகளின் சீதோஷணம் பற்றி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால் கை கவிதையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. என்கவனம் பாடத்தில் இல்லை என்பதை ஆசிரியர் கவனித்து விட்டார். அருகில் வந்து வெடுக்கென்று என் கையெழுத்துப் பத்திரிகையைப் பறித்துக் கொண்டார். அதிலிருந்ததை ஒரு முறை படித்துக் கொண்டார். மேடைக்குப் போய் என்ன அருகில் வர அழைத்தார். சரி தொலைந்தோம், எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்போகிறார் என்று பயந்து கொண்டே போனேன். ஆனால் என்ன ஆச்சரியம். கவிதை எழுதுவது கடவுள் சிலருக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வரம் அப்படி கடவுளின் அன்பிற்குப் பாத்திரமானவன் ஒருவன் நம் வகுப்பில் இருக்கிறான் என்று சொல்லி என் கவிதையைப் படிக்கச் சொன்னார். அவர் அன்று என்னை அவமானப்படுத்தியிருந்தாலோ, வைது அடித்திருந்தாலோ ஒருவேளை நான் அன்றே எழுதுவதை நிறுத்தியிருந்திருப்பேன். இத்தனைக்கும் அவர் தமிழாசிரியர் அல்ல. பூகோள ஆசிரியர்.

நம் குழந்தைகள் துரதிருஷ்டவசமாக தின்று விளையாடி இன்புற்றிருக்கும் வாழ்க்கையை இழந்து விட்டார்கள். நான் முன்பு ஒருமுறை இந்தியா டுடேயில் எழுதிய மாதிரி, இந்த தேசத்தில் குழந்தையாக இருப்பதுதான் எவ்வளவு துன்பமானது!

5. உங்கள் வீட்டுச் (குடும்ப) சூழல் இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்ததா?

ஆமாம். அவர்கள் எழுதச் சொல்லித் தூண்டவில்லை. படிக்கச் சொல்லித் தூண்டவில்லை. ஆனால் எழுதுவதும் படிப்பதும் தவறானது என்று நினைத்ததும் இல்லை.

6. உங்கள் ஆரம்ப வாசிப்பு எத்தகையதாக இருந்தது? தீவிர இலக்கியம் பக்கம் எப்போது வந்தீர்கள்?

வீட்டிற்கு வந்து விழும் வாரப்பத்திரிகைகளை வாசிப்பதில்தான் ஆரம்பித்தது.பள்ளி இறுதி நாட்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தீவிர ஈடுபாடு கொண்டேன். அது பற்றிய செய்திகளைப் படிப்பதற்காக (தினமணி, ஹிந்துவில் அவை மிதமாக இருக்கும்) நூலகங்களுக்குப் போகத் துவங்கினேன்.அங்கு எனக்கு ' எழுத்து' அறிமுகமாயிற்று. அதன் வழையே புதுக் கவிதை இயக்கம் அறிமுகமாயிற்று. சில மாதங்களில் எழுத்தில் என் கவிதை பிரசுரமானதும் சிறு பத்திரிகைகள் மீது ஆர்வம் அதிகமாகி விட்டது.

7. எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது? முதலில் எழுதிய படைப்பு எது?

13 வயதிலிருந்து எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அச்சில் முதலில் வெளிவந்தது கவிதை. 1967ல் சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழில் பிரசுரமாயிற்று. 1972ல். முதல் சிறுகதை கண்ணதாசனில் வெளிவந்தது.

8. நிறையப்பேர் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் அதை அச்சுக்குக் கொண்டு வரும் எண்ணம் இருக்காது, அல்லது தெரியாது. பிரசுர வாய்ப்புகள் குறித்து நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? முதல் படைப்பு எங்கே பிரசுரமாயிற்று?

எழுத்தில் என் கவிதை பிரசுரமாகக் காரணம் முத்துப்பாண்டி என்ற என் வகுப்புத் தோழர். என்னுடன் நூலகத்திற்குப் படிக்க வருபவர். நான் என் பிசிக்ஸ் நோட்டில் எழுதியிருந்த கவிதையை நகல் எடுத்து அவர்தான் அனுப்பி வைத்தார். பிரசுரமாகாது ஆனால் அவர் ஆசையைக் கெடுப்பானேன் என்று நினைத்தேன். பிரசுரமாகிவிட்டது!

9. எழுத்து அல்லது ஊடகம் சார்ந்த தொழில் என்பதான எண்ணம் எப்போது உருவானது?

