2005-04-01

திசைகள்- மாலன்

மாலன்....

தமிழ்ப் பத்திரிகை உலகின் சிகரம் கண்டவர். இலக்கியப் பத்திரிகையிலிருந்து இணையப் பத்திரிகை வரை, செய்திப் பத்திரிகையிலிருந்து செயற்கைக்கோள் தொலைக் காட்சிவரை ஊடகத்துறையில் ஆழமாகக் கால்பதித்தவர். தமிழின் நம்பர் 1. பத்திரிகையாக இருந்த குமுதம் இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். நம் சக வலைப்பதிவராக நம்மிடையே உரையாடுகிறவர். தற்போது சன்நியூஸ் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
மாலன் என்ற மனிதரை, மாலனுக்குள் இருக்கும் ஆளுமையைப் புரிந்து கொள்ள அவரது இந்தப் பகிர்வு உதவக்கூடும்.

Image hosted by TinyPic.com


கேள்விகள்:

1. உங்களுடைய பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம் குறித்து கூறுங்கள்?

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஓர் இரண்டாம் நிலை சிற்றூரில் படித்த, நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். எனது தாத்தா, அப்பா எல்லோரும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப்பங்கு கொண்டவர்கள்.ஆர்வதோடு நாளிதழ்களும் இலக்கியங்களும் படித்து விவாதிப்பவர்கள். அம்மாவும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். அவருக்கு காந்தி தெய்வம். நேரு மாமனிதர். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மையம் கோயில்கள். இன்று தமிழக அரசின் இலச்சினையாகத் திகழும் கோபுரம் அந்த ஊரினுடையதுதான். ஆண்டாள் பிறந்த ஊர். ஒரு பெரும் சிவன் கோவிலும் உண்டு. அந்த ஊரின் தேர் திருவாருர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே பெரியது. நாங்கள் வசித்த வீதிக்கு (வடக்கு) ரதவீதி என்று பெயர்.தேர் ஊர் சுற்றக் கிளம்பினால் நிலைக்குப் போய்ச் சேர 10 நாளாகும். எங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு நாள் பூரா கிடந்து நான் பார்த்திருக்கிறேன். ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு திருவிழா. அரையர் சேவை என்று ஒன்று நடக்கும். அதை வேறு ஊர்களில் பார்க்க முடியாது ( ஸ்ரீரங்கம் தவிர) ராமநவமி வந்தால் வீட்டுக்கு வீடு கூப்பிட்டு பானகம் என்று வெல்லம் கரைத்த ஏலக்காய் வாசனை கொண்ட இனிப்பு நீர் தருவார்கள்.பக்கத்து கிராமங்களில் இருந்து ·பிரஷ்ஆக காய்கறிகள், பால் ( கூமாப்பட்டி கத்திரிக்காய், கிருஷ்ணங்கோவில் மாவடு, மம்சாபுரம் பால், வெண்ணை) இவற்றை அற்புதமான எளியமனிதர்கள் கொண்டு வந்து விற்பார்கள்.

அந்த ஊரில் இருந்த மூன்று மருத்துவர்களில் என் தாத்தாவும் ஒருவர் என்பதால் எனக்கு எங்கு போனாலும் ராஜ உபசாரம் நடக்கும். ஓர் இளவரசனைப் போல் வளர்ந்தேன்.

2. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று சிறுவயதில் நினைத்திருந்தீர்கள்?

எனக்கென பெரிய கனவுகள் இருக்கவில்லை. அம்மா நான் அவரது அப்பாவைப் போல டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள்.

3. தமிழ் வாசிப்பு அனுபவம் எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணமாக அமைந்தவர்கள் யார்?

