2005-11-20

சிவகாசி பட்டாசு..._\|/_

விஜய் நடித்த சிவகாசி திரைப்படம் வக்கீல்களை இழிவு படுத்துவதாகக் கூறி வக்கீல்கள் கடுமையான எதிர்ப்புக்குரல் எழுப்பினர். படத்தைத் தடை செய்யக்கோரியும் காட்சிகளை நீக்கக் கோரியும் வழக்குகளும் போடப்பட்டன. சமீபத்தில் சினிமாக் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் சினிமாக்காரர்களின் பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எதிர்க்கும் போக்கு வலுத்து வருகிறது.

இதே தமிழ் சினிமாவில் தமிழக கவர்னரை வில்லனாகச் சித்தரித்து படம் வந்திருக்கிறது. முதல் அமைச்சரை கொடூரமான வில்லனாக்கியும் இங்கு பல படங்கள் வந்துள்ளன. கலெக்டர்களை கொடுமைக் காரர்களாகவும் லஞ்ச ஊழல்வாதிகளாகவும் காட்டி பல படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.மாநிலத்திற்கு ஒரே கவர்னர், ஒரே முதல்வர்தான். முப்பதுக்குள் தான் கலெக்டர்கள். இவர்களில் யாரும் அவை தங்களை சித்தரிப்பதாகவோ இழிவு படுத்தி விட்டதாகவோ கருதி படத்தை தடை செய்ய முயல வில்லை. அவர்களெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க, ஆயிரக்கணக்கில் இருக்கும் வக்கீல்கள் தங்கள் தொழில் பெயரை பயன்படுத்தி கிண்டலடித்ததற்காக போராட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கு முன் வக்கீல்களை மோசமானவர்களாகச் சித்தரித்தும் பல படங்கள் வந்துள்ளன. அதே சமயம் ஒரு வக்கீல் வில்லனாக இருந்தால் அதே படத்தில் மற்றொரு நல்ல வக்கீலும் இருப்பார். அல்லது ஹீரோவே (நல்ல) வக்கீலாக இருப்பார். சிவகாசியில் நகைச்சுவைக் காட்சியாகவே நண்பர்கள் கிண்டலடிப்பதாக வருவதற்கே இவ்வளவு எதிர்ப்பும்.

உண்மையில் பல இளம் வ்க்கீல்கள் தங்கள் நண்பர்களால் இதைவிட கேவலமாக கிண்டலடிக்கப்படுவதை நானே நேரில் கண்டிருக்கிறேன். வழக்குகள் குறைவாக உள்ள, அல்லது ஆரம்ப நிலையில் உள்ள வக்கீல்கள் தினமும் கோர்ட்டுக்கு சும்மா வந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஜாமீன் அல்லது வாய்தாவுக்கு மட்டுமே அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். டீக்காசு மட்டுமே கிடைக்கக் கூடும் என்பதால் இவர்களை நண்பர்கள் 'ஆமைவடை' என்று கிண்டலடிப்பார்கள். (தினசரி ஆமைவடையும் டீயும் சாப்பிட மட்டுமே கோர்ட்டுக்குப் போகிறவர்கள் என்று அர்த்தம்.) இதுபோல இன்னும் கேவலமான பல பிரயோகங்கள் வழக்கத்தில் உள்ளன. அதில் 10% கிண்டல் கூட படத்தில் இல்லாத போதும் இத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன? (யதார்த்தம் வேண்டும் என்பவர்கள் கவனிக்க)

தமிழன் படத்தில் வக்கீலாக நடித்து பெருமைப் படுத்திய விஜய் இதில் நகைச்சுவையாகக் காட்டியதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமே என்று என் வக்கீல் நண்பரிடம் கேட்டேன்.

"பிரச்சினையே அதுதான். தமிழன் படத்தில் அவன் நல்ல வக்கீலாக நடித்திருக்கலாம். ஆனால் அந்தப்படத்தில் மற்ற வக்கீல்களை எல்லாம் சட்டம் தெரியாத கேனப்பயல்களாகவும் பொதுமக்களுக்குத் தெரிந்த சட்டம் கூட வக்கீல்களுக்குத் தெரியாதது போலவும் கேவலப்படுத்தி இருந்தான். அந்தப்படத்தை நாங்கள் எதிர்த்திருந்தால் பொதுமக்களிடம் அடி வாங்கியிருப்போம். அதான் பேசாமல் இருந்தோம். இப்போ வசமா மாட்டிக்கிட்டான்யா!" என்றார்.

இது எப்படி இருக்கு?

தமிழ்ப்பதிவுகள் | தமிழ் | வலைப்பதிவு | tamilblog | tamil | tamilblogs |

3 comments:

G.Ragavan said...

அனுராக்....நீங்க சொல்றதுலயும் நியாயம் இருக்குற மாதிரிதான் இருக்கு. படத்துல ஒரு மனிதன் வில்லனா வர்ரதால மனிதர்களை இழிவு படுத்தி விட்டான்னு சொல்லுவாங்களோ என்னவோ....சமீப காலமாக நமக்கு சகிப்புத் தன்மை குறைந்து கொண்டு வருகிறதோ என்று தோன்றுகிறது.

வலைஞன் said...

நிலைமை அப்படித்தான் இருக்கு

Anonymous said...

அடுத்த படத்துல தலைவர் வெளுத்து வாங்கப்போறாரு பாருங்க
வில்லனே வக்கில் தான். வக்கீலுங்களை வாங்கு வாங்குனு வாங்கினாத்தான் சரிப்படும்