2005-01-24

மறுமொழிகளும் மனக்காயங்களும்

டிஜே தனது பதிவில் தனது பதிவிற்கான தொடுப்பை ஒரு நண்பர் நீக்கி விட்டது குறித்து எழுதியிருந்தார். அவரது பதிவில் எழுதிய கருத்துக்கள் (முந்தைய பதிவுகள் உட்பட) எதுவும் இந்தியத் தமிழர்கள் யாரும் புறக்கணிப்பதற்கான அல்லது கண்டிப்பதற்கான எந்த விடயமும் காணப்படவில்லை.

//ஆனால் சகமனிதனைக்கூடப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ஒற்றைப்படையாக விவாதத்தின் எல்லைகளை மீறிப் பேசியது கோபத்தையும் விரக்தியையும் ஒன்றாய் என்னுள் ஏற்படுத்தியது.//
//ஆனால் அவர்கள் எவரிடமும் இருந்து இப்படியான வன்மமான சொற்களை, வசையான சொல்லாடல்களைக் கேட்டதில்லை//

அவருக்கு இவ்வளவு வருத்தம் தரும்படியான சம்பவம் யாரால் எப்போது ஏற்படுத்தப்பட்டது? என்பது புரியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அவரது இந்தப் பதிவின் மறுமொழிகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகளை இங்கு பதிய விரும்புகிறேன்.

டிஜே பதிவில் பின்னூட்டமிட்ட ரோசாவசந்த் இந்தியத் _______ என்ற பதத்தைப் பிரயோகித்திருந்தார். "ஒரு குட்டிபூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும், சில நல்லிணக்க முயற்சிகளும்__!" என்ற ரோசாவின் பதிவுகளை நான் பெரும்பாலும் தவறாமல் படிப்பதுண்டு. அதில் அவரது விரிவான வாசிப்பு அனுபவங்களை கண்டு வியந்திருக்கிறேன். சுனாமி மீட்புப்பணி தொடர்பான அவரது பதிவும் சிறப்பானது.

ஆனால் பின்னூட்டப் பெட்டிகளில் மட்டும் ரோசாவசந்த் அடிக்கடி நிதானமிழந்து விடுகிறார். அவரது மறுமொழிகளைப் பலமுறை அவரே பின்பு நீக்கி விடுவதிலிருந்து இதை உணரமுடியும். பத்ரி, காசி, மாலன் போன்ற வலைப்பதிவு முன்னோடிகள் உட்பட நாங்கள் நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்கள் இந்தியத் தமிழர்கள் தான். ரோசாவின் மேற்கண்ட வசை எங்களுக்கும் சேர்த்தா?

இதற்குமுன் ஒருபோதும் இணையத் தமிழர்களில் இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற பாகுபாடு எனக்குத் தோன்றியதேயில்லை. இப்போதும் அந்த உணர்வில் கூறவில்லை. ஆனால் அந்தச் சொல் மிகக் கடுமையானது. வார்த்தைகள் விடுவது மிக எளிது. திருப்பமுடியாது. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் (எழுத்தினாலும்!) சுட்டவடு.

அந்த மறுமொழியில் ரோசாவசந்த் கோபம் கொள்ளுமளவிற்கு சிவகுமாரும் வந்தியத்தேவனும் என்ன எழுதினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. அவர்களின் சமீபத்திய பதிவுகளில் தேடிப் பார்த்தும் ஒன்றும் புரிபடவில்லை. எப்படி இருந்தாலும் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கிறோமோ முதலில் அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இதுபோலவே சங்கராச்சாரியார் விவகாரத்தில் வெங்கடேஷ் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக சில அநாகரிக வசைகள் வந்திருந்தன. வெங்கடேஷின் அந்தப் பதிவு அவரது மிக மோசமான பதிவு என்பதில் சந்தேகமில்லை. சில கருத்துகள் அறிவை மீறி காலங்காலமாக கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுபவை. அவை நமக்கு உடன்பாடாக இல்லாவிட்டால் நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. அதற்காக அந்த நம்பிக்கையாளர்களை வசை பாடுவது நியாயமல்ல. முடிந்தால் தவறை நயமாகச் சுட்டிக்காட்டலாம். ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை.

வெங்கடேஷின் "நேசமுடன்" தன் தொடர்ச்சியை இழந்ததும் இந்தப் பின்னூட்டப் பதிவுகளின் விளைவாக எழுந்த மனச்சோர்வின் வெளிப்பாடாகத் தான் உணர முடிகிறது. அடிப்படையில் கலையும் இலக்கியமும் தன் வெளிப்பாட்டின்போது பார்வையாளர்களின் மன உணர்வுகளால் கலைஞனை எழுச்சியூட்டும் அல்லது வீழ்த்தும்.

