2005-04-23

தமி(ழ)ழா!

இந்திய அரசு சார்பில் சிடாக் வெளியிட்டுள்ள தமிழ் குறுவட்டு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இணைய வேகக்குறைவால் பதிவிறக்குவதிலும் சிக்கல். சிடிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அதைப் பார்த்தபின் கருத்துச் சொல்லலாம் என்று இருந்தேன். இதற்குள்ளாக இதைச் சொல்லி வலைப்பதிவுகளில் தீவிர வாக்குவாதங்கள் வேறு நடைபெற்று வருகின்றன. பத்ரி மற்றும் மதியின் பதிவுகளின் பின்னூட்டத்தில் முகுந்தும் ஜெயராதாவும் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொள்வதையும் பார்க்கமுடிகிறது. இதில் எனக்குச் சில சந்தேகங்கள் எழுகின்றன.


பத்ரியின் பதிவில் ஜெயராதா எழுதியது இது


//ஃபையர் ஃபாக்ஸ் பொருத்தவரை பதிவு செய்தது. மேலாண்மை பொருப்பு மற்றும் ·பையர் ஃபாக்ஸ் cvs க்கு விண்ணப்பித்தது எல்லாம் அடியேன் தான். அதுவும் ஃபையர் பாக்ஸைமுழுவதும் முடித்து அந்நிறுவனத்திற்கு அனுப்பி அதன் அடுத்த பதிப்பில் தமிழ் ஆதரவு என்ற நற்செய்தியை எதிர்பார்த்து காத்திக்கும் சமயத்தில், தமிழா குழு மொசில்லாவில் ஒரு சின்ன ஒட்டு போட்டு ஃபையர் ஃபாக்ஸை தான் முடித்ததாக அறிவித்தது.....//


பத்ரியின் பதிவில் முகுந்த் எழுதியது இது


//தாங்கள் பயர்பாக்ஸ் இல் வேலை செய்வதாக எழுதிய மடல்கள் எல்லாமே. 18 பிப்ரவரி 2005 அன்று தமிழ் பயர்பாக்ஸ் பொதியை நாங்கள் வெளியிட்டு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தப் பிறகுதான் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீரா?//


மேற்கண்டவைகளை வாசித்தால் தமிழ் பயர்பாக்ஸ் வேலையை இருவருமே (தனித்தனியாக) செய்து முடித்து விட்டதாகத் தோன்றுகிறது.ஆனால் அதே கருத்தின் தொடர்ச்சியாக முகுந்த் எழுதியது இது.


//தங்களிடம் இருக்கும் கோப்புகளை எங்களுக்குத் தேவையான .po வடிவில் மாற்றித் தாருங்கள் முழுமையான தமிழ் பயர்பாக்ஸ் பொதியை தமிழுலகுக்கு அளிப்போம் என்று நான் பொது அரங்கில் (தமிழ்லினக்ஸ் குழுவில்) (date: Mar 4, 2005) எழுதிய மடலுக்கு இன்னும் இவரிடம் இருந்து பதிலே காணோம்.//


பிப்ரவரி 18ல் முடித்து வெளியிட்டவர் மார்ச் 4ல் கோப்புகளைத் தாருங்கள் முழுமையாக முடிக்கலாம் என்று மடல் எழுதியதாகக் கூறுகிறார். அப்படியானால் முடிக்காமலே வெளியிட்டு விட்டாரா?


ஜெயராதாவின் இந்த வரிகள் அவரும் முழுவதுமாக செய்து முடிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

//நான் ஃபையர் ஃபாக்ஸ் முயற்சியையும் நிறுத்திக்கொள்கிறேன். நீங்களே முயன்று முடிக்கவும்.//


இது ஒருபுறமிருக்க


//ஜெயராதாவின் பின்னூட்டத்தைப் பற்றி என் கருத்துக்கள்...
முன்பு ழ-கணினி குழுவைச் சேர்ந்தவரும் தற்போது ஒரு பன்னாட்டு நிறுவணத்திற்காக முழுநேர மொழிபெயர்பில் இருக்கும் ஜெயராதாதானா அல்லது வேறு ஒரு ஜெயராதாவா என்று தெரியவில்லை.
ஏற்கணவே ழ-கணினி ஆட்களுடன் முட்டி மோதி ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. அதனால் மீண்டும் இவருடன் வாதிட எனக்கு விருப்பமில்லை//


என்கிறார் முகுந்த். மதியின் பதிவிலும் வலைக்குழுக்களில் இருவரும் முன்பு மோதிக்கொண்ட தகவல் வருகிறது. எனக்கு இத்தகவல்கள் புதிது என்பதனால் பிரச்சினையின் பரிமாணங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு பொதுக்களத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள் மற்றவர்களை முட்டாளாக்குவதாக இருக்கக் கூடாது.


