2005-02-23

பக்திக் கலாச்சாரங்கள்

நம்ம கிராமத்து சனங்களுக்கு மதம் என்பது வாழ்வியல் கலாச்சாரம் மட்டுமே. அவர்கள் ஆண்டு முழுவதும் உழைத்தபின் அந்த உழைப்பின் பயனை தங்களுக்குத் தந்த இறைசக்திக்கு நன்றி தெரிவிக்குமுகமாகவும் திருவிழாக்களை நடத்துகின்றனர்.

திருவிழா என்பது அவர்களின் கலை கலாச்சார வெளிப்பாடுகளை அரங்கேற்றும் களமாகவும் அமைந்திருக்கிறது.
வேற்றூர்களில் வசிக்கும் உறவுகளைச் சந்திக்கவும் திருவிழாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் அந்தந்த ஊர்களுக்கு தங்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்வது கிராமத்து சனங்களின் வழமையாகும். ஊர்க்கோவில் திருவிழாவில் ஊர்மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் பங்களிப்பும் இருக்கும்.

நகரத்துக் கோவில்களிலோ பங்களிப்பு பண நன்கொடைகளாகவே இருக்கும். விழாக்களை யாரோ நடத்த பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் வந்து போவார்கள். கலாச்சாரப் பக்திக்கும் மதக் கலாச்சாரத்திற்கும் இடையே இன்னும் பல நுட்பமான வேறுபாடுகள் உண்டு.

கிராமத்தவர் பொதுவாகவே மதப்புனிதங்களில் அதிக ஈடுபாடு கொள்வதில்லை. அவர்களின் பக்தி நேரடி பக்தி வகைப்படும். பழம்புராணங்களை விட மக்கள்கதைகளில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். எல்லைச்சாமிகளும் பிற தெய்வங்களும் மனிததெய்வங்களே தவிர "தேவர்களல்ல"

கிராமத்து சனங்கள் தங்கள் விளைச்சலின் பலனில் கடவுளுக்கும் பங்கு தருவார்கள். அந்தப் படையலைப் பகிர்ந்து உண்பார்கள். நோய்நொடி என்றால் தங்கள் குலதெய்வங்களுக்கு நேர்ந்து விடுவார்கள். நேர்ந்துவிட்ட ஆடு, கோழியை அடித்து ஊர்கூடி விருந்துண்ணும்.

மேற்குடியின மதக்கலாச்சாரம் மாறுபட்டது. அவர்கள் தினப்படி ஆண்டவனைப் பூசிப்பவர்கள். குறிப்பிட்ட கோயிலுக்கு விரதமிருந்து வருவதாக நேர்வர். பொன்னோ பொருளோ காணிக்கையிட நேர்வதுண்டு. தங்கள் படையலைத் தாங்களே பிரசாதமாகப் பெற்றுச் செல்வார்கள்.

சுகாதாரம் சார்ந்த முடியிறக்குதல் இருதிறத்தும் வழக்கம். அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு வழிபடுதல் கீழ்நடுத்தரவர்க்கப் பெண்களின் வழக்கம். தீவிர பக்தியின் அடையாளங்களாக அலகு குத்துதல், தீமிதித்தல், அங்கப்பிரதட்சணம் எனப்படும் உடலுருட்டல், மண்சோறு உண்டல் என்பவையும் வழமையாக உள்ளன. முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் சிறப்பிடம் பெறுகிறது.

மன ஆறுதலுக்காக கோவிலுக்குச் செல்வதும், சாமியார்களைச் சந்திப்பதும், யாகம் போன்றவையும் சிலரது வழக்கம்.

தடுக்கிவிழ நேர்ந்தால்கூட "ஐயோ ஆண்டவா" என்றழைக்கும் மேட்டுக்குடி பக்திக்கு நடுவே "ஐயோ ஆத்தா" என தாயையும் தெய்வத்தையும் ஒருங்கே அழைப்பது பாமரர்களின் தனிச்சிறப்பு.

