2005-03-06

பூகம்பமும் புஸ்வாணமும்

ஒரு பூகம்பம் புஸ்வாணமாகிப்போனது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று இளங்கோவன் கூறியதாக வந்த செய்திகளையடுத்து திமுக இளங்கோவன் மீது கடுமையான கண்டனங்களை வீசியது. பின்னர் நிலைமை உணர்ந்து இளங்கோவனும் காங்கிரஸ் தலைமையும் மன்னிப்புக்கேட்ட பிறகும் சமாதானமடையாத திமுக இளங்கோவன் மீது நடவடிக்கை கோரி பிடிவாதம் செய்தது. தன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியைத் தவிர்க்க இளங்கோவன் நேரிலேயே வந்து விளக்கம் சொன்ன பிறகு திமுக சமாதானமாகியது. இது ஒரு பூகம்பத்தை எதிர்பார்த்திருந்த பலருக்கு ஏமாற்றமளித்தது.

அதேசமயம் நம் மனதில் எழும் சில கேள்விகள்.இளங்கோவன் பேசிய விபரங்கள் செய்தியாகக்கூட வராத நிலையில் திமுக அதன் மீது எதற்காக பரபரப்படைந்தது? கலைஞரின் சாதியைச் சொல்லி இளங்கோவன் திட்டியதாகக் கூட வதந்திகள் பரவின.

கூட்டணி ஆட்சி வேண்டும் என்று பேசுவதே பாவம் என்று திமுக நினைக்குமானால் அதைவிட அல்பத்தனம் வேறு ஏதும் இல்லை. இத்தனைக்கும் தன் சொந்தக் கட்சி உறுப்பினர்களிடையே மட்டும் ஒரு தலைவர் பேசிய பேச்சை ஏதோ பெரிய அவமானம் போல உவமானம் கொள்வது மரியாதைக்குரிய செயலாகாது.

ஒருவேளை அந்த வதந்தியை நம்பியோ? யாமறியோம் பராபரமே.

மாலன்கூட இளங்கோவனை விமர்சித்து "திருவாளர் பந்தா பளு தூக்கலாமா?" என்று தன் பதிவில் எழுதியிருந்தார். என் பின்னூட்டத்தை அடுத்து அது இளங்கோவன் மீதான தாக்குதல் அல்ல காங்கிரஸ் மீதான விமர்சனம் என்று மறுத்தார்.

எப்படி இருந்தாலும் ஆட்சிக்கு ஆசைப்படுவது அரசியல்வாதிக்கு இயல்பானது. இளங்கோவனும் கூட்டணி ஆட்சியைத்தானே ஆசைப்பட்டிருக்கிறார். அதுவே அதிகம் என்று சீறுவது ஜனநாயகமல்ல.
நாற்பதையும் பெற்றுத் தந்த கூட்டணியின் தலைவர் என்ற நன்றிக்கடனில் கலைஞர் மீது காங்கிரஸ் வைத்த நம்பிக்கையையும் மரியாதையையும் திமுக கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

அமைச்சரவையில் இலாகாக்கள் பெறுவதில் திமுக நடத்திய அசிங்கமான நாடகங்கள் அரசியல் சார்பற்ற நடுநிலை வாக்காளர்கள் மனதில் அருவெறுப்பை அளித்தது. அதுவரை வைத்திருந்த நம்பிக்கைகள் சரியத் தோடங்கின.

அதன்பிறகு திமுகவின் மத்திய அமைச்சர்களின் துறைசார்ந்த அரசு விழாக்கள் திமுக கட்சி விழாக்களாக, கலைஞரின் குடும்ப விழாக்களாக நடத்தப் பட்டதில் இன்னும் சரிந்து, இந்தப் புதிய சர்ச்சையில் தரைமட்டமாகிவிட்டது. ஜெயலலிதா மீது நாம் சுமத்தும் குற்றச் சாட்டுகள் திமுகவிற்கும் பொருந்துவதாக இதன்மூலம் அமைகிறது.

காங்கிரஸ் இன்று திமுகவிடம் அடிபணிந்திருக்கலாம். ஆனால் நாற்பதையும் வெல்லக் காரணமாக இருந்த நடுநிலை வாக்காளர்கள் மனதில் திமுக மீதான மரியாதையும் நம்பிக்கையும் தகர்வதை மறுக்க முடியுமா?

1 comment:

Anonymous said...

exactly