ஜெயராதா அறிமுகமே இல்லாதவர் போல ஒருபுறம் எழுதும் முகுந்த் வலைக்குழுக்களில் விவாதித்தாகவும் எழுதுகிறார். இந்தக் குழப்பத்தினிடையே நான் முன்பு வாசித்திருந்த இந்தச் செய்தி வேறு என்னைக் குழப்புகிறது.


தமிழ் கம்ப்யூட்டர் பிப் 18-29, 2004 இதழில் "ழ" கணினி பற்றிய அறிமுகக் கட்டுரையில்

".....செல்வி ஜெயராதாவும் டிஷ்நெட் குழுமத்தில்தான் பணிபுரிகிறார். சீனியர் சாப்ட்வேர் எஞ்சினியரான இவர் கணினியில் தமிழ் தொடர்பான தொழில் நுட்பங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். "இ-கலப்பை என்ற பெயரில் தமிழ் விசைப்பலகைக்கான டிரைவரை உருவாக்கிய குழுவில் இவரும் ஒருவர்......"


இ-கலப்பையின் Readme கோப்பில் பரிசோதித்தபோது இந்தவரிகள் காணப்பட்டன.


"Jayaradha - Helped in creating the tscii keyboard , graphics and also shared the cost involved in buying the developer licence for ekalappai 1.0"


இ-கலப்பை தயாரித்த 'தமிழா' குழுவின் தலைவர் 'முகுந்த்'!


ஆக இது பின்னாளில் ஏற்பட்ட EGO Clash என்பது அப்பட்டமாகப் புலனாகிறது.தனிப்பட்ட பிரச்சினைகளால் நஷ்டம் தமிழுக்குத்தான்.


கணித்தமிழில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள் இப்படி தனித்தனி குழுக்களாக அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது தமிழனின் தலைவிதியே இதுதானோ என்ற எண்ணம் மீண்டும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


'ழ' கணினி பற்றிய அதீத விளம்பரங்களைப் பார்த்துவிட்டு கணினி வாங்கியவன் நான். அதுவும் அரைகுறைதான் என்பதை அறியும்போது எரிச்சல்தான் வருகிறது.

4 comments:

Anonymous said...

அன்புள்ள அனுராக்,
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி,

இவ்விசயத்தை நான் மேலும் முதிர்ச்சியாக கையாண்டிருக்க வேண்டும் என்று எனக்கும் புரிகிறது.

உங்களின் இந்த விமர்சனத்தினை கவனத்தில் எடுத்துக்கொண்டேன்.

கண்டிப்பாக தமிழ் கணினித்துறையிலுள்ள இப்போதைய மோதல் போக்கை மாற்ற முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
முகுந்த்

மு. மயூரன் said...

தனித்தனி தீவுகளாக இயங்குவதுதான் பலமோ என்று கூட தோன்றுகிறது.
நல்ல தொடர்பாடல் இருந்தால் சரி.
எவற்றை தக்கவைப்பதென பயனாளர்களே தீர்மானித்துக்கொள்வார்கள்.

ஒன்றிணைவு, கூட்டிணைவு என்பதெல்லாம் தூய்மையாக இருப்பதில்லைதானே?
யாரோ ஒருவரின் மேலாதிக்கமாகத்தானே போய்விடுகிறது?

ழ கணினிக்கு கிடைத்த மிகப்பெரும் விளம்பரம் சுஜாதாவால் வந்தது.
எமது பெரும் ஊடகங்களுக்கு சுஜாதாவைத்தான் தெரியும்.
அவர் கைகழுவினாலும், அது முக்கிய செய்தியாகும்.

அவர்கள், மற்றவர்கள் ஏற்கனவே செய்ததை திருப்பிச்செய்ததுதான் மிச்சம்.

வலைஞன் said...

நன்றி முகுந்த்.

மயூரன், தனித்தனியாக இயங்குவது பிரச்சினையில்லை. நல்ல தொடர்பாடல் இல்லாதது தானே இங்கு பிரச்சினையாகியிருக்கிறது.

பொதுவாக நான் பார்த்தவரையில் 'ழ' கணினி குறித்து வலை(ப்பதிவு)க்குழுக்களில் நல்ல அபிப்பிராயமே இல்லை. ஆனால் இதுவரை வேறெந்தச் செயல்பாட்டிலும் இல்லாத அளவில் மாணவர்களும் ஏராளமான தன்னார்வலர்களும் பங்கெடுத்துச் செய்த முயற்சி அது என்று அறிகிறேன். அத்தனை பேரின் அறிவு மற்றும் மனித உழைப்பு கிட்டத்தட்ட வீணாகிப்போனதற்கு இந்தத் தொடர்பாடல் பிரச்சினை தானே காரணம்.

Anonymous said...

//இது பின்னாளில் ஏற்பட்ட EGO Clash என்பது அப்பட்டமாகப் புலனாகிறது.தனிப்பட்ட பிரச்சினைகளால் நஷ்டம் தமிழுக்குத்தான்.//