2005-03-31

ரம்பம்



ப்போதெல்லாம் அந்த நாள் வந்து விட்டால் அன்று பள்ளிக்குப் போகும் பிள்ளைகளில் பாதிப்பேர் மாலையில் சட்டை நிறைய மைக்கறைகளுடன் தான் வீடு திரும்புவார்கள். எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் அந்த நாளில் எல்லோரும் செய்கிறார்களே என்று அவர்கள் மாறிமாறி அதைச் செய்வார்கள். மற்ற நாட்களில் அவ்வாறு செய்தால் முதுகுத்தோல் உரிந்து போகும் என்று அவர்களுக்குத் தெரியும். முன்பெல்லாம் ஹோலிப்பண்டிகையை யாரும் அறிந்ததில்லை. ஆனால் இன்று ஹோலியின்போது நடக்கும் எல்லாக் கூத்தும் இந்த நாளில் நடக்கும்.

மேல்நாட்டு இறக்குமதியான இந்த நாள் எப்படி இந்தளவு பிரபலமானது என்றே தெரியவில்லை. (இப்போது வாலன்டைன்ஸ் டே போல.)

ஆனாலும் இப்போதெல்லாம் (கொஞ்சம் வளர்ந்த பிறகு) அந்த நாள் பல சமயங்களில் நினைவுக்கே வருவதில்லை. இப்போதும் பள்ளிப் பிள்ளைகள் மத்தியில் இந்த நாளின் கிரேஸ் இருக்கக் கூடும்.

அந்த நாட்களை நினைக்கையில் மாறிமாறி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று நினைத்துப் பார்த்தால், தாளில் பொதிகட்டி காசுப்பொட்டலம் போல யாராவது வரும் வழியில் வைத்துவிடுவது, மிட்டாயை வாங்கித் தின்றுவிட்டு மிட்டாய்த் தாளில் கல்லைப் பொதிந்து வைப்பது, ரூபாய் நோட்டில் நூலைக்கட்டி குட்டிச் சாத்தான் ஆடுவது, என்று பாதகமில்லா ஏமாற்றுக்கள் தவிர உறவினர்களுக்கு உடம்புக்கு முடியவில்லை எனப்புளுகுவது, சமயத்தில் இறந்து விட்டதாகவும் பயமுறுத்துவது என சென்டிமென்டாகவும், பரபரப்புச்செய்திகளாக பொய்வதந்தி பரப்புவது முதற்கொண்டு நடக்கும். இன்னொரு தளத்தில் ஆணின் பெயரால் பெண்ணுக்கும், பெண்ணின் பெயரால் ஆணுக்கும் லவ் லெட்டர் எழுதுவதும் சுறுசுறுப்பாக நடக்கும்.

நாளின் ஞாபகம் இல்லாத அப்பாவிகள் விழுந்து விடுவார்கள். ஒரே கூத்துதான்.

உங்களில் பலருக்கும் வித்தியாசமான முட்டாள் தினஅனுபவங்கள் இருக்கக் கூடும். மறுமொழியாக எழுதுங்கள்.

2005-03-30

மதி...தொடர்ச்சி

மதி கந்தசாமி பேட்டியின் தொடர்ச்சி.....

இணையத்தில் உங்கள் பஙகளிப்புகள்?

என் இணைய பங்களிப்பு மிகவும் சிறியது. என்னைத் தவிர நிறைய செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

தமிழ்.நெட் பாலா பிள்ளையில் தொடங்கி தமிழ்மணம் காசி வரை இருக்கிறார்கள்.
கூடவே பெயரிலி ரமணீதரன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

எனக்கு தமிழில் பெரிய வாசிப்பனுபவம் என்றெல்லாம் இல்லை. ஆனால், தினமும் தமிழை வாசிக்கும் பழக்கம் இருந்தது. நான் மிகவும் சிறிய வயதிலேயே நான்கைந்து என்று அனுமானிக்கிறேன். ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், கந்தபுராணம் என்று படிக்க ஆரம்பித்துவிட்டேனாம். அந்த நாட்களில் எங்கள் வீட்டில் வாங்கிய கலைமகள் போன்ற மலர்களையெல்லாம் ஒன்றும் விடாமல் படிப்பேனாம். அதைத் தொடர்ந்திருந்தால் நல்ல புத்தகங்கள் படித்திருக்கலாம் என்பது என் அங்கலாய்ப்பு. சரி அதை விடுங்கள். தினமணி தினசரியையாவது படித்துக்கொண்டிருந்த எனக்கு தமிழே படிக்க கேட்க பேச முடியாத சூழலில் வாழும் வாய்ப்பு வந்தது. ஓரிரு தமிழ்ப்புத்தகங்களோடு புறப்பட்ட எனக்கு நிலமையின் தீவிரம் பிறகுதான் புரிந்தது.

நல்ல வேளையாக இணையத் தொடர்பு கிடைத்து தினமணி, விகடன், குமுதம், இந்தியா.இன்ஃபோ. திண்ணை.காம் அறிமுகமாகியது.

2001இல் விகடன்.காமில் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்களுக்கு அவர் கேட்டிருந்த பாடல் வரிகளை அனுப்பியிருந்தேன். தொடர்ந்து என்னை யார் என்னவென்று கேட்டதற்கு, தமிழ் பற்றி ஒரு புலம்பு புலம்பியிருந்தேன்.
அதற்குப் பிறகு சில வாரங்களில் மரத்தடி ரமேஷ் அப்பாதுரை ஒரு கோப்பு தயார் செய்திருந்தார். அதைப் பெறுவதற்காக ரமேஷ் அப்பாதுரை தந்த யாகூ குழுமத்தில் சேர்ந்தேன். அங்கே அறிமுகமான நண்பர்கள் பலர். ஒரு சிலர் எங்களுக்குள் பேசிக்கொள்வதற்காகத் தொடங்கிய குழுமந்தான் மரத்தடி.

குட்டிச்சுவர், மொட்டைமாடி, நாலு முக்கு, மரத்தடி என்று கையில் பல பேர்களுடன் எங்களிடம் (நான், ப்ரியா, கேவியார்) கேட்டவர் குமரேசன். எங்களோடு பிரபு, சுந்தர் என்று கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களும் சேர்ந்துகொண்டார்கள்(ஆதிமரத்தடியில் பார்க்கலாம்). பிரசன்னாவும் வந்து சேர சபை களை கட்டியது. ஆனந்த் ராகவ் போன்றவர்கள் எங்களுக்குப் படைப்பு ரீதியான ஊக்கம் தந்தார்கள்.
'பெயரிலி' ரமணிதரன் எழுத்துரு ரீதியான வழிகாட்டுதல் கொடுத்தார் - அதுவரைக்கும் இணைமதியில் எழுதி படக்கோப்புகளாக அனுப்பிக்கொண்டிருந்தோம்.

ஒரு முறை சுஜாதாவுடன் அம்பல அரட்டையில் கதைத்துக்கொண்டிருந்தபோது ராயர்காப்பிகிளப் பற்றிச் சொன்னார். பில் கேட்ஸ் குறித்து எல்லே ராம் ஒரு கானா பாடியிருப்பதாகச் சொன்னார். ஒரு வழியாக சிங்கைநாதன்(செந்தில்நாதன் என்று சிங்கை வலைப்பதிவர் கூட்டங்களுக்குச் செல்பவர்) கண்டுபிடித்து ஒரு பட்டாளமாக அங்கே போய் இறங்கினோம். பாங்காக் சீனிவாசன் மரத்தடி பற்றிச் சொல்ல என்ன ஏது என்ற கேள்வி வந்தது. அப்போது மரத்தடி பற்றிச் சொன்னோம்.
நான்கைந்துபேரோடு தொடங்கிய குழுமம் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. காலத்தின் சுழலில் பெற்ற பெண்ணை இன்னொருவர் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் இல்லையா. அதுமாதிரி தனிக்குடித்தனம் வந்துவிட்டேன்.

மரத்தடிபற்றி நிறையச் சொல்லலாம். அங்கே சந்தித்த நண்பர்கள் ஏராளம். கற்ற பாடங்கள் இலக்கிய ரீதியாகவும் ஏராளம். ஏகப்பட்ட மனிதர்களைக் கண்டேன். விஷய ஞானம் உள்ள அமைதியானவர்களை ஊக்குவித்து ரசித்த இடம். பல பாடங்களையும் கற்றேன்.

மரத்தடியில் பலரின் படைப்பாற்றலுக்கு நான் ரசிகை. 'ஏட்டி' என்ற கவிதையோடு வந்த பிரசன்னா, அருமையான கட்டுரைகளுக்கு பிரபு, நிர்மலா, துளசி, கேவியார், விஜயாலயன். கவிதைகளுக்கு பிரசன்னா, நிர்மலா. கதைகளுக்கு பிரசன்னா, ஆசீஃப் மீரான். இன்னும் பலர் இருக்கிறார்கள்.

