2004-09-30

மீடியாவும் தமிழக அரசியலும்

*
கலைஞரின் குடும்ப அரசியலை எதிர்த்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் தனிக்கட்சி துவங்கி, ஆண்டுகள் கடந்து கட்டங்கள் பல கடந்து இன்று கலைஞருடன் வைகோ இணங்கிவிட்ட போதிலும் கலைஞரின் குடும்பத்தினர் மனதில் வைகோ மீதான வருத்தம் நீங்கியதாகத் தெரியவில்லை. சன் டிவியில் வைகோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது இதைத்தான் காட்டுகிறது.

*
சுமார் இருபதாண்டுகளுக்கு முன் பிலிப்பைன்சின் வெரித்தாஸ் வானொலியில் "செய்திகள் அளிப்பது எம் ஏ எஸ் ரபி" என்று இனிய குரலில் அழகிய தமிழில் ஒலித்த குரல் பின்னாளில் தமிழக சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் முகம் காட்டத்தொடங்கியது. கம்பீரமான குரலில் நேர்மையான பேட்டிகளையும் அரசியல் விமர்சனங்களையும் வழங்கிப்புகழ் பெற்ற ரபி பெர்னாடின் மீடியா வாழ்வை ஜெயலலிதாவைப் பேட்டி காண்பதற்கு முன், அதற்குப்பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அந்தப் பேட்டிக்குப் பிறகு அவரது பாரபட்சமற்ற கம்பீரமான அரசியல் விமர்சனங்களைப் பார்க்கவே முடியவில்லை. தற்போதோ கேட்கவே வேண்டாம்...ஜெயா தொலைக்காட்சியில் ஐக்கியமாகிவிட்ட பிறகு நிகழ்ச்சிகளில் அவரது தடுமாற்றங்களை வெளிப்படையாகவே காணமுடிகிறது.மூச்சுத்திணறல்களுக்கு நடுவே ஏன் ரபி?

*
நேருக்குநேர் பார்த்தால் எதிராளியின் பலத்தில் பாதியை எடுத்துக்கொள்ளும் வரம் பெற்றவனாக ராமாயணத்தில் வாலியைச் சொல்வார்கள். நிகழ்காலத்தில் அது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. ஜெயைச் சந்தித்தவர்கள் எல்லாம் அவரது புகழ்பாடிகளாகியுள்ளனர். மூத்தவர்கள் கூட காலில் விழுமளவிற்கு என்ன வரம் அது?

*
மாலன் ஒன்றும் இதற்காகச் சந்தோஷப்பட வேண்டாம். சன்னில் மாலனுக்குமே சில பேட்டிகளில் தடுமாற்றம் வந்ததைக் கவனித்திருக்கிறேன். பேட்டி காணப்படுபவர் எஜமானர்களை விமர்சிக்கும்போது!..அடுத்த கேள்வி தடுமாற்றமாக அல்லது மழுப்பலாக வரும். இலக்கியம் செய்வதைவிட அரசியல் செய்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அரணாக இருப்பது...

*
(இன்னும் வரும்) வரணுமா?

2004-09-28

மாறாத புலிக்கிலி...

இன்றைக்கு ரொம்ப முக்கியமான தீவிர(வாத)மான காரியம் குறித்து....

அறிவியல் இன்று கால தூர இடைவெளிகளை அகற்றி விட்டது. இணையம் உலகை ஒரு கணினிக்குள் அடக்க முயல்கிறது. தமிழகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் பிற அயலகத் தமிழர்களும் இணைந்த செயல்பாடுகள் பெருகி வருகின்றன. தமிழுக்காகப் பாடுபடுவதில் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கிறார்கள். இவற்றுக்கு அப்பாற்பட்டு ஒரேயொரு வேறுபாடு காணமுடிகிறது.

ஈழத்தமிழர்களின் வலைத்தளங்களில் எல்லாம் ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களும் கட்டுரைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. தாயக மீட்புக்காகப் போராடும் பொடியன்களைப் பற்றியும் பெருமிதமாகவே பேசுகின்றன அவை. தமிழகத் தமிழர்களோ அதுபற்றிப் பேசவும் தயங்கும் நிலை.

