2005-03-29

வசைபாட வந்தேன்

1.

நான் வலைப்பதிக்க ஆரம்பித்த புதிதில் நான் பார்த்த வலைப்பதிவுகளில் எல்லாம் நிறைய வலைப்பதிவுகளின் சுட்டிகளை இட்டு வைத்திருப்பார்கள். அதைப்பார்த்துவிட்டு நானும் ஒரு பட்டியலை உருவாக்கி வைத்திருந்தேன். அதை வலைப்பதிவில் ஏற்றுவதற்காக ஒவ்வொன்றாக சுட்டிகளை இணைத்து தனியாக சேகரித்து வந்தேன்.


அதையெல்லாம் பதிவேற்றுவதற்கு முன்னால் தமிழ்மணம் திரட்டி எல்லாப்பதிவுகளின் சுட்டிகளையும் அவ்வப்போது புதிய பதிவுகள் வர, வர காட்டுவது கண்டவுடன் தனித்தனியே குறிப்பிட்ட சிலரின் சுட்டிகளை பதிவேற்றும் எண்ணத்தைக் கைவிட்டேன். இப்போதெல்லாம் யாரும் அப்படி "நாங்கள் படிக்கும் வலைப்பதிவுகள்" என பட்டியலிடுவதில்லை என்றே நினைக்கிறேன்.


2.

காசியின் பதிவில் தமிழ்மணத்தில் பாலியல் பதிவுகளை அனுமதிக்கலாமா? என்ற வாக்கெடுப்பில் 1400+ வாக்குகள் பதிவாகி இருந்தன.


அதே சமயம் காசி மற்றும் மதி (இன்னும் சிலரும்) தங்கள் பதிவுகளில் விலாவாரியாக விளக்கி தமிழ் வலைப்பதிவர்களுக்கும் இணைய ஆர்வலர்களுக்கும் மிகவும் தேவையான பயர்பாக்ஸ் உலாவியின் பிழைகளைத் தீர்க்கும் வேண்டுகோளை பின்தாங்கி வாக்களிக்குமாறு வேண்டி இருந்தும் இந்தத் திரட்டி வழியாக உலாவும் நானூற்றுச் சொச்ச வலைப்பதிவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். (நேற்று வரை 62 வாக்குகள்.)


வலைப்பதிவர்களின் இந்தப் பொறுப்புணர்ச்சி கண்டு பெருமிதமாக இருக்கிறது. காசி வலைப்பதிவர்களிடம் எதிர்பார்த்த நன்கொடையும் இது தான் (?).


உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு வாக்கைப் பதிவு செய்யமுடியும். அப்படிச்செய்தவர்களையும் சேர்த்து உண்மையில் இந்தக் கடமையை நிறைவேற்றியவர்கள் எத்தனை பேராக இருக்கும்?


வாக்களிப்பதற்குச் சில படிகள் தாண்டிச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தச் சில நிமிடங்களை நாம் நமது நலனுக்காக செலவிட முடியாதா?


என் பதிவிலும் வலது புறம் முக்கிய அறிவிப்பு*** என்று தலைப்பிட்டு இதற்கான வழிமுறைகளை படிப்படியாக சுட்டிகளுடன் கொடுத்திருக்கிறேன். எத்தனை பேர் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?


இந்த வேளைகளில் தமிழனாகப் பிறந்ததற்கே நாணித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. (தமிழர்களின் கடமை உணர்ச்சி அத்தகையது.!!!)


3.