எல்லாரையும் விட என்னை வியப்பில் ஆழ்த்திய நபர் ஒருவர் இருக்கிறார். அம்பல அரட்டையில் வலைப்பதிவுகள் குழுமங்கள் பற்றிப் பேசி அரட்டையடித்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொன்றையும் என்னென்ன என்று ஒருவர் கேட்டபடி இருந்தார். பொதுவாக, யாருடனும் பேசிவிடும் நான், மின்னஞ்சல்முகவரி கேட்டால் யோசிப்பேன். என் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால்தனக்குக் கொஞ்சம் விவரம் வேண் டும் என்று கேட்டார்.

கொஞ்சம் தயங்கிப்பின் கொடுத்தேன். அம்பல அரட்டைக்குப் போவதென்றால் இரவு ஒன்றரைக்கு அல்லது இரண்டரைக்குப் போக வேண்டும். ஏப்ரல்-ஒக்டோபரில் இரவு இரண்டரைக்குத் தொடங்கி மூன்றரைக்கு முடியும். நான் மின்னஞ்சல் கொடுத்துக் கொஞ்ச நேரத்தில் அவர் மரத்தடியில் சேர்ந்தார். குழுமத்தில் சேர்பவர்களுக்குத் தேவையான மடல்களை அனுப்புவோம். முரசு அஞ்சல் பற்றி சந்தேக மடல் ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு முன் அவர் கணினியில் தமிழில் தட்டச்சியதில்லை அவருக்குத் தேவையான சுட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன்.

அடுத்த நாள் சாவகாசமாக வந்தால், மரத்தடியில் ஒரே களேபரம். யாருடா ஒரு புது ஆள் வந்து இப்படியெல்லாம் கலாட்டா செய்கிறது என்று எல்லாரும் பார்த்தார்கள்.அவர் அசரவேயில்லை. முகமூடியோ என்று பயந்தார்கள்/பயந்தோம். ஐபி நம்பர் எல்லாம் பார்த்தோம். குழுமத்தில் கேள்வி கேட்டோம். தொலைபேசி எண் கொடுத்து தான் இன்னார்தான் என்று சொன்னார்.

அவர் வந்து சேர்ந்தது ஆகஸ்ட் மாதக் கடைசியில். அப்போது ஆண்டு விழாக்கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தது.

குழும உறுப்பினர்களுடன், முக்கியமாக பிரசன்னாவுடன் பயங்கர வாக்குவாதம். பலரும் இன்னாராக இருக்குமோ இன்னாராக இருக்குமோ என்றபடி இருந்தார்கள். சென்னையில் இருந்து சாக்ரமெண்டோ வரை இதுதான் பேச்சு. ஹாங்காங்கில் இருப்பதால் இவரோ அவரோ என்றபடி மக்கள்.

இப்படி அவரைச் சந்தேகித்த மக்கள் அனைவரும் மூக்கில் கை வைக்கும்படி, ஒரு சொல் எழுதினால் பேசினால் சத்தம்போடாமல் கேட்கும்படி செய்தார் அவர். மரத்தடியில் இருக்கும் உறுப்பினர்களுக்கு சிற்சில வேலைகளைப் பகிர்ந்துகொடுப்பது வழக்கம். குழுமம் அவர்களுடதும் என்ற பிணைப்பு வரும் என்பதனால். சுட்டிகள் பகுதியைக் கொஞ்சம் சீரமைக்க முடியுமா என்று கேட்டேன். என்ன செய்வது என்று விலாவாரியாகச் சொன்னால் செய்கிறேன் என்றார். கொஞ்சம் சிரமப் பட்டு சொன்னதும் கப்பென்று பிடித்துக்கொண்டார். அப்போது அவரிடம் மரத்தடி.காம் பற்றிச் சொல்லி, அதிலும் பங்குபெறுமாறு கேட்டேன். மறுபடியும் சொல்லிக்கொடுத்தால் செய்கிறேன் என்றார்.

எக்ஸ்பியின் யூனிகோடு பற்றி பரி வகுப்பெடுக்க, இணையத்தளத்தில் என்னென்ன செய்வது என்று நான் சொல்லிக்கொடுக்க அதையும் சில நாட்களில் பிடித்துக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்களைச் செய்தார். சில மாதங்களுக்குப் பிறகு போட்டி சமயத்தில் இணையத் தளம் முழுவதும் அழிந்துபோக இரவுபகல் விழித்து எல்லாவற்றையும் தொடக்கத்தில் இருந்து உருவாக்கினார்.

ஒற்றை வரியில் சொல்கிறேன். ஆனால், அப்போதிருந்த பிரச்சினைகளில் எல்லோருக்கும் ஆதரவான வார்த்தைகள் சொன்னபடி, நான் இருக்கேன் என்றபடி நங்கூரமாக இருந்தவர். அடாத மழையிலும் விடாது கப்பல் விட்டவர். முடியாது என்ற சொல் அவரது அகராதியில் இல்லை என்பது இப்போது எல்லோருக்கும் தெரியும். அபாரமான ஞானம், உழைப்பு, திறமை கொண்டவர். மரத்தடி இணையத்தளம் அவரது குழந்தை.

இலக்கியமெல்லாம் படித்ததில்லை என்று சொல்லும் அவரின் மடல்களுக்கும், கட்டுரைகளுக்கும் கவிதைகளுக்கும் கதைகளுக்கும் இங்கு பல விசிறிகள்.

வலைப்பதிவுகளிலும் அவ்வப்போது பின்னூட்டமிடும் அவரை வலைப்பதிவொன்றைத் தொடங்குமாறு நச்சரித்து வருகிறேன். பார்ப்போம்.

ஒரு சில விஷயங்களில் வேறுகருத்துகள் இருந்தாலும் ஜெயஸ்ரீயின் எழுத்துக்கு நான் விசிறி. எங்கேயாவது, எப்படியாவது அவர் எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

பொதுவாக ஆண்/பெண் என்று பிரித்துப் பார்க்கப் பிடிக்காது எனக்கு. ஆனால், ஜெயஸ்ரீயைப் போல ஆணித்தரமான கருத்துகளைக் கொண்ட பெண்களை தமிழில் நான் சந்தித்ததில்லை. எழுத்துலகில் ஓரிருவர் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு இருக்கும் இலக்கிய படிப்பு இவரிடம் இல்லையென்பது இன்னமும் வியப்பளிப்பது. ஜெயஸ்ரீயைப் பற்றி நிறைய எழுதலாம். மரத்தடி இணையத்தளத்தில் அவர் எழுதியிருப்பதைத் தாண்டி
http://maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=54,
மரத்தடி குழுமத்தில் போனவருடம் அவர் எழுதியிருப்பதையும்
http://groups.yahoo.com/group/Maraththadi/messagesearch?query=jsri

மரபிலக்கியம் குழுமத்தில் ஹரியண்ணாவுடன் நிகழ்த்திய வாதங்களையும் படியுங்கள்.
http://groups.yahoo.com/group/Marabilakkiyam/messagesearch/589?query=jsri

இப்படிப்பட்ட திறமையுள்ளவருக்கு மரத்தடியில் இத்தனை வேலைகளைக் கொடுத்துவிட்டோமே என்று வருந்திய நாட்கள் பல! வலைப்பதிவொன்றை எப்போது திறப்பார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ரொம்ப ஜெயஸ்ரீ புராணம் பாடிட்டேனில்ல? மக்கள் அடிக்க வர்ரதுக்கு முன்னாடி ரூட்டை மாத்துறேன். ஜெயஸ்ரீ ஒரு ஆறுமாசமாவது இணையப் பக்கம் வரமாட்டார் என்ற தைரியத்தில் எழுதியதுதான் மேலே இருப்பது!

இணையத்தில் பலருடைய எழுத்துகளுக்கு நான் விசிறி. 'பெயரிலி' ரமணிதரன்[ரமணியின் ஒரு வரியில் ஓராயிரம் கதை பேசும் எழுத்துக்கு விசிறி நான். முதல் விசிறி! யாரும் வந்தால் அடிதடி இருக்குது சொல்லிட்டன் ஐசே - சிங்கப்பூராரே கேக்குதோ?...] ஹரிகிருஷ்ணன்[அருமையான கட்டுரைகள்.
கட்டுரைகளைப் படித்து அழ வைத்தவர் இவர் ஒருவர்தான். தம்மக்கள் கட்டுரையைப் படியுங்கள் http://harimozhi.com/Article.asp?id=224], இரா.முருகன்(அருமையான observation. படிக்கும்போது நாம் அங்கேயே இருப்பதைப்போல உணருவோம். இங்கிலாந்தில் இருந்தபோது பிரதி சனியும் வரும் கட்டுரைகள் டாப் டக்கர்! மலையாள உலகினை தமிழிணையத்தில் பகிர்ந்துகொள்பவர்
http://groups.yahoo.com/group/rayarkaapiklub],
டாக்டர்ஜெயபாரதி[எத்தனையோ விஷயங்கள் தெரியும் இவருக்கு. தமிழர் பற்றிய பல விஷயங்களை இவரிடம் தெரிந்துகொள்ளலாம். அகத்தியம் என்ற ஒரு பொக்கிஷம் நம்மில் பலருக்கும்[வலைப்பதிவர்] அறிமுகமில்லாதது வருந்தத் தக்கது
http://groups.yahoo.com/group/agathiyar/ ] ,
இராம.கி. ஐயா[கல்வெட்டு பற்றி இவர் எழுதிய மடல்தான் நான் படித்த முதல் மடல், தமிழ் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டவர். அருமையான பல மடல்களுக்குச் சொந்தக் காரர்] யாகூ குழுமங்களில் நான் சந்தித்தவர்களில் ஒரு சிலரைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்யலாம் என்று bloggerஇல் சும்மா விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் மாலனிடம் இருந்து ஒரு மடல் வந்தது. புதிதாக ஒரு விஷயம் வந்தால் அதை நோண்டிப்பார்க்கும் கெட்ட பழக்கம் எனக்கிருக்கிறது. தமிழிலும் வலைபதியலாம் என்று சொல்கிறாரே என்று முயன்றதில் கொஞ்சப் போராட்டத்துக்குப் பிறகு வலைப்பதிவில் தமிழ் வசப்பட்டது. தமிழருக்கே உரிய குணத்தால் தொழில்நுட்ப ரீதியாக வளர்கிறோமோ இல்லையோ பெயர் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். வலைப்பூ என்ற அழகியல் சார்ந்த பெயரை ஓரிருவர் முன்னிறுத்தினாலும் வலைப்பதிவு என்ற பெயரே நிலைத்து நிற்கிறது. வெங்கட்டோ, ரமணிதரனோ பரிந்துரைத்ததாக ஞாபகம்.

