2006-10-01

தேன்கூடு போட்டி விவாதங்கள் தொடர்ச்சி...

தேன்கூடு போட்டி விவாதங்கள் என்ற என் முந்தைய பதிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளோடு தொடர்புடைய சில விளக்கங்கள் தேன்கூடு வலைப்பதிவில் அளிக்கப் பட்டிருக்கின்றன.

அதன் சில பகுதிகள்:

இந்த போட்டிகளின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று:

நல்ல எழுத்துக்களை
வலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது, புதிய வலைப்பதிவர்களுக்கு தமிழில் எழுதும்
ஆர்வத்தினை உருவாக்குவது.

தேன்கூடு.காம் - தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி,
தொகுப்பகம் மற்றும் வலைவாசல் என்ற முறையில் நல்ல எழுத்துக்களை வலைப்பதிவுகளில்
ஊக்குவிப்பது எங்களின் முக்கிய நோக்கமாகக் கருதுகிறோம்.

ஒவ்வொரு முறையும்
நாங்கள் குறிப்பிடுவது போல, வலைப்பதிவாளர்களின் திறமையை அவர்கள் பாணியில் அவர்கள்
பதிவிலேயே வெளிப்படுத்துவதில் உள்ள சுவாரசி்யம் வேறெதிலும் இல்லை என்று நிச்சயம்
நம்புகிறோம். ஆக்கங்களில் கூட, வலைப்பதிவுகளின் அனைத்து சாத்தியக்கூறுகளையும்
எதிர்பார்க்கிறோம். அது பிளாஷ் மென்பொருளில் செய்யப்பட்டு பதியப்படுவதாக
இருக்கலாம்; பாட் கேஸ்டிக் ஆக இருக்கலாம்; புகைப்படங்களாக இருக்கலாம்; வீடியோவாக
இருக்கலாம்; அல்லது கவிதை கதை போன்ற அனைத்து படைப்புக்கூறுகளாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், போட்டிக்கான தலைப்பின் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே
முக்கியம்.

பெயர் வெளியிடாமல், ஆக்கங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு
பதிப்பிப்பது போன்ற முறைகள் இந்த நோக்கங்களுக்கு தடையாக இருக்கும் என்பதினை மனதில்
கொள்ள வேண்டுகிறோம்.

போட்டியில் பங்கேற்பவர்களின் ஆக்கத்திற்கு உடனடியாக
கிடைக்கும், பின்னூட்டங்கள்; விமர்சனங்கள் இவையே இங்கு போட்டியாளர்களுக்கு
கிடைக்கும் உடனடி பரிசுகள் என்று கருதுகிறோம்.

வாக்கெடுப்பின் முறையிலுள்ள
குறைகளைக் குறைக்கும் விதமாக, இந்த மாதத்தின் சில நேரங்களில் சோதனையில் இருந்த
முறைகள் வரும் மாதப் போட்டியில் முழுமையாக இருக்கும். இது கள்ள வோட்டுகளின்
எண்ணிக்கையை முற்றிலும் குறைக்ககூடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம்
குறைக்கக்கூடும்.( உதா: செப்டம்பர் போட்டியின், கடைசி நாள் கடைசி சில
மணித்துளிகளில் ஒரே கணிணியிலிருந்து மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பில் கலந்து
கொண்டு போட்டியின் நோக்கத்தினை, எங்களின் முயற்சி மற்றும் உழைப்பினை,
போட்டியாளர்களின் ஆர்வத்தினை வேடிக்கையாக்க முயற்சி செய்திட்ட சிலரின் முயற்சிகளைத்
தவிர்க்கக் கூடும்.)

வரும் மாதங்களின் போட்டிகளில் வேறு சில மாற்றங்களும்
உங்கள் ஆதரவுடன் செய்ய நினைத்திருக்கிறோம்!

ஆகவே வலைப்பதிவுகளில் படைப்புக்களின் தர மேம்பாட்டுக்கு இந்தப் போட்டி உதவ வேண்டும் என்ற தேன்கூடு நண்பர்களின் நோக்கம் போட்டிப் படைப்புகள் வலைப்பதிவிலேயே இருக்க வேண்டியதன் காரணமாகிறது.

அவ்வாறாக இருந்தாலும் வலைப்பதிவுகளுக்கு தொடர்பேயில்லாத படைப்பாளர்களின் நண்பர்கள் வாக்களிப்பில் மட்டும் கலந்து கொண்டு வாக்களிப்பது என்பது சில நேரங்களில் நேர்மையற்ற முடிவுகளைத் தர வாய்ப்புண்டு.

மேலும் ஐபி தடை போன்ற தொழில் நுட்ப விவகாரங்கள் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதும் கேள்விக்குறியே. அதில் பல்வேறு பிரச்சினைகளும் உள்ளன.

இதற்கு மாற்றாக குறைந்த பட்சம் ஒரு இயங்கும் வலைப்பதிவைச் சொந்தமாகக் கொண்ட வலைப்பதிவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதித்தால் தொடர்பற்ற பிற நபர்கள் வாக்களிப்பதை தவிர்க்க முடியும்.

இதற்கெல்லாம் மேலானது படைப்பாளர்கள் தங்கள் படைப்பின் மீது வைக்கும் நம்பிக்கை. அதுவே இப்போட்டிக்கு வெற்றியை தேடித்தரும்.

வழக்கம் போல ஆர்வமுள்ள நண்பர்கள் படைப்புகளை விமர்சனம் செய்வது போட்டிக்கு சுவை கூட்டும். படைப்புகளை திரட்டிகளில் அவ்வப்போது வாசிக்காத, கவனிக்காதவர்களும் படைப்பை தேடி வாசிக்க வைப்பது விமர்சனங்களே. படைப்பை உருவாக்குவது போலவே விமர்சனமும் ஒரு தனித்திறமை. அதில் தெரியும் ஆர்வமும் படைப்பை பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகளும் படைப்பாளிக்கும் ஊக்கமூட்டுவன. மதிப்பெண்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.

இம்மாத போட்டிக்கு ஆசாத் அவர்கள் விடுதலை என்ற தலைப்பை தந்திருக்கிறார். அனைவரும் விடுதலையோடு விளையாடுவோம்.

1 comment:

Anonymous said...

நல்ல யோசனை.