என் அப்பா ஒரு தீவிர வாசகர்.ஒரு ஆசிரியர் எழுதிய அனைத்தையும் படிக்காமல் அவரைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்பது அவரது கொள்கை.சாமர்செட் மாம், அலக்சாண்டர் டுமா என்று தலையணை தலையணையாகப் புத்தகங்கள் கொண்டு வந்து இரவில் தலைக்குப் பின் மேஜை விளக்கை எரிய விட்டுக் கொண்டு படிப்பார்.இப்போது அவருக்கு 80 வயதாகிறது. ஸ்பாண்டிலைட்டீஸ் காரணமாக நீண்ட நேரம் உட்கார முடிவதில்லை. ஆனாலும் படிக்கிறார். அவர் ஏதாவது புதிய புத்தகம் படித்தால் உடனே என்னிடம் தொலைபேசியில் அழைத்து அரைமணி நேரமாவது அதைப்பற்றிப் பேசுவார். அப்பாவிற்கு நிறைய நண்பர்கள். கிவாஜ, எழுத்தாளர் தேவன், கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி எல்லோரும் அவரது நண்பர்கள். அவர்களோடும் புத்தகம் பற்றி அல்லது அரசியல் பற்றித்தான் பேசுவார். இவர்களையெல்லாம் நான் என் சிறு வயதில் என் வீட்டில் வெகு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
அம்மாவும் ஒரு நல்ல வாசகி. தமிழில் நிறையப்படிப்பார். அறுபதுகளில் வெள்ளிகிழமை வந்தால் வீட்டில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி எங்கள் இருவருக்கும் இடையே விவாதம் நடக்கும். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான். அவர் மறைவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட படுக்கையில் இருந்தபடியே நித்ய ஸ்ரீ பாடிய பாரதியின் பாட்டொன்றைப் பற்றிப் பேசினார்.

4. உங்களுடைய பள்ளி வாழ்க்கை வாசிப்பைத் தூண்டுவதாக அமைந்ததா? இதைக் கேட்கக் காரணம் இன்றைய மாணவர்களின் பள்ளி வாழ்க்கையில் வெளிவாசிப்பைத் தூண்டும் ஆசிரியர்கள் குறைவு. மாணவர்கள் பள்ளிப் பாடங்களை மட்டும் ஒழுங்காகப் படித்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அன்றும் இம்மாதிரியான சூழல்தான் நிலவியதா?

வாசிக்கத் தூண்டினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு சம்பவம் மறக்கமுடியாதது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை தினமணியில், ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் கட்டிட வேலைக்காகத் தோண்டியபோது ஓரிடத்தில் கட்டுக் கட்டாக கரன்சிகள் கிடைத்தது என்றும், ஆனால் அவற்றைக் கரையான் தின்றிருந்தன என்றும் செய்தி வந்தது. நான் பள்ளிக்குப் போகும் போதும், பிராத்தனைக்காக வரிசையில் நின்றிருந்த போதும் அந்தச் செய்தியே மூளையைப் பிறாண்டிக் கொண்டிருந்தது. வகுப்பிற்குப் போய் உட்கார்ந்து என் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன்.ஆசிரியர் வந்தது, எழுந்து நின்றது, ஆஜர் கொடுத்தது எல்லாம் இயந்திரகதியில் நடந்தது. ஆசிரியர் மத்தியதரைக் கடல் பகுதிகளின் சீதோஷணம் பற்றி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால் கை கவிதையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. என்கவனம் பாடத்தில் இல்லை என்பதை ஆசிரியர் கவனித்து விட்டார். அருகில் வந்து வெடுக்கென்று என் கையெழுத்துப் பத்திரிகையைப் பறித்துக் கொண்டார். அதிலிருந்ததை ஒரு முறை படித்துக் கொண்டார். மேடைக்குப் போய் என்ன அருகில் வர அழைத்தார். சரி தொலைந்தோம், எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்போகிறார் என்று பயந்து கொண்டே போனேன். ஆனால் என்ன ஆச்சரியம். கவிதை எழுதுவது கடவுள் சிலருக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வரம் அப்படி கடவுளின் அன்பிற்குப் பாத்திரமானவன் ஒருவன் நம் வகுப்பில் இருக்கிறான் என்று சொல்லி என் கவிதையைப் படிக்கச் சொன்னார். அவர் அன்று என்னை அவமானப்படுத்தியிருந்தாலோ, வைது அடித்திருந்தாலோ ஒருவேளை நான் அன்றே எழுதுவதை நிறுத்தியிருந்திருப்பேன். இத்தனைக்கும் அவர் தமிழாசிரியர் அல்ல. பூகோள ஆசிரியர்.