அப்போது எனக்குத் தெரிந்து வலைப்பதிவுகள் வைத்திருந்தது மாலன், பத்ரி, ரமணிதரன், அருணா, நா.கண்ணன் ஆகிய சிலர்.

மரத்தடி குழுமத்தின் வளர்ச்சியைக் கண்டிருந்த எனக்கு, வலைப்பதிவுலகமும் வள்ரும் என்ற நினைப்பு இருந்தது. இந்தியர்களுக்கான வலைப்பதிவு பட்டியல் ஒன்றை அனிதா போரா என்பவரது வலைப்பதிவில் பார்த்தேன். தமிழுக்கும் இப்படியொன்றைச் செய்தால் என்ன என்று முயன்றதுதான்
Tamil Blogs(http://tamilblogs.blogspot.com).

தமிழில் முதன்முதலில் வலைப்பதிவைத் தொடக்கியவர் நவநீதகிருஷ்ணன்.
[http://www.navan.name/blog/index.php?m=200301#post-18
வலைப்பதிவுலகில் பல அருமையான பதிவாளர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன். பரி, காசி வினோபா என்று நல்லதொரு கூட்டம் சேர்ந்தது.

தமிழ் வலைப்பதிவுகளில் வரும் நல்ல விஷயங்களை ஒருவர் ஒவ்வொருவாரமாக வந்து அலசினால் என்ன என்று ஒருநாள் தோன்றியது.
http://valaippoo.blogspot.com/2003_07_27_valaippoo_archive.html
ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கினேனே ஒழிய, அதில் கவனம் செலுத்தவில்லை. எப்போதாவது எதையாது குறித்தேன். இது சரிவராது என்று நினைத்து, மூன்று வலைப்பதிவர்களிடம் கேட்போம். அவர்கள் சரி சொன்னால் செய்வோம், இல்லையென்றால் இழுத்துமூடுவோம் என்று முடிவுசெய்து சந்திரவதனா, பரி, மீனாக்ஸ் மூவரிடமும் கேட்டேன். மூன்று பேரும் மிகவும் சந்தோஷத்துடன்
ஒப்புக்கொண்டார்கள்.
பலருக்கு மலரும் நினைவுகள் வரும்.[வினோபா, அந்த நாய்க்குட்டி துரத்தினதில ஓடின நீங்கள் இப்பதான் திரும்பியிருக்கிறீங்க போல ;) ].

காசி தீபாவளி நாயகராக கலக்கியிருப்பார்.

வலைப்பதிவுகளுக்குத் திரும்புவோம்.

தொடர்ந்து சுந்தரவடிவேல் தனது அழகிய பதிவுகளில் கவர்ந்தார். கடல், பனி, பழமொழி, நாட்டுப்பாடல்கள் என்று பல விஷயங்களை எழுதியவர் ஒரு கவிதையில் எல்லோரையும் உலுக்கிப்போட்டார்.[எந்தக் கவிதை என்று சொல்லுங்கள். குழுமங்களிலும் அந்தக் கவிதையைப் பகிர்ந்துகொண்டார்கள்.] தங்கமணி, பாலாஜி-பாரி என்று பலர் அந்த சமயத்தில் எழுத வந்தார்கள். வாசகர்களையும் கவர்ந்தார்கள்.

ஒரு காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல், வலைப்பூ மற்றும் மரத்தடி என்று பலசோலிகள் நேரத்தை விழுங்கியதால் காசியிடம் உதவி என்று போனேன். பல மாதக்கணக்காக இழைத்து உருவாக்கிய தமிழ்மணம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.'கலக்கல்' காசி அவர்.

நான் முழுக்க முழுக்க இணையத்தின் குழந்தை. மரத்தடியில் ஏதாவது கதை பேசிக்கொண்டிருந்தபோது நான் இலங்கையைச் சேர்ந்தவள் என்பதை அறிந்துகொண்ட நண்பர்கள் ஊரைப்பற்றியும் ஊர் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளச் சொல்லித் தூண்டினார்கள். பொங்கல் தினக் கொண்டாட்டங்களைப் பற்றியும் பனை மரத்தைப் பற்றியும் எழுதினேன். அன்றைக்குப் பிடித்த வியாதி. இதற்கு வைத்தியமுமில்லை, வியாதியும் தீராது என்று தோன்றுகிறது. என் வலைப்பதிவில் என் கட்டுப்பாட்டுக்குள் நான் விரும்பியதை மட்டுறுத்துனர் என்ற கட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக எழுதப் பயன்படுத்திக்கொண்டேன்.
இப்போதும் ஏதாவது விஷயங்கள் எழுதத் தூண்டினால் எழுதுகிறேன். திரைபடங்களைப்பற்றியும் முதலில் மரத்தடியிலேயே எழுதினேன். ஓரிருவரியில் எழுத, நண்பர்கள் விரிவாக எழுதச் சொன்னார்கள். நான் மதிக்கும் நண்பர்களும் ஊக்குவித்தார்கள், அதனால் சில திரைப்படங்களைப்பற்றி எழுதினேன்.

தோழியர் கூட்டுவலைப்பதிவு:

தமிழிணையத்தில் எழுதும் பெண்கள் எத்தனைபேர் என்று எண்ணிப்பார்த்தால் ஒரு சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். குழுமங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். பத்துவிரலில் எண்ணிவிடலாம். மரத்தடியில் ஏனைய குழுமங்களைவிட அதிகமாக இருக்கிறார்கள். வலைப்பதிவுகள் குழுமங்களைவிடச் சுதந்திரமான, பாதுகாப்பான விஷயமாக எனக்குத் தெரிந்தது. குழுமங்களில் எழுதினால் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் தனியஞ்சல்களுக்கு அஞ்சிப் பெண்கள் பெரிதாக எழுதுவதில்லை. எனக்குத் தெரிந்த பெண்களை ஒரு கூட்டு வலைப்பதிவு தொடங்கிக் கூப்பிட்டால் என்ன என்று தோன்றியது. எனக்குத் தெரிந்த, நான் மதிக்கும் பெண்களை அழைத்தேன். சிலர் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார்கள். ஆண்களைவிட பெண்கள் சினேகமாகப் பழகுவார்கள் புரிந்துணர்வு மிக்கவர்கள் என்பது என்னுடைய கணிப்பு. நாடுவாரியான பிரிவு இல்லாமல் நட்பாகப் பழகுவார்கள் என்று நான் நினைத்தது பொய்க்கவில்லை.

weblogs.us JDஇடம் கூட்டு வலைப்பதிவிற்கு இடம் கேட்டேன். அவரும் மிகவும் சந்தோஷத்துடன் உற்சாகப் படுத்தி இடம் கொடுத்தார். நான் கேட்ட சலுகைகளையும் கொடுத்தார். ஆனால், அவரது புதிய செர்வரில் யூனிகோடு இருக்கவில்லை(அப்போது). அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அப்போதுதான் யாழ்.நெட்டில் மூவபிள் டைப் வசதி செய்துகொடுத்த சுரதாவிடம் இடம் கேட்டேன். அவரும் நான் கேட்டு வாய்மூட முதல் 'ஓம். தாராளமாக.' என்றார். இன்றைக்கு வரைக்கும் நான் கேட்கும் விஷயங்களைச் செய்து தருகிறார்.

தோழியர் கூட்டுவலைப்பதிவு உருவாக முக்கியமான காரணம் ஐயர். ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது, இப்படியொரு எண்ணம் இருக்கிறது என்று சொன்னேன். அவர் ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜேர்மனி, இலங்கை என்று பல பெண் படைப்பாளிகளை அறிமுகப் படுத்தினார். பெண் படைப்பாளிகளின் படைப்புகளையும் பகிர்ந்துகொண்டு உற்சாக மூட்டினார். தினமும் வந்து என்ன எழுதியிருக்கிற்து என்று படித்து தொலைபேசுவார். அவரது ஊக்குவிப்பும் உற்சாகமும் தோழியர் வலைப்பதிவிற்கு மிகவும் முக்கியமானவை.