கிராமத்து திருவிழாக்கள் முன்பெல்லாம் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகள, கூத்து போன்ற கலைவடிவங்கள் நிகழ்த்தப் பட்டு கிராமத்து சனங்களின் கலாரசனைக்கும் தீனிபோட்டு வந்தன். பின்னர் திருவிழாக்களிலும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலை பின்னுக்குத் தள்ளப் பட்டது. பக்திப்படங்களில் ஆரம்பித்த திரைக்கலாச்சாரம் பின்னர் ரசிகர்மன்ற நன்கொடைகளாக மாறி மசாலாப் படங்கள் திருவிழாக்களையும் ஆக்கிரமிப்புச் செய்தன. ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பலைகளால் மாற்று ஏற்பாடாக சமயச் சொற்பொழிவுகள் இடம்பிடித்தாலும் அவை இன்று அரசியல் மேடைகளாகவே மாறி மாற்று மதத்தினரையும் மாற்றுக் கட்சியினரையும் தாக்கவே அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது வேதனைக்குரிய செய்தி. இது கிராமத்துத் தனித்துவங்களில் நகரத்து அழுக்குகளின் கலப்பால் விளைந்த மற்றுமொரு சீர்கேடு.

2005-02-21

சாதி(க்காத) நீதி

சாதி பற்றி மனுதர்ம, வர்ணாசிரம தத்துவ விசாரங்கள் பலரும் செய்து முடித்துவிட்ட நிலையில் சாதி என்பது பற்றிய பாமரப் பார்வை என்னவாக இருக்கும்?

பள்ளிகளில் சாதிச்சான்றிதழ் கேட்கும் வரை பிள்ளைகளில் பலருக்கு சாதி பற்றி தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் அது பற்றிய உணர்விருக்காது. அதன் பிறகே மெல்ல மெல்ல எவன் எவன் தன் சாதிக்காரன் என்று பார்க்கத் தோன்றும். அடுத்து மெதுவாக அது ரத்தத்தில் ஊறி, வேர்பிடித்து மேலேறி நரம்பு மண்டலமெங்கும் வியாபித்து சாதிப் பெயரைக் கேட்டதுமே மயிர்க்கூச்செரியத் தொடங்கும்.

படிக்காத ஒரு பாமரனுக்கு சாதி என்பது எல்லைப் பிரச்சினை மாதிரி. நம்ம சாதிக்காரனை அடிச்சிட்டான், திட்டிப்புட்டான், நம்ம சாதிப்புள்ளய அடுத்த சாதிக்காரன் பாத்துட்டான், பழகிட்டான், இழுத்துட்டு ஓடிட்டான் என்பது மாதிரியான தருணங்களில் மட்டுமே அவனுக்கு சாதி உணர்வு தன்னிச்சையாக வரும்.

ஆனால் படித்தவனுக்கு எல்லா நேரமும் சாதி ரத்தத்தில் கலந்திருக்கும். அவனின் எல்லாச் செயல்களிலும் சாதி உணர்வு நிறைந்திருக்கும். சாதிச்சங்கங்களில் பாருங்கள். பெரிய பெரிய அரசு அதிகாரிகளெல்லாம் ஓய்வு பெற்ற பிறகு சாதிச் சங்கங்களில் ஐக்கியமாகி சாதித் தலை(வர்)களாக வலம் வருவதைப் பார்க்கலாம். இவன்களெல்லாம் அரசுப் பணிகளில் இருக்கும்போது எப்படி மற்றவர்களை சமத்துவமாய் நடத்தியிருப்பான்கள் என்று யோசித்தால் திகிலடிக்கிறது.

இட ஒதுக்கீடுகளின் தேவையை மீறி பள்ளிச் சான்றிதழ்களிலிருந்து சாதியை விடுவிக்க வேண்டியது மிகமிக அவசியம். அதேசமயம் இட ஒதுக்கீடுகளுக்கும் மாற்றுவழி கண்டறியப்பட வேண்டும். இப்போதே சாதி அடையாளங்கள் இல்லாத சாதிச்சான்றிதழ்கள் வழங்கப் படவேண்டும். எப்சி, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி என்பது மாதிரி பட்டியல் இட்டாயிற்று. இனி அதன் அடிப்படையிலேயே வழங்கி விடலாம். கூடவே சாதி மறுப்பாளர்களுக்கும் ஒரு தனி ஒதுக்கீடு வழங்கிவிடலாம். (எதிர்காலத்தில் இன்னொரு புதிய சாதி தானாக உருவாக சிறந்த வழி?!)

இதோ ஒருவர் குரல் கொடுக்கிறார் - இட ஒதுக்கீட்டில் இடம்பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் எப்சி-க்களெல்லாம் சாதி மறுப்பாளர்களாகப் பதிவு செய்து கொண்டுவிடுவார்களே - என்று.

