2005-03-30

மதியின் மனப்பதிவு



தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களில் ஒருவரான மதி கந்தசாமி நமக்காக மனம் திறக்கிறார்.

1. பிறப்பிடம்?

புங்குடுதீவு, யாழ் மாவட்டம், இலங்கை (மணிபல்லவம் என்ற) நயினாதீவுக்கு அருகில். யாழ்ப்பாணத்திற்கு அருகே இருக்கும் ஏழு தீவுகளில் ஒன்று. என்னுடைய பதிவுகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.

2. வசிப்பிடம்?

மான்ரியல், கனடா

3. தற்போதைய பணி மற்றும் வாழ்வுச்சூழ்நிலை குறித்து?

பலரைப்போல கணினி தொடர்பான வேலை.

எல்லா இலங்கையரைப்போலவும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊரிலும்,
அதைத்தவிர அம்மா அப்பாவின் உடன்பிறந்தவர்கள் உற்வினர்கள் உலகின் பல மூலைகளில்...

3 ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழ்பவர்களில் பெரும்பாலோர் ஈழப்பிரச்சினையால் குடிபெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள்?


பதிவில் எழுதியிருக்கிறேன். எண்பத்தி ஐந்துக் கடைசியில், யாழில் இருந்து வந்த கடைசி ரயிலில் கடைசி நிமிடத்தில் கொழும்பு வந்து, அப்பாவின் நண்பர் இருக்கும் சென்னைக்கு வந்தேன். அந்த அங்கிளை இன்றும் எங்கள் வீட்டில் குலதெய்வம் போல மதிக்கிறார்கள் - முக்கியமாக அம்மா. இங்கிலாந்து போவோமா. எங்கே போவோம். அப்பா வெளிநாட்டில் என்பதால் அம்மா பதினொரு வயதுக்கும் கீழே இருக்கும் 3 பிள்ளைகளுடன் தனியே என்ன செய்வது என்று யோசித்துக்க்கொண்டிருந்தபோது அப்பாவுக்கு கடிதம் எழுதி, எங்களுக்கு எழுதி எங்களைக்கூப்பிட்டவர். என்றாவது பதிவு செய்யும் நோக்கம் இருக்கிறது. பார்ப்போம்.

4. ஈழப்பிரச்சினையின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்து கொண்டது எப்போது?

என் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தாக்கத்தை இன்றைக்கும் உணர்ந்திருக்கிறேனா என்று தெரியாது. ஆனால் மரண பயம், பெண்களுக்கே உள்ள பயம் என்று யாழ்ப்பாணத்தில் ஒருவருடம் யாழ்ப்பாணத்தில் நடுப்பகுதியில் இருக்கும் பெண்கள் பள்ளி விடுதியில் தெரிந்துகொண்டேன்.

வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிப்போகும்போது ரோட்டுக் கரையில் துப்பாக்கிமுனையில் கத்தி செருகி வைத்திருக்கும் ஆமிக்காரன் என்ன செய்வானோ, வயித்தில் செருகுவானோ என்ற நடுக்கத்தோடு கடந்து செல்வது.
ஒன்றிரண்டு ஆமிக்காரன் என்றால் பரவாயில்லை. எத்தனையோ பேர் நிற்பார்கள். அதுவும் பெண்கள் என்றால் என்ன நடக்கும் என்று தெரியும் உங்களுக்கு. நாங்கள் சிறுவர்கள் என்றாலும், எங்களைப் பெரிய அக்காக்களுடந்தான் அனுப்புவார்கள். அவர்களின் பயம் புரியாவிட்டாலும் எங்களையும் தொத்திக்கொள்ளும்.

நகரின் நடுப்பகுதியில் இருந்த பள்ளி விடுதியில் பல பெண்களை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்று எங்கள் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வார்டனும் பயந்திருப்பார்கள். எங்களுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரிந்திருக்கவில்லை. ரோட்டோரம் இருக்கும் அறையென்றால், கட்டிலை இழுத்துப்போட்டு நின்று உயர்மான கண்ணாடி வழியாக வெளியே நடப்பதைப்பார்த்துக்கொண்டு நிற்போம். வார்டன் வந்து உதை கொடுத்த நாட்களும் உண்டு. மனுசியின் வாயால் திட்டும் பேச்சுக்கு அடி உதையே பரவாயில்லை. ஆர்மிக்காறர்கள் வண்டியில் போகும்போது ஈயாடாது. எங்கள்
மெஸ்ஸும் ரோட்டோரம்ந்தான். லைட்டை அணைத்துவிட்டு லாந்தர் விளக்கொளியில் சாப்பிடுவோம். சாப்பிடுவதற்கு முன்னர் இறைவனை வழிபடுவோம். அதுவும் கட். எங்களுக்கு அது போர் என்பதால் சந்தோஷம். கதைக்காமல் மூச்சுக்கீச்சு விடாமல் சாப்பிடவேண்டும். நாங்கள் கதைத்தாலும் அக்காமார் திட்டி பேசாமல் இருக்கச் சொல்வார்கள். அவர்களுக்கு விளைவுகளின் அனர்த்தங்கள் தெரிந்தபடியால் அப்படிச் செய்தார்கள்.

