வணக்கம். தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பதவியேற்ற சூட்டோடு வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைகிறீர்கள். நல்லது.
ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நீங்களும் உங்கள் கட்சியினரும் சந்தித்த இன்னல்கள் ஏராளம். வயதில் முதியவர் என்று பாராமல் உங்களை நள்ளிரவில் கைது செய்தார்கள். உங்கள் அன்புக்குரிய மாறனை குண்டுக்கட்டாகத் தூக்கி எறிந்தனர்.
உங்கள் அமைச்சரவையில் இருந்தவர்கள் மீதெல்லாம் பலவகை வழக்குகள் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்கள். உங்கள் மகன் ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து விலக வைத்தார்கள்.
எத்தனை சிரமங்கள்? அத்தனைக்கும் இன்று முடிவு வந்து விட்டது.
எல்லோரும் வியக்கும் வண்ணம் ஏழுகட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று சொல்லி சாதித்துக் காட்டினீர்கள். அந்த நன்றிக்கடனை சோனியாவிடமிருந்து மத்திய அமைச்சர்கள் வடிவில் வசூலித்து விட்டீர்கள்.
இப்போது உங்கள் முறை. நீங்கள் முதல்வராக காங்கிரஸ் உங்களுக்குத் தோள் கொடுத்தது. நீங்களோ முகட்டில் ஏறிக்கொண்டு படிக்கட்டுகளை பந்தாடத் தொடங்கிவிட்டீர்கள்.
அவசர அவசரமாக அமைச்சரவையை முடிவு செய்து யாரும் பங்கு கேட்டுவிடாதபடி பெரியதொரு மந்திரிசபையை அமைத்து விட்டீர்கள்.
அன்று கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொன்னதற்காக இளங்கோவனைப் பந்தாடினீர்கள். அவரோ இன்றும் அந்த அடியின் வலியில் பேதலித்துக் கிடக்கிறார். உங்களிடம் பங்கு கேட்பதற்கு வேறு யாருக்குத் துணிவிருக்கிறது? ஆனால் மக்களை நீங்கள் மறந்து விட்டீர்கள். அன்று உங்களிடம் கணக்குக் கேட்ட எம்ஜிஆரைத் துரத்தினீர்கள். மக்கள் உங்களை எம்ஜிஆர் உள்ளவரை ஆட்சியிலிருந்து அகற்றி வைத்தார்கள்.
இன்று ஜெயலலிதாவின் அகங்காரத்துக்கு பேரிடியைத் தந்த அதே மக்கள் உங்களுக்கும் ஒரு பாடமாகத்தான் தனிப் பெரும்பான்மையை மறுத்தார்கள். அதை ஏற்க மறுத்து மீண்டும் உங்கள் தவறுகளை அரங்கேற்றத் துணிந்து விட்டீர்கள்.
நீங்கள் மாறவேயில்லை. உங்கள் குடும்ப ஆட்சியை நிறுவப் பார்க்கிறீர்கள் என்ற வைகோவை தூக்கி எறிந்தீர்கள். அவரோ சகதியிலிருந்து எழுந்து சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்.
உங்கள் கட்சி தவிர வேறொருகட்சி வளர்ந்து விடக்கூடாது. தேர்தலில் மட்டும் உங்களுக்கு அவர்கள் தயவு வேண்டும். தேர்தல் முடிந்தபின் அவர்கள் உங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் நீங்கள் தூக்கிப்போடும் எச்சில் இலைகளை மட்டுமே அவர்கள் ஏந்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இதில் மட்டும் என்னே ஒற்றுமை.
மத்தியில் முதன்முறை உறுப்பினரான ஒருவரை நெறிகளை மீறி காபினட் அமைச்சராக்கவும், விரும்பிய இலாகாவை பிடிவாதம் பிடித்துப் பெறுவதிலும் உங்களுக்கு வெட்கமேயில்லை. அளவுக்கு மீறி அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொள்வதிலும் நீங்கள் நாணப்படவில்லை. பாவம் உங்களை நம்பிய அவர்கள் தான் இப்போது ஏமாந்து நிற்கிறார்கள். பூட்டிய வீட்டுக்குள் நீங்களும் உங்கள் பரிவாரங்களும் பரிகசிப்பது கேட்கிறது.
