2005-03-28

மண்பெருமை

Image hosted by TinyPic.com

தொல்காப்பியம்

(சிறப்புப்பாயிரம்)

வடவேங்கடந் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத்தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டாசாற் கரிதபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்தப் படிமை யோனே.

...பனம்பாரனார்

தொல்காப்பியர் தாம் எழுதிய தமிழ் இலக்கண நூலை அதங்கோட்டாசான் தலைமையில் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றியதாக தொல்காப்பிய நூலுக்கு முன்னுரையான சிறப்புப்பாயிரத்தை எழுதிய பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார்.

அகத்தியர் பொதிகை மலைப்பகுதியில் வாழ்ந்த பழந்தமிழ்ப்புலவர். அகத்தியம் என்னும் இலக்கண நூலை இயற்றியவர்.

1. அதங்கோட்டாசான்
2. அவிநயர்
3. கழாரம்பர்
4. காக்கைப் பாடினியார்
5. செம்பூட்சேய்
6. தூரலிங்கர்
7. தொல்காப்பியர்
8. நற்றத்தர்
9. பனம்பாரனார்
10. வாமனர்
11. வாய்ப்பியர்
12. வையாபிகர்
என்னும் பன்னிருவர் அகத்தியரின் மாணாக்கர், இவர்களில் தொல்காப்பியர், அதங்கோட்டாசான் பனம்பாரனார் என்னும் மூவர் தென்குமரியில் வசித்தவர்கள்.

அதங்கோட்டாசான் வாழ்ந்த இடம் அதங்கோடு எனவும் பனம்பாரனார் இடம் பனம்பழஞ்சி எனவும் தொல்காப்பியர் வாழ்ந்தது காப்பியக்காடு எனவும் விளங்கின. காப்பியக்காடு இப்போது காப்புக்காடு என்றழைக்கப்படுகிறது.

அதங்கோட்டாசான் எழுதிய நூல்கள் பலவும் ஓலைச்சுவடிகளாக அதங்கோட்டில் பலரிடத்தும் இருந்ததாக அறியமுடிகிறது. அதன் முக்கியத்துவம் அறியாமல் பலரும் அவற்றை வீணாக்கி விட்டனர். எஞ்சியவற்றுள் கிடைத்த சில ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அதங்கோட்டாசான் என்னும் தமிழ்ப்பெரும்புலவர் வாழ்ந்த இடம் குறித்து பிற்கால சந்ததிகளுக்கு அறியத்தரும் முயற்சியில் தமிழார்வம் மிக்கோர் ஈடுபட்டனர். இதையறிந்த வேறுசிலர் பிற்காலக் கேரளத்து அரசாட்சியான திருவிதாங்கூர் சமத்தானத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த திருவிதாங்கோடு என்னும் ஊரே அதங்கோட்டாசான் ஊராக தமிழகத்து அறிஞர்களிடத்தில் தவறான தகவல்களைத் தந்தனர். இவர்களின் கூற்றுப்படி திரு+அதம்+கோடு என்பது மருவி திருவிதாங்கோடு ஆயிற்று என்று சொல்லப்பட்டது.

ஆனால் அதங்கோடு என்னும் ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில் முஞ்சிறை ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சியில் (அதங்கோடாகவே) இருக்கிற உண்மை திருவிதாங்கோட்டை முன்னிலைப்படுத்த விரும்பியவர்களால் மறைக்கப்பட்டது. இது குறித்து விபரம் அறிந்த அதங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உண்மை நிலையை உலகுக்கு உணர்த்த உறுதி கொண்டனர்.

தமிழ் மாணவரான கோவிந்தநாதன் என்பவர் அதங்கோட்டை அதங்கோட்டாசான் ஊராக அங்கீகரித்து நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்க அரசுக்குக் கோரிக்கை வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராடி சிறைவாசமும் பலவித தியாகங்களும் ஏற்று தீக்குளிப்புப் போராட்டம் வரை சென்று அரசின் கவனத்தைக் கவர்ந்தார். அதன்பிறகு முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதங்கோடுதான் அதங்கோட்டாசான் பிறந்த ஊர் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டதோடு அதங்கோட்டாசான் உருவச்சிலை நினைவுச் சின்னமாக அங்கு அமைக்கப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் அதங்கோட்டாசான் உருவப்படம் இடம் பெற்றுள்ளது.

* * *
த. சசி-உதயதாரகை-6

5 comments:

Thangamani said...

நல்ல தகவல்

newsintamil said...

மீண்டும் சுனாமி தாக்கக்கூடுமோ என்று வலைப்பதிவுகளிலும் செய்திகள் வந்தவண்ணமுள்ளன.
இயற்கையின் விளையாட்டை யாரறிவார்? இனி ஒரு சுனாமி இப்போதைக்கு இல்லவே இல்லை என்று விஞ்ஞானிகள் அடித்துச் சொன்னார்கள்!
அறிவியலை மீறியது இயற்கை! இழப்பின்றி சென்றால் நன்று. ஓரளவுக்கு இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.அதனால் சுனாமி தாக்கினாலும் உயிர்ச்சேதம் குறைவாக இருக்குமென்று நம்புவோம்.
சுனாமி வராமலே இருந்துவிட்டால் இயற்கைக்கு நன்றி!

மு. சுந்தரமூர்த்தி said...

"Civilization exists by geological consent, subject to change without notice."

-Will Durant

அதங்கோட்டாசான் குறித்த பதிவு அருமை. உங்களின் பிற நட்சத்திரப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இராதாகிருஷ்ணன் said...

இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்!
அதங்கோட்டாசான் இதுவரை கேட்டறியாத புதிய தகவல், நன்றி! அக்காலத்துப் பெயர்கள் (செம்பூட்சேய்) நன்றாக உள்ளன.
அகரவலையின் முகப்புப் பக்கத்தின் வலப்புறப்பட்டையில் இருக்கும் "முக்கிய அறிவிப்பு" நல்ல முயற்சி. இதுவரைக்கும் 62 வாக்குகள்தான் விழுந்துள்ளன. :-(

Narain said...

எனக்கு இது புதிய தகவல். நன்றி. தொடர்ந்து இம்மாதிரி மறைக்கப்பட்ட அல்லது பொதுவில்லாத விஷயங்களை பற்றி எழுதுங்கள். உங்களின் பிற நட்சத்திரப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.