2005-04-02

மாலன்...தொடர்ச்சி

Image hosted by TinyPic.com

புளோரிடா பல்கலைக்கழக இதழியல் மாணவராக மாலன்

14. நிறைய எழுதாவிட்டாலும் நிறைவாக எழுதுகிறவர் நீங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்புகள் மிகவும் பாராட்டப்படும் படைப்புகள். கட்டுரைகளும் முக்கியமானவை. நாவல்களும் எழுதியிருக்கிறீர்கள். புதிய எழுத்தாளர்கள் உதாரணமாகக் கொள்ளத்தக்க எழுத்துக்கள் உங்களுடையவை. உங்களுடைய படைப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? பிறரால் அதிகம் பாராட்டுப் பெற்றது எது?

அதிகம் பேரின் பாராட்டைப் பெற்றது ஜன கண மன. எனக்கு பிடித்தது பத்திரிகை உலகப் பின்னணியில் நான் எழுதிய Trilogy- ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஆனால் தனித்தனியான மூன்று சிறுகதைகள். (ஆயுதம், அடிமைகள், ஏன்?) அவற்றுக்குப் பின் அறிவியல் புனைகதையான வித்வான்.

15. பல்லூடகத் துறைக்கு நீங்கள் சென்ற அனுபவம்...காரணம் குறித்து...
1991ம் ஆண்டுத் தேர்தலின் போது தேர்தல் முடிவுகளை அவை வெளிவரும் போதே live ஆக அலசுகிற ஒரு முயற்சியை தூர்தர்ஷன் மேற்கொண்டது. ஆங்கிலத்தில் பிராணாய் ராய், இந்தியில் துவா, தமிழ்நாட்டில் இந்தி ஒளிபரப்புக் கிடையாதது ஆகையால் தமிழில் அலச என்னை அழைத்தது. அதை நினைவு வைத்திருந்து சன் டிவி 94ல் என்னை வாரந்தோறும் ஒரு current affairs நிகழ்ச்சி நடத்த அழைத்தது. நான் பொதுவாகவே ஊடக உரிமையாளர்களிடம் பேச வாய்ப்புக் கிடைக்கும் போது எப்படி நாம் புதிய திசைகளை நோக்கி நகர வேண்டுமென வலியுறுத்துவேன். கலாநிதி மாறனிடமும் ஒரு செய்தி சேனலை துவக்க வேண்டும் எனச் சொல்லி வந்தேன். அவர் 2000ல் அந்த முயற்ச்சியில் இறங்கிய போது என்னைப் பொறுப்பேற்றுக் கொள்ள அழைத்தார்.
ஊடகத்துறையில் அச்சிதழ்கள் வாசகர்களால் வழிநடத்தப்படுகின்றன (readership driven) தொலைக்காட்சிகள் சந்தையால் வழிநடத்தப்படுகின்றன (Market driven) அதனால் அது இன்னும் முழு வீச்சோடு வெளிப்படவில்லை.அதன் பொருளாதர காரணங்கள் சிறு பத்திரிகை போல, சிறு தொலைக்காட்சி உருவாக அனுமதிப்பதில்லை. ஆனால் விரைவிலேயே ஓர் துறை சார்ந்த சிறு தொலைகாட்சிகள் (niche television) வரும். செய்தி தொலைக்காட்சிகள் அவற்றின் முன்னோடி.

16. இணையத் தமிழை மற்றவர்களுக்கு அறிமுகம் செயகிறவர் நீங்கள். இணையத் தமிழ் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இதழியல் துறைக்கு வந்து பல காலத்திற்குப் பிறகு ·புளோரிடாப் பல்கலையில் முதுநிலை இதழியல் படிக்கப் போனேன். அங்கு என்னுடைய புரோஜக்ட் மின்னணு செய்தித் தாளுக்கு ஒரு முன்மாதிரி (Prototype) உருவாக்குவது. அப்போது அதற்கான மென்பொருட்கள் கூட சந்தைக்கு வந்திருக்கவில்லை. நாசாவின் துணை அமைப்பான NCSA (National Center for supercomputing applications)விடம் மொசைக் என்ற மென்பொருளை இரவல் வாங்கி எங்கள் முன்மாதிரியை உருவாக்கினோம். இந்தியா திரும்பும் வழியில் சிங்கப்பூர் வந்தேன். என் நெருங்கிய நண்பரும் எழுத்தாளரும், இணைய ஆர்வலருமான நா. கோவிந்தசாமியிடம் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நா.கோ அப்போது கணினிக்கான எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். நாம் இணையத்தில் தமிழில் எழுதமுடியாதா என்று என் தாபத்தை வெளியிட்டேன். அவர் இணையத் தமிழில் தீவிரமாக முனைந்தார்.இன்னும் நன்றாக் நினைவிருக்கிறது. இணையத்தில் தமிழ் அடி எடுத்து வைத்த நாளன்று அவர் என்னை சிங்கப்பூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து, " தமிழ் வந்திருச்சி மாலன், இணையத்திற்குள்ளே தமிழ் வந்திருச்சி " என்று உற்சாகமாகக் கூவியது. என்ன போட்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்க அவர் தனது கணினித் திரையைப் பார்த்து கணியன் பூங்குன்றன் வரிகளை வாசிக்க, சந்தோஷத்தினால் தூங்க முடியாது போன இரவு அது. இணையத் தமிழுக்கு நா.கோ. மதுரைத் திட்ட கல்யாணசுந்தரம், முரசு அஞ்சல் நெடுமாறன், தமிழ்மணம் காசி இவர்கள் எல்லாம் செய்ததைப் பார்க்கும் போது நான் இங்கு எதுவுமே செய்துவிடவில்லை என்பதுதான் நிஜம்..

