2005-04-14

விடைபெறுதலும் வினாக்களும்

(கீழே இருப்பதை எழுதி ஐந்து நாட்களாச்சு. என் பதிவிலேயே நுழைய முடியாமல் பிளாக்கர் மீண்டும் சொதப்பியதை மீறி, ஆறிப் போனாலும் இன்னும் தீர்வு தேவையாக இருப்பதானால் இன்று இடுகிறேன்.)

ஒருவாரம் எப்படியோ ஒப்பேத்தி விட்டு இந்த வாரம் முழுவதும் படிப்பதிலேயே கழிந்தது. சில பதிவுகளுக்கு பின்னூட்டம் இட முயன்ன்ன்று தோற்றபின் வெறுமனே வாசிக்கத்தான் முடிந்தது. இன்றும் தமிழ்மணத்தைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது மாலனின் விடைபெறுகிறேன் பதிவு.

சம்பந்தப்பட்ட எல்லாப் பதிவுகளையும் வாசித்து முடித்தபின் முயன்றால் மீண்டும் பின்னூட்டப் பிரச்சினை. ஒருவழியாக சன்னல் பதிவில் பின்னூட்டமிட்டேன் பெயர் பதிவாகவில்லை. எப்படியோ கருத்து பதிவானால் சரி என்று விட்டுவிட்டேன்.

கணினியை நிறுத்திவிட்டுப் போனாலும் மனசில் இந்த கருத்தைத் தொடர்ந்தே நினைவுகளின் ஊடாட்டம். எழுதியாக வேண்டும் என்ற உறுததல்.

மாலனின் பேட்டியை வெளியிட்டபின் தொடர்ந்தும் மாலனைப்பற்றியே எழுத நேர்ந்திருக்கிறது. மாலனின் அரசியல் சார்ந்த கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கிறேன். விவாதித்துமிருக்கிறேன். ஆனால் மாலன் என்ற படைப்பாளியைப்பற்றி எதிர்மறையாக இதுவரை தோன்றியதில்லை. பிகேசிவகுமாருக்கும் கூட இதற்குமுன் தோன்றியிராது. ஆனால் ஜெயகாந்தனைப் பற்றிய மாலனின் விமர்சனமும் திண்ணை இதழ் பற்றிய மாலனின் கருத்துமே சிவகுமாருக்கு மாலனின் படைப்புத் தகுதி பற்றிய கேள்வியெழுப்பும் உள்ளார்ந்த ஆவலைக் கிளறியிருக்கிறது. அதற்குத்தோதாக காலச்சுவடு விமர்சனமும் அவர் கையில் மாட்டியிருக்கிறது.

காலச்சுவடு விமர்சனம் குறித்து இந்தத் தளத்தில் நான் விமர்சிக்க விரும்பவில்லை

அதே சமயம் மாலன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கில் பாராட்டு மட்டுமேன்? என்பதும் பிகேசி முன்வைக்கும் கேள்வி. இதை அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடமே அவர் கேட்டுத்தெளிவு பெறுவதே முறையானது.
ஜெயகாந்தனை வாழ்த்துபவர்கள் கூட அவரது குறைகளை சொல்லியே வாழ்த்துகிறார்கள் என்று அவர் கூறும்போதே மேற்கூறிய பாராட்டு மட்டுமேன் என்ற கேள்விக்கான பதிலும் நமக்குக் கிடைத்து விடுகிறது.

அடுத்து மாலன் தன்னைப் பற்றி உருவாக்கும் பிம்பங்கள் பற்றியது. எனது கேள்விகளுக்குப் பதிலளித்த மாலன் அவரது பிம்பங்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதை கவனமாகத் தவிர்த்திருந்தார். அதிலிருந்தே சிவகுமாரின் இந்தக் கருத்தின் நேர்மையை? என்னால் உணரமுடிகிறது.

ஜெயகாந்தனை மாலன் விமர்சித்தது குறித்த சிவகுமாரின் உறுத்தல்களுக்கிடையே எனது கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மாலன் கூறியதைப் பாருங்கள்.