நம் குழந்தைகள் துரதிருஷ்டவசமாக தின்று விளையாடி இன்புற்றிருக்கும் வாழ்க்கையை இழந்து விட்டார்கள். நான் முன்பு ஒருமுறை இந்தியா டுடேயில் எழுதிய மாதிரி, இந்த தேசத்தில் குழந்தையாக இருப்பதுதான் எவ்வளவு துன்பமானது!

5. உங்கள் வீட்டுச் (குடும்ப) சூழல் இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்ததா?

ஆமாம். அவர்கள் எழுதச் சொல்லித் தூண்டவில்லை. படிக்கச் சொல்லித் தூண்டவில்லை. ஆனால் எழுதுவதும் படிப்பதும் தவறானது என்று நினைத்ததும் இல்லை.

6. உங்கள் ஆரம்ப வாசிப்பு எத்தகையதாக இருந்தது? தீவிர இலக்கியம் பக்கம் எப்போது வந்தீர்கள்?

வீட்டிற்கு வந்து விழும் வாரப்பத்திரிகைகளை வாசிப்பதில்தான் ஆரம்பித்தது.பள்ளி இறுதி நாட்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தீவிர ஈடுபாடு கொண்டேன். அது பற்றிய செய்திகளைப் படிப்பதற்காக (தினமணி, ஹிந்துவில் அவை மிதமாக இருக்கும்) நூலகங்களுக்குப் போகத் துவங்கினேன்.அங்கு எனக்கு ' எழுத்து' அறிமுகமாயிற்று. அதன் வழையே புதுக் கவிதை இயக்கம் அறிமுகமாயிற்று. சில மாதங்களில் எழுத்தில் என் கவிதை பிரசுரமானதும் சிறு பத்திரிகைகள் மீது ஆர்வம் அதிகமாகி விட்டது.

7. எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது? முதலில் எழுதிய படைப்பு எது?

13 வயதிலிருந்து எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அச்சில் முதலில் வெளிவந்தது கவிதை. 1967ல் சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழில் பிரசுரமாயிற்று. 1972ல். முதல் சிறுகதை கண்ணதாசனில் வெளிவந்தது.

8. நிறையப்பேர் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் அதை அச்சுக்குக் கொண்டு வரும் எண்ணம் இருக்காது, அல்லது தெரியாது. பிரசுர வாய்ப்புகள் குறித்து நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? முதல் படைப்பு எங்கே பிரசுரமாயிற்று?

எழுத்தில் என் கவிதை பிரசுரமாகக் காரணம் முத்துப்பாண்டி என்ற என் வகுப்புத் தோழர். என்னுடன் நூலகத்திற்குப் படிக்க வருபவர். நான் என் பிசிக்ஸ் நோட்டில் எழுதியிருந்த கவிதையை நகல் எடுத்து அவர்தான் அனுப்பி வைத்தார். பிரசுரமாகாது ஆனால் அவர் ஆசையைக் கெடுப்பானேன் என்று நினைத்தேன். பிரசுரமாகிவிட்டது!

9. எழுத்து அல்லது ஊடகம் சார்ந்த தொழில் என்பதான எண்ணம் எப்போது உருவானது?