சுரதா என்று ஒருவர் மெனக்கெட்டு ஏராளமாக செயலிகளையும், எழுதிகளையும் உருவாக்கித் தள்ளுகிறார். அதிகம் மெனக்கெடாமல் நாமெல்லாம் தமிழை எழுதவும் கண்டகண்ட எழுத்துருவில் இருப்பதை உடனே வாசிக்கவும், எந்தத் தட்டச்சு முறை தெரிந்தவர்களும் (தெரியாதவர்களும்) தமிழில் உடனே தட்டச்ச உதவும் கருவிகளையும் இன்னபிறவும் ஏராளமாய்....வலைப்பதிவர்களுக்கென்று எளிமையான பின்னூட்ட வசதிகளையும் செய்து தந்திருக்கிறார் சுரதா. இதை நம் வலைப் பதிவர்களும் பார்ததுக்கொண்டே தான் இருக்கிறார்கள். எ-கலப்பை, முரசு, குறள்செயலி என்று எழுதுகருவிகள் பிறவும் நமக்கிருக்கிறது.


வலைப்பதிவுகளில் பின்னூட்டமிடுகிறவர்களில் சிலர் இத்தனை வசதிகள் இருந்தும் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டு விடுகிறார்கள். அவசரத்திற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுபவர்களை பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டு விட்டால் போதும். உடன் இதுதான் சாக்கென்று பின்னேயே வரிசையாக ஆங்கிலத்தில்தான் மறுமொழிகள் வந்து விழுகின்றன. இப்படி ஆங்கிலத்தில் பதிவதற்கா தமிழ்மணம் திரட்டி என்று மணக்கும் பெயர் வைத்து காசி மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார். நல்லவேளை சில பதிவுகளே ஆங்கிலத்தில் வந்து கொண்டிருந்ததை அவரே தடுத்து நிறுத்தி விட்டார்.


ஆகவே நண்பர்களே தமிழ்வலைப் பதிவுகளில் தமிழிலேயே பின்னூட்டமிட முயலுங்கள்.

பயர்பாக்சுக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்!!!

15 comments:

வசந்தன்(Vasanthan) said...

சரியான பதிவு அனுராக். ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் வரும்போது சலித்துப் போகிறது. என்னைப்போல ஆங்கிலத்தில் தழம்;பலுள்ளவர்களுக்கு இது இன்னும் கடினம். அந்தப் பின்னூட்டங்களை அதன் முழுமையான உணர்ச்சி வெளிப்பாடுகளோடு புரிந்து கொள்ள முடியாமலுள்ளது.

dondu(#11168674346665545885) said...

ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது வருந்தத்தக்கச் செயலே. ஆனால் அதை விடக் கொடுமை தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்வது. அதையாவது விதி முறைப்படிச் செய்தால் நாம் சுரதா எழுத்து மாற்றியிலிட்டுப் படித்துக் கொள்ளலாம். அதுவும் செய்வதில்லை.
ஆங்கிலத்தில் பின்னூட்டம் கொடுப்பவர்களோ சில சமயம் மகா கண்றாவியான பிழைகளைச் செய்கிறார்கள். அம்மாதிரிப் பிழைகளுடன் நான் எழுதியிருந்தால் என் எட்டாம் வகுப்பாசிரியர் ஜயராம ஐயங்கார் அவர்கள் என்னை ஒரு வாரத்துக்கு பெஞ்சு மேல் நிற்க வைத்திருப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

அனுராக்!
உங்கட பதிவப் படிச்சப் பிறகுதான் சுரணை வந்து உடன ஓடிப்போய் நாலு வாக்குக் குத்திப்போட்டு வந்திருக்கிறன். நன்றி. மற்றாக்களும் செய்வினமெண்டு நினைக்கிறன்.

Kasi Arumugam said...

அனுராக்,
இதில் 1. ஒரு அறிக்கை மாதிரி இருக்கிறது, இதில் என்ன வசை? யார்மேல் பாடல்? ஒண்ணும் புரியவில்லை.

Jayaprakash Sampath said...

அனுராக்... வசைபாட வந்தேன்னு தலைப்பைப் பார்த்ததும், யாரையோ நல்லா கிழிச்சு தோரணம் கட்டியிருப்பீங்கன்னு வந்தா, அறிக்கை ஒண்ணைப் போட்டு ஏமாத்திட்டீங்களே? :-)

ROSAVASANTH said...