//10. உங்கள் ஆரம்பகாலப் படைப்புகளில் யாருடைய பாதிப்பு இருந்தது?

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்

11. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழில்..., பிற இந்திய மொழிகளில்..., ஆங்கிலத்தில்..., பிற உலக மொழிகளில்...

தமிழில் பாரதியார். தி.ஜா, (பழைய) ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி (கதைகளுக்காக) ஆங்கிலத்தில், சாமர் செட் மாம், ஜே.டி.சாலிங்கர், ஜான் அப்டைக், மார்கஸ். எனக்கு வேறு மொழிகள் தெரியாது.//

அவர் எழுத்தில் ஜெயகாந்தனின் பாதிப்பு இருந்ததாகக் கூறுகிறார். அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களில் வாழும் எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே என்பதையும் கவனியுங்கள். அந்தப் 'பழைய' என்ற அடைமொழி புதிய ஜெயகாந்தன் மீதான விமர்சனமாக இருக்கலாம். அதையே நீராவி எஞ்சின் என்ற கட்டுரையிலும் குறிப்பிடுகிறார். மாலனுக்கு ஜெயகாந்தனை பாலபாடமாக அறிமுகப் படுத்துமுன் மேற்கண்ட வரிகளை சிவகுமார் கொஞ்சம் ஊன்றிப் படித்திருக்கலாம்.

இது குறித்தெல்லாம் எழுதி நேரத்தை வீணாக்குவதை விரும்பாவிட்டாலும் தவிர்க்க முடியவில்லை.

இனி மாலனின் பதிவு குறித்து....

வலைப் பதிவுகள் நீர்த்துப் போயக்கொண்டிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம். மாலனைப் போன்ற அனுபவமிக்க வலைப்பதிவர்கள் அதை மாற்ற என்ன செய்யலாம்? என்று சிந்திக்க வேண்டுமேயல்லாது ஓடி ஒளிவது தீர்வாகாது.

வலைப்பதிவுகள் ஒரு சிலேட் மாதிரி. நமக்கான சிலேட்டில் நாம் எழுதலாம். எழுதாமல் இருக்கலாம். வெளிநடப்புச் செய்வதற்கு இது சட்டமன்றமல்ல. ராஜினாமா செய்வதற்கு இது உத்தியோகமுமல்ல. மாலன் தினந்தோறும் வலைப்பதிகிற வழக்கமில்லை. எப்போதாவதுதான் பதிகிறார் என்பதால் காசி சொன்ன மாதிரி இதை விடுப்பு என்று கொள்வதற்கும் இடமில்லை.

மாலனுக்கு:(சன்னல் பதிவில் எழுதிய பின்னூட்டம்)
உங்களின் இந்த முடிவு விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாகத்தான் காட்டும.குறைபாடுகள் எங்குதான் இல்லை? விமர்சனங்களை விமர்சனங்களால் எதிர்கொள்ள உங்களால் முடியாதா? உங்கள் இத்தனை வருட அனுபவங்களை மீறி ஏன் இந்தப் பதட்டம்?
எழுதும் மனநிலை வாய்க்கும்போது எழுதுங்கள். தொடர்ந்தும்.

உங்கள் வருத்தம் ஒட்டுமொத்த வலைப்பதிவுகள் குறித்த மதிப்பீடு குறித்து எனில் அது காலத்தின் கோலம். தரம் ஏறும், இறங்கும். முடிந்தவரை உங்களைப் போன்றவர்கள் தான் வழிகாட்டவேண்டும். புறக்கணித்துச் செல்வது நியாயமானதில்லை.

தனிப்பட்ட வருத்தங்கள் எனில் உணர்ச்சிப்பெருக்கில் எடுக்கப்பட்ட முடிவாகிறது. அது ஆறும்போது நீங்கள் மீண்டு(ம்) வந்தேயாக வேண்டும். மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பதிவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து இங்கிருந்து வெளியேறுவேன் என்பது அந்தப் பதிவை அதன் sub-text ஐ நீங்கள் ஏற்பதாகிவிடும். உங்களை வாசிக்கக் காத்திருக்கும் பிற வலைப்பதிவர்களையும் வாசகர்களையும் தான் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவரையும் புறக்கணித்து நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருப்பதானால் நான் சொல்வதற்கும் இனி ஒன்றுமில்லை.