இரவுகளில் நாங்கள் படுக்கச் சென்றபிறகு சும்மா இருப்போம் என்கிறீர்களா? மறுபடி கட்டிலில் ஏறி வெளியில் என்ன நடக்கிறது என்று நுனிக்காலில் எட்டி நின்று பார்ப்போம். வாச்சுமேன் தாத்தா தூங்கி வழிவார். ஒரு நாள் அவர் தூங்கி வழியாமல் உலாத்திக்கொண்டு நிண்டார். அவர் தனியாக இல்லை. கூட இரண்டு பேர் நின்றார்கள். அன்றைக்கு மட்டுமில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும். விசயம் எல்லாருக்கும் பரவி, கடைசியில் என்னவென்று அறிந்துகொள்ள முடிந்தது. பெண்கள் தனியாக இருப்பதால் ஆமி ஏதேனும் செய்ய வந்தால், தடுப்பதற்கு அவர்கள் ஒவ்வொரு இரவும் வருவார்களாம். நான் அங்கிருந்து கிளம்பும் வரை வந்து காவல்காத்தார்கள். பிறகும் வந்தார்களாம்.

வகுப்புகள் ஒரு மணியோடு முடிந்துவிடும். இரண்டு மணிக்கோ என்னமோ கர்ஃப்யூ. ரோட்டில் ஒரு புழுப்பூச்சி இருக்காது. ஹாஸ்டலில் நாங்கள் மூச்சுக்கூட விடமுடியாது. ஒவ்வொரு வாரமும் வீட்டிலிருந்து புத்தகங்கள்(அம்புலிமாமாவில் இருந்து காமிக்ஸ் வரை) தூக்கிக்கொண்டு போவோம். உற்வினரின் வேன் என்றால் பள்ளி வாசலிலேயே கொண்டிறக்குவார்.

பகலில் எங்கேயாவது சுட்டாலோ குண் டு விழுந்தாலோ சென்னையில் தீபாவளிக்கு வெடி வெடிப்பார்களே அப்படியிருக்கும்.(பதிவு எழுதியிருக்கிறேன்.) குண்டு வெடித்தால் பள்ளியில் இருக்கும் பழைய கட்டிடங்கள் ஆடும். எங்கள் பள்ளி முன்னூறு வருடங்கள் பழையதாம்.

ஒரு முறை என்னைப்பார்த்துவிட்டு, தம்பிப் பார்க்கப்போன அம்மா, பின்னாலிருந்து சு ட்டுக்கொண்டு வந்த ஆமிக்காரனின் புல்லட் காதுக்குப் பக்கத்தில் பறந்துபோக உயிர் தப்பினார். அருகில் இருக்கும் மாமா ஒருவரின் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தார் அவர்.

நீங்கள் ஈழப்பிரச்சினையில் என்ன நிலையெடுத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனாலும், பொதுவில் இப்போது எழுத விரும்பாத விஷய்ங்களையும் எழுதியிருக்கிறேன்.

எனக்கு அரசியலில் நாட்டமில்லை. இங்கே வரும் தமிழ் பேப்பர்களைப் படிப்பதில்லை. ஈழம் சம்பந்தமான விஷயங்களையும் படிப்பதில்லை. பல நாட் தூக்கம் தொலைந்துபோகும் பாதிப்பு இருக்கிறது. just trying to survive. that's all.

நான் எழுதியிருப்பது 1985க்கு முன்னால் நடந்தவை.

எனக்கு பதுங்கு குழி எப்படியிருக்கும் என்று தெரியாது.

கண்ணுக்கு முன் குண்டு விழுந்து உறவினர்கள் செத்தால் எப்படியிருக்கும் என்று தெரியாது.

ஒரு உறவினர் தன் கணவர் 3 பிள்ளைகளை கண்ணுக்கெதிரில் தொலைத்தார். ஒரு பிள்ளை எஞ்சியது. கழுத்தில் பாய்ந்த ஷார்ப்பெனலுடன். மருத்துவ வசதியில்லாமல் செத்துப்போய்விட்டது.

ஹவாயில் சந்தித்த ஒரு பெண் - இலங்கைப்பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட கிருஷாந்தி(i hope i got the name right. am trying to block these things out - subconsiously. i think. coz, i cannot remember individual incidents). கிருஷாந்தியின் டீயூஷன் தோழி. அந்தப் பெண்குழந்தையை எத்தனையோ பேர் மாறி மாறிச் சீரழித்து, அவளைத் தேடிவந்த அவளது அம்மாவையும் சீரழித்து, கணவர் வெளிநாட்டில் என்பதால் துணைக்கு அழைத்துவந்த பக்கத்துவீட்டுக்காரரையும் கொன்று ஒரு குழியில் புதைத்தார்கள்.

