2005-01-24

நானும் கணிப்பொறியும் தமிழும்

என் பள்ளிப் பருவத்தில் நாங்கள் ஈரோட்டில் இருந்த போது ஒருமுறை சேஷசாயி பேப்பர் மில்லை சுற்றிப் பார்க்க சென்றிருந்தோம். இயந்திரங்களின் செயல்பாடுகளைப் பார்த்து முடித்த பின் அலுவலக அறைகளைச் சுற்றிக் காட்டினார்கள். அடுத்து அவர்கள் அழைத்துப்போன அறை கண்ணாடியால் ஆனது போல இருந்தது. அதன் கண்ணாடிக் கதவைத் திறக்குமுன் எல்லோரையும் செருப்புகளை கழற்றிவிடச் சொன்னார்கள். கம்பிச் செருப்பணிந்திருந்த எனக்கு மட்டும் விலக்களித்தார்கள். உள்ளே நுழைந்ததும் சில்லென்றிருந்தது. குளிர்சாதன வசதி செய்யப் பட்டிருப்பதை உணர்ந்து கொண்டோம். தரையில் உயர்ரக கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. வரிசையாய் மேசைகள். அதில் கருப்புத்திரையுடன் இருந்தவைதான் கணிப்பொறிகள் என்று சொன்னார்கள். அவற்றை இயக்கி ஏதோ தட்டியபோது கண்ணுக்குப் புலப்படாததுபோல சிறிய வெள்ளை எழுத்துக்கள் பிரகாசித்தன. அறையின் ஓரமாக ஒரு மேசை உயரத்தை விட பெரிதாக இருந்த கருவியில் நீளமான காகிதங்களில் தட்டச்சுப்போல எழுதப்பட்டு கீழிறங்கி மடங்கி விழுந்து கொண்டிருந்தது. அந்த முதல் பார்வையிலேயே கணினி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பார்த்துவிட்டு வந்த சில தினங்களுக்கு என் கனவில்கூட அந்தக் கறுப்புத் திரை.மின்மினிப்பூச்சி போல வெள்ளை எழுத்துகள்......

பதின்பருவ இறுதியிலிருந்து செய்தித்தாள்களிலோ வாரப்பத்திரிகைகளிலோ கணிப்பொறி பற்றி எந்தச் செய்தி வந்தாலும் சேகரிக்க ஆரம்பித்தேன். பட்டப் படிப்பிற்கு பொறியியல் படிக்க இயலாமல் வணிகவியலாகிவிட்டது. கிராமத்தில் வசிக்க ஆரம்பித்ததில் கணினிக் கனவு கைகூடாமலே இருந்தது. ஆர்வங்கள் திசைதிரும்பி இலக்கியம் இதழியல் என்றானது. தகவல் சேகரிப்பு மட்டும் நிற்கவில்லை. கணிப்பொறி, இணையம் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் பற்றி நிகழ்நிலவரங்கள் என்னிடமிருந்தன. கணித்தமிழின் அவ்வப்போதைய வளர்ச்சி பற்றியும் அவதானித்து வந்தேன். கணிப்பொறியைத் தொட்டுணராமலே அதன் செயல்பாடுகளை கற்றுணர்ந்திருந்தேன். இணையம் காணாமலே இணையதளம் (உதவி: HTML புத்தகம்) வடிவமைத்திருந்தேன். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பது பின்னர் நிரூபணமானாலும் அடிப்படை அறிவை எனது சேகரிப்புகளிலிருந்தே பெறமுடிந்தது.

தமிழ்க்கணினி தயாராகி விட்டதாக பத்திரிகைச்செய்திகளில் பார்த்து சில கட்டுரைகளும் படித்து கணிப்பொறி வாங்கும்போதே தமிழ்க்கணினி வேண்டுமென்று அசட்டுத்தனமாய்க் கேட்டபோது விற்பனையாளர்கள் சிரித்து பொறுமையாக கணிமொழி ஆங்கிலம்தான். தமிழில் மென்பொருட்களே இப்போதைக்கு உண்டென்று விளக்க முற்பட, நானோ பத்திரிகைகளைக் காட்டி ழ கணினியாமே அது என்ன எனக்கேட்க அவர்கள் திருதிருவென விழிக்க இறுதியில் அவர்கள் சொன்னபடி சன்னல்(?) வைத்த கணினி வாங்கி பின்னர் இணையத்தில் ஒவ்வொன்றாகக் கற்று வருகிறேன். என் கணினியின் முகப்பைப் பின்னர் வந்து பார்த்தவர்களுக்கு "எல்லாம் தமிழில்? எப்படி?" என்று ஆச்சரியம்தான்.

எக்ஸ்பியும் யூனிகோடும் செய்த மாயம் தானென்று நான் சொல்லவில்லை. ழ கணினி இன்னும் சாத்தியமாகவில்லை. தமிழா உலாவியையாவது நிறுவலாமென்று பார்த்தால் தமிழா தளம் திறக்க மறுக்கிறது.. முரசுவும், கலப்பையும், சுரதாவின் கருவிகளும் என் கணித்தமிழை இப்போதைக்கு வாழவைத்துக் கொண்டுள்ளன. தேடல் தொடர்கிறது.

தமிழ் வலைதளங்களை தேடுபொறிகளில் மாறிமாறி தேடிய போது ஒருமுறை தமிழ்ப்பதிவுகளின் பட்டியல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்த போதுதான் இத்தனைநாள் நான் தவறவிட்டிருந்த தமிழ்ப்புதையல் கிடைத்ததாய் உணர்ந்தேன்.