2 comments:

வலைஞன் said...

மேற்கண்ட என் பதிவில் மாலன் குறித்த பகுதியை அவருக்கு தனிமடலில் அனுப்பியிருந்தேன். அதற்கான பதிலாக அவர் அனுப்பிய குறிப்பு:

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

வலைப்பதிவுகளிலிருந்து விலகி நிற்பது என்ற என் முடிவைக் குறித்துத் தங்களது எண்ணங்களைப் பின்னூட்டமாக தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

சிவக்குமாரின் பதிவை கண்டு நான் உணர்ச்சிவசப்பட்டு அல்லது பதற்றமடைந்து இந்த முடிவுக்கு வந்து விட்டதாகப் பலரும் கருதி எழுதியிருந்தீர்கள். ஆனால் இது உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல. சிவக்குமார் தன் பதிவை வெளியிட்டது ஏப்ரல் 8ம் தேதி. அன்றே அதற்கான பதிலையும் நான் அவருடைய பதிவிலேயே வெளியிட்டுவிட்டேன். நான் இந்த முடிவை எடுத்தது 11ம் தேதி. இரண்டிற்கும் இடையில் இருந்த நாட்களில் சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு என் கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறேன். எனவே இது ஏதோ அவர் கருத்துக்களைக் கண்டு பதற்றமடைந்து உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவல்ல.

சிலர் நான் ஏதோ சிவக்குமாருடைய விமர்சனத்தைக் கண்டு அஞ்சி விலகிச் செல்வதாகக் கருதியிருந்தீர்கள். நான் விமர்சனங்கள் கண்டு மிரள்பவன் அல்ல. வலைப்பதிவுகளிலேயே என்னை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுகள் உண்டு. சிவக்குமார் என் படைப்புக்களை தாரளமாக விமர்சிக்கட்டும், அதற்கு நானே என் நூல்களை என் செலவில் அவருக்கு அனுப்பி வைக்கிறேன் என அவர் பதிவில் நான் பதிந்துள்ள பின்னுட்டத்திலலேயே குறிப்பிட்டிருக்கிறேனே? அது மட்டுமல்ல, அவருடைய பதிவு திசைகளில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதைப் போலவே அதை வெளியிட்டும் இருகிறேன். அதாவது அவர் தனது கருத்துக்களை வலைப்பதிவுக்குள்ளாகவே நிறுத்திக் கொண்டிருந்தாலும் நான் வலைப்பதிவுகளுக்கு அப்பாலும் அதை எடுத்துச் சென்றிருக்கிறேன். இவையெலாமே நான் விம்ர்சனத்தைக் கண்டு அஞ்சி ஓடவில்லை என்பதை உணர்த்தும்.
பிரசினை என்னவென்றால் சிவக்குமார் கருத்துக்களின் அடிப்படையில் அல்ல, காழ்ப்பின் அடிப்படையில் தன் விமர்சனத்தை வைக்கிறார். என்ன சான்று? சான்றுகள் இதோ:

1.கருத்தரங்கில் என் படைப்புக்கள் குறித்து விமர்சனமாகப் பேசப்படவில்லை என்பதை அறியாமலேயே அவர் அதை ஒரு குறையாகச் சுட்டிக் காட்டுகிறார். அப்படிப் பேசப்பட்டதா என்று அறிந்து கொள்ள கூட அவர் முயற்சிக்கவில்லை. அப்படிப் பேசப்பட்டதா என்று கேள்வி கூட எழுப்பவில்லை. பேசப்பட்டிருக்கும், அதை நான் மறைத்துவிட்டேன் என்று அவரே உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு எழுதிக் கொண்டு போகிறார். இது என் integirityயை, அவராக மேற்கொண்ட அனுமானத்தின் பேரில், பகிரங்கத்தில் சிறுமைப்படுத்தும் செயல். என் நேர்மையை அவர் ஏன் சிறுமைப்படுத்த விரும்புகிறார்? காரணம்: காழ்ப்பு;