பரவாயில்லை. அவர் வசைன்னே சொல்லட்டும். எனக்கு சந்தோஷமா இருக்கு!

(நல்ல பதிவு. எனக்கு இருக்கும் மற்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கும் (கள்ள)ஓட்டு போடலாம் என்று நினைவிறுத்தியதற்கு நன்றி! உடனே...

Sridhar Sivaraman said...

நானும் எனது ஓட்டை போட்டுடேன்.....

வானம்பாடி said...

நல்லா சொன்னீங்க.. இது கொஞ்சம் மெனக்கெடற வேலை இல்லையா, அதான் நம்மாட்களுக்கு கொஞ்சம் சோம்பல்!

நாலாவது கண் said...

நானும் ஒரு நாலு ஓட்டு பேட்டேன்ப்பா! அடுத்து எனக்கு ஒரு சந்தேகம்.

காசி கொடுத்த அந்த PDF நிரல் துண்டு என்ன? எங்கேயிருக்கிறது. அவரது தளத்தில் கொடுத்த ..... என்பதைத்தான் நிரல் துண்டு என நினைத்து எனது டெம்ப்ளேட்டில் இட்டால் PDF வரலை. யாராவது கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்! - சந்திரன்

வலைஞன் said...

முதலாவதா இருக்கிறது சும்மா ஒரு கருத்து அவ்வளவுதான்.

அப்புறம் தலைப்பு? கொஞ்சம் பயமுறுத்தறதுக்குத்தான்.

நீங்க வேற... தலைப்புக்கும் நம்ம சினிமாப் படங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கா என்ன? ஒரு மிரட்டல். அவ்வளவே.

நம்ம மக்கள் இதில எல்லாம் வெருண்டு போயிட மாட்டாங்கன்னு தெரியும். பயப்பட வேணாம். விசயத்தை புரிஞ்சுகிட்டா சரி.

எல்லாருக்கும் நன்றி.
வசந்தன, ரோசா, ஸ்றீதர், சந்திரன், திருநாளைக்கு ஓட்டு எண்ணிக்கையை கூட்டியதற்கும் நன்றி.

கறுப்பி said...

அனுராக் புளொக்கின் அறிமுகம் கிடைத்த போது நான் வாசிப்பதோடு மட்டும் நின்று கொண்டிருந்தேன். பல காலமாக "திண்ணை", "பதிவுகள்" போன்ற தளங்களில் எனது படைப்புக்களை எழுதி வந்திருக்கின்றேன். அப்போதெல்லாம் எனது படைப்புகளுக்குப் பின்னூட்டம் மின்அஞ்சலில் வந்து சேரும். படிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். என் நண்பர் ஒருவரின் ஊக்கத்தின் பேரில் சரி நானும் ஒரு புளொக்கை ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்தேன். புளொக்கிற்கென்று நான் தனியாக ஒரு போதும் தீவிரமாக கட்டுரைகளை எழுதியதில்லை. வேலைத்தளத்தில் இருந்து மனதுக்குப் பட்டதை அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றேன். பலர் சுவாரசியமாகத் தளத்தைக் கலகலப்பாக்குவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை ஒரு முற்று முழுதான ஒரு பொழுது போக்கும், கருத்துப் பரிமாறும் ஒரு இடமாக நான் மனதில் கொண்டுதான் எழுதத் தொடங்கினேன். என் துரதிஷ்டம் தனிப்பட்ட முறையான தாக்குதலுக்குத் தொடர்ந்து ஆளாகி வருகின்றேன். இதனால் பின்னூட்டம் என்பது எனக்கு இப்போது வெறுப்பாக உள்ளது.

வலைஞன் said...

