2004-09-28

மாறாத புலிக்கிலி...

இன்றைக்கு ரொம்ப முக்கியமான தீவிர(வாத)மான காரியம் குறித்து....

அறிவியல் இன்று கால தூர இடைவெளிகளை அகற்றி விட்டது. இணையம் உலகை ஒரு கணினிக்குள் அடக்க முயல்கிறது. தமிழகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் பிற அயலகத் தமிழர்களும் இணைந்த செயல்பாடுகள் பெருகி வருகின்றன. தமிழுக்காகப் பாடுபடுவதில் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கிறார்கள். இவற்றுக்கு அப்பாற்பட்டு ஒரேயொரு வேறுபாடு காணமுடிகிறது.

ஈழத்தமிழர்களின் வலைத்தளங்களில் எல்லாம் ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களும் கட்டுரைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. தாயக மீட்புக்காகப் போராடும் பொடியன்களைப் பற்றியும் பெருமிதமாகவே பேசுகின்றன அவை. தமிழகத் தமிழர்களோ அதுபற்றிப் பேசவும் தயங்கும் நிலை.

இதற்குக் காரணம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் தங்கள் தாயக மீட்புக்காகப் போராடும் தியாக சீலர்கள். தங்கள் மண்ணை இழந்து வாழும் மக்களுக்கு மீட்புத்தரவல்ல மாவீரர்கள்.ஆனால் தமிழகத் தமிழர்களிடமோ தங்கள் நாட்டின் இளைய தலைவனைக் கொன்ற கொலையாளிகள் என்ற உணர்வு இன்னமும் இருக்கிறது.

வடநாடு தென்னாடு, இந்தி தமிழ் வேறுபாடுகளைக் கடந்து நேரு குடும்பத்தினர் மீது தமிழக மக்கள் கொண்ட பற்று அலாதியானது. எத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் அவர்கள் அதை மறக்க இயலாது. இதனாலேயே எந்த தமிழக அரசியல் தலைவரும் ஈழப்பிரச்சினை குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. கூடவே எந்தக் காங்கிரஸ் தலைவரும் அல்லது தொண்டரும் தங்கள் காங்கிரஸ் விசுவாசத்தின் அடையாளமாக புலிகளை வெறுப்பவர்களாகத்தான் இருந்தாக வேண்டிய நிலை.

தமிழக மக்கள் மனதில் தங்கள் சொந்தச் சகோதரர்களான ஈழத்தமிழர்களின் அனாதரவான நிலைகுறித்த வருத்தமும் ஆவேசமும் நிலைகொண்டிருந்த நேரத்தில்தான் ராஜீவ் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்தது. இது ஈழத்தமிழர்களின் நிலைகுறித்த துயரங்களைப் புறந்தள்ளிப் புலிகளின் மீதான வெறுப்பாகப் பரிணமித்தது.

தமிழக மக்களைப் பொறுத்தவரை ராஜீவா? புலிகளா? என்ற கேள்விக்கு உணர்வுப்பூர்வமான விடை: ராஜீவ்காந்தியே அவர்களின் அன்புக்குரியவர் என்பது. புலிகளின் மீதான அனுதாபங்களும் ஆதரவும் அகன்றுபோய் இந்தக் கொலையின் மூலம் தங்களின் நியாயமான போராட்டத்திற்கான நியாயமான ஆதரவைப்பெறும் தார்மீக உரிமையைக் கூட இழந்து விட்டார்கள்.

ஈழத்தமிழர் நலனுக்கு எதிராக ராஜீவ் செயல்பட்டதாக அவர்கள் உணர்ந்திருப்பின் அதற்குக் காரணம் சிங்கள அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளே தவிர ராஜீவுக்கு தமிழர்கள் மீது வெறுப்பாலல்ல. அவசரப்பட்டு பழிவாங்கப் புறப்பட்டதற்கு புலிகள் கொடுத்த விலை?

போராட்டவாழ்வில் சுமார் பத்தாண்டு பின்னடைவு...தமிழக மக்கள் மனதில் ஆறாத ரணம்...இன்னும் கூட அது கனன்று கொண்டுதான் இருக்கிறது.புலிகளை ஆதரிப்போர் தேசத்துரோகிகளாகக் கருதப்படும் நிலை தொடர்கிறது.

தங்கள் நாட்டை இழந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கோ இது மன வேதனை அளிக்கும் விசயம். ஈழப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியாவின் உதவி தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள். புலிகளும் இன்று அதே உணர்வுடன்தான் இருக்கிறார்கள்.

