2006-05-20

கலைஞருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கலைஞருக்கு

வணக்கம். தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பதவியேற்ற சூட்டோடு வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைகிறீர்கள். நல்லது.

ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நீங்களும் உங்கள் கட்சியினரும் சந்தித்த இன்னல்கள் ஏராளம். வயதில் முதியவர் என்று பாராமல் உங்களை நள்ளிரவில் கைது செய்தார்கள். உங்கள் அன்புக்குரிய மாறனை குண்டுக்கட்டாகத் தூக்கி எறிந்தனர்.

உங்கள் அமைச்சரவையில் இருந்தவர்கள் மீதெல்லாம் பலவகை வழக்குகள் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்கள். உங்கள் மகன் ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து விலக வைத்தார்கள்.

எத்தனை சிரமங்கள்? அத்தனைக்கும் இன்று முடிவு வந்து விட்டது.

எல்லோரும் வியக்கும் வண்ணம் ஏழுகட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று சொல்லி சாதித்துக் காட்டினீர்கள். அந்த நன்றிக்கடனை சோனியாவிடமிருந்து மத்திய அமைச்சர்கள் வடிவில் வசூலித்து விட்டீர்கள்.

இப்போது உங்கள் முறை. நீங்கள் முதல்வராக காங்கிரஸ் உங்களுக்குத் தோள் கொடுத்தது. நீங்களோ முகட்டில் ஏறிக்கொண்டு படிக்கட்டுகளை பந்தாடத் தொடங்கிவிட்டீர்கள்.

அவசர அவசரமாக அமைச்சரவையை முடிவு செய்து யாரும் பங்கு கேட்டுவிடாதபடி பெரியதொரு மந்திரிசபையை அமைத்து விட்டீர்கள்.

அன்று கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொன்னதற்காக இளங்கோவனைப் பந்தாடினீர்கள். அவரோ இன்றும் அந்த அடியின் வலியில் பேதலித்துக் கிடக்கிறார். உங்களிடம் பங்கு கேட்பதற்கு வேறு யாருக்குத் துணிவிருக்கிறது? ஆனால் மக்களை நீங்கள் மறந்து விட்டீர்கள். அன்று உங்களிடம் கணக்குக் கேட்ட எம்ஜிஆரைத் துரத்தினீர்கள். மக்கள் உங்களை எம்ஜிஆர் உள்ளவரை ஆட்சியிலிருந்து அகற்றி வைத்தார்கள்.

இன்று ஜெயலலிதாவின் அகங்காரத்துக்கு பேரிடியைத் தந்த அதே மக்கள் உங்களுக்கும் ஒரு பாடமாகத்தான் தனிப் பெரும்பான்மையை மறுத்தார்கள். அதை ஏற்க மறுத்து மீண்டும் உங்கள் தவறுகளை அரங்கேற்றத் துணிந்து விட்டீர்கள்.

நீங்கள் மாறவேயில்லை. உங்கள் குடும்ப ஆட்சியை நிறுவப் பார்க்கிறீர்கள் என்ற வைகோவை தூக்கி எறிந்தீர்கள். அவரோ சகதியிலிருந்து எழுந்து சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்.

உங்கள் கட்சி தவிர வேறொருகட்சி வளர்ந்து விடக்கூடாது. தேர்தலில் மட்டும் உங்களுக்கு அவர்கள் தயவு வேண்டும். தேர்தல் முடிந்தபின் அவர்கள் உங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் நீங்கள் தூக்கிப்போடும் எச்சில் இலைகளை மட்டுமே அவர்கள் ஏந்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இதில் மட்டும் என்னே ஒற்றுமை.

மத்தியில் முதன்முறை உறுப்பினரான ஒருவரை நெறிகளை மீறி காபினட் அமைச்சராக்கவும், விரும்பிய இலாகாவை பிடிவாதம் பிடித்துப் பெறுவதிலும் உங்களுக்கு வெட்கமேயில்லை. அளவுக்கு மீறி அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொள்வதிலும் நீங்கள் நாணப்படவில்லை. பாவம் உங்களை நம்பிய அவர்கள் தான் இப்போது ஏமாந்து நிற்கிறார்கள். பூட்டிய வீட்டுக்குள் நீங்களும் உங்கள் பரிவாரங்களும் பரிகசிப்பது கேட்கிறது.