17. தினமணிக் கதிரில் காந்திஜி சுடப்பட்ட சம்பவத்தையட்டி நீங்கள் எழுதிய தொடர்கதை (ஜன கன மன) மூலம்தான் எனக்கு மாலன் என்ற பெயர் பரிச்சயமானது. அப்போதிருந்தே மாறுபட்டுச் சிந்திப்பவர் என்ற மனப்பதிவு எனக்குண்டு. அது இயல்பானதா? பிரக்ஞையோடே செய்வதா?

மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என ந்தையும் சிந்திப்பதில்லை. கேள்விகளை எழுப்பிக் கொண்டே சிந்திப்பதே வழக்கமாகி விட்டதால் அவை இழுத்துச் செல்லும் திசைகளிலெல்லாம் சிந்தனையும் செல்கிறது. ' போடா! உனக்குக் கோணக் கட்சி ஆடறதே வழக்கமா போச்சு ' என்பது என் அம்மா என்னை வைய அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்.

18. தினமணிக் கதிரில் அந்தக் காலகட்டத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆசிரியர் கஸ்தூரிரங்கனுடனான அனுபவங்கள்?

கஸ்தூரி ரங்கனுடன் கணையாழி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. எமெர்ஜென்சியின் போது அவர் தில்லியில் நியூயார்க் டைம்ஸ் நிருபராக இருந்தார். அதனால் அது பற்றி எங்களுக்குள் கருத்தொற்றுமை இருந்தது. பின்னர் அவர் தினமணிக் கதிருக்குப் பொறுப்பேற்றக் கொண்ட போது நான் சொல்லவிரும்புவதை சொல்ல இடமளித்தார். நல்ல மனிதர்.

19. அன்றைய திசைகள் மலரக் காரணம் மற்றும் தூண்டுதல் எது? திசைகள் இதழ் எதுவரை, எத்தனை இதழ்கள் வெளியாயின?