இதற்குக் காரணம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் தங்கள் தாயக மீட்புக்காகப் போராடும் தியாக சீலர்கள். தங்கள் மண்ணை இழந்து வாழும் மக்களுக்கு மீட்புத்தரவல்ல மாவீரர்கள்.ஆனால் தமிழகத் தமிழர்களிடமோ தங்கள் நாட்டின் இளைய தலைவனைக் கொன்ற கொலையாளிகள் என்ற உணர்வு இன்னமும் இருக்கிறது.

வடநாடு தென்னாடு, இந்தி தமிழ் வேறுபாடுகளைக் கடந்து நேரு குடும்பத்தினர் மீது தமிழக மக்கள் கொண்ட பற்று அலாதியானது. எத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் அவர்கள் அதை மறக்க இயலாது. இதனாலேயே எந்த தமிழக அரசியல் தலைவரும் ஈழப்பிரச்சினை குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. கூடவே எந்தக் காங்கிரஸ் தலைவரும் அல்லது தொண்டரும் தங்கள் காங்கிரஸ் விசுவாசத்தின் அடையாளமாக புலிகளை வெறுப்பவர்களாகத்தான் இருந்தாக வேண்டிய நிலை.

தமிழக மக்கள் மனதில் தங்கள் சொந்தச் சகோதரர்களான ஈழத்தமிழர்களின் அனாதரவான நிலைகுறித்த வருத்தமும் ஆவேசமும் நிலைகொண்டிருந்த நேரத்தில்தான் ராஜீவ் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்தது. இது ஈழத்தமிழர்களின் நிலைகுறித்த துயரங்களைப் புறந்தள்ளிப் புலிகளின் மீதான வெறுப்பாகப் பரிணமித்தது.

தமிழக மக்களைப் பொறுத்தவரை ராஜீவா? புலிகளா? என்ற கேள்விக்கு உணர்வுப்பூர்வமான விடை: ராஜீவ்காந்தியே அவர்களின் அன்புக்குரியவர் என்பது. புலிகளின் மீதான அனுதாபங்களும் ஆதரவும் அகன்றுபோய் இந்தக் கொலையின் மூலம் தங்களின் நியாயமான போராட்டத்திற்கான நியாயமான ஆதரவைப்பெறும் தார்மீக உரிமையைக் கூட இழந்து விட்டார்கள்.

ஈழத்தமிழர் நலனுக்கு எதிராக ராஜீவ் செயல்பட்டதாக அவர்கள் உணர்ந்திருப்பின் அதற்குக் காரணம் சிங்கள அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளே தவிர ராஜீவுக்கு தமிழர்கள் மீது வெறுப்பாலல்ல. அவசரப்பட்டு பழிவாங்கப் புறப்பட்டதற்கு புலிகள் கொடுத்த விலை?

போராட்டவாழ்வில் சுமார் பத்தாண்டு பின்னடைவு...தமிழக மக்கள் மனதில் ஆறாத ரணம்...இன்னும் கூட அது கனன்று கொண்டுதான் இருக்கிறது.புலிகளை ஆதரிப்போர் தேசத்துரோகிகளாகக் கருதப்படும் நிலை தொடர்கிறது.

தங்கள் நாட்டை இழந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கோ இது மன வேதனை அளிக்கும் விசயம். ஈழப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியாவின் உதவி தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள். புலிகளும் இன்று அதே உணர்வுடன்தான் இருக்கிறார்கள்.

'கடந்த காலங்களில் சில கொள்கை வகுப்பாளர்களால் ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக உருவான சில கசப்பான நிகழ்வுகள்' என குமுதம் இதழில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வம் ராஜீவ் படுகொலை குறித்துக் கூறியுள்ளதும், புலித்தலைவர் பிரபாகரன் தனது சர்வதேசப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது 'அது ஒரு துன்பியல் சம்பவம்' எனக் கூறியதும் போதுமானவையா என்பது கேள்விக்குறி. இதனிடையே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க வீடியோ பதிவுகள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டிருப்பதும் தங்களுக்கு ரகசிய நடவடிக்கைகள் எதுவும் இந்தியாவில் இல்லை என கூறி வந்த புலிகளுக்கு இன்னொரு பின்னடைவாகத்தான் கருத முடிகிறது.

உணர்வுப் பூர்வமான இந்த விசயத்தில் எந்தத் தட்டு தாழும்? எது உயரும்? என்று உறுதியாகக் கூறிவிட முடியாது.