கூட்டணி ஆட்சியில் பிரதமர் பதவியைக் கூட வேண்டாம் என்றவர்கள் எம் 'தோழர்கள்'. அவர்கள் இப்போதும் உங்களைப் பின்தாங்கி நிற்பதில் வியப்பேதுமில்லை.

பாமகவின் கணக்கே வேறு. அதனால் அவர்களும் இப்போதைக்கு சுணங்க மாட்டார்கள்.

சுதந்திரத்துக்கு முந்திய 'தியாகி'களின் கட்சியல்ல இப்போது காங்கிரஸ். அன்று உங்களிடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதே காங்கிரஸ் இன்று நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிப் பங்கை எதிர்பார்க்கிறது. வாங்கித்தான் பழக்கமுண்டு கொடுத்துப் பழக்கமில்லை என்பதுதான் உங்கள் கொள்கையா?

(கொள்ளைக்காரர்கள் தான் கொள்ளையில் பங்கு கொடுக்க மறுப்பவர்கள். ஆட்சிபீடமே கொள்ளைக் கூட்டமென்கிறீர்களா? அப்படியானால் இன்னொரு கூட்டத்துக்கு கொள்ளையில் பங்கு கொடுத்தால் உங்கள் பங்கு குறைந்து விடுமென்பது நியாயம்தான்.)

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தான் மக்கள் தந்த தீர்ப்பு. ஏற்பதில் உங்களுக்கு ஏனிந்தத் தயக்கம். அறிவுள்ளவர் தாங்கள். அதை அழிவை நோக்கிப் பயன்படுத்தாதிருங்கள்.

குடும்பப் பாசத்தால் கட்சியையும் கட்சிப்பாசத்தால் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைக்கப் பார்க்கிறீர்கள். மற்றவர்கள் வளர்வதை அனுமதிக்க மறுக்கிறீர்கள். மக்கள் பங்கிட்டுத் தந்ததை பங்கிடாமல் வைத்துக் கொண்டீர்கள்.

அன்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகத்தான் நீங்கள் சொன்னீர்கள். சோனியாவின் அழைப்புக்குப் பின்னரே அமைச்சரவையில் சேர ஒப்புக்கொண்டீர்கள். (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டீர்கள்) இப்போது அதே முறையில் உங்கள் அழைப்பை எதிர்பார்க்கிறது காங்கிரஸ். ஆனால் நீங்களோ கமுக்கமாக கவிழ்த்து விட்டீர்கள்.

கூட்டணிக் கட்சியோடு மோதல் வேண்டாமென்று காங்கிரஸ் தலைமை மவுனித்து விட்டது. தலைமையின் கட்டளையால் தமிழகத் தலைவர்களும் அடக்கியே வாசிக்கிறார்கள். குமுறிக் கொண்டிருப்பவர்கள் தொண்டர்கள் தான். அவர்களை விடுங்கள் இரண்டு பேருக்குமேல் தமிழகத் தெருக்களில் கூடிப்பேசும் பொதுசனம் பேசிக்கொள்வதே இதுதான்.

ராசதந்திரமென்று நீங்கள் நினைக்கலாம். சனநாயகத் துரோகமென்கிறது சனம். இப்போதைக்கு நீங்கள் மறுக்கலாம். எப்போதுமே மறைத்துவிட முடியுமா?

நீங்கள் உங்கள் கூட்டணி நண்பர்களை ஏமாற்றி விட்டதற்காக இறுமாப்புக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அவமானப்படுத்தியது உங்களுக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனையும் தான்.
அவர்களுக்கு என்ன இலவசங்களை ஈந்து விட்டால் இசைந்து போவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் புதிரானவர்கள். உரிய காலத்தில் புரிய வைப்பார்கள்.

அன்புடன்
உங்கள் அணிக்கே வாக்களித்த
பாவம் வாக்காளன்.

96
34
18
9
6
61
6
21

சுயேட்சை
1

கொடி படங்கள் : நன்றி : இட்லிவடை

15 comments:

SK said...

