தேன்கூடு-தமிழோவியம் இணைந்து நடத்தும் படைப்பாக்கப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் போட்டி. இந்த நோக்கமும் முயற்சியும் மிக உயர்வானது.
இப்போட்டியின் வெற்றியாளர்கள் வலைப்பதிவர்களால் வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப் படுகின்றனர். இதிலுள்ள சில பிரச்சினைகளால் இப்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பல பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு, நண்பர்கள், ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதாக சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இதில் ஓரளவு உண்மையும் இருக்கக்கூடும்.
ஆரம்பத்திலேயே பதிவர்கள் போட்டிப் படைப்புகளைத் தங்கள் பதிவுகளிலேயே வெளியிட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தான். அதனாலேயே ஆரம்ப போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. பெயரறியாமல் தான் படைப்புகளுக்கான வாக்களிப்பு நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது கூட சிலர் ரகசிய பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்ற போதும்!
எனினும் இம்முறை தலைப்பு தந்த உத்வேகத்தில் எழுதிய சின்னஞ் சிறுகதையை சும்மா பதிவிட வேண்டாமே என்று போட்டிக்கான இணைப்பில் பதிவு செய்தேன். அங்கே கண்ட lift என்ற சொல்லுக்கான பொருள் கவிதைக்கான விதை தூவியதில் கவிதையும் தயார்.
எனினும் தொடர்கதையை விளம்பரப் படுத்திய நான் போட்டிக்கான படைப்புகளுக்கு எந்தச்சிறு விளம்பரமும், பிரச்சாரமும் செய்யாதிருக்க கவனமாக இருந்தேன். உண்மையில் அந்தப் படைப்புகளைப் படித்தவர்கள் மிகச்சிலரே! திரட்டிகளில் பார்த்து, நேரடியாக போட்டி பட்டியலில் இருந்து படித்து எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்று அறியும் நோக்கமிருந்தது.
எனது படைப்புகளுக்கு 15 மற்றும் 14 வாக்குகள் விழுந்துள்ளன. இதில் முக்கியமாக சோம்பேறி பையன் மற்றும் முரட்டுக்காளை ஆகியோர் எழுதிய விமர்சனப் பதிவுகளில் இந்தக் கதை பற்றிய உயர்வான புகழுரை கேட்டே பலரும் வாசித்திருக்க வேண்டும்/வாக்களித்திருக்க வேண்டும்.
இவ்வளவு படைப்புகள் வந்துள்ள நிலையில் கவனம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் படைப்புகளுக்காக என்றில்லாமல் படைப்பாளிகளுக்காக பெறப்படும் கவனம் நேர்மையான போட்டிகளுக்கு இடையூறானதுதான்.
எனவே போட்டியை நடத்தும் தேன்கூடு-தமிழோவியம் நிர்வாகத்தினர் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்வது நல்லது.
பிற போட்டிகள் பலவும் நடுவர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படும் நிலையில் மாறுபட்ட முறையில் பதிவர்களின் பங்களிப்புடன் தேர்வு செய்யப்படும் வாக்குப் பதிவு முறை நீக்கப்பட அவசியமில்லை. வாக்களிப்பு முறைதான் இந்தப் போட்டிக்கான தனித்துவம் என்பதால் இதை சில மாற்றங்களுடன் மேற்கொள்ளலாம்.
மேலும் கதை, கவிதை, கட்டுரை அனைத்தையும் ஒரே போட்டிக்கான வரைமுறையில் வைத்திருப்பது சரியானதாகத் தோன்றவில்லை. தொடர்பதிவுகள் போட்டிக்கு அனுமதிக்கப்படுவதும் சரியெனத் தோன்றவில்லை. ஒரே தலைப்பில் கதை, கவிதை, கட்டுரைகளைத் தனித்தனியாகத் தேர்வு செய்யலாம்.