70 களில் நான் வாசகன் என்று ஒரு சிறு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். 300 பேருக்கு அஞ்சல் வழியில் மட்டும் அனுப்பப்படும் 32 பக்க இலக்கியப் பத்திரிகை. எமெர்ஜென்சியின் போது தஞ்சாவூரில் இருந்தேன். சென்னையிலிருந்து புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகள் தஞ்சை வந்து அந்த முகவரிப் புத்தகத்தை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போனார்கள். எனக்கு ஆச்சரியமும் கோபமும் ஏற்பட்டது. சர்வ வல்லமை உள்ள இந்திய அரசை, ஒரு 300 பேருக்குப் போகிற இலக்கியப் பத்திரிகையால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் வெகுஜனங்கள் அறியாத இலக்கியவாதிகள் எழுதும், பத்திரிகையால்? என்று அந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டேன். ஆறடி ஆளைக் கொல்றதுக்கு அங்குல புல்லட் போதும் தம்பி என்று ஒரு அதிகாரி சொன்னார். உடனடி எதிர்வினையாக நான் எமெர்ஜென்சி பற்றிக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நேரடியாக எழுதினால் அவற்றை அப்போது பிரசுரிக்க முடியாது. பூடகமாக எழுதினேன். அவை கணையாழியில் பிரசுரமாயின. ( ஆலிவர் பெர்ரி என்ற அமெரிக்கப் பேராசிரியர், பின்னால் எமெர்ஜ்ர்ன்சியின் போது எழுதப்பட்ட கவிதைகளைத் திரட்டி Voices of Emergengy என்ற தொகுப்பாக வெளியிட்டார். அதில் இதுவும் இடம் பெற்றது) கதைகளும் எழுதினேன். அவை பாலம் இதழில் வெளிவந்தது.
தொழில்முறைப் பத்திரிகைக்காரனாக வேண்டும் என்ற உந்தல் எமெர்ஜென்சி தந்தது.

10. உங்கள் ஆரம்பகாலப் படைப்புகளில் யாருடைய பாதிப்பு இருந்தது?

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்

11. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழில்..., பிற இந்திய மொழிகளில்..., ஆங்கிலத்தில்..., பிற உலக மொழிகளில்...

தமிழில் பாரதியார். தி.ஜா, (பழைய) ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி (கதைகளுக்காக) ஆங்கிலத்தில், சாமர் செட் மாம், ஜே.டி.சாலிங்கர், ஜான் அப்டைக், மார்கஸ். எனக்கு வேறு மொழிகள் தெரியாது.

12. நீங்கள் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற அளவுக்கு உங்களை இத்துறையில் ஊக்குவித்தவர்கள் எவர்?

ஆசிரியர் சாவி. எடுத்த எடுப்பிலேயே என்னை ஆசிரியாக ஆக்கியவர். பத்திரிகைத் துறையின் வேறு நிலைகளில் (நிருபர், துணை ஆசிரியர்) நான் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார்.

13. உங்கள் பத்திரிகைத்துறை அனுபவங்கள் குறித்து...

வருமானத்திற்குரிய வாழ்வு உபாயமாக மட்டும் பத்திரிகைத் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல் செயல்படுவதாலோ என்னவோ நிறைவாக இருக்கிறது. விளிம்புகளை நகர்த்துவது ( expanding the boundries) என்பதை என் பத்திரிகை உலகப் பணியின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அந்த திசையில் என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன்.சிறு பத்திரிகை- வெகுஜனப் பத்திரிகை இடையேயான இடைவெளியைக் குறைத்து ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக வழி சமைத்தது, இளைய தலைமுறையை எழுத்தின் மீதும் பத்திரிகைகளின் மீதும் நம்பிக்கையும் ஆர்வமும் கொள்ளச் செய்தது, கதை கட்டுரை பேட்டி என்று இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு, அவற்றுக்கு அப்பால் செய்திப் பத்திரிகை என்று ஓர் தளம் இருக்கிறது என அறிமுகப்படுத்தி வைத்தது, கணினித் தொழில் நுட்பத்தை வரவேற்று இடமளித்தது, சினிமா சார்ந்த பொழுது போக்கு ஊடகமாக இருந்த தொலைக்காட்சியை தகவல் ஊடகமாக மாற்ற உழைத்தது என்று என்னால் இயன்ற அளவு உருப்படியாக சில செயல்களை செய்திருக்கிறேன். இவற்றை எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல், கோஷ்டி சேர்க்காமல் செய்திருக்கிறேன். வரலாறு என்னை ஒரு காற்புள்ளியாகக் கூடப் பதிவு செய்து கொள்ளாமல் போகலாம். சிறுபத்திரிகை உலகப் பீடாதிபதிகள் எனக்கு தீப்பெட்டி கூடக் கொடுக்கக் கூடாது என்று ஜாதி பிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனாலும் கண்ணெதிரே விளைச்சலைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. வயிற்றில் பசியோடு வயலில் சாய்ந்து கிடக்கும் கதிர் பார்த்துச் சிரிக்கும் விவசாயியின் நிறைவு.