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா"!/blockquote>>மத்திய அரசுப் பதவி
ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு,
மாநிலங்களில், மாறி, மாறி,
மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து
சுயமரியாதை இன்றி சுகித்து வாழும்
காங்கிரஸை துணைக்கொண்டு,
ஐந்தாம் முறையாக அரசு காணப் போகும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு
திறந்த ஒரு வாழ்த்துமடல் இதோ!!

'அளகேசா! ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?"
எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர் அன்று!

'கூலி உயர்வு கேட்டார் அத்தான்!
குண்டடி பட்டுக் கொன்றார் அவரை'
எனக் கூவி மக்களின் அனுதாபத்தைப் பெற்று
ஆட்சியில் அமர்ந்தீர் அன்று!

"ரூபாய்க்கு மூன்று படி அரிசி" எனக்
கூசாமல் பொய் சொல்லி
குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஆட்சிக்கு வந்தீர் அன்று!

கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாய்
'நண்பர் இருவர்' உங்களுக்கிடையே
செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலமாய்
மாறி, மாறி தன்சுகம் மட்டுமே கண்டீர்கள்!

பருவம் அடைந்த பதினெட்டு வயதுப்
பாவைஅவளைப் பல பேர் சேர்ந்து
பாவியவள் கற்பை சூறையாடிய
கதைதான் நினைவுக்கு வருகிறது

'நம்மையெல்லாம் இழிவு செய்தான்
நாமதற்கு துணை நில்லோம்
நல்லதேசெய்வோம்' எனச் சொன்ன உமை
நம்பி நல்வாக்கு தந்திட்ட நலிந்தோரை - அட!
நாளெல்லாம் நினைக்க வேண்டாம்!- அவருக்கு
நலம் செய்ய மறந்திடலாமோ?!
நாடு போற்ற வேண்டாமா நல்லவரே!

நாலிருபது ஆண்டுகள்
நாநிலத்தில் இருந்து விட்டீர்!
ஈரிருபது ஆண்டுகள்
இம்மண்ணை ஆண்டு விட்டீர்!
ஓரிருபது ஆண்டுகள்
மத்தியிலும் பார்த்துவிட்டீர்!

இன்றைக்கு மீண்டும் உமை
பதினோராம் முறையாகத்
பரிவுடன் தேர்ந்தெடுத்து,
ஐந்தாம் முறையாக
ஆட்சிக் கட்டிலிலேற்றி
அழகு பார்த்து மகிழ்கிறார்
எம் இனிய தமிழ்மக்கள்
நீர் சொன்ன இலவசங்களை நம்பியே!

இத்தனைக் காலம் செய்ய மறந்ததை
இனிவரும் நாளிலேனும்
இனிதே செய்து,
இனிய தமிழகத்தை '
இன்பமுற வாழ வைக்க
இன்னுமொரு சந்தர்ப்பம்
இனிமேலும் வாய்க்காது
என்பதனை உணர்ந்து நீரும்,

நன்முறையில் ஆட்சி செய்து
நல்ல பெயரும் வாங்கி
நலமுடன் வாழ்ந்திடவே
நான் வாழ்த்துகிறேன்
நன்னாளாம் இன்று!

www.aaththigam.blogspot.com

Krishna said...

130 இடங்களில் போட்டியிட்டு, 96 இடங்கள் பெற்றதனாலேயே, மக்கள் கூட்டணி ஆட்சிக்கு விரும்பினார்கள் என்று பொருளல்ல. தொகுதிப் பங்கீட்டில் முக, ஜெ போல செயல்பட்டிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.

கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். 2001 ல், தன்னிச்சையாக, தாங்கள் வலிமையாயுள்ள 141 இடங்களை அதிமுக போட்டியிடும் இடங்களாக அறிவித்துவிட்டார் ஜெ. அதன்படி அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தது. முகவோ, தொகுதிப் பங்கீட்டில் தியாகம் - குறைவான இடங்களில் போட்டியிட்டது, வலிமையான தொகுதிகளை விட்டுக் கொடுத்ததில் தியாகம் என, விட்டுக் கொடுத்தே செயல்பட்டார். தனிப்பெரும்பான்மை கிடைக்க வேண்டும், ஆதலால் 141 இடங்களில் போட்டியிட வேண்டும் என உறுதியாய் நின்றிருந்தால், திமுக அதிக இடங்களில் போட்டியிட்டிருக்கும்/வென்றிருக்கும். காங். தன் தகுதிக்கு மீறியே தொகுதிகள் பெற்றது என்பதே அப்போதைய கருத்து.