ஆனால் அத்தனை தூரம் "இறங்கி" வருவார்களென்று நான் நம்பவில்லை. காரணம் பிரச்சினையே அவர்கள் "ஏறி" இருப்பதுதானே?.... "இறங்க" விரும்புவார்களா என்ன?

2005-02-13

வாசக மனம்

ஜூவியில் ரவிசுப்பிரமணியத்தை மிரட்டிய பெண் வக்கீல்கள் பற்றிய செய்தியைப் படித்த என் நண்பர் "ஜெயேந்திரரை மீண்டும் சிறைக்கனுப்ப போலீஸ் என்னவெல்லாம் கதை கட்டுகிறது." என்றார் அதிரடியாக.

"காஞ்சி சங்கராச்சாரி சிறப்(தொகுப்)பிதழ்" என்ற தலைப்பில் இதுவரை பல்வேறு இதழ்களில் வெளியான பலவேறு கட்டுரைகள் அடங்கிய "நாளை விடியும்"என்ற பகுத்தறிவு சிறுபத்திரிகை அப்போதுதான் வந்திருந்தது. அதை எடுத்து நண்பரின் கையில் கொடுத்தேன். தலையங்கத்தைப் படித்ததுமே தி.க.வா? என்றபடி கீழே போட்டார் நண்பர்.

இத்தனைக்கும் நண்பர் நிறைய வாசிப்பவர். அவரது வாசிப்புகள் உடன்பாடுள்ள கருத்துக்கள் சார்ந்தவையாக மட்டுமே இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்க்கருத்துக்ளையும் தேடிப்படிப்பதே நமது கருத்துக்களை சீர்தூக்க உதவும். என்ற எண்ணமுள்ள எனக்கு நண்பரின் செயல் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது.

//(அரசியல் இயக்கங்களில் உள்ள வாசகர்கள் திட்டமிட்டே ஒரு எழுத்தாளரைப் படிப்பதை புறக்கணிப்பார்களா? - எனக்குப் புரியவில்லை - சுரேஷ் கண்ணன்)
# வாசகர்களில் இரண்டுவகை உள்ளனர். தமக்கு விருப்பமான மற்றும் விருப்பமற்ற எல்லாவற்றையும் தேடிப்பிடித்து படிப்பவர்கள் ஒருவகை. மற்றொருவகை, தன் சித்தாந்தத்திற்கு ஒப்புதல் உள்ள, தாம் தீவிரமாக நம்புகிற, தன் நம்பிக்கைகளை தொந்தரவு செய்யாத படைப்புகளை மட்டும் படிப்பது. குதிரைக்கு சேணம் மாட்டினாற் போல் இருக்கிற இந்த வகை சரியானது அல்ல. முதற்வகை வாசகர்களே இலக்கியத்திற்கு செழுமை சேர்க்கிறார்கள்.//

சுரேஷ் கண்ணன் பதிவிலிருந்து.......இதைப்படித்த பாதிப்பில் மேற்கண்ட என் அனுபவம்.....

அரசியல் இயக்கங்களில் உள்ளவர்கள் மட்டுமல்ல. எல்லா வாசகர்களுக்குமே மேற்கண்ட (சுராவின்) கருத்து பொருந்தும்...

மடமும் மதமும்

அலமாரியைச் சுத்தம் செய்து கீழே இட்டிருந்த செய்தித்தாள்களைப் புதிதாக மாற்றும் போது பழைய தாளில் இருந்த ஒரு செய்தியும் படமும் கண்ணில் பட்டது. கரிஸ்மாட்டிக் சென்டர் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்த பாதிரியார் ஜான் ஜோசப் என்பவர் பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட செய்தி அது. மேல்சட்டையின்றி வெறும் வேட்டியுடன் இழுத்துச் செல்லப் பட்டிருந்தார் அவர். பாதிரியாருக்குரிய உடைகள் அணிய அவர் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.

இந்தச் சம்பவத்தை இன்றைய நிகழ்வுகளோடு நினைத்துப் பார்க்கத் தோன்றியது. கையில் உள்ள தண்டம் அகற்றப் படவில்லை; சிறையறையில் குழாய் வசதி, தனி சமையலாள், தினப்படி பூசைக்கு வசதி, விசாரணை கூட வசதியாக படுக்கையில் சாய்ந்து கொண்டு!...