ஓரிரு நாட்கள் சில பதிவுகளை வாசித்த உடன் ஆவல் உந்த நானும் ஒரு வலைப்பதிவை உருவாக்கினேன். என் பெயர் அகரத்தில் இருந்திருந்தால் தமிழ்ப்பதிவுகளின் பட்டியலில் ஆரம்பத்திலேயே இடம்பெற்றிருக்கலாமே என்றொரு யோசனை வந்ததில் என் மகனின் பெயரில் பதிவு செய்தேன்.

குரூரமாக கும்பகோணம் குழந்தைகள் கருகிய நிகழ்வு நடந்திருந்த வேளையாதலால் கவிதையில் பதிவு செய்த அந்தச் சோகத்தை பதிவில் இட்டேன். வாரம் ஒருமுறை எழுதலாம். என்று தான் எண்ணியிருந்தேன். அந்தச்சமயம் தான் தமிழ்மணம் வந்தது. பலரும் தினமும் பதியக் கண்டேன். அகர வரிசை இல்லாமலே நமது புதிய பதிவுகளை உடனுக்குடன் எல்லோரும் படிக்க முடிகிற அதிசயம் இன்னும் இரண்டு பதிவுகளை உருவாக்க வைத்தது. அடிக்கடி எழுத வைத்தது. புதிய சிந்தனைகளில் மனம் சிறகடித்தது. எல்லாம் சரியாகத்தான் ஆரம்பித்தது. விதி யாரை விட்டது?

என் கணினியின் வன்தட்டு பழுதாகி வலைத்தொடர்பில் இருந்து ஐம்பது நாட்கள் இடைவெளியாகிவிட என் ஆர்வமான திட்டங்களில் அதே ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த நண்பர்கள் இது வேலைக்காகாது என்று விலகிப் போய் விட்டனர். புதிய வன்தட்டு மாற்றி என் ஓராண்டு உழைப்புகள் இழக்கப்பட்ட வருத்தத்தோடு திரும்பி வந்த போது நண்பர்களின் உதாசீனம் உறைத்ததில் என் ஆர்வமும் வற்றிப் போய்விட்டது. எழுதும் ஆர்வம் மங்கிப்போய் வெறும் பார்வையாளனாக பதிவுகளை மேய்ந்தேன். என்றாலும் தொட்டகுறை விட்டகுறை போல ஆழிப்பேரலை வந்த மூன்றாம் நாளில் சுனாமி என்ற பெயரிலேயே ஒரு பதிவை ஆரம்பித்தேன். அதைக் கூட்டுப் பதிவாக்க நண்பர்களை அழைப்பதில் ஒரு தயக்கம். வலைமேடை போல வீணாகிவிடுமோ என்ற அச்சம்...தமிழ்மணத்திலும் சமர்ப்பிக்காமல் விட்டுவிட்டேன்.

பின்னர் நான் நினைத்திருந்த வடிவிலேயே ரோசாவசந்த் ட்சுனாமி மீட்பு பணி ஒருங்கிணைப்பு வலைப்பதிவை ஆரம்பித்து ஆர்வத்தோடு முன்னெடுத்துச் செல்வது கொஞ்சம் திருப்தி தருகிறது. வலைமேடையில் உத்தேசித்திருந்த பணியும் காசியின் மன்றத்தின் மூலம் நிறைவேறியதில் மகிழ்ச்சி.

4 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

vaNakkam!

you can download 'thamizha' from http://barathee.beigetower.org/

If you have any difficulty downloading, then you might want to ask somebody from Madras like Badri or bloggers from Bangalore to send you a CD with all the Tamil s/w.

natpudan,
Mathy

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அனுராக், உங்களது இந்தக் கட்டுரையும் நடையும் மிக நேர்த்தியாக இருக்கிறது. 'வலைமேடை' முயற்சி எனக்கு அவ்வளவு பொருத்தமாய்த் தோன்றவில்லை. இருந்தாலும் ஆர்வத்திற்குத் தடை போடவேண்டாமென்று ஒன்றும் சொல்லவில்லை. மற்றபடி, தொடர்ந்து எழுதுங்கள்.
நீங்கள் பள்ளிப்பருவத்தில் ஈரோட்டில் இருந்தவரா? எங்கு? எப்போது? அதே சேஷாயிப் பேப்பர் மில்லிற்கு நானும் சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறேன். உண்மையில் மில்லுக்கு இல்லை. அங்கு குடியிருப்பில் வசித்த நண்பர்களுடன் விளையாடுவதற்கு.

வலைஞன் said...

மதி அவர்கள் தந்த தமிழா இணைப்பும் பலனளிக்கவில்லை. தளத்திற்குள் நுழைந்து தேடிய போது கிட்டாமல் உள்ளிருந்த தேடல் கருவியில் thamizha என்று தட்டியபோதும் கிட்டவில்லை. ஒருவழியாக ஒவ்வொரு சுட்டியாகத் தட்டித் தட்டி தமிழிலேயே தமிழா பதிவிறக்க இணைப்பைக் கண்டு பிடித்தேன். ஆனாலும் பலனில்லை. பதிவிறக்க முடியவில்லை. ஆனாலும் தகவலுக்கு மிக்க நன்றி.
செல்வராஜ்- என் தந்தையாரின் பணிநிமித்தம் 83 வாக்கில். சரியான இருப்பிடம் இப்போது நினைவில்லை. ஆமாம் நீங்கள் கொங்குவாசியா?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

எனது பள்ளிப் பருவம் முடியும் வரை முழுக்க முழுக்க வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் தான். இன்னும் அதுவே எனது பெற்றோர் வசிக்கும் ஊர். படித்தது திண்டலில் உள்ள ஒரு பள்ளியில்.