2004-09-24

அகராதி புடிச்சவன்

தமிழில் அகராதி புடிச்சவன் என்றொரு நாட்டுப்புறச் சொற்றொடர் உண்டு. அதிகம் பேசுகிறவர்களைத் தான் அப்படிக் கூறுவார்கள். அதிக சொற்களைத் தெரிந்து வைத்திருப்பதால் தானோ என்னவோ அகராதி படித்தவன் என்ற பொருளில் அகராதி புடிச்சவன் என்கிறார்களோ?..

எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் வணிகவியல் படித்தவர்.
இன்னொரு நண்பர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்லூரிப் பருவத்தில் பேச்சுப் போட்டிகளிலும் பட்டிமன்றங்களிலும் பங்கேற்று சரளமாகவும் அழகாகவும் பேச வல்லவராக இருந்தார். அதனால் அவரது பேச்சுக்கு நிறைய ரசிகர்கள்.(ரசிகைகளும்!)
வணிகவியல் படித்த நண்பருக்கு மட்டும் பயங்கர மனப்புழுக்கம். இவரும் பட்டிமன்றங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். கல்லடி படாத குறை! புலியைப் பார்த்து பூனை சூடு.....
வேறு வழியின்றி நண்பரின் புகழுக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தார். இறுதியில் அவர் ஆங்கில இலக்கியம் படித்ததும் புகழ் பெற்ற ஆங்கிலப் பேராசிரியரிடம் பயின்றதுமே காரணம் (?) என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்க அஞ்சல் வழிக்கல்வித் திட்டத்தில் சேர்ந்தார். குறிப்பிட்ட ஆங்கிலப் பேராசிரியரின் வீடு தேடிச்சென்று தனக்கு ஆங்கில இலக்கியத்தின் மீதுள்ள அபார பற்றைக் கூறி சந்தேகங்கள் கேட்டு வரலானார்.
சில தினங்களிலேயே பேராசிரியருக்கு விபரீதம் புரிந்தது. அவரது கல்லூரி விடுமுறை தினங்களெல்லாம் நண்பரின் முகத்தில் தான் விடிந்தது. ஆங்கிலப் பற்றுக்கான காரணமும் சீக்கிரமே புரிந்தது. பேராசிரியரின் குடும்பக்கடமைகள் பலவும் தடைப்பட பேராசிரியர் விழித்துக் கொண்டார். தான் வெளியூர் போவதாகவும், திரும்பி வர சில தினங்கள் ஆகும் என்பதால் இனி தொலைபேசியில் கேட்டுவிட்டு வந்தால் போதுமென்றும் கூறிவிட்டார்.பின்னர் தொலைபேசித் தொடர்புகளின் போது வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவோ அவசர வேலையாக இருப்பதாகவோ கூறித் தவிர்க்க முற்பட்டார்.
விடாக்கொண்டரான நண்பரோ பேராசிரியர் எதிர்பாராத தருணங்களில் மீண்டும் அழையா விருந்தாளியாக நுழைந்து பேராசிரியரையே அசடு வழிய வைத்தார். கடைசியில் பேராசிரியர் நேரடியாகவே தன்னை விட்டுவிடும்படி கூறவேண்டியதாயிற்று. நண்பர் வேறுவழியின்றி வேறுவழி தேட ஆரம்பித்தார்.
என்னை வந்து ஆலோசனை கேட்டார். நிறைய வாசிக்கும்படி அறிவுரைத்தேன். உடனே நண்பர் நிறைய வார்த்தைகள் உள்ள புத்தகத்தைப் பரிந்துரைக்குமாறு கேட்டார். அகராதி (Dictionary) என சற்று நகைச்சுவை உணர்வுடன் பதிலுரைத்தேன். நண்பர் அதையே வேதவாக்காகப் பற்றிக்கொண்டார். அவரது கண்கள் எனது மேசையில் இருந்த OXFORD DICTIONARY, LIFCO MEGA DICTIONARY களின் மேல் சென்றது. அவசரமாக அவை எனக்குத் தினமும் அவசியப்படுவதைத் தெரிவித்தேன். நண்பர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்.
விபரீதம் மறுநாள் காலையில் ஆரம்பித்தது. HINDU பேப்பருடன் நண்பர் காலையில் ஆஜரானார். அகராதிகளின் பக்கங்கள் அவரது நாவின் எச்சில் தொட்ட விரல்களால் உழுதுமறிக்கப்பட்டன. கையில் இருந்த குறிப்பேட்டின் பக்கங்கள் வேகமாக நிரம்ப ஆரம்பித்தன. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் -இது முதல் நாள் கணக்கு. தொடர்ந்து வந்த தினங்களில் இது அதிகபட்சமாக ஐந்து மணிநேரம் வரை நீடித்தது.
இந்து நாளிதழ் முழுவதும் வாசித்த பிறகு அகராதிகளில் இருந்து 100 புதிய வார்த்தைகளைத் தினமும் குறிப்பேட்டில் பொருளோடு எழுதுவார். அவரது அசுரத்தனமான ஈடுபாடு கண்டு எனது சிரமங்களில் பொறுமை காத்தேன். இந்த நாடகம் நான்கு மாதங்கள் தொடர்ந்தது.
அகராதிகள் குற்றுயிரும் குறையுயிரும் ஆனபிறகு புரட்டல் நின்றது. பதிலாக நண்பர் அதுவரை தான் கற்ற ஆங்கில வார்த்தைகள் பற்றி என்னுடன் விவாதிக்க ஆரம்பித்தார்....
--------------------------------------------------------------------------------------------

7 comments:

காசி (Kasi) said...

:)

????

KVR said...

அகங்காரம் என்பது மருவி தான் அகராதி ஆனது. மற்றபடி அதிகம் தெரிந்து வைத்திருப்பதால் அல்ல :-).

newsintamil said...

anurag..
இனிய காசி
அடையாளக் குறிகள் இன்னும் பழக்கமாகவில்லை. விளக்கினால் நலம்...
இனிய kvr
உங்கள் விளக்கம் ஏற்கத்தக்கதே. ஆனால் நான் கூற வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று.....

newsintamil said...
This comment has been removed by a blog administrator.
KVR said...

//அதிக சொற்களைத் தெரிந்து வைத்திருப்பதால் தானோ என்னவோ அகராதி படித்தவன் என்ற பொருளில் அகராதி புடிச்சவன் என்கிறார்களோ?..//

சேட்டோ, ஞான் பறஞ்சது ஈ சோத்தியத்துக்கான மறுபடி மாத்திரமானு :-)

newsintamil said...

நந்நி kvr சேட்டா..!

காசி (Kasi) said...

அனுராக், ஒண்ணுமில்லை.
:) ----> சும்மா ஒரு ஹிஹி
???? ----> அப்புறம் என்ன ஆச்சு? அடுத்தது எப்போ?

அவ்வளவுதான். இதுக்கெல்லாம் ISI Standard இருக்கா என்ன? ;-)