சங்கராச்சாரியார் குற்றவாளியைப் போல நடத்தப் படுவதாகவும், மற்ற மதத்தலைவர்கள் என்றால் இப்படியா செய்வார்கள்? என்றும் சில பிஜேபி தலைவர்கள் கேள்வி எழுப்பியது எனக்கு அப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது.

குற்ற(ச்சாட்டு)ம் என்னவோ இரண்டும் ஒன்றுதான். கைதும் தண்டனையும் குற்றத்தின் தன்மைக்கேற்பவா? குற்றவாளியின் தகுதிக்கேற்பவா?
பிரேமானந்தா, ஜான்ஜோசப், சதுர்வேதி போன்றவர்களுக்கும் ஏராளமான. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் உண்டு. இவர்களை மகான்களாக எண்ணியிருந்தவர்கள் அவர்கள். மகான்கள் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு இருந்தது.

சங்கராச்சாரியாரின் பக்தர்கள் அவ்வாறில்லை....! ஒரு குறிப்பிட்ட இனத்தவ(ரில் பல)ரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியும் அவர் குற்றமற்றவர் என இப்போதும் நம்புகின்றன. அல்லது மற்றவர்களை நம்பவைக்க முயல்கின்றன. வேறுபல ஆன்மிக பக்தர்களோ உண்மை நிலையறிய வேதனையோடு காத்திருக்கின்றனர்.

சங்கரமடத்தின் பாரம்பரியம், புராதனம் கருதியே அவர்களின் இந்த நிலைப்பாடு எனக்கருதலாம். 2500 வருட பாரம்பரியம் என்று பக்தர்கள் கூறினாலும் சுமார் 1200 வருட பாரம்பரியம் உறுதி எனக் கருதலாம். ...ஆதிசங்கரர் தோற்றுவித்த மடமா? என்று கூடச்சில சர்ச்சைகள்....ஆனர்ல் இன்றைய அரசியல், ஆன்மிக சூழலில் காஞ்சி மடம் பெறுகிற முக்கியத்துவம் வேறுமாதிரியானது.

ஜெயலலிதாவின் முந்தைய பல அரசியல் நிலைப்பாடுகளிலும் நிர்வாகச் செயல்பாடுகளிலும் ஜெயேந்திரரின் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் இருந்தது அறிந்த செய்திதான். அந்த செல்வாக்கும் நட்புறவும் தொடர்ந்து இருந்திருந்தால் ஜெயலலிதாவே இந்த விவகாரத்திலிருந்து ஜெயேந்திரர் விடுபட உதவியிருக்கக்கூடும். அவர்களுக்குள் பிளவு ஏற்பட்ட தருணத்தில் இந்த நிகழ்வும் தடயங்களும் கிட்டியுள்ளதால் ஜெயலலிதா அதைப் பிரயோகிக்கத் தயங்கவில்லை.

ஜெயலலிதா எதிர்பார்த்தது போலவே தமிழகத்தில் இந்தக் கைது எந்தப் பெரிய விளைவையும் ஏற்படுத்திவிடவில்லை. காரணம் தமிழக மக்கள் மத்தியில் சங்கராச்சாரியார் இந்து மதத்தலைவராக அல்லாமல் ஒரு இந்து மடத்தலைவர் என்ற சித்திரமே பதிவாகி இருந்தது. அகில இந்திய அளவிலும் இதற்காக அதிகம் பதற்றப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட இனம்சார்ந்த முன்னாள் விவிஐபிக்கள் மட்டுமே என்பதையும் பார்க்க முடிகிறது.

அரசியல் கட்சிகளில் பிஜேபி மட்டுமே இதைக் கையிலெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தது. கூடவே அதன் பரிவாரங்களும்....மீண்டும் ஒருமுறை பரபரப்பான மதவிவகாரம் ஒன்றைக் கையிலெடுத்து இந்துத்வா ஓட்டுக்களை ஒருங்கிணைக்கும் குதந்திரம் தவிர வேறெதையும் அதில் காணமுடியவில்லை. பாஜவின் பெருந்தலைவர்கள் எல்லோரும் இந்துமதத் தலைவரைக் கைது செய்துவிட்டதற்கு ஆவேசப்பட்டார்கள். அன்று இதே ஜெயலலிதாவால் தங்களின் கூட்டணிக் கட்சித்தலைவர் வைகோ அரசியல் ரீதியாகக் கைது செய்யப் பட்டபோது காணப்படாத ஆவேசம்! இப்போதும் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்க முடியாமல் மத்திய அரசை வலியுறுத்தியே அவர்களின் போராட்டங்கள்....