எனக்கென்னமோ, அப்போதே சோனியாவிடம் வெளியிலிருந்து ஆதரவு என்ற உறுதிமொழி வாங்கியிருப்பார் என்றே தோன்றுகிறது. இப்பொழுதும், காங். ஆதரவு இன்றியமையாத ஒன்றாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமைச்சரவையில் காங். அமைச்சர்கள் இருக்கும்போது, ரகசியங்கள் அதிமுகவிற்கு செல்லாது என்ற நம்பிக்கையும், கோஷ்டிப் பூசலை ஆட்சியிலும் கொண்டுவர மாட்டார்கள் என்ற நம்பிக்கையும், கூட்டணி ஆட்சி வேண்டாம் என்ற ஒரு காரணத்திற்காகவே அடுத்த முறை ஜெவை ஆதரிக்கும் முடிவுக்கு மக்களை தள்ளிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் முக பெற்றால், காங்கிரஸுக்கும் பதவி தருவார் என்றே தோன்றுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி பிடித்த நேரத்திலும் ஆட்சி/கூட்டணியிலிருந்து வெளியே வந்து, விட்டுக் கொடுத்து கூட்டணி அமைத்து மத்தியில் எல்லாருடைய கணிப்புகளுக்கும் மீறி ஆட்சி மாற்றம் அமைய காரணமாயிருந்ததற்காகத்தான், திமுக முக்கிய இலாகாக்களைப் பெற்றது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Anonymous said...

//ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி பிடித்த நேரத்திலும் ஆட்சி/கூட்டணியிலிருந்து வெளியே வந்து, விட்டுக் கொடுத்து கூட்டணி அமைத்து மத்தியில் எல்லாருடைய கணிப்புகளுக்கும் மீறி ஆட்சி மாற்றம் அமைய காரணமாயிருந்ததற்காகத்தான், திமுக முக்கிய இலாகாக்களைப் பெற்றது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.//

கேக்குறவன் கேணயா இருந்தா எறும்பு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொல்லுவாங்களாம்.

newsintamil said...

//அப்போதே சோனியாவிடம் வெளியிலிருந்து ஆதரவு என்ற உறுதிமொழி வாங்கியிருப்பார் என்றே தோன்றுகிறது//

வாய்ப்பே இல்லை.

காங்கிரஸ் தொண்டர்களும் நடுநிலைப் பொதுமக்களும் கூட்டணி ஆட்சியை கலைஞர் வேண்டுமென்றே தவிர்ப்பதாகத்தான் கருதுகிறார்கள்.

கூட்டணி வருவதால் சில அசவுகரியங்கள் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. கூடவே காங்கிரசிலேயே பதவிக்கான கோஷ்டிப்பூசலை சீர்செய்வதும் சிரமமானதுதான். ஆனானாலும் இம்முறை தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் தான் எல்லாவிதத்திலும் நிலவியது. அதனால் தான் திமுக அவ்வளவு குறைந்த இடத்தில் போட்டியிட நேர்ந்ததது என்றும் கொள்ளலாமே.

மத்திய அரசில் திமுக முக்கிய இலாகாக்களைப் பெற்ற முறை ஒன்றும் அத்தனை நேர்மையானதாக இருக்கவில்லை. தமிழகமே அந்தப் பதவிவெறி கண்டு அன்று தலைக்குனிவைச் சந்தித்தது. சோனியாவின் நன்றிக்கடன் என்ற பெயரிலான கையாலாகாத்தனத்தில் அதை திமுக சாதித்தது.

Krishna said...