புத்தகவாசிப்பு: மிகச் சமீபத்தில் தொடங்கிய கூட்டு வலைப்பதிவு. ஒப்ராவின் புக் கிளப் போல தமிழிலும் ஒன்றைத் தொடங்கினால் என்ன என்று தோன்றியது.
நண்பர்களில் ஊக்குவிப்பு உற்சாகத்தோடு தொடங்கியிருக்கிறோம். கேட்டதும், மிகவும் நல்ல விசயம் என்று சொல்லி முதல் நூலை விவாதித்து வழிநடத்த ஒப்புக்கொண்ட இரா.முருகனுக்கும், அடுத்தடுத்து என்னென்ன வாசிக்கலாம் என்று கேட்டபோது எடுத்துக்கொடுத்திருக்கும் நண்பர்களுக்கும், அடுத்த புத்தக விவாதிப்பை வழி நடத்திச் செல்ல ஒத்துக்கொண்டிருக்கும் ரமணிக்கும் நன்றி. புத்தகவாசம் ஒரு கூட்டு வலைப்பதிவு. எண்ணம் என்னுடையதாக இருக்கலாம். ஆனால், அது முழுக்க முழுக்க வாசகர்கள், வலைப்பதிவாள்ர்கள் & வழிநடத்துபவர்களுக்குச் சொந்தமானவை.


மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழிணையத்தில் கால் வைத்த நான், இப்போது இங்கே இருக்கிறேன். வாழ்வில் எதுவும் நிலையில்லை என்பது யதார்த்தம். நான் முதலில் இருந்த மரத்தடியில் இப்போது இல்லை. அப்படி, நாளை நான் என் வலைப்பதிவை மூடிக்கொண்டு போகலாம். ஆனால், தமிழ் என் வாழ்வில் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்.

தமிழை வருங்கால சந்ததியினருக்கு ஒரு சுவாரசியமான விஷயமாகக் காட்டி அவர்களையும் தமிழில் ஈடுபடச் செய்வதே என் விருப்பம்.

http://mathykandasamy.blogspot.com
http://mathyk.blogspot.com

to

http://tamil.weblogs.us
http://movietalk.yarl.net

to

http://mathy.kandasamy.net/musings

http://mathy.kandasamy.net/movietalk

மதியின் மனப்பதிவு



தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களில் ஒருவரான மதி கந்தசாமி நமக்காக மனம் திறக்கிறார்.

1. பிறப்பிடம்?

புங்குடுதீவு, யாழ் மாவட்டம், இலங்கை (மணிபல்லவம் என்ற) நயினாதீவுக்கு அருகில். யாழ்ப்பாணத்திற்கு அருகே இருக்கும் ஏழு தீவுகளில் ஒன்று. என்னுடைய பதிவுகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.

2. வசிப்பிடம்?

மான்ரியல், கனடா

3. தற்போதைய பணி மற்றும் வாழ்வுச்சூழ்நிலை குறித்து?

பலரைப்போல கணினி தொடர்பான வேலை.

எல்லா இலங்கையரைப்போலவும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊரிலும்,
அதைத்தவிர அம்மா அப்பாவின் உடன்பிறந்தவர்கள் உற்வினர்கள் உலகின் பல மூலைகளில்...

3 ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழ்பவர்களில் பெரும்பாலோர் ஈழப்பிரச்சினையால் குடிபெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள்?


பதிவில் எழுதியிருக்கிறேன். எண்பத்தி ஐந்துக் கடைசியில், யாழில் இருந்து வந்த கடைசி ரயிலில் கடைசி நிமிடத்தில் கொழும்பு வந்து, அப்பாவின் நண்பர் இருக்கும் சென்னைக்கு வந்தேன். அந்த அங்கிளை இன்றும் எங்கள் வீட்டில் குலதெய்வம் போல மதிக்கிறார்கள் - முக்கியமாக அம்மா. இங்கிலாந்து போவோமா. எங்கே போவோம். அப்பா வெளிநாட்டில் என்பதால் அம்மா பதினொரு வயதுக்கும் கீழே இருக்கும் 3 பிள்ளைகளுடன் தனியே என்ன செய்வது என்று யோசித்துக்க்கொண்டிருந்தபோது அப்பாவுக்கு கடிதம் எழுதி, எங்களுக்கு எழுதி எங்களைக்கூப்பிட்டவர். என்றாவது பதிவு செய்யும் நோக்கம் இருக்கிறது. பார்ப்போம்.

4. ஈழப்பிரச்சினையின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்து கொண்டது எப்போது?

என் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தாக்கத்தை இன்றைக்கும் உணர்ந்திருக்கிறேனா என்று தெரியாது. ஆனால் மரண பயம், பெண்களுக்கே உள்ள பயம் என்று யாழ்ப்பாணத்தில் ஒருவருடம் யாழ்ப்பாணத்தில் நடுப்பகுதியில் இருக்கும் பெண்கள் பள்ளி விடுதியில் தெரிந்துகொண்டேன்.

வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிப்போகும்போது ரோட்டுக் கரையில் துப்பாக்கிமுனையில் கத்தி செருகி வைத்திருக்கும் ஆமிக்காரன் என்ன செய்வானோ, வயித்தில் செருகுவானோ என்ற நடுக்கத்தோடு கடந்து செல்வது.
ஒன்றிரண்டு ஆமிக்காரன் என்றால் பரவாயில்லை. எத்தனையோ பேர் நிற்பார்கள். அதுவும் பெண்கள் என்றால் என்ன நடக்கும் என்று தெரியும் உங்களுக்கு. நாங்கள் சிறுவர்கள் என்றாலும், எங்களைப் பெரிய அக்காக்களுடந்தான் அனுப்புவார்கள். அவர்களின் பயம் புரியாவிட்டாலும் எங்களையும் தொத்திக்கொள்ளும்.

நகரின் நடுப்பகுதியில் இருந்த பள்ளி விடுதியில் பல பெண்களை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்று எங்கள் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வார்டனும் பயந்திருப்பார்கள். எங்களுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரிந்திருக்கவில்லை. ரோட்டோரம் இருக்கும் அறையென்றால், கட்டிலை இழுத்துப்போட்டு நின்று உயர்மான கண்ணாடி வழியாக வெளியே நடப்பதைப்பார்த்துக்கொண்டு நிற்போம். வார்டன் வந்து உதை கொடுத்த நாட்களும் உண்டு. மனுசியின் வாயால் திட்டும் பேச்சுக்கு அடி உதையே பரவாயில்லை. ஆர்மிக்காறர்கள் வண்டியில் போகும்போது ஈயாடாது. எங்கள்
மெஸ்ஸும் ரோட்டோரம்ந்தான். லைட்டை அணைத்துவிட்டு லாந்தர் விளக்கொளியில் சாப்பிடுவோம். சாப்பிடுவதற்கு முன்னர் இறைவனை வழிபடுவோம். அதுவும் கட். எங்களுக்கு அது போர் என்பதால் சந்தோஷம். கதைக்காமல் மூச்சுக்கீச்சு விடாமல் சாப்பிடவேண்டும். நாங்கள் கதைத்தாலும் அக்காமார் திட்டி பேசாமல் இருக்கச் சொல்வார்கள். அவர்களுக்கு விளைவுகளின் அனர்த்தங்கள் தெரிந்தபடியால் அப்படிச் செய்தார்கள்.

இரவுகளில் நாங்கள் படுக்கச் சென்றபிறகு சும்மா இருப்போம் என்கிறீர்களா? மறுபடி கட்டிலில் ஏறி வெளியில் என்ன நடக்கிறது என்று நுனிக்காலில் எட்டி நின்று பார்ப்போம். வாச்சுமேன் தாத்தா தூங்கி வழிவார். ஒரு நாள் அவர் தூங்கி வழியாமல் உலாத்திக்கொண்டு நிண்டார். அவர் தனியாக இல்லை. கூட இரண்டு பேர் நின்றார்கள். அன்றைக்கு மட்டுமில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும். விசயம் எல்லாருக்கும் பரவி, கடைசியில் என்னவென்று அறிந்துகொள்ள முடிந்தது. பெண்கள் தனியாக இருப்பதால் ஆமி ஏதேனும் செய்ய வந்தால், தடுப்பதற்கு அவர்கள் ஒவ்வொரு இரவும் வருவார்களாம். நான் அங்கிருந்து கிளம்பும் வரை வந்து காவல்காத்தார்கள். பிறகும் வந்தார்களாம்.

வகுப்புகள் ஒரு மணியோடு முடிந்துவிடும். இரண்டு மணிக்கோ என்னமோ கர்ஃப்யூ. ரோட்டில் ஒரு புழுப்பூச்சி இருக்காது. ஹாஸ்டலில் நாங்கள் மூச்சுக்கூட விடமுடியாது. ஒவ்வொரு வாரமும் வீட்டிலிருந்து புத்தகங்கள்(அம்புலிமாமாவில் இருந்து காமிக்ஸ் வரை) தூக்கிக்கொண்டு போவோம். உற்வினரின் வேன் என்றால் பள்ளி வாசலிலேயே கொண்டிறக்குவார்.

