2005-02-21

சாதி(க்காத) நீதி

சாதி பற்றி மனுதர்ம, வர்ணாசிரம தத்துவ விசாரங்கள் பலரும் செய்து முடித்துவிட்ட நிலையில் சாதி என்பது பற்றிய பாமரப் பார்வை என்னவாக இருக்கும்?

பள்ளிகளில் சாதிச்சான்றிதழ் கேட்கும் வரை பிள்ளைகளில் பலருக்கு சாதி பற்றி தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் அது பற்றிய உணர்விருக்காது. அதன் பிறகே மெல்ல மெல்ல எவன் எவன் தன் சாதிக்காரன் என்று பார்க்கத் தோன்றும். அடுத்து மெதுவாக அது ரத்தத்தில் ஊறி, வேர்பிடித்து மேலேறி நரம்பு மண்டலமெங்கும் வியாபித்து சாதிப் பெயரைக் கேட்டதுமே மயிர்க்கூச்செரியத் தொடங்கும்.

படிக்காத ஒரு பாமரனுக்கு சாதி என்பது எல்லைப் பிரச்சினை மாதிரி. நம்ம சாதிக்காரனை அடிச்சிட்டான், திட்டிப்புட்டான், நம்ம சாதிப்புள்ளய அடுத்த சாதிக்காரன் பாத்துட்டான், பழகிட்டான், இழுத்துட்டு ஓடிட்டான் என்பது மாதிரியான தருணங்களில் மட்டுமே அவனுக்கு சாதி உணர்வு தன்னிச்சையாக வரும்.

ஆனால் படித்தவனுக்கு எல்லா நேரமும் சாதி ரத்தத்தில் கலந்திருக்கும். அவனின் எல்லாச் செயல்களிலும் சாதி உணர்வு நிறைந்திருக்கும். சாதிச்சங்கங்களில் பாருங்கள். பெரிய பெரிய அரசு அதிகாரிகளெல்லாம் ஓய்வு பெற்ற பிறகு சாதிச் சங்கங்களில் ஐக்கியமாகி சாதித் தலை(வர்)களாக வலம் வருவதைப் பார்க்கலாம். இவன்களெல்லாம் அரசுப் பணிகளில் இருக்கும்போது எப்படி மற்றவர்களை சமத்துவமாய் நடத்தியிருப்பான்கள் என்று யோசித்தால் திகிலடிக்கிறது.

இட ஒதுக்கீடுகளின் தேவையை மீறி பள்ளிச் சான்றிதழ்களிலிருந்து சாதியை விடுவிக்க வேண்டியது மிகமிக அவசியம். அதேசமயம் இட ஒதுக்கீடுகளுக்கும் மாற்றுவழி கண்டறியப்பட வேண்டும். இப்போதே சாதி அடையாளங்கள் இல்லாத சாதிச்சான்றிதழ்கள் வழங்கப் படவேண்டும். எப்சி, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி என்பது மாதிரி பட்டியல் இட்டாயிற்று. இனி அதன் அடிப்படையிலேயே வழங்கி விடலாம். கூடவே சாதி மறுப்பாளர்களுக்கும் ஒரு தனி ஒதுக்கீடு வழங்கிவிடலாம். (எதிர்காலத்தில் இன்னொரு புதிய சாதி தானாக உருவாக சிறந்த வழி?!)

இதோ ஒருவர் குரல் கொடுக்கிறார் - இட ஒதுக்கீட்டில் இடம்பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் எப்சி-க்களெல்லாம் சாதி மறுப்பாளர்களாகப் பதிவு செய்து கொண்டுவிடுவார்களே - என்று.

ஆனால் அத்தனை தூரம் "இறங்கி" வருவார்களென்று நான் நம்பவில்லை. காரணம் பிரச்சினையே அவர்கள் "ஏறி" இருப்பதுதானே?.... "இறங்க" விரும்புவார்களா என்ன?

2 comments:

காஞ்சி பிலிம்ஸ் said...

சாதி அடையாளத்தை அழிக்க சொல்லிவிட்டீரா ? இருக்கிரது உங்களுக்கு அர்ச்சணை. வரப்போகிறார்கள் பாருங்கள்.செத்தீர்கள். ரோசா முள்ளு குத்தபோவுது உங்களுக்கு. நான் உங்கள் ஆட்டத்திற்கு வரவில்லை. நான் ஜூட் விடரன் பா.

Anonymous said...

//ஆனால் அத்தனை தூரம் "இறங்கி" வருவார்களென்று நான் நம்பவில்லை. காரணம் பிரச்சினையே அவர்கள் "ஏறி" இருப்பதுதானே?.... "இறங்க" விரும்புவார்களா என்ன?//

மடையன்:

அவாள்கள் நிச்சயமாக இறங்கி வருவார்கள். பணம் மற்றும் வயித்துப்பாடாயிற்றே.