2.விமர்சனத்தை நான் விரும்பினேன் என்று சொன்ன பின்னும், அதைத் திசைகளில் வெளியாகியுள்ள என் ஏற்புரையில் காணவில்லையே, எனவே இது ஓரு பின் சிந்தனை (after thought) என்கிறார். நான் என் ஏற்புரையில் அப்படிச் சொன்னேனா, சொல்லவில்லையா என அவருக்கு ஏதாவது தெரியுமா? கருத்தரங்கம் ஒரு நாள் முழுக்க நடந்த கருத்தரங்கம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை (ஒரு மணி நேர உணவு இடைவேளை நீங்கலாக) மொத்தம் 5 மணி நேரம் நடந்த கருத்தரங்கம். அந்த ஐந்து மணி ஒவ்வொருவர் பேசியதையும் வார்த்தைக்கு வார்த்தை (verbatim) வெளியிடுவதனால், கட்டுரை எவ்வளவு நீளம் அமைந்திருக்கும், எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது, ஊகிப்பது ஒன்றும் கடினமான கம்ப சூத்திரம் அல்ல. எழுதுகிற எல்லோருக்கும் சாத்தியமாகிற common sense. ஒரு வேளை அப்படி ஊகிக்கும் திறம் இல்லாதவர்களுக்காகவே, திசைகள் கட்டுரையில், தெளிவாக, " கருத்தரங்கிலிருந்து சில துளிகள்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்போதும் கூட நான் அப்படிப் பேசியிருக்கமாட்டேன் என்ற அனுமானத்தில் அவர் என்னைக் குறை சொல்கிறார். பேசினேனா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவோ, தெளிவுபடுத்திக் கொள்ளவோ இல்லாமல், என் நேர்மை மீது கறை பூசுகிறார். காரணம் காழ்ப்பு.

3. சிவகுமாருக்கு உண்மையில் என் எழுத்துப் பாராட்டப்படுவது குறித்து எந்தவிதமான அபிப்பிராயமும் கிடையாது. இந்தக் கருத்தரங்கிற்கு வெகு காலம் முன்பே, என் கதைகள் குறித்துப் பாராட்டான சொற்களை ஆனந்தவிகடன் ('ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படியிருக்கும்?' என்று கேட்பவருக்கு 'இதோ இப்படி இருக்கும்!' என்று காட்டக்கூடிய தொகுப்பு!), ஹிந்து (Malan sets down an authentic recordation of the social history of our times.) கல்கி ஆகிய இதழ்கள் விமர்சனங்கள் வெளியிட்டன. அப்போதெல்லாம் அவர் தகுதியில்லாத படைப்புக்களை எப்படி நீங்கள் பாராட்டலாம் என்று வெகுண்டு எழுந்து எழுதியதில்லை. அந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் எழுதியதில்லை. காலச்சுவடு உள்ளிட்ட வேறு பத்திரிகைகளிலும் எழுதியதில்லை. ஏன் அவரது வலைப்பதிவிலே கூட எழுதியதில்லை. இப்போது நான் ஜெயகாந்தனை விமர்சித்துவிட்டதால் ரசிகர் மன்ற மனோபாவத்துடன் என்னை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று தேடி காலச்சுவடைக் கையில் எடுத்துக் கொள்கிறார்.

சிவகுமாருக்கு என்னைப் பற்றித் தெரியாது. என் கதைகளை அவர் படித்தது கிடையாது. ஆனால் என்னை அனுமானத்தின் பேரில், சொந்தக் காழ்ப்பின் காரணமாக, எள்ளல் மொழியில் விமர்சித்துக் கொண்டு போவார். இது என்ன மனோபாவம்?

நான் வருத்தமடைவது இந்தக் மனோபாவம் குறித்துத்தான். நான் விலகிச் செல்ல நினைப்பதும் இந்தக் கலாசாரத்தின் காரணமாகத்தான்.