அனானி அண்ணாச்சி,

கொஞ்சம் அப்போதைய பத்திரிக்கைகளைப் பாருங்கள். அத்வானி, ஆட்சி மாற்றத்திற்கான காரணம் தமிழகம்தான் என்று சொன்னதை நினைவு கூறுங்கள். முலாயம்சிங் வலிய வந்து ஆதரவு தந்தாலும் அதனை கங். புறந்தள்ளியது, தேர்தலுக்கு முன்னர், அவர் காட்டிய உதாசீனம்தான் என்பதை உணர்ந்தீர்கள் என்றால், .....

வலைஞன்

மதிமுகவுக்கு கொடுப்பதாகச் சொன்ன 22 ஐயும் கூட்டணிக்குப் பிரித்துக் கொடுத்தது, அவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால்தான். முக தியாகம் செய்ய வேண்டும் என்று சொன்னபோது பத்திரிக்கைகள்/பதிவர்கள் கிண்டல் செய்தனர், கூட்டணி கட்சியினர்தான் தியாகம் செய்ய வேண்டும், இவர் செய்ய மாட்டார் என்று. அவர் சொன்னவாறு விட்டுக் கொடுத்தாரா இல்லையா.

இன்று, சோனியாவிடம் பேசக்கூடச் செய்யாமல் ஆட்சி அமைத்திருக்கிறார் என்றால், அவர் ஏதோவொரு உறுதிமொழி பெற்றிருக்கிறார் என்று நினைப்பதில் தவறில்லையென கருதுகிறேன். வலைப்பதிவுகளில் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகள் அதிகம் என்ற வாதம் எழுந்தபோது கூட இக்கருத்தைத்தான் சொன்னேன்.

மேலும், எடுத்த எடுப்பிலேயே கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொண்டுவிட்டால், அவர்களது கோரிக்கைகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கும் என்பதையும் உணர்ந்தவர் அவர்.

நேர்மையின்மை என்று, எதைச் சொல்கிறீர்? ஜனார்தன் ரெட்டி மூலம்
தருவதாக ஒத்துக் கொண்ட இலாகாக்களைத் தராமல் மாற்றியபோது, அதனைப் பெற முக அந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்தியதையா? இல்லை,அமைச்சர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று சொன்னதையா? ஒருவேளை, வாஜ்பாயிக்கு ஆதரவு கடிதத்தை தராமல் முரண்டு பிடித்த ஜெ போல செயல்பட்டிருக்க வேண்டுமோ?

முக காட்டிய கடுமை தவறென்றே கொண்டாலும், அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருந்தால், காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் சேது திட்டம் வந்திருக்கும் என நினைக்கிறீர்களா. (அந்த இலாகா தராததுதான் பிரச்சினை என்பதை நினைவு கொள்க). வேறு அமைச்சராயிருந்தால், 5000 ரூபாய் அடையாள ஒதுக்கீடு நடந்திருக்கும். மாறனுக்கு பதவி என்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஆனால், மாறனுக்காக மல்லுக்கட்டினார் என திசைதிருப்புவர்களின் வலையில் விழுந்துவிடமாட்டேன். தன் மேல் உள்ள வழக்குகளை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக சட்ட இலாகா கேட்டுப் பெற்ற ஜெ வைக் காட்டிலும், தமிழகம், இத்தகைய முக்கியத்துவம் பெறுவதற்காக முக காட்டிய கடுமை ஒன்றும் மோசமானதல்ல - அதனால் அவர் கட்சியினர் ஆதாயமடைந்தாலும்.

மத்தியிலும் முதலில் வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைதான் முதலில் வந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல, ஒரு கட்சி ஆட்சி அமைய வாய்ப்பே இல்லாத நிலைக்கு பாஜகவும், காங்கிரஸும் தேய்ந்ததால்தான் இப்போது கூட்டணி ஆட்சி வந்துள்ளது, கடந்த 10 வருடங்களாக. இங்கேயும் முதலில் வெளியிலிருந்து ஆதரவு நிலை முதலில் வரட்டும். அதன் பின்னர் கூட்டணி ஆட்சிக்கு மாறலாம்.

ஜோ / Joe said...

Krishna,
உங்கள் வாதங்கள் அருமை.வழிமொழிகிறேன்.

காசி (Kasi) said...

வலைஞனின் சிந்தனையே பல பொதுவான வாக்காளருக்குள்ளும் ஓடுகிறது என்று நான் நம்புகிறேன். மு.க. செய்தது சரியாகப் படவில்லை. ஒவ்வொருமுறை கூட்டணி/வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலை வந்த போதும் நாடாளுமன்றத்திலே சபாநாயகர் (பாலயோகி...) அல்லது துணை சபாநாயகர் (லட்சுமணன், தம்பிதுரை) பதவி அடுத்தவருக்குக் கொடுக்கப்பட்டதே, அதுபோலவாவது செய்தாரா? சபாநாயகரும், துணையும் கூட தி.மு.க. என்றிருப்பது சரியா?

newsintamil said...

ஆம், கூட்டணி ஆட்சிக்கு தயாராக இல்லை என்றாலும் கூட குறைந்த பட்சம் துணை சபாநாயகர் பதவி கூட கொடுக்க மனமில்லையே. இதில் அவர் (கலைஞர்) தரப்பு நியாயங்களைப் பேசும்போதுகூட எப்படி நம்மால் நடுநிலைமை எடுக்க முடியும். இம்முறை கலைஞர் காங்கிரசைப் பொறுத்தவரை மாபெரும் துரோகமிழைத்திருக்கிறார். அது காங்கிரசுக்கு எதிரான துரோகம் மட்டுமல்ல வாக்காளர்களுக்கும் எதிரானது என்று பாமரவாக்காளர்கள் கருதுவதில் எந்தத் தவறும் இல்லை என்றே நானும் கருதுகிறேன்.

Krishna said...

காசி, சபாநாயகர், துணைசபநாயகர் பதவிகளை அப்படி கொடுப்பது டெல்லியில் வேண்டுமானால் பிரச்சனை தராமல் இருக்கலாம். ஆனால், நம் சட்டசபையோ (முகவோ), மதியழகன்களையும், P.H.பாண்டியன்களையும், அவர்களின் வானளாவிய அதிகாரங்கள் செய்த தீங்குகளையும் பார்த்தது. தனிப்பெரும்பான்மை இல்லாத இந்த நேரத்தில், இந்த பதவியை அப்படி தந்துவிட்டு, பின்னர் அவஸ்தைபட அவர் தயாராயில்லை என்றே நான் கருதுகிறேன்.

கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாமரன் கருதுவதாக நீங்கள் சொல்வது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக நின்று, யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போயிருந்தால் மட்டுமே மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்பினார்கள் எனக் கொள்ளலாம். அல்லது, திமுக போட்டியிட்ட இடங்களில் பாதி இடங்கள் மட்டும் வென்றிருந்து, கூட்டணி கட்சிகள் நிறைய இடங்கள் வென்றிருந்தாலும் அவ்வாறு எண்ணலாம்.

வேலூரில் காங்கிரஸ் நிற்க, அதற்கு வாக்கு போடும் வாக்காளன் எப்படி, கூட்டணி ஆட்சி அமைய எண்ணி வாக்கு போட்டிருப்பான் என எனக்குப் புரியவில்லை.

ஜோ, நன்றி.

newsintamil said...

அன்பின் கிருஷ்ணா

வாக்களிப்பின்போது என்பதல்ல இன்றைய நிலையில் தெருக்களில், டீக்கடைகளில், பூங்காக்களில் சாதாரண மக்களின் சரளமான அரசியல் பேச்சுக்களில் தவறாமல் இது இடம்பெறுகிறது. சமீபத்தில் என்னோடு பேசிய நண்பர்கள் எவரும் இதைப் பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. என் பத்திரிகையுலக நணபர்கள் பலரும் தஙகள் அனுபவங்களும் இவையே என உறுதிப்படுத்தியுள்ளனர்.

மற்றபடி என் சொந்தக்கருத்தின் அடிப்டையில் மட்டும் நான் இதை எழுதிவிடவில்லை.

நீங்கள் எழுதியுள்ள கருத்துக்கள் கலைஞர் சார்பில் நோக்கினால் ஏற்புடையவைதான். ஆனால் அரசியல் சார்பற்று நோக்க இதில் சற்றே தாளப் பிழை தெரிகிறது.

SK said...

வேலூரில் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்ட் வாக்காளர், காங்கிரஸ்காரர் மட்டும் அல்ல, திரு. க்ருஷ்ணா.
கூட்டணிக் கட்சிகளின் தொண்டர் மற்றும் அனுதாபிகளெ அவர்கள்!

இதே நிலைதான், திமுக வென்ற இடங்களிலும்!
இப்படியிருக்க, கூட்டணியை ஆதரித்தே ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.
இல்லையெனில், உங்கள் வாதப்படி, திமுக மட்டுமே அறுதி பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்!

Krishna said...

திரு எஸ்.கே.

//வேலூரில் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்ட் வாக்காளர், காங்கிரஸ்காரர் மட்டும் அல்ல, திரு. க்ருஷ்ணா.
கூட்டணிக் கட்சிகளின் தொண்டர் மற்றும் அனுதாபிகளே அவர்கள்! இதே நிலைதான், திமுக வென்ற இடங்களிலும்!
//

நானும் அதைத்தானே சொல்கிறேன். அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் நின்றவர் வெற்றி பெற வேண்டும் என்று ஓட்டு போட்டுள்ளனர் சரியா? அதே போன்றுதான், மற்ற இடங்களிலும். இதனை, கூட்டணி ஆட்சி வேண்டும் என்பதற்காக போட்டுள்ளனர் எனக் கருதமுடியாது என்பதைத்தான் சொன்னேன். அப்படி கருத வேண்டும் என்றால் நிலமை எப்படி இருந்திருக்க வேண்டும்? போட்டியிட்ட தொகுதிகளில் பாதிக்கும் குறைவான தொகுதிகளில் திமுக வென்றிருந்து, கூட்டணிக் கட்சிகளின் வெற்றி சதவிகிதம் அதிகமாக இருந்து, அவர்களின் சீட்டுக்கள் அதிகமாக இருந்த காரணத்தால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், அப்பொழுது மக்கள் திமுக கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர், திமுக ஆட்சிக்கல்ல எனக் கருதலாம். ஆனால் நம் முன் இருக்கும் நிலமை என்ன?

55.5% (130/234) தொகுதிகளில் நின்ற திமுக 74% (96/130) வெற்றி பெற்றுள்ளது. 44.5% (104/234) தொகுதிகளில் நின்ற கூட்டணிக் கட்சிகள் 64% (67/104) வெற்றி பெற்றுள்ளன. சரி, காங்கிரஸ்-ஐ மட்டும் எடுத்துக்கொண்டால் 71% (34/48) சதவிகித வெற்றி. ஆக, திமுக போட்டியிட்ட இடங்களில் நான்கில் மூன்று பங்கு வெற்றி பெற வைத்துள்ளனர். மு.க, கூட்டணி கட்சியினர் தாம் ஆட்சி அமைக்க உதவப் போகின்றனர் என்ற காரணத்தால் அவர்களை அரவணைத்துப் போகவும், அவர்களின் முழு ஒத்துழைப்பு பெறவும், விட்டுக் கொடுத்து, குறைவான தொகுதிகளில் போட்டியிட்ட காரணத்தினாலேயே அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போயிற்று என்பதுதான் நிதர்சனம்.

அலை இல்லாத தேர்தலில், இன்னும் சொல்லப் போனால், ஊடகங்களின் கணிப்புகளினாலும்/திணிப்புகளாலும், தாம் போட்ட அராஜக சட்டங்களைத் தாமே நீக்கியதனாலும், வைகோ, திருமாவைச் சேர்த்துக் கொண்டதாலும், சுனாமி/வெள்ள நிவாரணத்தை, தன் கையிலிருந்து கொடுப்பது போல பணமாகக் கொடுத்தும், இலவசங்கள் /சலுகைகள் அளித்தும், வெற்றிக் கோட்டின் அருகில் சென்று விட்ட ஜெ வை வெல்வது கடினமாக இருந்த சூழலில், இப்படிப்பட்ட நிலையை (தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலமை) முன்கூட்டியே ஊகித்து, காங். தலைமையிடம் மு.க. முன்கூட்டியே உறுதி பெற்றிருக்கலாம் என்பது என் கணிப்பு.

newsintamil said...