பகலில் எங்கேயாவது சுட்டாலோ குண் டு விழுந்தாலோ சென்னையில் தீபாவளிக்கு வெடி வெடிப்பார்களே அப்படியிருக்கும்.(பதிவு எழுதியிருக்கிறேன்.) குண்டு வெடித்தால் பள்ளியில் இருக்கும் பழைய கட்டிடங்கள் ஆடும். எங்கள் பள்ளி முன்னூறு வருடங்கள் பழையதாம்.

ஒரு முறை என்னைப்பார்த்துவிட்டு, தம்பிப் பார்க்கப்போன அம்மா, பின்னாலிருந்து சு ட்டுக்கொண்டு வந்த ஆமிக்காரனின் புல்லட் காதுக்குப் பக்கத்தில் பறந்துபோக உயிர் தப்பினார். அருகில் இருக்கும் மாமா ஒருவரின் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தார் அவர்.

நீங்கள் ஈழப்பிரச்சினையில் என்ன நிலையெடுத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனாலும், பொதுவில் இப்போது எழுத விரும்பாத விஷய்ங்களையும் எழுதியிருக்கிறேன்.

எனக்கு அரசியலில் நாட்டமில்லை. இங்கே வரும் தமிழ் பேப்பர்களைப் படிப்பதில்லை. ஈழம் சம்பந்தமான விஷயங்களையும் படிப்பதில்லை. பல நாட் தூக்கம் தொலைந்துபோகும் பாதிப்பு இருக்கிறது. just trying to survive. that's all.

நான் எழுதியிருப்பது 1985க்கு முன்னால் நடந்தவை.

எனக்கு பதுங்கு குழி எப்படியிருக்கும் என்று தெரியாது.

கண்ணுக்கு முன் குண்டு விழுந்து உறவினர்கள் செத்தால் எப்படியிருக்கும் என்று தெரியாது.

ஒரு உறவினர் தன் கணவர் 3 பிள்ளைகளை கண்ணுக்கெதிரில் தொலைத்தார். ஒரு பிள்ளை எஞ்சியது. கழுத்தில் பாய்ந்த ஷார்ப்பெனலுடன். மருத்துவ வசதியில்லாமல் செத்துப்போய்விட்டது.

ஹவாயில் சந்தித்த ஒரு பெண் - இலங்கைப்பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட கிருஷாந்தி(i hope i got the name right. am trying to block these things out - subconsiously. i think. coz, i cannot remember individual incidents). கிருஷாந்தியின் டீயூஷன் தோழி. அந்தப் பெண்குழந்தையை எத்தனையோ பேர் மாறி மாறிச் சீரழித்து, அவளைத் தேடிவந்த அவளது அம்மாவையும் சீரழித்து, கணவர் வெளிநாட்டில் என்பதால் துணைக்கு அழைத்துவந்த பக்கத்துவீட்டுக்காரரையும் கொன்று ஒரு குழியில் புதைத்தார்கள்.

நான் செக்கிங் போஸ்ட் பார்த்ததில்லை.

என் ஆறுவயது கசினைப்போல மீனம்பாக்கத்தில் இருந்து புறப்படும் விமானச் சத்தம் கேட்டு அழுததில்லை. எப்போதாவது போகும் ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு அம்மாவின் மடிக்குள் ஒழிந்ததில்லை. மேலே வரும் விமானத்தின் சத்தத்தைக் கேட்டு என்ன விமானம் என்று அவனை மாதிரி சொல்லத் தெரியாது எனக்கு. எந்தந்த விமானத்தில் என்னென்ன குண்டுகள் போடுவார்கள். ஒரு குண்டை ரிலீஸ் செய்து எத்தனை செகண்டில் தரையில் விழும். நம் தலைக்கு மேலே வரும் விமானம் குண்டை ரிலீஸ் செய்தால், நம் தலையில் விழாது, ஆனால் எவ்வளவு தூரத்தில் விழும் என்று நான்குவயதிலேயே சொல்லத் தெரியாது.

இன்னும் எத்தனையோ விஷயங்கள் தெரியாது.

குந்தவையின் கதை படித்திருக்கிறீர்களா?

http://womankind.yarl.net/archives/000052.html

5. நிறைய வாசிப்பவராக, எழுதுபவராக, சிந்திப்பவராக ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக நீங்கள் நினைப்பது என்ன?

நான் நிறைய வாசிக்கிறேன்/எழுதுகிறேன்/சிந்திக்கிறேனா?

:லபோதிபோ: யார் உங்ககிட்ட போய் சொன்னது???

6. இயல்பான நகைச்சுவை உணர்வை உங்கள் எழுத்துக்களில் (மடல்களிலும்) பார்க்க முடிகிறது. அது எப்படிங்க?

அட! நீங்க வேற. இபப்டியெல்லாம் திட்டுறதுக்கு நேரவே திட்டிரலாம் நீங்க.

7. இந்தியாவுக்கு வந்ததுண்டா?

நமக்கு ஊர்னு சொன்னா, சென்னைதான். எங்க பேட்டைல்லா.

8. இந்தியாவில் பார்க்க விரும்பும் இடங்கள்?

கேரளா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். தமிழ்நாடு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு ஊராப் போகப் பிடிக்கும். தஞ்சைப் பகுதி ரொம்ப பிடிச்ச இடம். போகும் இடத்தில் எல்லாம் புங்குடுதீவைப் பார்க்க முடியும்.

ஹவாயிலும் மக்கள் நடமாட்டமில்லாத இடங்கள், வாழைமரம், மாமரம், முருங்கைமரம் என்று அம்சமாக இருக்கும்.

9. இணையத்தமிழ் சார்ந்து எதிர்காலத் திட்டங்கள் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

அப்படியொன்றும் இல்லை. தமிழ் நாகரீகமானதாக இருக்க வேண்டும். அதுதான் விருப்பம்.

(தொடரும்)

2005-03-29

வசைபாட வந்தேன்

1.

நான் வலைப்பதிக்க ஆரம்பித்த புதிதில் நான் பார்த்த வலைப்பதிவுகளில் எல்லாம் நிறைய வலைப்பதிவுகளின் சுட்டிகளை இட்டு வைத்திருப்பார்கள். அதைப்பார்த்துவிட்டு நானும் ஒரு பட்டியலை உருவாக்கி வைத்திருந்தேன். அதை வலைப்பதிவில் ஏற்றுவதற்காக ஒவ்வொன்றாக சுட்டிகளை இணைத்து தனியாக சேகரித்து வந்தேன்.


அதையெல்லாம் பதிவேற்றுவதற்கு முன்னால் தமிழ்மணம் திரட்டி எல்லாப்பதிவுகளின் சுட்டிகளையும் அவ்வப்போது புதிய பதிவுகள் வர, வர காட்டுவது கண்டவுடன் தனித்தனியே குறிப்பிட்ட சிலரின் சுட்டிகளை பதிவேற்றும் எண்ணத்தைக் கைவிட்டேன். இப்போதெல்லாம் யாரும் அப்படி "நாங்கள் படிக்கும் வலைப்பதிவுகள்" என பட்டியலிடுவதில்லை என்றே நினைக்கிறேன்.


2.

காசியின் பதிவில் தமிழ்மணத்தில் பாலியல் பதிவுகளை அனுமதிக்கலாமா? என்ற வாக்கெடுப்பில் 1400+ வாக்குகள் பதிவாகி இருந்தன.


அதே சமயம் காசி மற்றும் மதி (இன்னும் சிலரும்) தங்கள் பதிவுகளில் விலாவாரியாக விளக்கி தமிழ் வலைப்பதிவர்களுக்கும் இணைய ஆர்வலர்களுக்கும் மிகவும் தேவையான பயர்பாக்ஸ் உலாவியின் பிழைகளைத் தீர்க்கும் வேண்டுகோளை பின்தாங்கி வாக்களிக்குமாறு வேண்டி இருந்தும் இந்தத் திரட்டி வழியாக உலாவும் நானூற்றுச் சொச்ச வலைப்பதிவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். (நேற்று வரை 62 வாக்குகள்.)


வலைப்பதிவர்களின் இந்தப் பொறுப்புணர்ச்சி கண்டு பெருமிதமாக இருக்கிறது. காசி வலைப்பதிவர்களிடம் எதிர்பார்த்த நன்கொடையும் இது தான் (?).


உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு வாக்கைப் பதிவு செய்யமுடியும். அப்படிச்செய்தவர்களையும் சேர்த்து உண்மையில் இந்தக் கடமையை நிறைவேற்றியவர்கள் எத்தனை பேராக இருக்கும்?


வாக்களிப்பதற்குச் சில படிகள் தாண்டிச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தச் சில நிமிடங்களை நாம் நமது நலனுக்காக செலவிட முடியாதா?