2004-09-25

அப்படிப் போடு அரிவாளை!

அரிவாள் வீசினா ரவுடியிசம்
அறிவால் பேசினா கம்யூனிசம்

இந்த சினிமாக் காரங்க லொள்ளு தாங்க முடியலப்பா...

பாரதிராஜா குமுதம் பேட்டியொன்றில் தமிழ் சினிமாக்களுக்கு ஆங்கிலப்பெயர் வைப்பது பற்றி விளாசியிருந்தார்.

அதில் ஒருவரி

"கேரளத்தில் தயாரிக்கப் படும் மலையாளப் படங்களுக்கு இங்கு வைப்பது போல ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடியுமா?"

ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்
ஹிட்லர்
வியட்நாம் காலனி
காந்திநகர் செகன்ட் ஸ்ட்ரீட்
காட்பாதர்
காபூலிவாலா
ஜோக்கர்
சூப்பர்மேன்
சம்மர் இன் பெத்லஹேம்
குரோனிக் பேச்சுலர்
4 தி பீப்பிள்
ரெயின் ரெயின் கம் எகெயின்

-சமீப கால சூப்பர்ஹிட் மலையாளப் படங்களில் சிலவற்றின் பெயர்கள் இவை.

1980+ காலகட்ட நினைவுகளோடே வாழ்வதே இவரைப் போன்ற கலைஞர்களின் தற்காலத் தோல்விகளுக்குக் காரணம். அறிவை அப்டேட் செய்வது குறித்துச் சிந்திக்காமல் தங்கள் காலத்துச் சிந்தனைகளை புதிய மொந்தையில் பழைய கள்-ளாகத் தருவதால் தான் ரசிகர்களின் புறக்கணிப்பு நிகழ்கிறது. இவருக்கு மட்டுமல்ல அறிவால் பேசுபவருக்கும் இது பொருந்தும்.

பின்குறிப்பு-

மலையாளத்தில் வந்த படங்கள் பின்னர் தமிழில் தயாரிக்கப் பட்டபோது 'ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்' 'அரங்கேற்ற வேளை'-யாகவும், 'குரோனிக் பேச்சுலர்' 'எங்கள் அண்ணா'-வாகவும் அழகான தமிழ்ப் பெயரில்தான் வெளியாயின. தறபோது 'ஜோக்கர்' 'மீசை மாதவனாகத் தயாராகியுள்ளது.
'4 தி பீப்பிள்' பற்றி யாரும் கேட்பதற்குமுன் பதில் கூறிவிடுவது உத்தமம். அது தமிழில் ரீமேக் செய்யப்படவில்லை. நேரடியாக டப்பிங் செய்யப் பட்டுள்ளது....

இரண்டு கேள்விகள்...

1. ஆட்டோகிராப்-புக்கு அதைவிடப் பொருத்தமாக தமிழ்ப் பெயர் வைத்திருக்க முடியுமா?

2. நியூ படத்தின் தலைப்பை மட்டும் தமிழ்ப்படுத்தினால் போதுமா?

2004-09-24

அகராதி புடிச்சவன்

தமிழில் அகராதி புடிச்சவன் என்றொரு நாட்டுப்புறச் சொற்றொடர் உண்டு. அதிகம் பேசுகிறவர்களைத் தான் அப்படிக் கூறுவார்கள். அதிக சொற்களைத் தெரிந்து வைத்திருப்பதால் தானோ என்னவோ அகராதி படித்தவன் என்ற பொருளில் அகராதி புடிச்சவன் என்கிறார்களோ?..

எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் வணிகவியல் படித்தவர்.
இன்னொரு நண்பர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்லூரிப் பருவத்தில் பேச்சுப் போட்டிகளிலும் பட்டிமன்றங்களிலும் பங்கேற்று சரளமாகவும் அழகாகவும் பேச வல்லவராக இருந்தார். அதனால் அவரது பேச்சுக்கு நிறைய ரசிகர்கள்.(ரசிகைகளும்!)
வணிகவியல் படித்த நண்பருக்கு மட்டும் பயங்கர மனப்புழுக்கம். இவரும் பட்டிமன்றங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். கல்லடி படாத குறை! புலியைப் பார்த்து பூனை சூடு.....
வேறு வழியின்றி நண்பரின் புகழுக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தார். இறுதியில் அவர் ஆங்கில இலக்கியம் படித்ததும் புகழ் பெற்ற ஆங்கிலப் பேராசிரியரிடம் பயின்றதுமே காரணம் (?) என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்க அஞ்சல் வழிக்கல்வித் திட்டத்தில் சேர்ந்தார். குறிப்பிட்ட ஆங்கிலப் பேராசிரியரின் வீடு தேடிச்சென்று தனக்கு ஆங்கில இலக்கியத்தின் மீதுள்ள அபார பற்றைக் கூறி சந்தேகங்கள் கேட்டு வரலானார்.
சில தினங்களிலேயே பேராசிரியருக்கு விபரீதம் புரிந்தது. அவரது கல்லூரி விடுமுறை தினங்களெல்லாம் நண்பரின் முகத்தில் தான் விடிந்தது. ஆங்கிலப் பற்றுக்கான காரணமும் சீக்கிரமே புரிந்தது. பேராசிரியரின் குடும்பக்கடமைகள் பலவும் தடைப்பட பேராசிரியர் விழித்துக் கொண்டார். தான் வெளியூர் போவதாகவும், திரும்பி வர சில தினங்கள் ஆகும் என்பதால் இனி தொலைபேசியில் கேட்டுவிட்டு வந்தால் போதுமென்றும் கூறிவிட்டார்.பின்னர் தொலைபேசித் தொடர்புகளின் போது வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவோ அவசர வேலையாக இருப்பதாகவோ கூறித் தவிர்க்க முற்பட்டார்.
விடாக்கொண்டரான நண்பரோ பேராசிரியர் எதிர்பாராத தருணங்களில் மீண்டும் அழையா விருந்தாளியாக நுழைந்து பேராசிரியரையே அசடு வழிய வைத்தார். கடைசியில் பேராசிரியர் நேரடியாகவே தன்னை விட்டுவிடும்படி கூறவேண்டியதாயிற்று. நண்பர் வேறுவழியின்றி வேறுவழி தேட ஆரம்பித்தார்.
என்னை வந்து ஆலோசனை கேட்டார். நிறைய வாசிக்கும்படி அறிவுரைத்தேன். உடனே நண்பர் நிறைய வார்த்தைகள் உள்ள புத்தகத்தைப் பரிந்துரைக்குமாறு கேட்டார். அகராதி (Dictionary) என சற்று நகைச்சுவை உணர்வுடன் பதிலுரைத்தேன். நண்பர் அதையே வேதவாக்காகப் பற்றிக்கொண்டார். அவரது கண்கள் எனது மேசையில் இருந்த OXFORD DICTIONARY, LIFCO MEGA DICTIONARY களின் மேல் சென்றது. அவசரமாக அவை எனக்குத் தினமும் அவசியப்படுவதைத் தெரிவித்தேன். நண்பர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்.
விபரீதம் மறுநாள் காலையில் ஆரம்பித்தது. HINDU பேப்பருடன் நண்பர் காலையில் ஆஜரானார். அகராதிகளின் பக்கங்கள் அவரது நாவின் எச்சில் தொட்ட விரல்களால் உழுதுமறிக்கப்பட்டன. கையில் இருந்த குறிப்பேட்டின் பக்கங்கள் வேகமாக நிரம்ப ஆரம்பித்தன. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் -இது முதல் நாள் கணக்கு. தொடர்ந்து வந்த தினங்களில் இது அதிகபட்சமாக ஐந்து மணிநேரம் வரை நீடித்தது.
இந்து நாளிதழ் முழுவதும் வாசித்த பிறகு அகராதிகளில் இருந்து 100 புதிய வார்த்தைகளைத் தினமும் குறிப்பேட்டில் பொருளோடு எழுதுவார். அவரது அசுரத்தனமான ஈடுபாடு கண்டு எனது சிரமங்களில் பொறுமை காத்தேன். இந்த நாடகம் நான்கு மாதங்கள் தொடர்ந்தது.
அகராதிகள் குற்றுயிரும் குறையுயிரும் ஆனபிறகு புரட்டல் நின்றது. பதிலாக நண்பர் அதுவரை தான் கற்ற ஆங்கில வார்த்தைகள் பற்றி என்னுடன் விவாதிக்க ஆரம்பித்தார்....
--------------------------------------------------------------------------------------------