'கடந்த காலங்களில் சில கொள்கை வகுப்பாளர்களால் ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக உருவான சில கசப்பான நிகழ்வுகள்' என குமுதம் இதழில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வம் ராஜீவ் படுகொலை குறித்துக் கூறியுள்ளதும், புலித்தலைவர் பிரபாகரன் தனது சர்வதேசப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது 'அது ஒரு துன்பியல் சம்பவம்' எனக் கூறியதும் போதுமானவையா என்பது கேள்விக்குறி. இதனிடையே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க வீடியோ பதிவுகள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டிருப்பதும் தங்களுக்கு ரகசிய நடவடிக்கைகள் எதுவும் இந்தியாவில் இல்லை என கூறி வந்த புலிகளுக்கு இன்னொரு பின்னடைவாகத்தான் கருத முடிகிறது.

உணர்வுப் பூர்வமான இந்த விசயத்தில் எந்தத் தட்டு தாழும்? எது உயரும்? என்று உறுதியாகக் கூறிவிட முடியாது.

3 comments:

விடியலின் கீதம். said...

நீதிதேவதை கண்மூடி இருப்பாளானால் அவள் ஒட்டுமோத்த ஈழத்துப்பெண்களுக்கு கொடுமை இழைத்தவளே.அவளும் இந்தியராணுவம் செய்த கொடுமைகளுள் சிக்குண்டு தவித்திருப்பாள் என்றே நினைக்கிறேன். இந்தியராணுவம் வந்தாலும் வந்தார்கள் எம்பெண்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார்கள். ஈழத்தமிழர்களையே தெரியாதவர்களுக்கு போராட்டம் பற்றித்தெரியாதவர்களுக்கு இதெங்கே தெரியப்போகிறது. (ஏதோ ஓர் குடிலில் வாசித்த ஞாபகம் இலங்கையில் தமிழர்களே இருக்கிறார்கள் என தெரியாது என ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார். எமது ஈழத்து எழுத்தாளர் தமிழ் வளற்தார்கள் என்றாவது தெரியுமா? நீங்கள் என்ன தான் பல பரிவாரங்களோடு வந்தாலும் நீதி தேவதை எம்பக்கமே. இதை சொல்லி புரியவைக்க முடியாது உணர்ந்தால் தான் அதன் வலிகள் ரணங்கள் புரியும்.ஈழத்தமிழர் பட்ட ரணங்களையும் வலிகளையும் ( இந்தியராணுவத்தால்) உங்களால் இந்த nஐன்மத்தில் அல்ல ஏழேழு nஐன்மத்திலும் உங்களால்; புரிந்து கொள்ளவே முடியாது.) ஆனாலும் வலிகளை ரணங்களை மொழி இனம் (தமிழ்) என வருகிறபோது நாம் மறந்தே தான் போகிறோம். இப்போ எமது ரணங்களையும் வலிகளையும் சொறிந்து விட்டிருக்கிறீர்கள். சீழ்வடியாது காப்பது தமிழுக்கு நாம் செய்யும் பணி.புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

nalayiny thamaraiselvan

newsintamil said...

உங்களின் உணர்வுப்பூர்வமான குறிப்பு ஈழத்தமிழர்களின் எண்ணத்தையே

பிரதிபலிக்கிறது என்பதை உணர்கிறேன். ஆனால் சர்வாதிகாரிகள்தான் தங்கள்

வீரர்களைக் கொடுமைகளுக்குத் தூண்டுபவர்கள். உலகின் மிகப்பெரிய

ஜனநாயக நாட்டின் தலைவன் சர்வாதிகாரியல்ல. இந்திய ராணுவம் செய்த

கொடுமைகளும் பொய்யல்ல. ஆனால் யார் தூண்டினார்கள்? யார்

உத்தரவிட்டார்கள்? பாவம் ஓரிடம் பழி மற்றோரிடம் என்பதாக

அமைந்ததாலேயே இந்திய ராணுவத்தால் ஈழமக்கள் அடைந்த துயரங்கள்

உலகில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் போயிற்று. அதற்காக அவற்றை

நாங்கள் குறைத்து மதிப்பிடவுமில்லை. தமிழகத் தமிழர்களின் இது தொடர்பான

மனநிலை குறித்து ஒரு பத்திரிகையாளனாக நான் உணர்ந்தவற்றையே

குறிப்பிட்டிருக்கிறேன்.

dondu(#4800161) said...

As long as the Srilankan Tamils took care not to do damage in Tamil Nadu, an average Tamilian supported them. But they had to go and violate all rules of hospitality. There was the explosion at the Chennai airport by EPLF and then Rajiv's assassination by the LTTE. Further, LTTE has been killing fellow Tamils indiscriminately. And their leader Pirabhakaran is staying in the background and is sending Tamil youth to certain death. On the other hand his own children are safe. LTTE's reputation as backstabber precedes them wherever they go. I refer to the assassination of Dharmalingam, who in good faith waived the physical search of LTTE negotiators, who came to meet him. In short, Tamilians of India are sick of such treacherous people.