(தொடரும்)

8 comments:

கறுப்பி said...

அனுராக் நாளுக்கு ஒருவராகப் பேட்டி கண்டு வாரத்தை இழுத்து விடுவீர்கள் போல இருக்கிறதே…

Mookku Sundar said...

ஜமாய்ங்க அனுராக்.

உங்களது பேட்டி முயற்சிகள் நிஜமாகவே வித்தியாசமானதாகவும், நிறைவானதாகவும் இருக்கிறது.

மாலன் என்கிற ஒரு ஆளுமையின் ஒரு சிறு கீற்று தெரிந்தால் கூட மகிழ்ச்சிதான். வந்தவரைக்கும் லாபம்...:-)

Thangamani said...

நல்ல பேட்டி.
இன்றைக்கு நான் இங்கு எழுதுவதற்குக் காரணம் மாலன் திசைகளில் பதிவுகள் பற்றி எழுதிய கட்டுரைதான். கருத்துச் சுதந்திரத்தை முன்வைத்து வேறு ஊடகங்களில் எழுதுவதை தவிர்த்து வந்த என்போன்ற பலரையும் வலைபதிவு செய்ய அது தூண்டியிருக்கும். இப்படி எழுதுவது யாருக்காவது நன்மையா தீமையா என்பது ஒருபக்கம், இணையத்தில் தமிழைப் படிக்கவும், எழுதவும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு முடிகிறதென்றால், அது ஒரு நன்மையென்றால் அதைப் பரவலாகச் செய்ய மாலன் ஒரு முக்கியமான காரணம். அது குறித்து அவருக்கு எப்போதும் நான் நன்றி பாராட்டுவேன்.

இந்த வாரம் இப்படி பேட்டிகள் வாரமாக இருப்பது கூட மிக நன்றாக இருக்கிறது..

நன்றிகள்.

Aruna Srinivasan said...

:....இத்தனைக்கும் அவர் தமிழாசிரியர் அல்ல. பூகோள ஆசிரியர்..."

ஹ்ம்ம்.... இப்படிபட்ட ஆசிரியர்கள் இன்னும் இருக்கிறார்களோ? ஆசிரியர்கள் மாணவர்களிடையே இப்போதெல்லாம் முன்பு போல் ஒரு நட்புணர்வு / மரியாதை இதெல்லாம் இருப்பதில்லை என்று பலர் கூறக் கேட்கிறேன்.

"....நம் குழந்தைகள் துரதிருஷ்டவசமாக தின்று விளையாடி இன்புற்றிருக்கும் வாழ்க்கையை இழந்து விட்டார்கள்...."

அப்படி ஒரேயடியாக தளர்ந்துவிடாதீர்கள் மாலன். இப்போதும் ஓடியாடி செய்கிறார்கள் - அந்தக் காலம் போல் சாலைகளிலும் கார்பொரேஷன் கிரௌண்டிலும் அல்ல. அதற்கென்று இருக்கும் விளையாட்டு இடங்களில் பணம் கொடுத்து நேரம் ஒதுக்கி - கராத்தே, டென்னிஸ், கிரிக்கெட், பாலே, பரத நாட்டியம், பாட்டு என்று விதம் விதமாக வகுப்புகள் செல்கிறார்கள். அந்த "....தின்று" என்று ஒரு வார்த்தைப் போட்டீர்களே... அதிலேயும் குழந்தைகள் அனாவசியமாக உடலைக் கெடுக்கும் வகைகளை ஒதுக்கிறார்கள். "வரு முன் காப்போம்" தலைமுறை இது :-) எப்பாவது பீட்ஸாவும், கோலாவும் பரவாயில்லையாம் !! :-)

"....வயிற்றில் பசியோடு வயலில் சாய்ந்து கிடக்கும் கதிர் பார்த்துச் சிரிக்கும் விவசாயியின் நிறைவு..."