கணினி வல்லுநர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் நிறைந்த வலைப்பதிவர் சமூகத்தில் இத்தகைய அநாகரிகம் நியாயமானதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்தியத் தமிழர் - ஈழத்தமிழர் என்ற பேதமோ, பிராமணர் அல்லாதார் - பிராமணர் என்னும் மாறுபாடோ கருத்துக் களத்தில் வெளிக்காட்டப் படுவது நியாயமல்ல.

முகம் தெரியாத மனிதர்கள்தான் என்றபோதிலும் இனம், மதம், நாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட நண்பர்கள் நாம். உலகத்தமிழர்களாக ஒரு புள்ளியில் சந்திக்கும் நாம் சற்று நேரம் இளைப்பாறி அளவளாவிச் செல்வோம். கருத்துக்களை மட்டும் பரிமாறுவோம்; கசப்புகளை அல்ல.

கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளுவோம். நட்பு தொடரட்டுமே!

5 comments:

துளசி கோபால் said...

நன்று சொன்னீர்கள்! நல்லா இருங்க!

வாழ்த்துக்கள்!

Anonymous said...

//கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளுவோம். நட்பு தொடரட்டுமே! //

நல்ல பதிவு. தேவையான ஒன்றும் கூட.

இளங்கோ-டிசே said...
This comment has been removed by a blog administrator.
இளங்கோ-டிசே said...

அனுராக்கிற்கு,
எனது பதிவை முன்வைத்து நீங்கள் இந்தப்பதிவை எழுதியிருப்பதால், சிலவற்றை தெளிவுபடுத்துவதற்காய் இதனைப் பதிகின்றேன்.
விவாதம்(அனேகமாய் சண்டைதான்) என்ற வகையில் நானறிந்தவரையில் அல்லது பங்குபற்றிய வகையில் திண்ணை, பதிவுகள், சில யாகூ குழுமங்களில் பலவிடயங்களை விவாதித்திருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால், இன்று வலைப்பதிவுகள் வைத்திருக்கின்ற ரோசாவசந்த், பெயரிலி, நான்,கார்த்திக் ராமதாஸ், ரவி ஸரினிவாஸ் என்று பலரும் பலவிடங்களில் சகட்டுமேனிக்கு மாறிமாறி சண்டை பிடித்திருக்கின்றோம் (பழைய திண்ணை, மற்றும் பதிவுகள் விவாதக்களத்தில் அவை இன்னும் இருக்கின்றன). ஆனால் கடந்தவருடத்தில் சிலரது வலைப்பதிவுகளில் நடந்ததில் விழுந்த வார்த்தைகள் போல நான் ஒருபோதுமே கண்டதில்லை. உதாரணத்திற்கு ஒன்று.... இந்திய இராணுவம் தமிழ் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றது என்று ஒருவர் எழுதியபோது, ஒரு தமிழ்நாட்டு நபர், 'அப்படியான வல்லுறவில் பிறந்த பிள்ளைகள்தானே நீங்கள்?" என்று பொருள்பட எழுதியிருந்தார். இப்படி இன்னும் பல விசமத்தங்கள். தயவுசெய்து நான் அந்த விவாதத்திற்குள் இப்போது நுழைய விரும்பவில்லை. முடிந்த அந்த விவாதத்தை நண்பர் மூலம் அறிந்து வாசித்தபோது, இப்படியும் இருப்பார்களா? என்று முதலில் அதிர்ச்சியாக இருந்தது. முக்கிய காரணம் இப்படி கீழ்த்தரமாய் ஒரு தமிழரும் சொல்லமாட்டார்கள் (முக்கியமாய் தமிழகத்தமிழர்கள்) என்றே நம்பியிருந்தேன். அந்த அதிர்ச்சியைத் தான் ரோசாவசந்த் கோபமாய் எழுதியிருந்தார். தொடர்ந்து அந்த விவாத்தை வாசித்தபோது ஒருவித depressionதான் வந்தது. அதையேதான் ரோசாவசந்தும் தனது பதிவிலும் உள்ளீட்டிருந்தார். நடந்துமுடிந்ததற்கு எனது எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்பதற்காய் நான் இந்தப்பதிவை உள்ளிட்டபோது ரோசாவசந்தும் கோபத்தை தனது பதிவாக்கி எனது பதிவில் இட்டிருந்தார்,
........
நிற்க, நிச்சயம் இங்கு எவரும் ஈழத்தமிழர்-தமிழகத்தமிழர் என்ற பாகுபாட்டையோ வேறொன்றையும் எவரும் திணிக்க விருப்பவில்லை என்றுதான் நான் நம்புகிறேன். எனது தனிப்பட்ட அனுபவத்தில், இணையத்தில் ஈழத்தமிழரைவிட, தமிழ்நாட்டு நண்பர்களைத்தான் நான் அதிகம் பெற்றிருக்கின்றேன். அவர்களது அன்பும் அரவணைப்பும் மிக விசாலமானது. சில சந்தர்ப்பங்களில், தமிழ்நாட்டிற்கு ஒரு தனித்துவம் இருப்பதுமாதிரி, ஈழத்திற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்றவகையில் உரையாடும்போது அதை பிரிவினை-பிரிப்பு என்று நீங்கள் எண்ண்மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
.......
ரோசாவசந்தும் தமிழ்நாட்டையே பிறப்பிடமாகக் கொண்டவர். ஏற்கனவே ஒருவர் கேட்டதற்காய் ரோசாவசந்த் இதை தெளிவுபடுத்தியுமிருந்தார்.
......
ரோசாவசந்த் நீங்கள் கேட்ட கேள்விக்கு அண்மையாக ஒருவரிற்கு பதிலளித்திருந்தார் என்று நம்புகின்றேன். கீழே தருகின்றேன்
---------------------------------
But, as I once mentioned, sometimes the usage of unnecessarily strong and objectionable words can be avoided, like, "Indian wolf". This branding is unwarranted. There are many in India (read, Tamilnadu) who also have balanced opinion on the Srilankan issue which I am sure you will agree
(SAID by Baala)
-----------------------
பாலா, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நான் எல்லா இந்தியர்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஓரிருவரை, அவர்க்ளை போலவே இன்னும் இணையத்தின் பல பகுதிகளில் எழுதியவர்களையே அவ்வாறு குறிப்பிட்டேன்.