(முன்பு ஜான்ஜோசப் விவகாரம் வெளிவந்ததும் எல்லா கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தக் கோரி பிஜேபியும் இந்து முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதே சமயம் கைதை எதிர்த்து எந்த கிறித்தவ அமைப்பும் போராடியதாகத் தகவல் இல்லை. தனியொரு நிகழ்வை மதம் சார்ந்த நிகழ்வாகக் கருதும் தங்களின் கொள்கையில் இன்றளவும் நிலைத்திருப்பதில் பிஜேபியைப் பாராட்ட வேண்டும்.)

இன்றும் தமிழக பிஜேபியும் எதிர்ப்பை உருவாக்க முயன்று தோற்றுப் போனது. காரணம் தமிழகம் தெளிவாகவே இருக்கிறது. இறையுணர்வு கொண்ட இந்துக்களுக்கு வருத்தம் தரும் செய்தியாக இருந்தாலும் வழிவழிவந்த மரபை ஒட்டியே ஜெயேந்திரருக்கு மரியாதையே தவிர இது தனிநபர் வழிபாடு அல்ல என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

(என் சிறுவயது முதல் சில பிரபல இதழ்கள் வனைந்து தந்திருந்த சித்திரங்கள் மூலம் மகாப்பெரியவர் என்றழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திரர் ஒரு வாழும் மகான் என்ற படிமம் நிலை பெற்றிருந்தது. சமீபத்தில் விதவைப் பெண்கள் குறித்தும் இன்னும் சிலவற்றிலும் அவரது நிலைப்பாடுகள் பற்றி அறிந்தபோது அந்தப் படிமம் உடைந்து சிதறியது. ஆனால் ஓடிப்போன காலமுதலே ஜெயேந்திரரின் மகாத்மியத்தில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை.)

சங்கரராமனின் கடிதங்கள் பொய்யல்ல, அவை கூறும் உண்மைகளும் பொய்யல்ல எனில் கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருந்தாலும் காஞ்சி மடத்தின் பெருமைக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. பெண் விவகாரங்களும் அடியாட்களின் தொடர்புகளும் உள்ள ஒரு மடம் அதன் ஆன்மிகப் புனிதத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா? காரணகர்த்தா ஜெயேந்திரரா?, விஜயேந்திரரா? ரகுவா? யாராக இருப்பினும் இது மடத்துக்கு நேர்ந்த களங்கமே. எனினும் இந்து மதம் இதனால் களங்கப்பட்டிருப்பதாகக் கருத எந்த நியாயமும் இல்லை.

காலகாலமாகவே அரசுகளும் அரசர்களும் துறவிகளைத் தண்டிப்பது நிகழக் கூடியதுதான். போலித்துறவிகள் என்றாலோ, குற்றம் உண்மை என்றாலோ தண்டனை நியாயமானதாகவே கருதப்படும். துறவி குற்றமற்றவராக இருந்து அவர் உண்மையான "துறவி"யாக இருந்தால் இறைவனின் சோதனை என்றுதான் கூறுவார். ஒருபோதும் "என்னைக் கைது செய்தால் இந்த நாடே கொந்தளிக்கும்" என்று கூறவே மாட்டார்.

2005-02-02

வலை அலங்காரம்

இன்று அதிக நேரம் இந்த வலைப்பதிவை தமிழ்ப் படுத்துதலுக்காக செலவிட வேண்டியதாகிவிட்டது. நினைத்திருந்த பதிவுகளை இன்று இட முடியவில்லை. முடிந்தவரை தமிழ்ப் படுத்தி விட்டேன். இது தொடர்பாகவும் மறுமொழிக்காகவும் மன்றத்திற்காக எழுதி காசியின் வலைப்பதிவில் நான் கேட்ட ஒரு தகவல்-

சுரதாவின் செயலியை இணைத்து சில நண்பர்கள் மறுமொழிக்கான பெட்டியை அமைத்துள்ளனர். அதை பலமுறை முயன்று பார்த்தும் சரியாக வரவில்லை. blogger template-ல் இதற்காக சேர்க்க வேண்டிய நிரல்களை முழுவதும் யாராவது தந்தால் நல்லது.

