(இரண்டு செய்திகள்)
1.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் வடக்கன்குளம் "கல்வித்தந்தை" எஸ்.ஏ.ராஜா கைது செய்யப் பட்டிருக்கிறார். "கல்வித் தொழிலில்" கொடிகட்டிப் பறந்த ராஜாவின் திருவிளையாடல்கள் குறித்து கதைகதையாகச் சொல்கிறார்கள் அவரது கல்வி நிறுவன(த்தில் தெரியாத்தனமாகச் சேர்ந்து விட்ட) முன்னாள் மாணவர்கள்.
மாதிரிக்கு ஒன்று
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது ஒருமுறை தமிழக சுற்றுப் பயணம் வந்தார். சிறுசிறு ஊர்களிலும் இறங்கிவிடுவது ராஜீவ்காந்தியின் வழக்கம். எஸ்.ஏ.ராஜா தனது அரசியல் நண்பர்கள் மூலம் தான் நடத்திவந்த ஏதோ ஒரு கல்லூரிக்கான கட்டிடம் ஒன்றை திறக்கும் நிகழச்சியை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வைத்தார். ராஜீவும் வழி நெடுகிலும் வரிசையாகக் கொடியேற்றி அங்கங்கே மக்களைச் சந்தித்து கையசைத்துச் சென்றது போல இந்தக் கட்டிடத்தின் ரிப்பனையும் போகிற போக்கில் வெட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் செய்தித்தாள்களில் எஸ்.ஏ.ராஜாவின் மருத்துவக்கல்லூரியை பிரதமர் ராஜீவ்காந்தி திறந்து வைத்த செய்தியும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பும் வந்திருந்தது. சுற்றுப் பயணத்தின் இடையிலேயே ஆங்கில செய்தித் தாள்களில் இந்தச் செய்தியைப் படித்த ராஜீவே வியந்து போனதாகத் தகவல். பிறகென்ன அனுமதியே பெறப்படாமல் இருந்தாலும் பிரதமரால் திறந்து வைக்கப் பட்ட மருத்துவக்கல்லூரிக்கு அரசு அங்கீகாரம் கிட்டாமல் இருக்குமா என்ற ராஜாவின் கிரிமினல் கனவு கலைந்து போனது.
இது ஒருபுறமிருக்க ஆலடி அருணாவும் அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். இருவரும் இணைந்தே பல சித்து விளையாட்டுகள் விளையாடிய பின் ஏதோ ஒரு பொறியில் பிரிந்து மோதலாகிக் கொலைவரை சென்றதாக உள்ளூரில் பேச்சு.
2.
அந்தமானில் தொடர்ந்து பூகம்ப அதிர்ச்சிகள் விஞ்ஞானத்தை மீறிய விளைவுகளாய் மக்களை தொடர்ந்து பீதியில் இருக்க வைக்கிறது. இங்கும் மக்களின் பீதி முழுமையாக அகன்றபாடில்லை. அதே நேரம் அதிகம் பாதிக்கப் பாடாத மக்களில் பலர் அரசு நிவாரணங்களுக்காக அடித்துக் கொண்ட செய்திகள் மனதைப் புண்படுத்துகின்றன. தீவிரமாகப் பாதிக்கப் பட்டவர்களோ முழுமையாக நிவாரணங்களை வாங்கிப் பயன்படுத்தும் நிலையில் இல்லை. குடும்பத்தில் அனைவரையும் இழந்து ஓரிருவர் எஞ்சியுள்ள நிலையில் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
தமிழகக் கடலோரங்களில் அரசின் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகளை இழந்தவர்கள் மீண்டும் அங்கேயே வசிக்க விருப்பமா? 500 மீட்டர் தள்ளி வசிக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு மண்ணோடு இறுகிவிட்ட மனநிலை கொண்ட மிகச்சில முதியவர்களைத் தவிர மற்றவர்கள் தூரமாய் வசிக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். அரசின் எந்தச் சட்டமும் பறித்து நட முடியாத அவர்களின் வேர்களை சுனாமி மிகச்சுலபமாக பிடுங்கி எறிந்து விட்டது.
2005-02-02
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Insider தகவல் மாதிரி ஆலடியின் பிண்ணனி அமர்க்களமாக இருக்கிறது. மேல ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க... அடுத்த வாரம் கழுகார் தூக்கிப் போட்டுக் கொள்வார்?!
ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.ராஜாவின் பாடாவதி கல்லூரியில் காலடி எடுத்து வைத்த போது நான் பார்த்த காட்சிகள் கலங்கச் செய்தன. ஆனால் அது அரசியல் ரீதியாக அல்ல. சீக்கிரமே இதைப் பதிகிறேன்.
Post a Comment