2006-08-24

புதிய உமர் எழுத்துரு

தமிழ் கம்பியூட்டர் பத்திரிகையை நான் கம்பியூட்டர் வாங்குவதற்கு முன் (?) சந்தாகட்டி வாங்கிக் கொண்டிருந்தேன். சந்தா தீர்ந்த பிறகு புதுப்பிக்காமல் விட்டு விட்டேன். தமிழில் கம்பியூட்டர் பத்திரிகை நடத்தினாலும் இதழுக்கு இணைய தளமோ மின்னஞ்சல் முகவரியோ இல்லை. சந்தா கட்டுவதற்கும் புராதன வழிமுறைகள் தவிர வேறு வழியில்லை.

ஒருமுறை நண்பர் அழகி விஸ்வநாதன் தமிழ் கம்பியூட்டர் இதழுடன் பனாசியா நிறுவனத்தின் இலவச மென்பொருட்கள் அடங்கிய குறுவட்டு இணைத்து வழங்கப்பட்டிருப்பதாக மின்மடல் அனுப்பியிருந்தார். சரியான நேரத்தில் அவரது மடல் வந்ததால் தீர்ந்து போவதற்குள் இதழ் பிரதியை குறுவட்டுடன் வாங்க முடிந்தது.

அந்த குறுவட்டில் பல திறமூல மென்பொருட்களும் ஏராளமான தாம் (Tam) குறியேற்ற எழுத்துருக்களும் இருந்தன. கூடவே மென்பொருட்களின் சோர்ஸ்கோடும் (source code) மென்பொருட்களையும் எழுத்துருக்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்யும் திறமூல உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

ஒருங்குறி குழுமத்தில் புதிய யூனிகோடு எழுத்துரு உருவாக்குவது குறித்து பேசப்பட்டபோது பனாசியா எழுத்துருக்கள் பற்றி தெரிவித்தேன். கணிஞர் உமர்தம்பி அவர்கள் அவற்றை யூனிகோடாக மாற்றித்தருவதாக வாக்களித்தார். பிறகு சில நாட்கள் கழித்து பனாசியா எழுத்துரு ஒன்றை யூனிகோடு எழுத்துருவாக மாற்றம் செய்து சோதித்து பார்க்க அனுப்பியிருந்தார்.

ஆனால் அதன்பிறகு அவரைத்தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது மரணச்செய்திதான் பிறகு அறிந்தது. அவர் கடைசியாக ஈடுபட்டிருந்த பணி இது. இதில் அவர் வேறு எழுத்துருக்களை செய்ததாக அறிய முடியவில்லை. ஆனால் அவர் கடைசியாக செய்த எழுத்துரு என்னிடம் இருக்கிறது. அதனை UmarUniTx என்ற பெயரில் வெளியிடுகிறேன்.

பின்வரும் சுட்டியில் எழுத்துருவை பதிவிறக்கம் செய்யலாம்.

UmarUniTx [font]


எழுத்துரு பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

7 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்.

எழுத்துருவை வலையிறக்கம் செய்யமுடியவில்லை. கொஞ்சம் கவனியுங்கள்.

வலையேற்றம் செய்வதில் பிரச்சினை என்றால் சொல்லுங்கள். என்னுடைய தளத்தில் ஏற்றிவிட்டுச் சுட்டி தருகிறேன்.

சதயம் said...

மதி சொல்வதைப் போல தரவிரக்கம் செய்ய இயலவில்லை...கவணியுங்கள் நண்பரே...

newsintamil said...

மதி, சதயம்

இப்போது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் கீழிருக்கும் பெரிய சுட்டியில் பிழைச்செய்தி வருகிறது. அப்போது Download UmarUniTx என்னும் சிறிய சுட்டி வேலை செய்கிறது. சோதித்து பதிவிறக்க பிரச்சினை உள்ளதா என்று சொல்லுங்கள்.

மதி உங்கள் மின்முகவரி மறந்து விட்டேன். outlook out of order. address book vanished. அதனால் உடனடியாக பதிலிறுக்க முடியவில்லை. பதிவிறக்க பிரச்சினை இருந்தால் எனக்கு மடலிடுங்கள்.

Anonymous said...

நன்றி ஐயா! எழுத்துருவை சுலபமாக தரவிறக்க முடிந்தது.

எழுத்துருவும் மிக அழகாக உள்ளது.

தன்னலமற்ற உமர்தம்பி அவர்களை நினவுகூற அவர் பெயரிலேயே இந்த எழுத்துருவை வெளியிட்டிருப்பது மிக நல்ல செயல்.

மீண்டும் நன்றி

Anonymous said...

நன்றி.

தங்களுக்கும் அமரர் உமர் தம்பி அவர்களுக்கும்

பழ பழ

மு.மயூரன் said...

மிகவும் அழகான தலைப்பு எழுத்துரு. தலைப்புக்கான ஒருங்குறி எழுத்துருக்கள் அதிகம் கிடைக்காத சூழலில் இது ஆரோக்கியமான வரவு. ஓப்பன் ஆபீசிலும் நன்றாக வேலை செய்கிறது.

காப்புரிமைப்படுத்தாது அளிப்புரிமையில் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் உரிமத்தில் அளிப்புரிமை என்பதைத்தவிர வேறு தகவல்கள் இல்லை. இந்த எழுத்த்ருவை திறந்த மூலமாக கருதலாமா? கருதலாமெனில் அடுத்துவரும் லினக்ஸ் வழங்கல்களோடுி தமிழ் தலைப்பு எழுத்துருவாக இதனை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கலாம்.

newsintamil said...

நன்றி மயூரன்.

திறமூல உரிமைக்கான குறியீடு விவரம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதனால் தனியாக குறிப்பிடவில்லை. எனினும் அது திறமூல எழுத்துருவாக நிச்சயமாக கருதலாம்.