என் பதிவிலும் வலது புறம் முக்கிய அறிவிப்பு*** என்று தலைப்பிட்டு இதற்கான வழிமுறைகளை படிப்படியாக சுட்டிகளுடன் கொடுத்திருக்கிறேன். எத்தனை பேர் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?


இந்த வேளைகளில் தமிழனாகப் பிறந்ததற்கே நாணித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. (தமிழர்களின் கடமை உணர்ச்சி அத்தகையது.!!!)


3.

சுரதா என்று ஒருவர் மெனக்கெட்டு ஏராளமாக செயலிகளையும், எழுதிகளையும் உருவாக்கித் தள்ளுகிறார். அதிகம் மெனக்கெடாமல் நாமெல்லாம் தமிழை எழுதவும் கண்டகண்ட எழுத்துருவில் இருப்பதை உடனே வாசிக்கவும், எந்தத் தட்டச்சு முறை தெரிந்தவர்களும் (தெரியாதவர்களும்) தமிழில் உடனே தட்டச்ச உதவும் கருவிகளையும் இன்னபிறவும் ஏராளமாய்....வலைப்பதிவர்களுக்கென்று எளிமையான பின்னூட்ட வசதிகளையும் செய்து தந்திருக்கிறார் சுரதா. இதை நம் வலைப் பதிவர்களும் பார்ததுக்கொண்டே தான் இருக்கிறார்கள். எ-கலப்பை, முரசு, குறள்செயலி என்று எழுதுகருவிகள் பிறவும் நமக்கிருக்கிறது.


வலைப்பதிவுகளில் பின்னூட்டமிடுகிறவர்களில் சிலர் இத்தனை வசதிகள் இருந்தும் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டு விடுகிறார்கள். அவசரத்திற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுபவர்களை பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டு விட்டால் போதும். உடன் இதுதான் சாக்கென்று பின்னேயே வரிசையாக ஆங்கிலத்தில்தான் மறுமொழிகள் வந்து விழுகின்றன. இப்படி ஆங்கிலத்தில் பதிவதற்கா தமிழ்மணம் திரட்டி என்று மணக்கும் பெயர் வைத்து காசி மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார். நல்லவேளை சில பதிவுகளே ஆங்கிலத்தில் வந்து கொண்டிருந்ததை அவரே தடுத்து நிறுத்தி விட்டார்.


ஆகவே நண்பர்களே தமிழ்வலைப் பதிவுகளில் தமிழிலேயே பின்னூட்டமிட முயலுங்கள்.

பயர்பாக்சுக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்!!!

2005-03-28

மண்பெருமை

Image hosted by TinyPic.com

தொல்காப்பியம்

(சிறப்புப்பாயிரம்)

வடவேங்கடந் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத்தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டாசாற் கரிதபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்தப் படிமை யோனே.

...பனம்பாரனார்

தொல்காப்பியர் தாம் எழுதிய தமிழ் இலக்கண நூலை அதங்கோட்டாசான் தலைமையில் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றியதாக தொல்காப்பிய நூலுக்கு முன்னுரையான சிறப்புப்பாயிரத்தை எழுதிய பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார்.

அகத்தியர் பொதிகை மலைப்பகுதியில் வாழ்ந்த பழந்தமிழ்ப்புலவர். அகத்தியம் என்னும் இலக்கண நூலை இயற்றியவர்.

1. அதங்கோட்டாசான்
2. அவிநயர்
3. கழாரம்பர்
4. காக்கைப் பாடினியார்
5. செம்பூட்சேய்
6. தூரலிங்கர்
7. தொல்காப்பியர்
8. நற்றத்தர்
9. பனம்பாரனார்
10. வாமனர்
11. வாய்ப்பியர்
12. வையாபிகர்
என்னும் பன்னிருவர் அகத்தியரின் மாணாக்கர், இவர்களில் தொல்காப்பியர், அதங்கோட்டாசான் பனம்பாரனார் என்னும் மூவர் தென்குமரியில் வசித்தவர்கள்.

அதங்கோட்டாசான் வாழ்ந்த இடம் அதங்கோடு எனவும் பனம்பாரனார் இடம் பனம்பழஞ்சி எனவும் தொல்காப்பியர் வாழ்ந்தது காப்பியக்காடு எனவும் விளங்கின. காப்பியக்காடு இப்போது காப்புக்காடு என்றழைக்கப்படுகிறது.

அதங்கோட்டாசான் எழுதிய நூல்கள் பலவும் ஓலைச்சுவடிகளாக அதங்கோட்டில் பலரிடத்தும் இருந்ததாக அறியமுடிகிறது. அதன் முக்கியத்துவம் அறியாமல் பலரும் அவற்றை வீணாக்கி விட்டனர். எஞ்சியவற்றுள் கிடைத்த சில ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அதங்கோட்டாசான் என்னும் தமிழ்ப்பெரும்புலவர் வாழ்ந்த இடம் குறித்து பிற்கால சந்ததிகளுக்கு அறியத்தரும் முயற்சியில் தமிழார்வம் மிக்கோர் ஈடுபட்டனர். இதையறிந்த வேறுசிலர் பிற்காலக் கேரளத்து அரசாட்சியான திருவிதாங்கூர் சமத்தானத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த திருவிதாங்கோடு என்னும் ஊரே அதங்கோட்டாசான் ஊராக தமிழகத்து அறிஞர்களிடத்தில் தவறான தகவல்களைத் தந்தனர். இவர்களின் கூற்றுப்படி திரு+அதம்+கோடு என்பது மருவி திருவிதாங்கோடு ஆயிற்று என்று சொல்லப்பட்டது.

ஆனால் அதங்கோடு என்னும் ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில் முஞ்சிறை ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சியில் (அதங்கோடாகவே) இருக்கிற உண்மை திருவிதாங்கோட்டை முன்னிலைப்படுத்த விரும்பியவர்களால் மறைக்கப்பட்டது. இது குறித்து விபரம் அறிந்த அதங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உண்மை நிலையை உலகுக்கு உணர்த்த உறுதி கொண்டனர்.

தமிழ் மாணவரான கோவிந்தநாதன் என்பவர் அதங்கோட்டை அதங்கோட்டாசான் ஊராக அங்கீகரித்து நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்க அரசுக்குக் கோரிக்கை வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராடி சிறைவாசமும் பலவித தியாகங்களும் ஏற்று தீக்குளிப்புப் போராட்டம் வரை சென்று அரசின் கவனத்தைக் கவர்ந்தார். அதன்பிறகு முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதங்கோடுதான் அதங்கோட்டாசான் பிறந்த ஊர் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டதோடு அதங்கோட்டாசான் உருவச்சிலை நினைவுச் சின்னமாக அங்கு அமைக்கப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் அதங்கோட்டாசான் உருவப்படம் இடம் பெற்றுள்ளது.

* * *
த. சசி-உதயதாரகை-6

2005-03-27

நட்சத்திரப் பதிவு?

* * *
இனிய தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்.

மதி அவர்கள் தந்த கடமையால் இன்னும் ஏழுநாட்களுக்கு நான் தொடர்ந்து கட்டாயமா வலைப்பதிக்க வேண்டியிருக்கு. நட்சத்திர நாயகர் காசி தமிழ் மணத்தின் வளர்ச்சிக்கான ஓட்டெடுப்புகள் மற்றும் அறிவுரைப் பதிவுகளாலேயே ஒருவாரமும் அசத்திவிட்டார். நான் என்ன செய்யப்போகிறேனோ தெரியவில்லை.

முதலில் ஒரு கடமையாக,

இணையத்தில் தமிழை அரங்கேற்றி அழகு பார்த்த பேராசிரியர் நா. கோவிந்தசாமி,

மதுரை திட்டம் வழி தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இடம்பெறச் செய்த கல்யாண சுந்தரம்,
.
இணையத் தமிழர்கள் இன்று தமிழை வாசிக்க அடித்தளமிட்ட முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன்,

ஆவரங்கால் எழுத்துரு மூலம் தமிழ் யூனிகோட் எழுத்துருக்களுக்கு முகவரி தந்த சின்னத்துரை சிறீவாஸ்,

தமிழ் யூனிகோட் செயலாக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றி வருவதோடு அனைவருக்கும் பொதுவான இயங்கு எழுத்துரு தந்த உமர்,

எளிமையான செயலிகளை உருவாக்கி பலகூறாகப் பிரிந்திருந்த தமிழ் எழுத்துருக்களை எல்லோரும் வாசிக்கவும் தமிழில் எழுதவும் வகை செய்துவரும் சுரதா,

திசைகள் மூலமாக தமிழ் இலக்கிய வாசலை இணையத்தமிழர்களுக்காகத் திறந்ததோடு, தமிழ் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் தந்த மாலன்,

மரத்தடி குழுமம், மரத்தடி இணையம் என புதிய பல புதிய இணைய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத் தந்ததோடு, தமிழ் வலைப்திவுகளை பட்டியலிட்டுத் திரட்டி ஓரிடத்தில் சேர்த்து வைத்து இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மதி,

அந்தத் தொகுப்புகளை நேரடியாக வாசகர் வாசிக்கச்செய்ய தமிழ்மணம் என்னும் திரட்டியை உருவாக்கி தமிழ் வலைப்பதிவுகளுக்கு பரவலான வாசகவட்டத்தை உருவாக்கித் தந்து அதை நித்தம் மெருகேற்றி வரும் காசி,