போட்டிக்கான படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு பொதுவான ஒரு வலைத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் இடப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படலாம். பெயருக்கு பதிலாக எண்கள் மட்டுமே பதிவில் இடப்பட வேண்டும். உதாரணமாக கதை-1, கதை-2, கவிதை-1 இப்படி.
சூசகமாகவேனும் சில பெயர்கள் வந்துவிடலாம் என்பதால் அங்கே பின்னூட்டங்கள் அனுமதிக்கப் படாதிருப்பதே நல்லது. அதற்கு மேலும் ரகசியப் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார்கள், தங்கள் படைப்புகளில் நம்பிக்கை வைப்பார்கள் என்றும் பதிவர்களின் நேர்மையில் நம்பிக்கை வைத்து இத்தகைய மாற்றங்களை பரிந்துரைக்க விரும்புகிறேன்.
மேலும் மொத்தமாக விமர்சனம் செய்கிறவர்கள் மதிப்பெண் இடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதுவும் சில முன்முடிவுகளை வாக்குப் பதிவின்போது ஏற்படுத்திவிட நேரும்.
இத்தகைய மாற்றங்களை மேற்கொள்வதின் மூலம் எதிர்வரும் போட்டிகளில் படைப்புகளின் தேர்வில் ஓரளவுக்கு சர்ச்சைகளைத் தவிர்க்கலாம்.
2006-09-29
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
wellsaid frend....i am wondering why they gave first prie for rasukutti's stories? lots of poilitics!!!
மிக நல்ல முறையில் சொல்லியுள்ளீர்.
இதே ஆதங்கம் தான் எனக்கும்.
யாரோ ஒரு சிலர் தரும் விமர்சனம் தான் அனைவரையும் பாதக்கிறது.
பாராட்டும் அங்கீகாரமும் தான் அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வைக்கிறது.ஆர்வ மிகுதியால் சிலர் விமர்சனம் வெற்றி அறிவிப்புக்கு முன்னரே இட்டு விடுகிறார்கள்.சிலருடைய(பாஸ்டன் பாலா) பதிவுகள் அடிக்கடி எல்லோராலும் பார்க்கப்படுவதால் அவர் போலாரின் கருத்தை ஆமோதிக்காவிடில் என்னவோ இலக்கியபிறட்சிப் போல் ஜால்ராக்களைச ்சத்தமாகவே வாசக்கிறார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது வளரும் எழுத்தாளர்கள் தான்.
தேன்கூடு குழுமம் வழக்கம் போல் கை விரிக்காது ஏதேனும் நடவெடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.இல்லையெனில்...சிலரின் தனிப்பட்ட விளம்பரத்துக்காகவும்,தனிப்பட்ட பகைகளை விருப்பு வெறுப்புகளை.........தீர்த்துக்கொள்ளும் தளமே தேன்கூடு என்ற வலைத்தளம் என்ற என் போன்றோரின் இப்பொழுதைய கருத்து மாறாமல் போய் விடும். மனசைத்தொட்டுச்சொல்லுங்க...சும்ம்மா இதுக்க்கும் சண்டைக்கு வராதீங்க..,,,,முடியல.....!
நன்றி.
கார்த்திக்
பரிசு பெற்றவர்களைப் பற்றி விவாதிப்பது நமது நோக்கமல்ல. மேலும் வாக்குகளின் அடிப்படையில் இப்போதுள்ள முறையில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பரிசு பெற்றிருக்கிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் அடிப்படையில் சில தவறுகள் இருப்பதையும் அதனால் சில பிறழ்வுகள் நேரலாம் என்பதையும் மூன்றாவது பரிசு வென்ற நண்பர் தவறான வழியிலாயினும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதற்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பதே நமது நோக்கம்.
தமிழி
விமர்சனம் என்பது படைப்புக்கு ஊக்கமூட்டும் ஒரு அங்கீகாரமே. அதில் தவறேதுமில்லை. மேலும் விமர்சனங்கள் படைப்புகளை படிக்கத் தூண்டுகின்றன. ஆகவே விமர்சனங்கள் தேவைதான். ஆனால் விமர்சனங்களில் மதிப்பெண்கள் இடுவது தீர்ப்புக் கூறுவது போல ஆகிவிடும் என்பதையே குறிப்பிட்டேன்.
தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்கவும்
கருத்துக்களை மென்மையாக சொல்லியிருக்கிறீர்கள். ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனைகள்தாம். செய்வார்களா பார்ப்போம்.
தேன்கூடு வலைப்பதிவில் சில விளக்கங்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன.
அதன் சில பகுதிகள்:
http://www.thenkoodu.com/blog/
x
x
x
இந்த போட்டிகளின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று:
நல்ல எழுத்துக்களை வலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது, புதிய வலைப்பதிவர்களுக்கு தமிழில் எழுதும் ஆர்வத்தினை உருவாக்குவது.
தேன்கூடு.காம் - தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி, தொகுப்பகம் மற்றும் வலைவாசல் என்ற முறையில் நல்ல எழுத்துக்களை வலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது எங்களின் முக்கிய நோக்கமாகக் கருதுகிறோம்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் குறிப்பிடுவது போல, வலைப்பதிவாளர்களின் திறமையை அவர்கள் பாணியில் அவர்கள் பதிவிலேயே வெளிப்படுத்துவதில் உள்ள சுவாரசி்யம் வேறெதிலும் இல்லை என்று நிச்சயம் நம்புகிறோம். ஆக்கங்களில் கூட, வலைப்பதிவுகளின் அனைத்து சாத்தியக்கூறுகளையும் எதிர்பார்க்கிறோம். அது பிளாஷ் மென்பொருளில் செய்யப்பட்டு பதியப்படுவதாக இருக்கலாம்; பாட் கேஸ்டிக் ஆக இருக்கலாம்; புகைப்படங்களாக இருக்கலாம்; வீடியோவாக இருக்கலாம்; அல்லது கவிதை கதை போன்ற அனைத்து படைப்புக்கூறுகளாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், போட்டிக்கான தலைப்பின் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
பெயர் வெளியிடாமல், ஆக்கங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு பதிப்பிப்பது போன்ற முறைகள் இந்த நோக்கங்களுக்கு தடையாக இருக்கும் என்பதினை மனதில் கொள்ள வேண்டுகிறோம்.
போட்டியில் பங்கேற்பவர்களின் ஆக்கத்திற்கு உடனடியாக கிடைக்கும், பின்னூட்டங்கள்; விமர்சனங்கள் இவையே இங்கு போட்டியாளர்களுக்கு கிடைக்கும் உடனடி பரிசுகள் என்று கருதுகிறோம்.
வாக்கெடுப்பின் முறையிலுள்ள குறைகளைக் குறைக்கும் விதமாக, இந்த மாதத்தின் சில நேரங்களில் சோதனையில் இருந்த முறைகள் வரும் மாதப் போட்டியில் முழுமையாக இருக்கும். இது கள்ள வோட்டுகளின் எண்ணிக்கையை முற்றிலும் குறைக்ககூடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம் குறைக்கக்கூடும்.( உதா: செப்டம்பர் போட்டியின், கடைசி நாள் கடைசி சில மணித்துளிகளில் ஒரே கணிணியிலிருந்து மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு போட்டியின் நோக்கத்தினை, எங்களின் முயற்சி மற்றும் உழைப்பினை, போட்டியாளர்களின் ஆர்வத்தினை வேடிக்கையாக்க முயற்சி செய்திட்ட சிலரின் முயற்சிகளைத் தவிர்க்கக் கூடும்.)
வரும் மாதங்களின் போட்டிகளில் வேறு சில மாற்றங்களும் உங்கள் ஆதரவுடன் செய்ய நினைத்திருக்கிறோம்!
x
x
x
அன்புடன்,
தேன்கூடு நண்பர்கள் குழாம்.
Post a Comment