2006-10-20

அபூர்வ ராகங்கள்

அதிசய ராகமாக தமிழ்த் திரையுலகில் பூத்த ஸ்ரீவித்யா என்ற தாரகை நேற்று உதிர்ந்தது. பாலசந்தரின் இயக்கத்தில் ஸ்ரீவித்யாவின் அபூர்வமான நடிப்பில் கமல் நாயகனாக நடித்த புகழ்பெற்ற படத்தில் தான் ரஜனிகாந்த் அறிமுகமானார். குணச்சித்திர தாரகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி.

சமீபகாலமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீவித்யா மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். புற் றுநோய் தாக்கி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானார். இன்று காலை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலும் பின்னர் பொது அரங்கு ஒன்றிலும் வைக்கப் பட்டபின் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழில் சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் திரைப்படத்திலும் மலையாளத்தில் நடிகர் சத்யன் நடித்த சட்டம்பிக்கவல என்ற படத்திலும் தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்த போது ஸ்ரீவித்யாவுக்கு 13 வயது.

அபூர்வராகங்களின் போது கமலஹாசனால் காதலிக்கப்பட்ட அவர், குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காததால் திருமணம் தாமதமான நிலையில் கமல் வாணியைத் திருமணம் செய்து கொண்டதால் இவரும் தனக்கு அச்சூழலில் ஆறுதலாக இருந்த ஜார்ஜ் தாமஸ் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

நோய் கடுமையாகி மருத்துவமனையில் இருந்த போது கடைசி தினங்களில் தன்னைக்காண திரையுலக நண்பர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆயினும் அந்நிலையிலும் தன்னைக் காண வந்த கமலஹாசனை மட்டும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையாக மட்டுமல்லாமல் நர்த்தகியாகவும் புகழ் பெற்றிருந்த ஸ்ரீவித்யா தன் இறுதிக்காலத்தில் ஒரு நடனப்பள்ளி நடத்த விரும்பியிருந்தாராம். அது நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.

உலகப்புகழ் சங்கீதப் பாடகியின் மகளான ஸ்ரீவித்யாவும் நல்ல பாடகி. சில திரைப்படங்களிலும் பாடியுள்ள அவர் நான்கு வருடங்களுக்கு முன் நண்பர்களின் வற்புறுத்தலால் கேரளாவில் தானே இயற்றிய கீர்த்தனங்களுடன் சங்கீதக்கச்சேரி நிகழ்த்தினார். அதற்குக்கிடைத்த பாராட்டுக்களால் தொடர்ந்து பல கச்சேரிகள் பாடினார்.

கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இவர் இருமுறை பெற்றுள்ளார். மாநில அரசு மரியாதையோடு நடைபெற்ற இவரது இறுதிச்சடங்கை மூன்று மலையாள தொலைக்காட்சி சேனல்கள் இன்று காலை முதலே நேரடி ஒளிபரப்புச் செய்தன.

கணவனைப் பிரிந்து தனியாகவே வாழ்ந்து வந்த ஸ்ரீவித்யாவுக்கு குழந்தைகள் இல்லை என்பதே மிகப்பெரிய சோகமாக இருந்திருக்கிறது.

No comments: