2005-08-15

ஒரு வேண்டுகோள்

இன்று இந்தியாவுக்கு விடுதலைத் திருநாள். 58 வருடங்களுக்கு முன் அன்னிய அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றதன் நினைவுநாள். இந்நாளில் இன்று அன்னிய நாடுகளின் சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் இந்தியர்களைப்பற்றிய ஒரு வேண்டுகோளுடன் வந்திருக்கிறேன்.

பல்வேறு வெளிநாடுகளில் சிறைகளில் வாடும் இந்தியர்கள் பற்றிய தகவல்களை நாம் அவ்வப்போது பல செய்தி ஊடகங்களில் அறிய முடிகிறது. அது போலவே தங்கள் குடும்ப நலனுக்காக பிழைப்புத்தேடி அரபு நாடுகளுக்கு வரும் ஏழை இந்திய இளைஞர்கள் ஏஜென்டுகளால் ஏமாற்றப்படுவது, குறைந்த சம்பளம், அறிவிக்கப்பட்ட வேலைக்கு பதிலாக வேறு வேலை தரப்படுவது என பல விதங்களில் அலைக்கழிக்கப் படுகிறார்கள். இதையெல்லாம் மீறி வேலையில் அமர்ந்து ஓரளவு சம்பாதிக்கத் தொடங்குபவர்களுக்கும் பல சிக்கல்கள் காத்திருக்கின்றன.

வெளிநாட்டு வேலைக்காக வட்டிக்கு கடன் வாங்கி அனுப்பப் படும் அவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக அயல்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்படும் நிலையில் அந்தக்குடும்பங்கள் படும்பாடு சொல்லி மாளாது. சவுதி அரேபியா போன்ற நாடுகளின் சிறைகளில் வாடும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்துக்கே கூட தெரிவிக்கப் படுவதில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல் இந்த அதிர்ச்சியை மேலும் அதிகமாக்குகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சாலை விபத்து தொடர்பான வழக்கில் சிறையிலிருப்பது தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதைப்படித்த நண்பர் சாகரன் அவரது நண்பர் திரு வெற்றிவேல் மூலமாக இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இதைக்குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தார்.

சமீபத்தில் அவ்வாறு கிடைத்த ஒரு தகவலை அவர் அனுப்பியிருந்தார். அதன்படி சவுதி அரேபியச்சிறைகளில் வாகன விபத்து வழக்குகளில் சிறையிலிருக்கும் இந்தியர்கள் ஆறு பேர் குறித்த தகவல்கள் அவர்களின் உறவினர்களின் முறையீடுகளால் இந்திய தூதரகத்தில் அறியப்பட்டிருக்கிறது. இன்னும் கூட பலர் இருக்கலாம் என்றாலும் இவர்கள் ஆறு பேர் குறித்த தகவல்கள் மட்டுமே இதுவரை கிடைக்கப் பட்டிருக்கிறது.

U.V.குமரன் (கேரளா)
மைனுதீன்
K.E. வாஷிங்டன் (மகாராஷ்ட்ரா)
காவும்புறத்து ஹம்சா (கேரளா)
முகமது அவுசத் (உத்தரப் பிரதேசம்)
அகஸ்டின் துரைசாமி (தமிழ்நாடு)

இவர்கள் BLOOD MONEY எனப்படும் நஷ்ட ஈட்டுத் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் தங்கள் எஞ்சிய வாழ்நாளை சவுதி அரேபிய சிறையில் கழிக்க வேண்டியதுதான்.

வெளிநாட்டு வேலைக்காக வாங்கிய கடன்களே தீர்ந்திராத நிலையில் இந்த அபராதத்தை இவர்கள் எப்படி செலுத்தப்போகிறார்கள்? அபராதம் கொஞ்சநஞ்சமல்ல. இந்திய பணமதிப்பில் பத்து லட்சம் ரூபாய் முதல் நாற்பத்தைந்து லட்சம் ரூபாய்வரை இவர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.

இதற்காக வெளிநாடுவாழ் மலையாளிகள் கூட்டமைப்பு நன்கொடைகள் மூலம் நிதிதிரட்டி இவர்களை மீட்க முயற்சி எடுத்து வருகிறது. ரியாத் தமிழ்ச்சங்கமும் இம்முயற்சியில் இணைந்துள்ளது. ரியாத் இந்திய தூதரகம் இந்த முயற்சியை அங்கீகரித்து ஒத்துழைப்பு தருகிறது.

இத்தனை பெரிய தொகையை திரட்டுவதென்பது சாதாரண காரியமல்ல. ஆனாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பதால் ஒவ்வொருவர் தரும் சிறு தொகையும் இம்முயற்சிக்கு வளம் சேர்க்கும். இது ஆறு குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால் நம்மால் முடிந்த உதவியை செய்ய முயல்வோம். முடிந்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை இந்த முயற்சிக்கு பங்களிக்க வேண்டுகிறேன்.

நன்கொடைகள் அனுப்ப விவரம் & முகவரி:

The Embassy of India has agreed to receive funds from the Indian community and keep it in a separate account and register under the Community Welfare Wing. The donors making contributions must state specifically the name of the detainee for whom contributions are made.

Cheques and Drafts must be drawn in favor of “EMBASSY OF INDIA – INDIAN WORKERS WELFARE FUND” and posted to Embassy of India, P.O.Box No. 94387, Riyadh-11693, Saudi Arabia.

நன்கொடை அனுப்பும் வலைப்பதிவர்கள் sanuragc at yahoo.com மின்னஞ்சலுக்கு தகவலாக தெரிவித்தால் நன்று.

தொடர்புள்ள சுட்டி

ஓர் உதவிக்குறிப்பு
குறிப்பு:
திரு. அகஸ்டின் துரைசாமி விடுவிக்கப்பட சுமார் இருபது லட்சரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் எனத்தெரிகிறது. நன்கொடை அனுப்புவோர் யாருடைய விடுதலைக்காக என்பதைக் குறிப்பிட்டே அனுப்ப வேண்டும். இதன்மூலம் குறிப்பிட்ட ஒருவரை விடுவிப்பதற்கான தொகை சேர்ந்தவுடன் அவரது விடுதலைத்தொகை செலுத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட முடியும்.

4 comments:

Ramya Nageswaran said...

கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு, தன் மானத்தோட வாழலாம்னு வெளிநாட்டுக்கு வரவங்களுக்கு இப்படிபட்ட கஷ்டங்களா? நீங்கள் சொல்லும் தொகைகளைக் கேட்டால் அந்நாட்டு அரசு மன்னித்து விடுவித்தால் தான் பலருக்கு வாழ்வு திரும்ப கிடைக்கும் போலிருக்கிறதே.

மிகவும் வருந்த வைக்கும் செய்தி.

Ramya Nageswaran said...

http://www.hindustantimes.com/news/5967_1467209,001600060001.htm

அனுராக், மேற்கண்ட செய்தியை இன்று பார்த்தேன்.. ஏதாவது வழி பிறந்தால் நன்றாக இருக்கும்.

வலைஞன் said...

நன்றி ரம்யா
நீங்கள் கூறுவது உண்மைதான்.

நன்கொடைகள் எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்று தெரிய வில்லை. எனது இந்த பதிவுக்கு கூட எந்த பிரயோசனமும் இருப்பதாகத் தெரிய வில்லை.
தமிழ்ச்சங்கம் எவ்வளவு திரட்ட முடியும்? சவுதி அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். அல்லது இந்திய அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பது தான் இப்போதைய நிலை.
ஓரளவுக்காவது நிதி திரட்ட முடிந்தால் மீதியை இந்திய அரசிடம/தமிழக அரசிடம் பெற முயற்சிக்கலாம்...

Anonymous said...

SU.RA kkurittha mathippeedu sariyaana ontru! thamil ilakkiya chsoozlalil puthup puthu muyarchikalai matrkonta avarin panikalai" kaalachuvadu" thodara vaendum!