கறுப்பி ரொம்ப விரக்தியோடு எழுதியிருக்கிறீர்கள்?
என் அனுபவம் வேறானது. ரொம்ப ஆர்வமாக ஒரு விசயம் எழுதிவிட்டு பின்னூட்டமே வராமல் போகும்போது சே..என்றாகி விடும். பின்னர் சில நாளைக்கு எழுதவே தோணாது. அதே சமயத்தில் நிறையப் பதிவுகளை வாசித்தாலும் எனக்கும் எல்லாவற்றிலும் பின்னூட்டமிடத் தோன்றுவதில்லை.

உங்கள் பதிவில் ஓரிரு முறை பின்னூட்டமிட முயன்றாலும் அங்கே நடக்கும் விவாதங்களில் குரல் கொடுக்கப் பயந்தே பலமுறை பின்வாங்கியிருக்கிறேன்.

தனிப்பட்ட தாக்குதல் என்பதும் முகமறியாதவர்கள் தொடுப்பதுதானே. அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ன? அதை அப்படியே புறக்கணித்து விட்டு நீங்கள் உங்கள் எழுத்துக்களை தொடருங்க.

Anonymous said...

திருநாளைblogகர் கூறுவது...
//மற்றது மறந்து போய்விட்டேன், நாளைக்கு Blog எழுதப்போறேன்....//

இதுவும் 'திருநாளைப் போவார்' கதை தானோ?

வானம்பாடி said...

மொசில்லா பிழை நீக்க கணக்கற்ற கள்ள ஓட்டுப் போட ஒரு வழியை இங்கே எழுதி இருக்கிறேன். ;-)

கறுப்பி said...

தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் அனுராக். என் பதிவில் நான் எழுதும் படைப்பிற்கு எப்படியான தாக்குதல் வந்தாலும் என்னால் அதற்காக என் பார்வையில் வாதிட முடியும். என் கருத்துத் தவறென்று நான் உணரும் பட்சத்தில் இன்னொருவர் வைக்கும் வாதத்தை மறுபரிசீலனை செய்து அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்னிடம் இருக்கின்றது. விமர்சனங்களை ஏற்க மறுக்கும் கோழையல்ல நான்.

ஆனால் "உனக்கு ஒன்றும் தெரியாது பெரிய விடையங்களை எழுதாதே" என்று தனது புளொக்கின் பெயரில் வந்து ஒருவர் (எனக்கு முன்பு ஒரு காலத்தில் நண்பியாக இருந்து பின்னர் கருத்து வேறுபாட்டால் கதைக்காமல் விட்டவர் கனேடிய தமிழ் பத்திரிகைகளிலும் எனது படைப்புகள் பற்றி தரமற்றதென்ற விமர்சனங்களை வைத்தவர்) வைக்கும் போது நான் நாகரீகமாக எனது படைப்புக்களுக்குத் தயவுசெய்து பின்னூட்டம் இடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பின்னூட்டத்தை அழித்த பின்பும் தொடர்ந்து வௌவேறு பெயர்களில் வந்து (அத்தனை பெயர்களுக்கும் சொந்தமான புளொக் இல்லை- சொந்தமான மின்அஞ்சல் இல்லை) அதே கருத்தை "உனக்கு ஒன்றும் தெரியாது பெரிய விடையங்களை எழுதாதே" என்று கூறிக்கொண்டிருந்தால் எனக்கு விரக்தி வராமல் என்ன செய்யும். யார் என்று தெரிந்திருந்தும் என்னால் நிரூபிக்க முடியாத நிலமை. நிரூபித்தும் என்னத்தைச் செய்யப் போகின்றேன். "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது". புளொக்கில் தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்க வேறு ஒரு எதிரிகளும் இல்லை என்பதை நான் திடமாகச் சொல்கின்றேன். பின்னூட்டம் வரவில்லை என்று கவலைப்படாதீர்கள் பின்னூட்டம் வராதபோதுதான் நான் சந்தோஷமாக இருக்கின்றேன். இன்று கூட அவரின் ஒரு பின்னூட்டத்தை அழித்தேன். நான் வாசிப்பது கூட இல்லை.