நான் செக்கிங் போஸ்ட் பார்த்ததில்லை.

என் ஆறுவயது கசினைப்போல மீனம்பாக்கத்தில் இருந்து புறப்படும் விமானச் சத்தம் கேட்டு அழுததில்லை. எப்போதாவது போகும் ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு அம்மாவின் மடிக்குள் ஒழிந்ததில்லை. மேலே வரும் விமானத்தின் சத்தத்தைக் கேட்டு என்ன விமானம் என்று அவனை மாதிரி சொல்லத் தெரியாது எனக்கு. எந்தந்த விமானத்தில் என்னென்ன குண்டுகள் போடுவார்கள். ஒரு குண்டை ரிலீஸ் செய்து எத்தனை செகண்டில் தரையில் விழும். நம் தலைக்கு மேலே வரும் விமானம் குண்டை ரிலீஸ் செய்தால், நம் தலையில் விழாது, ஆனால் எவ்வளவு தூரத்தில் விழும் என்று நான்குவயதிலேயே சொல்லத் தெரியாது.

இன்னும் எத்தனையோ விஷயங்கள் தெரியாது.

குந்தவையின் கதை படித்திருக்கிறீர்களா?

http://womankind.yarl.net/archives/000052.html

5. நிறைய வாசிப்பவராக, எழுதுபவராக, சிந்திப்பவராக ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக நீங்கள் நினைப்பது என்ன?

நான் நிறைய வாசிக்கிறேன்/எழுதுகிறேன்/சிந்திக்கிறேனா?

:லபோதிபோ: யார் உங்ககிட்ட போய் சொன்னது???

6. இயல்பான நகைச்சுவை உணர்வை உங்கள் எழுத்துக்களில் (மடல்களிலும்) பார்க்க முடிகிறது. அது எப்படிங்க?

அட! நீங்க வேற. இபப்டியெல்லாம் திட்டுறதுக்கு நேரவே திட்டிரலாம் நீங்க.

7. இந்தியாவுக்கு வந்ததுண்டா?

நமக்கு ஊர்னு சொன்னா, சென்னைதான். எங்க பேட்டைல்லா.

8. இந்தியாவில் பார்க்க விரும்பும் இடங்கள்?

கேரளா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். தமிழ்நாடு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு ஊராப் போகப் பிடிக்கும். தஞ்சைப் பகுதி ரொம்ப பிடிச்ச இடம். போகும் இடத்தில் எல்லாம் புங்குடுதீவைப் பார்க்க முடியும்.

ஹவாயிலும் மக்கள் நடமாட்டமில்லாத இடங்கள், வாழைமரம், மாமரம், முருங்கைமரம் என்று அம்சமாக இருக்கும்.

9. இணையத்தமிழ் சார்ந்து எதிர்காலத் திட்டங்கள் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

அப்படியொன்றும் இல்லை. தமிழ் நாகரீகமானதாக இருக்க வேண்டும். அதுதான் விருப்பம்.

(தொடரும்)

7 comments:

Mookku Sundar said...

அசத்தலான பேட்டியும், பதில்களும்.

நன்றி அனுராக்.

கறுப்பி said...

ஆஹா சினிமா நடிகைகள் போல் புளொக் வைத்திருப்பவர்களையும் பேட்டி எடுக்கத் தொடங்கி விட்டீர்கள் போல..
மதி நல்ல (கொடுமையான) பல அனுவங்களைக் கூறியிருக்கின்றீர்கள்.
நன்றி.

Thangamani said...

நல்ல பேட்டி. அனுராக் நன்றி.

மதி, அழுத்தமான அமைதியால் அதிகம் பேசியிருக்கிறீர்கள். நன்றி!

Anonymous said...

மதி இயல்பான பதில்கள்...
அனுராக் நல்ல ஐடியா மற்றும் சரியான ஆள் பேட்டிகாண..

Aruna Srinivasan said...

அனுராக், ரொம்ப நல்ல ஐடியா - இப்படி பேட்டி எடுப்பது. மதியின் அனுபவங்களை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

மதி, "...கேரளா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். ..." ஓ, அதான் சென்ற வருடம் என் கேரளா பயணம் பற்றி அபப்டி விரிவாக எழுதச் சொன்னீர்களா? :-) ஹ்ம்ம்.. நானும் என் சோம்பேறித்தனமும்.... சரி. பிறகு ஒரு முறை பயணம் செய்து விரிவாக எழுதினால் போச்சு. :-)

Anonymous said...

புன்முறுவலுடன் ரசித்தேன்!

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Chandravathanaa said...

அனுராக் நல்ல ஐடியா