2005-02-13

மடமும் மதமும்

அலமாரியைச் சுத்தம் செய்து கீழே இட்டிருந்த செய்தித்தாள்களைப் புதிதாக மாற்றும் போது பழைய தாளில் இருந்த ஒரு செய்தியும் படமும் கண்ணில் பட்டது. கரிஸ்மாட்டிக் சென்டர் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்த பாதிரியார் ஜான் ஜோசப் என்பவர் பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட செய்தி அது. மேல்சட்டையின்றி வெறும் வேட்டியுடன் இழுத்துச் செல்லப் பட்டிருந்தார் அவர். பாதிரியாருக்குரிய உடைகள் அணிய அவர் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.

இந்தச் சம்பவத்தை இன்றைய நிகழ்வுகளோடு நினைத்துப் பார்க்கத் தோன்றியது. கையில் உள்ள தண்டம் அகற்றப் படவில்லை; சிறையறையில் குழாய் வசதி, தனி சமையலாள், தினப்படி பூசைக்கு வசதி, விசாரணை கூட வசதியாக படுக்கையில் சாய்ந்து கொண்டு!...

சங்கராச்சாரியார் குற்றவாளியைப் போல நடத்தப் படுவதாகவும், மற்ற மதத்தலைவர்கள் என்றால் இப்படியா செய்வார்கள்? என்றும் சில பிஜேபி தலைவர்கள் கேள்வி எழுப்பியது எனக்கு அப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது.

குற்ற(ச்சாட்டு)ம் என்னவோ இரண்டும் ஒன்றுதான். கைதும் தண்டனையும் குற்றத்தின் தன்மைக்கேற்பவா? குற்றவாளியின் தகுதிக்கேற்பவா?
பிரேமானந்தா, ஜான்ஜோசப், சதுர்வேதி போன்றவர்களுக்கும் ஏராளமான. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் உண்டு. இவர்களை மகான்களாக எண்ணியிருந்தவர்கள் அவர்கள். மகான்கள் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு இருந்தது.

சங்கராச்சாரியாரின் பக்தர்கள் அவ்வாறில்லை....! ஒரு குறிப்பிட்ட இனத்தவ(ரில் பல)ரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியும் அவர் குற்றமற்றவர் என இப்போதும் நம்புகின்றன. அல்லது மற்றவர்களை நம்பவைக்க முயல்கின்றன. வேறுபல ஆன்மிக பக்தர்களோ உண்மை நிலையறிய வேதனையோடு காத்திருக்கின்றனர்.

சங்கரமடத்தின் பாரம்பரியம், புராதனம் கருதியே அவர்களின் இந்த நிலைப்பாடு எனக்கருதலாம். 2500 வருட பாரம்பரியம் என்று பக்தர்கள் கூறினாலும் சுமார் 1200 வருட பாரம்பரியம் உறுதி எனக் கருதலாம். ...ஆதிசங்கரர் தோற்றுவித்த மடமா? என்று கூடச்சில சர்ச்சைகள்....ஆனர்ல் இன்றைய அரசியல், ஆன்மிக சூழலில் காஞ்சி மடம் பெறுகிற முக்கியத்துவம் வேறுமாதிரியானது.

ஜெயலலிதாவின் முந்தைய பல அரசியல் நிலைப்பாடுகளிலும் நிர்வாகச் செயல்பாடுகளிலும் ஜெயேந்திரரின் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் இருந்தது அறிந்த செய்திதான். அந்த செல்வாக்கும் நட்புறவும் தொடர்ந்து இருந்திருந்தால் ஜெயலலிதாவே இந்த விவகாரத்திலிருந்து ஜெயேந்திரர் விடுபட உதவியிருக்கக்கூடும். அவர்களுக்குள் பிளவு ஏற்பட்ட தருணத்தில் இந்த நிகழ்வும் தடயங்களும் கிட்டியுள்ளதால் ஜெயலலிதா அதைப் பிரயோகிக்கத் தயங்கவில்லை.

ஜெயலலிதா எதிர்பார்த்தது போலவே தமிழகத்தில் இந்தக் கைது எந்தப் பெரிய விளைவையும் ஏற்படுத்திவிடவில்லை. காரணம் தமிழக மக்கள் மத்தியில் சங்கராச்சாரியார் இந்து மதத்தலைவராக அல்லாமல் ஒரு இந்து மடத்தலைவர் என்ற சித்திரமே பதிவாகி இருந்தது. அகில இந்திய அளவிலும் இதற்காக அதிகம் பதற்றப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட இனம்சார்ந்த முன்னாள் விவிஐபிக்கள் மட்டுமே என்பதையும் பார்க்க முடிகிறது.

அரசியல் கட்சிகளில் பிஜேபி மட்டுமே இதைக் கையிலெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தது. கூடவே அதன் பரிவாரங்களும்....மீண்டும் ஒருமுறை பரபரப்பான மதவிவகாரம் ஒன்றைக் கையிலெடுத்து இந்துத்வா ஓட்டுக்களை ஒருங்கிணைக்கும் குதந்திரம் தவிர வேறெதையும் அதில் காணமுடியவில்லை. பாஜவின் பெருந்தலைவர்கள் எல்லோரும் இந்துமதத் தலைவரைக் கைது செய்துவிட்டதற்கு ஆவேசப்பட்டார்கள். அன்று இதே ஜெயலலிதாவால் தங்களின் கூட்டணிக் கட்சித்தலைவர் வைகோ அரசியல் ரீதியாகக் கைது செய்யப் பட்டபோது காணப்படாத ஆவேசம்! இப்போதும் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்க முடியாமல் மத்திய அரசை வலியுறுத்தியே அவர்களின் போராட்டங்கள்....