சாவி வார இதழின் முதலிரண்டு ஆண்டுகளில் அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு நான் ஆலோசனைகளும் கருத்துக்களும் சொல்லி வந்தேன்.தமிழ் வார இதழ்கள் இளைஞர்களை பிரதிபலிக்கவில்லை அவர்களது படைப்புக்களுக்கு இடமளிக்கவில்லை என நான் அநேகமாக ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வந்தேன்.நாளடைவில் 'ஆரம்பிச்சிட்டான்யா' என்று மற்றவர்கள் அலுத்துக் கொள்கிற அளவிற்கு அது இருந்தது.
ஒருநாள் சாவி என்னை அழைத்து ஒரு புதிய பத்திரிகையை துவக்கப் போகிறேன். நீங்கள்தான் அதன் ஆசிரியர். அதை நீங்கள் விரும்புகிறபடியே இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துங்கள் என்று சொன்னார். முப்பது வயதிற்குட்பட்டவர்களைக் கொண்ட ஓர் ஆசிரியக் குழு அமைப்பது எனத் தீர்மானித்து சாவியில் அறிவிப்புக் கொடுத்தேன். வந்த படைப்புக்களின் அடிப்படையில் திறமையானவர்களை மாவட்டம்தோறும் தேர்ந்தெடுத்து குழுவை இறுதி செய்தேன். ( அப்போது ஜூனியர் விகடன் தோன்றியிருக்கவில்லை. அந்த முறையைத்தான் இப்போது ஜூவி பின்பற்றுகிறது) அப்படி உருவான குழுவில் இருந்தவர்கள் இன்றும் பத்திரிகைத் துறையில், படைப்புத் துறையில் சிறப்பாகப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். சில உதாரணங்கள்: சுதாங்கன் (ஜெயா டிவி) மணா( பொறுப்பாசிரியர் புதிய பார்வை) சாருப்பிரபா சுந்தர் ( பொறுப்பாசிரியர் குங்குமம்) பன்னீர் செல்வன் ( முன்னாள் அவுட்லுக்) பானுமதி ராஜாராம் ( இந்தியா டுடே தமிழ்) வஸந்த் (திரைப்பட இயக்குநர்) அரஸ் (ஓவியர்) மருது (ஓவியர்) பட்டுக்கோட்டை பிரபாகர் (எழுத்தாளர்) கார்த்திகா ராஜ்குமார் ( எழுத்தாளர்) பா.கைலாசம் ( மின் பிம்பங்கள்) நலினி சாஸ்திரி (எழுத்தாளர்) குன்றில் குமார் ( குங்குமம்) கல்யாண்குமார் ( தொலைக்காட்சி- திரைப்பட இயக்குநர்) திருவேங்கிமலை சரவணன் ( குமுதம்) இப்படி அது ஒரு நீண்ட பட்டியல்.முப்பது வயதிற்குட்பட்டவர்கள்தான் எழுதலாம் என்று திட்டவட்டமாக முடிவு செய்திருந்தோம். மற்ற பத்திரிகைகளில் எழுதுபவர்கள், படம் வரைபவர்கள் படம் எடுப்பவர்கள் இவர்களின் படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது இன்னொரு முடிவு ( விதிவிலக்கு சுஜாதா- அறிவியல் கதைகளை அறிமுகப்படுத்த, மணியன் செல்வன் -அந்த அறிவியல் கதைகளுக்குப் படம் போட) ஒரே ஒரு தொடர்கதை, நிறைய தகவல் கட்டுரைகள், புதுக்கவிதைகள், abstract ஓவியங்கள் என அது ஓர் வித்தியாசமான முயற்சி. எட்டு மாதங்கள் பத்திரிகை வந்தது.ஆனால் அது அன்றைய வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் நினைவு கூர்பவர்கள் இருக்கிறார்கள்.

20. மிகவும் பரபரப்பான பத்திரிகையாளரான, ஊடகவியலாளரான தாங்கள் மறுபடி சிற்றிதழ் சார்ந்த, அல்லது அதைப்போன்ற இணையச்சிற்றிதழாக திசைகளை வெளியிடவும் வலைப்பதிவுகளில் பங்கேற்கவும் முன்வந்த காரணம் அல்லது ஆர்வம் எதனால் ஏற்பட்டது?

2002ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் தமிழ் எழுத்துக்கள் பற்றி உரையாற்ற வருமாறு அழைப்பு வந்தது. இந்திய, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்கள் கடந்து வந்திருக்கிற பாதை அவற்றின் போக்கு பற்றி ' கயல் பருகிய கடல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். அதற்காக பல நாடுகளில் எழுதப்பட்டவற்றைப் படித்தேன். சில முன்னரே படித்தவை. மீண்டும் காலம் சென்று படித்த போது சில புதிய பார்வைகளைத் தந்தன. ஆனால் தமிழ் உலகளாவிய மொழியாக இருந்த போதிலும், தமிழ் இலக்கிய உலகில் ஓர் ஒருங்கிணைப்பு இல்லை, ஒரு நாட்டில் எழுதப்படும் எழுத்தை இன்னொருவர் அறிமுகம் கூட செய்து கொள்வதில்லை என்ற உண்மை விளைவித்த சிந்தனைகளின் தாக்கம்தான் அதிகம். உலகு தழுவிய ஓர் இதழ் வேண்டும் என நினைத்தேன். திண்ணை வந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் குழுச் சண்டைகள் அதிகம், அது தினமலரின் வாரமலர் போல வம்புகள், கொச்சையான மொழி இவற்றில் ஆர்வம் காட்டி வந்தது. தமிழ் எழுத்துலகின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, கண்ணியமான எழுத்துகளை ஊக்கப்படுத்துவது, சச்சரவை விட சாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற இலக்குகளுடன் திசைகளை ஆரம்பித்தேன்.

21. தங்களின் தற்போதைய பணி மற்றும் பதவி குறித்து கூறுங்கள். இப்பணியில் தாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் கடமையாற்ற முடிகிறதா? அல்லது வாழ்க்கைத்தொழில் மற்றும் இலக்கியம்+இலட்சியம் ஆகியவை வேறுவேறானவை எனக் கருதுகிறீர்களா?