இது எனக்குப் பரிச்சயமான மாலன் :-)

அனுராக், மாலனைப் பற்றி தெரிந்திராத பல விஷயங்களை உங்கள் பேட்டி தெரியப்படுத்தியுள்ளது. நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

நன்றி அனுராக்!
நானும் மாலனின் திசைகள் மூலமே தமிழ்மணத்தையும் வலைப்பக்கத்தையும் அறிந்தேன். உங்கள் சேவைகள் தொடரட்டும். அடுத்தது யாரென்று அறியும் அவல்.

Narain Rajagopalan said...

நான் இன்று வலைப்பதிய முக்கியமான நபர்களில் மாலனும் ஒருவர். தமிழ் பத்திரிக்கை தளங்களில் சில அசாத்திய உயரங்களை தொட்டவர். வலைப்பதிவுகளை, பெரும் எழுத்தாளர்கள் துச்சமாக மதித்த போது, மாலன் மட்டுமே, அதன் சிகரங்களையும், உயரங்களையும் புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரித்துக் கொண்டு வருபவர்.

//வரலாறு என்னை ஒரு காற்புள்ளியாகக் கூடப் பதிவு செய்து கொள்ளாமல் போகலாம். சிறுபத்திரிகை உலகப் பீடாதிபதிகள் எனக்கு தீப்பெட்டி கூடக் கொடுக்கக் கூடாது என்று ஜாதி பிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனாலும் கண்ணெதிரே விளைச்சலைப் பார்க்க நிறைவாக இருக்கிறது.//

இதுதான் இன்னமும் மாலனை மதிப்புள்ளவராக முன்னிருத்துகிறது. நேற்றைக்கு சிறுபத்திரிக்கையில் எழுதும் எழுத்தாளன் கூட பல்வேறு எழுத்தாளருடன் கருத்து, சொந்த எதிர்ப்புகளை முன்வைக்கும் போது மாலன் எல்லா எழுத்தாளர்களையும் அரவணைத்துக் கொண்டு சென்று வருகிறார்.

சிலபல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், மாலனின் இயல்பு, அவரை எல்லோர்க்கும் உரியவராக்குகிறது.

நன்றி அனுராக், இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கும் ஆவலுடன்.

Jayaprakash Sampath said...

அனுராக் : செவ்வி, மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

மாலனின் unique ஆன குணமாக நான் கருதுவது, எவ்வித தயக்கமுமில்லாமல், இணையத்தின் பொது அரங்குகளில் வந்து கலந்துரையாடுவதைத்தான். நான் யதேச்சையாக கண்டு பேச முடிந்த பல எழுத்தாளர்கள் இவ்விதமாக இல்லை என்ற கசப்பான உண்மையைக் கண்டுபிடித்த போது, மாலனின் சிறப்பியல்பாக இதை குறிப்பிடத் தோன்றுகிறது. இணையத்தின் ஆரோக்கியமான ஊடாடாட்டத்தில் அவர் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

சன்னாசி said...

திசைகள் படித்து வலைப்பதிய ஆரம்பித்த, தமிழ்மணத்தைத் தெரிந்துகொண்ட கோஷ்டிகளில் நானும் ஒருவன். அதற்கு மாலனுக்கும் திசைகளுக்கும் என் நன்றிகள். வித்தியாசமான முறையில் பேட்டிகள் மூலம் இந்த வாரத்தை எடுத்துச்செல்லும் அனுராக்கின் முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்!