வேர்களின் விதி

(இரண்டு செய்திகள்)

1.

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் வடக்கன்குளம் "கல்வித்தந்தை" எஸ்.ஏ.ராஜா கைது செய்யப் பட்டிருக்கிறார். "கல்வித் தொழிலில்" கொடிகட்டிப் பறந்த ராஜாவின் திருவிளையாடல்கள் குறித்து கதைகதையாகச் சொல்கிறார்கள் அவரது கல்வி நிறுவன(த்தில் தெரியாத்தனமாகச் சேர்ந்து விட்ட) முன்னாள் மாணவர்கள்.

மாதிரிக்கு ஒன்று

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது ஒருமுறை தமிழக சுற்றுப் பயணம் வந்தார். சிறுசிறு ஊர்களிலும் இறங்கிவிடுவது ராஜீவ்காந்தியின் வழக்கம். எஸ்.ஏ.ராஜா தனது அரசியல் நண்பர்கள் மூலம் தான் நடத்திவந்த ஏதோ ஒரு கல்லூரிக்கான கட்டிடம் ஒன்றை திறக்கும் நிகழச்சியை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வைத்தார். ராஜீவும் வழி நெடுகிலும் வரிசையாகக் கொடியேற்றி அங்கங்கே மக்களைச் சந்தித்து கையசைத்துச் சென்றது போல இந்தக் கட்டிடத்தின் ரிப்பனையும் போகிற போக்கில் வெட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் செய்தித்தாள்களில் எஸ்.ஏ.ராஜாவின் மருத்துவக்கல்லூரியை பிரதமர் ராஜீவ்காந்தி திறந்து வைத்த செய்தியும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பும் வந்திருந்தது. சுற்றுப் பயணத்தின் இடையிலேயே ஆங்கில செய்தித் தாள்களில் இந்தச் செய்தியைப் படித்த ராஜீவே வியந்து போனதாகத் தகவல். பிறகென்ன அனுமதியே பெறப்படாமல் இருந்தாலும் பிரதமரால் திறந்து வைக்கப் பட்ட மருத்துவக்கல்லூரிக்கு அரசு அங்கீகாரம் கிட்டாமல் இருக்குமா என்ற ராஜாவின் கிரிமினல் கனவு கலைந்து போனது.

இது ஒருபுறமிருக்க ஆலடி அருணாவும் அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். இருவரும் இணைந்தே பல சித்து விளையாட்டுகள் விளையாடிய பின் ஏதோ ஒரு பொறியில் பிரிந்து மோதலாகிக் கொலைவரை சென்றதாக உள்ளூரில் பேச்சு.

2.

அந்தமானில் தொடர்ந்து பூகம்ப அதிர்ச்சிகள் விஞ்ஞானத்தை மீறிய விளைவுகளாய் மக்களை தொடர்ந்து பீதியில் இருக்க வைக்கிறது. இங்கும் மக்களின் பீதி முழுமையாக அகன்றபாடில்லை. அதே நேரம் அதிகம் பாதிக்கப் பாடாத மக்களில் பலர் அரசு நிவாரணங்களுக்காக அடித்துக் கொண்ட செய்திகள் மனதைப் புண்படுத்துகின்றன. தீவிரமாகப் பாதிக்கப் பட்டவர்களோ முழுமையாக நிவாரணங்களை வாங்கிப் பயன்படுத்தும் நிலையில் இல்லை. குடும்பத்தில் அனைவரையும் இழந்து ஓரிருவர் எஞ்சியுள்ள நிலையில் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

தமிழகக் கடலோரங்களில் அரசின் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகளை இழந்தவர்கள் மீண்டும் அங்கேயே வசிக்க விருப்பமா? 500 மீட்டர் தள்ளி வசிக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு மண்ணோடு இறுகிவிட்ட மனநிலை கொண்ட மிகச்சில முதியவர்களைத் தவிர மற்றவர்கள் தூரமாய் வசிக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். அரசின் எந்தச் சட்டமும் பறித்து நட முடியாத அவர்களின் வேர்களை சுனாமி மிகச்சுலபமாக பிடுங்கி எறிந்து விட்டது.