நான் என் பத்திரிகை ஆசிரியர் பணியில் சமரசம் செய்து கொள்வதில்லை. சமரசம் செய்து கொள்பவனாக இருந்தால் குமுதத்திலேயே தொடர்ந்திருப்பேன். நான் பொறுப்பேற்ற பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும், திசைகளில் துவங்கி, அதை நடத்துபவர்களின் அழைப்பின் பேரிலேயேதான் சென்றேன். இணக்கமில்லாத சூழ்நிலை ஏற்பட்டால்தான் விலகி வந்தேன்.
இப்போது இருக்கும் இடத்தில் எதுவும் நிர்பந்தங்கள் இல்லை. செய்திகளை உருவாக்க முடியாது. ஒளித்து வைக்க முடியாது. இந்தத் தொலைக்காட்சியில் இல்லை என்றால் இன்னொரு தொலைக்காட்சியில் அதை நேயர்கள் பார்ப்பார்கள். தொலைக்காட்சிக்கு வருமானம் வரும் முக்கிய வழி விளம்பரங்கள். மக்கள் பார்க்காத தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் கிடைக்காது. பொய்ச் செய்திகளைப் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த தொலைக்காட்சி படுத்துவிடும். ஜேஜே டிவி ஒர் சிறந்த உதாரணம்.
தமிழ்நாட்டில் ஊடகங்கள் பாரம்பரியமாக அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இந்துப் பத்திரிகையின் நிறுவனரும், காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவரும் ஒருவர்தான். ஏ.என்.எஸ் காலத்தில் தினமணி அப்பட்டமான காங்கிரஸ் நிலைப்பாட்டைக் கொண்டுதான் இயங்கி வந்தது. ஆதித்தனார் அரசியல் ஆர்வமாகப் பங்கெடுத்தவர். இதன் காரணமாக மக்கள் எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் கேட்பது அறிவு என்ற ஞானம் கொண்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் எனக்கு உதவுகின்றன.

22. ஞானபீடம் முதல்முறை தமிழுக்குக் கிடைத்ததில் ஏற்பட்ட சர்ச்சைகளும் அது இரண்டாம் முறை கிடைத்திருப்பதற்கான இடைவெளியும் குறித்து..?

இடைவெளி அதிகம்தான். ஆனால் அநியாயமானதில்லை. தமிழ் இலக்கியம் மீண்டும் ஒரு குழு மனோபாவத்தை நோக்கிப் போகும் கால கட்டத்தில் ஒரு ' வெகுஜன' எழுத்தாளனுக்கு இந்த விருது கிடைத்திருப்பது நல்ல மருந்து.

23. இணையத் தமிழின் எதிர்காலம் யார் கையில்?

புதிய படைப்பாளிகளின் கையில். பொறுப்பான வலைப்பதிவர்கள் கையில்.

24. மறக்க முடியாத பொன்மொழி?

பொன்மொழி அல்ல, கவிதை:

" பெரியோர் எனினும் வியத்தலும் இலமே.
அதனினும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே!"

3 comments:

Mookku Sundar said...

கச்சிதம்...

பேட்டி அருமையாக வந்திருக்கிறது அனுராக்..நன்றி. திசைகளால் உருவாக்கப்பட்ட படைப்பாளிகள் பட்டியல் அசத்தல். ஜூ.வியின் திட்டம் வாஷிங்தன் போஸ்ட் பத்திரிக்கையிலிருந்து பெறப்பட்டது என்று இத்த்னை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்.

Balaji-Paari said...

தெளிவு. நச்-ன்னு இருக்கு இந்தப் பேட்டி. மாலனுக்கு நன்றிகள்.
அனுராகிற்கு இந்த பேட்டி கண்டு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

நாலாவது கண் said...

அனுராக்! உங்கள் பேட்டி என்னளவில் நிறைய விஷயங்களைச் சாதித்திருக்கிறது. மாலன் அவர்களது பின்னணியில் பல புதிய விஷயங்களை அறிய முடிந்தது என்பது ஒருபுறம். அத்துடன் என்னுள் தூங்கிக் கொண்டிருந்த பல உணர்வுகளையும் கிளறிவிட்டது. விளைவு - பத்திரிகையுலக பின்னணியில் தான் எழுதிய கதைதான் அவருக்குப் பிடிக்கும் என்று மாலன் அவர்கள் சொன்னது போல - அதே பின்னணியில் அமைந்த எனக்குப் பிடித்த என் சிறுகதை ஒன்றை வலைபதிவு அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வைத்துள்ளது. இது, உங்களுக்கு மிக வெற்றிகரமான வாரம் என்பது எனது கருத்து. இதேவகையில் தொடர முடியுமா பாருங்கள்! மீண்டும் ஒருமுறை நன்றி - சந்திரன்