70 களில் நான் வாசகன் என்று ஒரு சிறு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். 300 பேருக்கு அஞ்சல் வழியில் மட்டும் அனுப்பப்படும் 32 பக்க இலக்கியப் பத்திரிகை. எமெர்ஜென்சியின் போது தஞ்சாவூரில் இருந்தேன். சென்னையிலிருந்து புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகள் தஞ்சை வந்து அந்த முகவரிப் புத்தகத்தை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போனார்கள். எனக்கு ஆச்சரியமும் கோபமும் ஏற்பட்டது. சர்வ வல்லமை உள்ள இந்திய அரசை, ஒரு 300 பேருக்குப் போகிற இலக்கியப் பத்திரிகையால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் வெகுஜனங்கள் அறியாத இலக்கியவாதிகள் எழுதும், பத்திரிகையால்? என்று அந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டேன். ஆறடி ஆளைக் கொல்றதுக்கு அங்குல புல்லட் போதும் தம்பி என்று ஒரு அதிகாரி சொன்னார். உடனடி எதிர்வினையாக நான் எமெர்ஜென்சி பற்றிக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நேரடியாக எழுதினால் அவற்றை அப்போது பிரசுரிக்க முடியாது. பூடகமாக எழுதினேன். அவை கணையாழியில் பிரசுரமாயின. ( ஆலிவர் பெர்ரி என்ற அமெரிக்கப் பேராசிரியர், பின்னால் எமெர்ஜ்ர்ன்சியின் போது எழுதப்பட்ட கவிதைகளைத் திரட்டி Voices of Emergengy என்ற தொகுப்பாக வெளியிட்டார். அதில் இதுவும் இடம் பெற்றது) கதைகளும் எழுதினேன். அவை பாலம் இதழில் வெளிவந்தது.
தொழில்முறைப் பத்திரிகைக்காரனாக வேண்டும் என்ற உந்தல் எமெர்ஜென்சி தந்தது.

10. உங்கள் ஆரம்பகாலப் படைப்புகளில் யாருடைய பாதிப்பு இருந்தது?

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்

11. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழில்..., பிற இந்திய மொழிகளில்..., ஆங்கிலத்தில்..., பிற உலக மொழிகளில்...

தமிழில் பாரதியார். தி.ஜா, (பழைய) ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி (கதைகளுக்காக) ஆங்கிலத்தில், சாமர் செட் மாம், ஜே.டி.சாலிங்கர், ஜான் அப்டைக், மார்கஸ். எனக்கு வேறு மொழிகள் தெரியாது.

12. நீங்கள் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற அளவுக்கு உங்களை இத்துறையில் ஊக்குவித்தவர்கள் எவர்?

ஆசிரியர் சாவி. எடுத்த எடுப்பிலேயே என்னை ஆசிரியாக ஆக்கியவர். பத்திரிகைத் துறையின் வேறு நிலைகளில் (நிருபர், துணை ஆசிரியர்) நான் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார்.

13. உங்கள் பத்திரிகைத்துறை அனுபவங்கள் குறித்து...

வருமானத்திற்குரிய வாழ்வு உபாயமாக மட்டும் பத்திரிகைத் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல் செயல்படுவதாலோ என்னவோ நிறைவாக இருக்கிறது. விளிம்புகளை நகர்த்துவது ( expanding the boundries) என்பதை என் பத்திரிகை உலகப் பணியின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அந்த திசையில் என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன்.சிறு பத்திரிகை- வெகுஜனப் பத்திரிகை இடையேயான இடைவெளியைக் குறைத்து ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக வழி சமைத்தது, இளைய தலைமுறையை எழுத்தின் மீதும் பத்திரிகைகளின் மீதும் நம்பிக்கையும் ஆர்வமும் கொள்ளச் செய்தது, கதை கட்டுரை பேட்டி என்று இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு, அவற்றுக்கு அப்பால் செய்திப் பத்திரிகை என்று ஓர் தளம் இருக்கிறது என அறிமுகப்படுத்தி வைத்தது, கணினித் தொழில் நுட்பத்தை வரவேற்று இடமளித்தது, சினிமா சார்ந்த பொழுது போக்கு ஊடகமாக இருந்த தொலைக்காட்சியை தகவல் ஊடகமாக மாற்ற உழைத்தது என்று என்னால் இயன்ற அளவு உருப்படியாக சில செயல்களை செய்திருக்கிறேன். இவற்றை எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல், கோஷ்டி சேர்க்காமல் செய்திருக்கிறேன். வரலாறு என்னை ஒரு காற்புள்ளியாகக் கூடப் பதிவு செய்து கொள்ளாமல் போகலாம். சிறுபத்திரிகை உலகப் பீடாதிபதிகள் எனக்கு தீப்பெட்டி கூடக் கொடுக்கக் கூடாது என்று ஜாதி பிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனாலும் கண்ணெதிரே விளைச்சலைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. வயிற்றில் பசியோடு வயலில் சாய்ந்து கிடக்கும் கதிர் பார்த்துச் சிரிக்கும் விவசாயியின் நிறைவு.

(தொடரும்)