சிவக்குமாருடைய நடத்தை கடைசித் துரும்பு - last straw. ஆனால் அவரது நடத்தை வெளிப்படுத்தும் மனோபாவம் தமிழ்மணத்தில் இடம் பெறும் வலைப்பதிவுகளில் பரவலாக விரவிக் கிடக்கிறது. அண்மைக்காலமாக அது அதிகரித்தும் வருகிறது. Authentic ஆக இருக்கவேண்டும் என்பதற்காக நான் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன். ஆனால் இது போன்ற அனுபவங்கள் பிறருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பதிவுகளைப் படித்து வரும் பலரும் அறிவர். ஒருவரைப் பற்றி முழுதும் அறியாமல், மன்ச்சாய்வு அல்லது காழ்ப்பின் காரணமாக, கருத்துக்களின் அடிப்படையில் அல்லாமல் தனிப்பட்ட முறையில், எள்ளல் மொழியில் எழுதுகிற மனோபாவம் தமிழ் வலைப்பதிவுகளில் காணப்படுகிறது. இன்று இவை எண்ணிக்கையில் அதிகமில்லாது இருக்கலாம். ஆனால் அவ்ற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கனமாக எழுதப்ப்டும் ஒரு பதிவை விட, இது போன்ற் பதிவுகள் அதிகம் படிக்கப்படுவதாலும், பின்னூட்டங்கள் பெறுவதாலும், அவை பெற்ற பின்னூட்டங்கள் அடிப்படையில் பகிரங்கமாகப் பரிந்துரைக்கப்படுவதாலும் அவை பெருகுகின்றன.

இந்த மனோபாவம் ஓரு கலாசாரமாக உருவாக அதிக நாட்கள் ஆகாது. இதை நாம் அரசியலில் பார்த்திருக்கிறோம். இலக்கிய உலகில் பார்த்திருக்கிறோம்.

இதில் கவலை தரக்கூடிய அமசம் என்னவென்றால் இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த முடியாத அசக்கதர்களாக நாம் இருக்கிறோம். இந்தப் போக்கை மறுதலிக்கக் கூடிய ஒரு பெரும்பான்மையை உருவாக்க முனைபவர்களாகக் கூட நாம் இல்லை. இந்தப் போக்கை சகித்துக் கொண்டு போக வேண்டும் என் மீண்டும் மீண்டும் அறிவுறுததப்படுகிறோம்.

தமிழ்மணத்தை நிறுவியவர்கள், நிர்வகிப்பவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் இது. குடித்து விட்டு வந்து திருமணத்தில் கலாட்டா செய்வதைப் போன்ற விஷ்யம் இது. அலட்சியப்படுத்தினால், அல்லது மூடி மறைக்க நினைத்தால் அது மோசமான விளைவுகளையே தரும்.

It is time to overwhelm cultural menace.

யோசியுங்கள்.

அன்புடன்
மாலன்

dondu(#11168674346665545885) said...

"கருத்தரங்கில் என் படைப்புக்கள் குறித்து விமர்சனமாகப் பேசப்படவில்லை என்பதை அறியாமலேயே அவர் அதை ஒரு குறையாகச் சுட்டிக் காட்டுகிறார். அப்படிப் பேசப்பட்டதா என்று அறிந்து கொள்ள கூட அவர் முயற்சிக்கவில்லை. அப்படிப் பேசப்பட்டதா என்று கேள்வி கூட எழுப்பவில்லை. பேசப்பட்டிருக்கும், அதை நான் மறைத்துவிட்டேன் என்று அவரே உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு எழுதிக் கொண்டு போகிறார். இது என் இன்டெகிரிட்ய்யை, அவராக மேற்கொண்ட அனுமானத்தின் பேரில், பகிரங்கத்தில் சிறுமைப்படுத்தும் செயல். என் நேர்மையை அவர் ஏன் சிறுமைப்படுத்த விரும்புகிறார்? காரணம்: காழ்ப்பு;"
நிஜமாகவே ஒரு விமரிசனம் கூட இல்லையா? என்ன ஆச்சரியம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்