கூட்டணி ஆட்சியில் பிரதமர் பதவியைக் கூட வேண்டாம் என்றவர்கள் எம் 'தோழர்கள்'. அவர்கள் இப்போதும் உங்களைப் பின்தாங்கி நிற்பதில் வியப்பேதுமில்லை.
பாமகவின் கணக்கே வேறு. அதனால் அவர்களும் இப்போதைக்கு சுணங்க மாட்டார்கள்.
சுதந்திரத்துக்கு முந்திய 'தியாகி'களின் கட்சியல்ல இப்போது காங்கிரஸ். அன்று உங்களிடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதே காங்கிரஸ் இன்று நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிப் பங்கை எதிர்பார்க்கிறது. வாங்கித்தான் பழக்கமுண்டு கொடுத்துப் பழக்கமில்லை என்பதுதான் உங்கள் கொள்கையா?
(கொள்ளைக்காரர்கள் தான் கொள்ளையில் பங்கு கொடுக்க மறுப்பவர்கள். ஆட்சிபீடமே கொள்ளைக் கூட்டமென்கிறீர்களா? அப்படியானால் இன்னொரு கூட்டத்துக்கு கொள்ளையில் பங்கு கொடுத்தால் உங்கள் பங்கு குறைந்து விடுமென்பது நியாயம்தான்.)
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தான் மக்கள் தந்த தீர்ப்பு. ஏற்பதில் உங்களுக்கு ஏனிந்தத் தயக்கம். அறிவுள்ளவர் தாங்கள். அதை அழிவை நோக்கிப் பயன்படுத்தாதிருங்கள்.
குடும்பப் பாசத்தால் கட்சியையும் கட்சிப்பாசத்தால் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைக்கப் பார்க்கிறீர்கள். மற்றவர்கள் வளர்வதை அனுமதிக்க மறுக்கிறீர்கள். மக்கள் பங்கிட்டுத் தந்ததை பங்கிடாமல் வைத்துக் கொண்டீர்கள்.
அன்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகத்தான் நீங்கள் சொன்னீர்கள். சோனியாவின் அழைப்புக்குப் பின்னரே அமைச்சரவையில் சேர ஒப்புக்கொண்டீர்கள். (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டீர்கள்) இப்போது அதே முறையில் உங்கள் அழைப்பை எதிர்பார்க்கிறது காங்கிரஸ். ஆனால் நீங்களோ கமுக்கமாக கவிழ்த்து விட்டீர்கள்.
கூட்டணிக் கட்சியோடு மோதல் வேண்டாமென்று காங்கிரஸ் தலைமை மவுனித்து விட்டது. தலைமையின் கட்டளையால் தமிழகத் தலைவர்களும் அடக்கியே வாசிக்கிறார்கள். குமுறிக் கொண்டிருப்பவர்கள் தொண்டர்கள் தான். அவர்களை விடுங்கள் இரண்டு பேருக்குமேல் தமிழகத் தெருக்களில் கூடிப்பேசும் பொதுசனம் பேசிக்கொள்வதே இதுதான்.
ராசதந்திரமென்று நீங்கள் நினைக்கலாம். சனநாயகத் துரோகமென்கிறது சனம். இப்போதைக்கு நீங்கள் மறுக்கலாம். எப்போதுமே மறைத்துவிட முடியுமா?
நீங்கள் உங்கள் கூட்டணி நண்பர்களை ஏமாற்றி விட்டதற்காக இறுமாப்புக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அவமானப்படுத்தியது உங்களுக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனையும் தான்.
அவர்களுக்கு என்ன இலவசங்களை ஈந்து விட்டால் இசைந்து போவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் புதிரானவர்கள். உரிய காலத்தில் புரிய வைப்பார்கள்.
அன்புடன்
உங்கள் அணிக்கே வாக்களித்த
பாவம் வாக்காளன்.
![]() | ||||
![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
96 | 34 | 18 | 9 | 6 |
---|
![]() | ![]() | ![]() |
61 | 6 | 2 |
---|
![]() |
1 |
---|
சுயேட்சை |
1 |
---|
கொடி படங்கள் : நன்றி : இட்லிவடை