தமிழ் விக்கிபீடியாவை அறிமுகப் படுத்தி கணித்தமிழ்க் களஞ்சியம் உருவாக வழி வகுத்துள்ள வெங்கட்,

எ-கலப்பை, தமிழ் உலாவி என கணினியைத் தமிழ்மயமாக்க உழைக்கும் 'தமிழா' குழுவினர்,

குறள் தமிழ்ச்செயலி வழி தமிழ் பிழைதிருத்தி மற்றும் குரல் வழி வாசிப்பானை அறிமுகம் செய்துள்ள குறள்சாப்ட் குழுவினர்,

அமுதம் ஆன்டோ பீட்டர், அழகி பா.விஸ்வநாதன் என கணித்தமிழ் கருவிகள் தந்த இளைஞர்கள்,

என இணையத்தில் தமிழுக்கு நல்லதொரு இடம் கிடைக்க உழைத்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

விடுபட்டவர்கள் மற்றும் தகவல் பிழைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

2005-03-19

ஜெயகாந்தபீடம்

Image hosted by TinyPic.com

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் என்ற செய்தி அகிலனுக்குப் பின் ஏற்பட்ட மிக நீண்ட இடை வெளியை இட்டு நிரப்புமளவுக்கு நேர்மையானது. இந்திய இலக்கிய வீதியில் தமிழுக்கு இதுவரை ஏற்பட்டிருந்த சூன்யம் சற்றே தணிந்திருப்பதில் ஆறுதல் அடையலாம்.

ஜனரஞ்சக பத்திரிகை உலகில் தீவிர இலக்கியத்தை அது தீவிர இலக்கியம் என்ற வேறுபாடின்றியே படைத்துக்காட்டியவர் அவர். இன்று பெரும்பத்திரிகைகள் எல்லாமே தீவிர இலக்கியத்தை ஒருபகுதியாகவேனும் வெளியிடத் தலைப்பட்டுள்ளன. குமுதம் முதலான இதழ்கள் தீராநதி போன்ற தனி இதழ்களே வெளியிடுமளவுக்கு நிலைமை முன்னேறியிருக்கிறது.

ஆனால் அன்று ஜெயகாந்தன் என்ற தனி ஆளுமைக்காக மட்டுமே அவை அப்பத்திரிகைகளில் வெளிவந்தன. அதுவரை படைக்கப் பட்டு வந்த பாத்திரப் படைப்புகளை மீறி சாதாரண ஜனங்களின் கதையை தனக்கேயுரிய மொழிநடையில் உருவாக்கியவர் அவர். அவை பெரிய பத்திரிகைகளின் வழக்கமான வாசகர்களையும் சென்றடைந்தது என்பதே ஜெயகாந்தனின் மிகப்பெரிய வெற்றியாகும். அதே சமயம் இலக்கிய வாசகர்களிடையே ஜெயகாந்தன் என்ற பெயர் மந்திரம் போலப் பரவியது. ஜெயகாந்தனைப் படிப்பவர்கள் அறிவுஜீவிகளாகவும் சிந்திக்கத் தெரிந்தவர்களாகவும் கருதப்பட்டார்கள்.

அந்த மிகப்பெரும் இலக்கிய ஆளுமை ஒருகட்டத்தில் தன்படைப்புகளை நிறுத்திக்கொண்டது. மீண்டும் எழுதத் துவங்கியபோது அவரது எழுத்து தன் ஆளுமையை இழந்துவிட்டதான விமர்சனங்கள் இருந்த போதிலும் சரித்திரங்கள் சாகா. தமிழ் இலக்கிய உலகில் அவரது வீச்சு நிச்சயம் நினைவு கூரத்தக்கது.

கடந்த ஆண்டிலேயே அவருக்கு ஞானபீடம் கிடைக்கக்கூடுமென்ற யூகங்கள் வெளிவந்தன. அப்போது தவறினாலும் இப்போதாவது கிடைத்ததே என மகிழ்வோம். தமிழ் தன் ஞானச் செருக்கை தொடரட்டும்.

சாகித்ய அகாடமி விருது வழங்கும் முறைகளும் விருதுக்குரிய நபர்களும் தமிழில் தமிழர்களாலேயே பலவேளைகளில் விமர்சிக்கப் படுவதுண்டு. அது போலவே அன்று அகிலனுக்கு ஞானபீடம் வழங்கப் பட்டதை தமிழர்களே எதிர்த்ததன் விளைவே இதுவரை தமிழுக்கு ஞானபீடம் வழங்கப்படாதிருந்ததென்றும் கூறப்படுவதால் அத்தகையதோர் ஈனச்செயலில் மீண்டும் யாரும் ஈடுபட வேண்டாம். ஜெயகாந்தனை தகுதிக்குறைவாக தமிழர் எவரும் நினைக்க மாட்டாரென்றே கருதுவோம்.

2005-03-16

இரவின் நறுமணம்

Image hosted by TinyPic.com


இரவின் நறுமணம் எனப் பொருள்படும் நிஷாகந்தி மலர் மலையாள இலக்கியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளது. இந்த மலரை பெரும்பாலும் யாருமே பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் இதன் ஆயுள் மிகக் குறுகியது. இதன் மொட்டு சூரியன் மறைந்த பிறகு விரியத்தொடங்கி மறுநாள் சூரியன் உதிப்பதற்குள் வாடிவிடும். இது முழுமையாக விரிந்திருப்பது நள்ளிரவில் மட்டுமே.

ஆண்டுக்கு ஓரிருமுறை மழைக்காலத்தில் மட்டும் மொட்டு உருவாகி இரு வாரங்களில் முழுமை அடைகிறது. ஒரு மாலை வேளையில் அது விரியத் தொடங்குகிறது. நள்ளிரவில் அது சுமார் ஒரு அடிக்குமேல் விட்டமுள்ள அழகிய மலராக மலர்ந்து மணம் வீசுகிறது. விடிவதற்குள் வாடித் தலை சாய்ந்து விடுகிறது.

மணமான அன்றே விதவையான பெண்ணுக்கு உருவகமாக இந்தமலரை மலையாள இலக்கியங்கள் கூறுவதுண்டு. விரகதாபத்தின் சோகமலராக இந்த அழகிய மலரை மலையாளக் கவிதைகள் வர்ணிக்கின்றன.

இது கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கள்ளிச் செடிகளைப் போலவே இதுவும் இலைகளை நட்டாலே அதிலிருந்து துளிர்விட்டு வளரக்கூடியது. செடி எளிதாக வளரும் என்றாலும் சில வகை மண்ணில் இது பூப்பது அரிது. சில இடங்களில் பூப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். பொருத்தமான மண்வகையும் காலநிலையும் அமைந்தால் ஓரிரு ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும். மழைக்காலங்களில் மட்டுமே மொட்டுவிடும். ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பூக்கலாம்.

இதன் வாசனையும் அழகும் நள்ளிரவில் காண்பது அற்புதமான அனுபவம்.

இரு கேள்விகள்:

1. இதை வீடுகளில் வளர்க்க பயங்கரமான துணிச்சல் வேண்டும். ஏன்?

2. இதன் அறிவியல் பெயர் என்ன?

2005-03-11

ஒரு உதவிக்குறிப்பு

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சவுதி அரேபியாவில் டாங்கர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் டாங்கர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஆகஸ்டில் அவரது டாங்கர் லாரியின் பின்புறமாக இரு இளைஞர்கள் வந்த சிறிய கார் வேகமாக வந்து மோதியதில் கார் சிதைந்து இளைஞர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். அவர்களுக்கு 17, 18 வயதுதான் இருக்கும். நண்பர் தவறு செய்யவில்லை என்றாலும் இரு உயிர்கள் போய்விட்டதால் ஓடிப்போய்விடும்படி கூறியவர்களுக்கு செவிகொடாமல் தானே முன்னிருந்து எல்லாம் செய்தார். போலீசில் தானாகவே சரணடைந்தார்.

இறந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர் தவறு செய்யவில்லை என்பது தெரிந்திருந்ததால் அவர்கள் நண்பர்மீது கடுமையான நடவடிக்கை ஏதும் கோரவில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால் சம்பவத்துக்குப் பின் அவரது ஸ்பான்சர் எனப்படுகிற நபர் (அரபி) நண்பரைப் பார்க்க வரவேயில்லை. நஷ்ட ஈடு வழங்க வேண்டியிருக்கும் என்று பயந்த அரபி இறந்த இளைஞர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவோ நண்பரின் வழக்குத் தொடர்பாக உதவி செய்யவோ முன்வரவில்லை. இதனால் நண்பரின் மீதான வழக்கை ரத்து செய்ய ஒப்புக்கொண்டிருந்த இளைஞர்களின் குடும்பத்தினர் பின்னர் அதற்கு மறுத்து விட்டனர்.