(முன்பு ஜான்ஜோசப் விவகாரம் வெளிவந்ததும் எல்லா கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தக் கோரி பிஜேபியும் இந்து முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதே சமயம் கைதை எதிர்த்து எந்த கிறித்தவ அமைப்பும் போராடியதாகத் தகவல் இல்லை. தனியொரு நிகழ்வை மதம் சார்ந்த நிகழ்வாகக் கருதும் தங்களின் கொள்கையில் இன்றளவும் நிலைத்திருப்பதில் பிஜேபியைப் பாராட்ட வேண்டும்.)

இன்றும் தமிழக பிஜேபியும் எதிர்ப்பை உருவாக்க முயன்று தோற்றுப் போனது. காரணம் தமிழகம் தெளிவாகவே இருக்கிறது. இறையுணர்வு கொண்ட இந்துக்களுக்கு வருத்தம் தரும் செய்தியாக இருந்தாலும் வழிவழிவந்த மரபை ஒட்டியே ஜெயேந்திரருக்கு மரியாதையே தவிர இது தனிநபர் வழிபாடு அல்ல என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

(என் சிறுவயது முதல் சில பிரபல இதழ்கள் வனைந்து தந்திருந்த சித்திரங்கள் மூலம் மகாப்பெரியவர் என்றழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திரர் ஒரு வாழும் மகான் என்ற படிமம் நிலை பெற்றிருந்தது. சமீபத்தில் விதவைப் பெண்கள் குறித்தும் இன்னும் சிலவற்றிலும் அவரது நிலைப்பாடுகள் பற்றி அறிந்தபோது அந்தப் படிமம் உடைந்து சிதறியது. ஆனால் ஓடிப்போன காலமுதலே ஜெயேந்திரரின் மகாத்மியத்தில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை.)

சங்கரராமனின் கடிதங்கள் பொய்யல்ல, அவை கூறும் உண்மைகளும் பொய்யல்ல எனில் கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருந்தாலும் காஞ்சி மடத்தின் பெருமைக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. பெண் விவகாரங்களும் அடியாட்களின் தொடர்புகளும் உள்ள ஒரு மடம் அதன் ஆன்மிகப் புனிதத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா? காரணகர்த்தா ஜெயேந்திரரா?, விஜயேந்திரரா? ரகுவா? யாராக இருப்பினும் இது மடத்துக்கு நேர்ந்த களங்கமே. எனினும் இந்து மதம் இதனால் களங்கப்பட்டிருப்பதாகக் கருத எந்த நியாயமும் இல்லை.

காலகாலமாகவே அரசுகளும் அரசர்களும் துறவிகளைத் தண்டிப்பது நிகழக் கூடியதுதான். போலித்துறவிகள் என்றாலோ, குற்றம் உண்மை என்றாலோ தண்டனை நியாயமானதாகவே கருதப்படும். துறவி குற்றமற்றவராக இருந்து அவர் உண்மையான "துறவி"யாக இருந்தால் இறைவனின் சோதனை என்றுதான் கூறுவார். ஒருபோதும் "என்னைக் கைது செய்தால் இந்த நாடே கொந்தளிக்கும்" என்று கூறவே மாட்டார்.

2 comments:

Mookku Sundar said...

அனுராக்,

எல்லோரும் கிட்டத்தட்ட மறந்து போய் விட்ட இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இருவருக்கும் ஜாமீன், வங்கிக் கணக்கு முடக்கம் செல்லாது என்ற தீர்ப்பு, ஜூ.வி யின் இஅந்த வார உணர்ச்சிமயமான கட்டுரை ஆகியவற்றைப் பார்த்தால் ஐந்த வழக்கு நீர்க்கப்போவது உறுதி என்று தோன்றுகிறது.

சாதாரண பக்தர்கள் " ஆஹா...பஹவான் காப்பாத்தீட்டார். ஜெயெ ஜெயெ சங்கர ..ஹர..ஹர சங்கர" என்று சொல்லிக் கொண்டு இன்னமும் ஏமாறுவதற்கு தயாராக, சாமியார்கள் மறுபடியும் தங்கள் தர்பாரை ஆரம்பிப்பார்கள். 2005 தீபாவளிக்கு கண்டிப்பாய் எல்லா சேனல்களிலும் அருளாசி வழங்குவார்கள்.

Thangamani said...

//குற்ற(ச்சாட்டு)ம் என்னவோ இரண்டும் ஒன்றுதான். கைதும் தண்டனையும் குற்றத்தின் தன்மைக்கேற்பவா? குற்றவாளியின் தகுதிக்கேற்பவா?//

அடடா! நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? பிரச்சனையே சங்கரர் குற்றம் உண்மையா, அவர் எப்படி இப்படிச் செய்யலாம் என்பதல்ல. அவரை எப்படி கைது செய்ய்லாம்? அவரை எப்படி சிறையிலடைக்கலாம்? என்ற மனுவாதத்தின் சிந்தனைத் தொடர்ச்சி படுத்துகிற பாடு. அதிலும் சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்ற கருத்தை (சும்மா உளுளுவாங்காட்டிக்கே என்றாலும்) சகித்துக்கொள்ளமுடியவில்லை. அதுதான் அவர்களுக்கெல்லாம் வேதனை.