வேறு உதாரணங்கள் உண்டேனினும், வலைப்பதிவில் ஒரு உதாரணமாய் இங்கே பார்க்கலாம்.
(i have removed the links here- Dj)
நீங்கள் இது குறித்து என்ன முடிவுக்கு வேண்டுமானால் வரலாம். எனக்கு உடனடியாய் தோன்றிய கருத்தையே தெரிவித்தேன். இது குறித்து இப்போது பேசும் நோக்கம் இல்லை. நிதானமான வார்த்தைகளால் செய்வதும் சாத்தியம் இல்லை.
(SAID by RosaVasanth)
----------------------------
நேரங்கிடைக்கும்போது ரோசாவசந்த் தனது தரப்பை இந்தப்பதிவு குறித்து எழுதக்கூடும் என்று நம்புகிறேன். மற்றும் சென்ற வருடத்து விவாதத்தை பார்க்க ஆவலெனில் ரோசாவசந்தின் பதிவுகளுக்கு செல்லுங்கள். அவர் சில இணைப்புக்களை தந்திருக்கின்றார், நான் அதை மேலே அகற்றியிருக்கின்றேன்.
....
மற்றது அகற்றிய இணைப்பு குறித்து சம்பந்தப்பட்ட நபர் எனக்கு தனிப்பட்ட மெயில் போட்டிருந்தார். அவர் தனது தரப்பை முன்வைத்திருந்தார். நான் நினைத்த காரணத்திற்காய் அந்த இணைப்பை அகற்றவிலலை என்று எழுதியிருந்தார்
அவருக்கு எழுதிய பதிலில் இப்படிதான் எழுதியிருந்தேன்.
"... நீங்கள் முன்பு நடந்த விவாதத்தில் கூறிய கருத்துக்களை முற்றாக நிராகரிக்கின்றபோதும், உங்களுக்கு கருத்துச்சொல்வதற்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை நான் ஒருபோதும் மறுக்கமாட்டேன்..."

(Sorry for my long reply and also i have removed my previous one )

வலைஞன் said...

நன்றி டிசே.

//சில சந்தர்ப்பங்களில், தமிழ்நாட்டிற்கு ஒரு தனித்துவம் இருப்பதுமாதிரி, ஈழத்திற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்றவகையில் உரையாடும்போது அதை பிரிவினை-பிரிப்பு என்று நீங்கள் எண்ண்மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்//

இது குறித்து யாருக்குமே மாறுபாடு இல்லை. ஆனால் பிறரைப் புண்படுத்தும் சொற்களைத் தவிர்க்க வேண்டியது குறித்தும் தனிப்பட்ட தாக்குதல்கள் வலைப்பதிவுகளின் நோக்கங்களையே கேள்விக்குள்ளாக்குவது பற்றியும் பேசுவதே எனது நோக்கமும்.

(விரிவாகப் பதிலளித்ததில் மகிழ்ச்சியே. எதற்காக sorry?)