வழக்கு விசாரணையின்றி நண்பர் கடந்த எட்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார். அங்குள்ள அவரது சகதோழர்கள் இளைஞர்களின் குடும்பத்தினரிடம் பேசிப்பார்த்தும் ஸ்பான்சர் வராமல் சமரசம் இயலாதென்று கூறிவிட்டனர். ஸ்பான்சர் தன் பொறுப்பிலிருந்து நழுவ விரும்புவதால் எதற்கும் மசியாமல் கமுக்கமாக இருந்துவிட்டார். வேறுவழியின்றி நண்பர்கள் இந்திய தூதரகத்தில் உதவிக்காக விண்ணப்பித்தனர். அங்கும் எந்த அசைவும் இல்லை.

பின்னர் ஊரிலிருந்து நண்பரின் மனைவியால் விளக்கமாக விபரங்கள் இந்திய தூதரகத்திற்கு FAX செய்யப்பட்டது. பலமுறை மின்னஞ்சல் மூலமும் நினைவூட்டப் பட்டது. விளக்கமாக எல்லாம் தெரிவித்தும் ஸ்பான்சருக்கு சாவதானமாக கடிதம் எழுதி இந்த விஷயத்தை கவனிக்கும்படி கூறிவிட்டு இந்திய தூதரகமும் மௌனியாகி விட்டது.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் பொதுவாக ஸ்பான்சர் எனப்படுபவர் வெளிநாட்டவரை வேலைக்கு வைத்திருப்பவராகத்தான் இருப்பார். ஆனால் குறிப்பிட்ட ஸ்பான்சரிடம் வேலை பார்த்து வந்த நண்பர் பின்னர் அவருடைய வாகனத்தை தாமே வாடகைக்கு (லீசுக்கு) எடுத்து குடிநீர் சப்ளை செய்து வந்தார். ஆகவே நண்பர்தான் அவருக்கு வாடகை தருவாரே தவிர ஸ்பான்சர் சம்பளம் ஏதும் தருவதில்லை. அவ்வாறு தண்ணீர் சப்ளை செய்யும்போதுதான் நணபரின் வாகனம் விபத்தில் சிக்கியது.

ஆகவே தமக்கு எந்தவித பொறுப்பும் இல்லை எனக்கூறி இதில் மேற்படி ஸ்பான்சர் எந்த உதவியும் செய்ய விரும்பவில்லை. சட்டப்படி (சான்றிதழ்களின்படி) அவரே ஸ்பான்சர் என்பதால் அவரது தலையீடு இல்லாமல் நண்பர் விடுதலை பெறுவது இயலாமல் இருக்கிறது.

(எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி குறிப்பிட்ட வாகனமும் பின்னர் களவு போய்விட்டதாகவும் கம்பெனி நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி நேரடியாகவும் லீசுக்கும் ஓடிக் கொண்டிருந்த பல வாகனங்களை விற்று விட்டு நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் தெரிகிறது. நஷட ஈடு வழங்காதிருக்க ஸ்பான்சர் செய்த தந்திரம் என்று நண்பரின் சகாக்கள் தெரிவித்துள்ளனர்)

இந்திய தூதரகமோ வழக்கமான காகித நடைமுறைகளின்படி மெத்தனமாக இருக்கிறது. சரியாகப் புரிந்துகொள்ளாமல் வழக்கமான நடவடிக்கைகளில் காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கடிதம் அனுப்பியது தவிர (அதுவும் ஸ்பான்சருக்கே?) எந்த உருப்படியான காரியத்தையும் அவர்கள் செய்யவில்லை.

குறிப்பிட்ட நண்பரின் தாயாரும் மனைவியும் ஒரே மகளும் என மூன்று பெண்கள் மட்டும் ஆதரவின்றி இங்கே ஊரில் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.
எனக்குத் தகவல் தெரிந்தது முதல் என்னால் முடிந்த உதவியாக அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பி தூதரகத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன். இந்தியத் தலைகளுக்கும் மனுக்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இது தொடர்பாக வலைநண்பர்களின் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். சவுதியில் பணிபுரியும் நண்பர்கள், ரியாத் இந்திய தூதரகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் இதில் ஏதாவது உதவ முடியுமா? நிலைமையை அவர்கள் (தூதரகம்) புரிந்து வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதுதான் இப்போது முக்கியம்.

சவுதி விதிகளின்படி இது போன்ற வழக்குகளில் ஸ்பான்சர் தான் பொறுப்பேற்று வழக்கை நடத்த வேண்டுமா?

இறந்து போன இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களா? என்று தெரியவில்லை. குறைந்த வயதில் அங்கே உரிமம் வழங்கப் படுமா?(அவர்களின் வயது குறித்து கேட்டறிந்த செய்தி சரியா என்றும் தெரியவில்லை.)

எந்தவித விசாரணையுமின்றி சிறையில் வைக்கப் பட்டிருப்பது இங்கு போல் அங்கும் உண்டுபோல. தண்டனைக்காலம் இவ்வளவு என்று கூடத்தெரியாமல் அன்னியச் சிறையில்?

2005-03-06

பூகம்பமும் புஸ்வாணமும்

ஒரு பூகம்பம் புஸ்வாணமாகிப்போனது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று இளங்கோவன் கூறியதாக வந்த செய்திகளையடுத்து திமுக இளங்கோவன் மீது கடுமையான கண்டனங்களை வீசியது. பின்னர் நிலைமை உணர்ந்து இளங்கோவனும் காங்கிரஸ் தலைமையும் மன்னிப்புக்கேட்ட பிறகும் சமாதானமடையாத திமுக இளங்கோவன் மீது நடவடிக்கை கோரி பிடிவாதம் செய்தது. தன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியைத் தவிர்க்க இளங்கோவன் நேரிலேயே வந்து விளக்கம் சொன்ன பிறகு திமுக சமாதானமாகியது. இது ஒரு பூகம்பத்தை எதிர்பார்த்திருந்த பலருக்கு ஏமாற்றமளித்தது.

அதேசமயம் நம் மனதில் எழும் சில கேள்விகள்.இளங்கோவன் பேசிய விபரங்கள் செய்தியாகக்கூட வராத நிலையில் திமுக அதன் மீது எதற்காக பரபரப்படைந்தது? கலைஞரின் சாதியைச் சொல்லி இளங்கோவன் திட்டியதாகக் கூட வதந்திகள் பரவின.

கூட்டணி ஆட்சி வேண்டும் என்று பேசுவதே பாவம் என்று திமுக நினைக்குமானால் அதைவிட அல்பத்தனம் வேறு ஏதும் இல்லை. இத்தனைக்கும் தன் சொந்தக் கட்சி உறுப்பினர்களிடையே மட்டும் ஒரு தலைவர் பேசிய பேச்சை ஏதோ பெரிய அவமானம் போல உவமானம் கொள்வது மரியாதைக்குரிய செயலாகாது.

ஒருவேளை அந்த வதந்தியை நம்பியோ? யாமறியோம் பராபரமே.

மாலன்கூட இளங்கோவனை விமர்சித்து "திருவாளர் பந்தா பளு தூக்கலாமா?" என்று தன் பதிவில் எழுதியிருந்தார். என் பின்னூட்டத்தை அடுத்து அது இளங்கோவன் மீதான தாக்குதல் அல்ல காங்கிரஸ் மீதான விமர்சனம் என்று மறுத்தார்.

எப்படி இருந்தாலும் ஆட்சிக்கு ஆசைப்படுவது அரசியல்வாதிக்கு இயல்பானது. இளங்கோவனும் கூட்டணி ஆட்சியைத்தானே ஆசைப்பட்டிருக்கிறார். அதுவே அதிகம் என்று சீறுவது ஜனநாயகமல்ல.
நாற்பதையும் பெற்றுத் தந்த கூட்டணியின் தலைவர் என்ற நன்றிக்கடனில் கலைஞர் மீது காங்கிரஸ் வைத்த நம்பிக்கையையும் மரியாதையையும் திமுக கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

அமைச்சரவையில் இலாகாக்கள் பெறுவதில் திமுக நடத்திய அசிங்கமான நாடகங்கள் அரசியல் சார்பற்ற நடுநிலை வாக்காளர்கள் மனதில் அருவெறுப்பை அளித்தது. அதுவரை வைத்திருந்த நம்பிக்கைகள் சரியத் தோடங்கின.

அதன்பிறகு திமுகவின் மத்திய அமைச்சர்களின் துறைசார்ந்த அரசு விழாக்கள் திமுக கட்சி விழாக்களாக, கலைஞரின் குடும்ப விழாக்களாக நடத்தப் பட்டதில் இன்னும் சரிந்து, இந்தப் புதிய சர்ச்சையில் தரைமட்டமாகிவிட்டது. ஜெயலலிதா மீது நாம் சுமத்தும் குற்றச் சாட்டுகள் திமுகவிற்கும் பொருந்துவதாக இதன்மூலம் அமைகிறது.

காங்கிரஸ் இன்று திமுகவிடம் அடிபணிந்திருக்கலாம். ஆனால் நாற்பதையும் வெல்லக் காரணமாக இருந்த நடுநிலை வாக்காளர்கள் மனதில் திமுக மீதான மரியாதையும் நம்பிக்கையும் தகர்வதை மறுக்க முடியுமா?