கலைஞர் என்ன 'நினை'த்தார்...க்கிறார் என்பதையல்ல. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியே இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். வாக்களித்தபோது என்ன நினைத்தார்கள் என்பதை விட இப்போது என்ன நினைக்கிறார்கள் என்பதைத்தான் கூறுகிறோம்.

Krishna said...

கருத்துக் கணிப்புகளும், எக்ஸிட் போல் முடிவுகளுமே தவறாயிருக்கும்போது, தாங்கள் மக்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள் என துல்லியமாக அறுதியிட்டுக் கூறுவது வியப்பாய் உள்ளது. ஆமாம், எப்படி இவ்வளவு சரியாய் கணித்தீர்கள். தெருவோரங்களில் இரண்டு பேருக்கு மேல் பேசுபவர்கள் எல்லாரும் இதையே பேசுகிறார்கள் எனச் சொல்வது....

//கலைஞர் என்ன நினைத்தார்,..கிறார்//

:-)

//அதே மக்கள் உங்களுக்கும் ஒரு பாடமாகத்தான் தனிப் பெரும்பான்மையை மறுத்தார்கள்.//
//தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தான் மக்கள் தந்த தீர்ப்பு//

உங்கள் பதிவின் இந்த கருத்துக்கு எதிவாதமாய் என் கருத்தைச் சொன்னேன்.

பின்னுட்டத்தில் இவ்வாறு சொல்கிறீர்:

//வாக்களித்தபோது என்ன நினைத்தார்கள் என்பதை விட இப்போது என்ன நினைக்கிறார்கள் என்பதைத்தான் கூறுகிறோம்//

வலைஞன், பதிவும், பின்னூட்டமும்....

newsintamil said...

அன்பின் கிருஷ்ணா

வாக்களிக்கும் போது யாருமே கூட்டணி ஆட்சி தான் வரவேண்டும் என்று நினைத்து வாக்களிக்க முடியாது. ஆனால் இன்ன அணியை ஆதரிக்கிறோம் என்பது தான் மக்களின் தீர்ப்பு.

//அதே மக்கள் உங்களுக்கும் ஒரு பாடமாகத்தான் தனிப் பெரும்பான்மையை மறுத்தார்கள்.//
இந்தச்சூழலில் திமுகவுக்கு மட்டுமல்ல திமுக கூட்டணிக்கே மக்களின் ஒட்டு மொத்த ஆதரவு கிடைத்து விடவில்லை. அதிமுக அணியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. எனவே எல்லோரும் ஒரே மனதாக திமுக ஆட்சியை விரும்பிவிடவில்லை என்பது தெளிவு.

வெளிப்படையாக வாக்குப்பதிவை யாருக்குச் செய்தோம் என்பதை எல்லோரும் சொல்லி விட மாட்டார்கள். ஆனால் பொதுவான மெஜாரிட்டி நிலவரம் தெரிந்த பிறகு பரவலாக பல கட்சிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேர்வாகி இருக்கும் நிலையில் அவர்களின் பங்களிப்பு அமைச்சரவையிலும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தும் இருக்கிறது.

இது குறித்து நான் முன்பே கூறியுள்ளேன். நான் சந்தித்த பலரும் என் நண்பர்கள் கூறிய பிறரது கருத்துக்களும் இதை வெளிப்படுத்தியுள்ளன. இதற்கு மாறான கருத்துக்களை உங்களளவு தீவிரமாக முன்வைக்கும் எவரையும் நாங்கள் நேரில் சந்திக்கவில்லை. கூட்டணி ஆட்சியை கலைஞர் மறுப்பது நியாயமில்லை என்ற எண்ணம் நாங்கள் சந்தித்த பலரிடமும் இருக்கிறது என்பதையே கூறினேன். முகமறியாத பலரும் பேசக்கேட்டதும் உண்மை.

உங்கள் கருத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் பலரும் அதை ஆதரிப்பதாக எனக்குப் படவில்லை.