2004-09-30

மீடியாவும் தமிழக அரசியலும்

*
கலைஞரின் குடும்ப அரசியலை எதிர்த்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் தனிக்கட்சி துவங்கி, ஆண்டுகள் கடந்து கட்டங்கள் பல கடந்து இன்று கலைஞருடன் வைகோ இணங்கிவிட்ட போதிலும் கலைஞரின் குடும்பத்தினர் மனதில் வைகோ மீதான வருத்தம் நீங்கியதாகத் தெரியவில்லை. சன் டிவியில் வைகோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது இதைத்தான் காட்டுகிறது.

*
சுமார் இருபதாண்டுகளுக்கு முன் பிலிப்பைன்சின் வெரித்தாஸ் வானொலியில் "செய்திகள் அளிப்பது எம் ஏ எஸ் ரபி" என்று இனிய குரலில் அழகிய தமிழில் ஒலித்த குரல் பின்னாளில் தமிழக சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் முகம் காட்டத்தொடங்கியது. கம்பீரமான குரலில் நேர்மையான பேட்டிகளையும் அரசியல் விமர்சனங்களையும் வழங்கிப்புகழ் பெற்ற ரபி பெர்னாடின் மீடியா வாழ்வை ஜெயலலிதாவைப் பேட்டி காண்பதற்கு முன், அதற்குப்பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அந்தப் பேட்டிக்குப் பிறகு அவரது பாரபட்சமற்ற கம்பீரமான அரசியல் விமர்சனங்களைப் பார்க்கவே முடியவில்லை. தற்போதோ கேட்கவே வேண்டாம்...ஜெயா தொலைக்காட்சியில் ஐக்கியமாகிவிட்ட பிறகு நிகழ்ச்சிகளில் அவரது தடுமாற்றங்களை வெளிப்படையாகவே காணமுடிகிறது.மூச்சுத்திணறல்களுக்கு நடுவே ஏன் ரபி?

*
நேருக்குநேர் பார்த்தால் எதிராளியின் பலத்தில் பாதியை எடுத்துக்கொள்ளும் வரம் பெற்றவனாக ராமாயணத்தில் வாலியைச் சொல்வார்கள். நிகழ்காலத்தில் அது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. ஜெயைச் சந்தித்தவர்கள் எல்லாம் அவரது புகழ்பாடிகளாகியுள்ளனர். மூத்தவர்கள் கூட காலில் விழுமளவிற்கு என்ன வரம் அது?

*
மாலன் ஒன்றும் இதற்காகச் சந்தோஷப்பட வேண்டாம். சன்னில் மாலனுக்குமே சில பேட்டிகளில் தடுமாற்றம் வந்ததைக் கவனித்திருக்கிறேன். பேட்டி காணப்படுபவர் எஜமானர்களை விமர்சிக்கும்போது!..அடுத்த கேள்வி தடுமாற்றமாக அல்லது மழுப்பலாக வரும். இலக்கியம் செய்வதைவிட அரசியல் செய்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அரணாக இருப்பது...

*
(இன்னும் வரும்) வரணுமா?

1 comment:

அன்பு said...

கண்டிப்பா வரணும்... தொடர்ந்து எழுதுங்கள்